Headlines News :
முகப்பு » , » குழப்ப முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள கலப்பு முறை உள்ளளூராட்சிமன்ற தேர்தல்கள் திருத்தச்சட்டம் - பா.பார்தீபன்

குழப்ப முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள கலப்பு முறை உள்ளளூராட்சிமன்ற தேர்தல்கள் திருத்தச்சட்டம் - பா.பார்தீபன்



நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்சட்ட) சட்ட மூலம் புதிய எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளதோடு  சிக்கலான கணிபீடுகளுடன் கூடியதாகவும் அமைந்துள்ளது. கடந்த சுமார் முப்பதாண்டு காலத்திற்கு மேலாக நிலவிய விகிதாசார முறையிலும் விருப்புமுறை வேட்பாளர் தெரிவிலும் அமைந்த தேர்தல் முறைக்கு மாறாக முப்பதாண்டு காலத்திற்கு முன்பு இருந்த  வட்டார முறையையும் இணைந்ததான விகிதாசார முறையும் ஒன்றாக இணைத்த கலப்பு முறையில் அமைந்த தேர்தல் முறையொன்றே இப்போது நடைபெறவுள்ளது. 

இதற்கிடையில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வேட்பாளர் பட்டியலில் முப்பத்தைந்து சதவீதம் இளம் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் எனும் நிபந்தனையை நீக்கிவிட்டு ஓர் உள்ளூர் அதிகார சபைக்கு தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 வீதத்தை விட குறையக் கூடாது எனும் நிபந்தனையும் உள்வாங்கப்பட்டுள்ளது. நூறு சதவீதமாக இருந்த விகிதாசார முறை   இப்போது 40 சதவீதமாக குறைக்கபட்டுள்ளது. அதேநேரம் விருப்பத்தெரிவு முறை (மனாப்ப) முற்றாக நீக்கப்பட்டு அவ்வாறு வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் அதிகாரத்தை அரசியல் கட்சி செயலாளருக்கு வழங்குவதாக இந்த முறை அமைந்துள்ளது. 

 புதிய முறையை விளங்கிக்கொள்வது என்பது இலகுவானதல்ல. அதேநேரம் இந்த முறை மூலம் இதுவரை காலமும் அரசியல் செயற்பாடுகளில் இருந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மாத்திரம் இன்றி புதிதாக களமிறங்கப்போகும் வேட்பாளர்களும் வாக்களிக்கப்போகும் மக்களும் கூட புதிய தேர்தல் முறையை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான கட்டுரைகள் மூலமாக தெளிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றபோதும கூட தேர்தல் நடத்தைகள் மூலமாக கிடைக்கப்பெறும் அனுபவங்களே தேர்தல் முறை தொடர்பான படிப்பினைகளைத் தரும்.  

இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த முற்று முழுதான விகிதாசார தேர்தல் முறைக்கு நன்கு பழக்கப்பட்டு போயிருக்கும் மக்களின் (வாக்காளர்) தேர்தல் நடத்தையும் அரசியல் கட்சிகளின் அரசியல் நடத்தையும் கூட இனி மாற்றமுற வேண்டியுள்ளது. இங்கு மக்களின் (வாக்காளர்)  தேர்தல் நடத்தை எனும்போது இதுவரை காலமும் தான் விரும்பிய கட்சிக்கும் அந்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் ஒருவருக்கு மூன்று வாக்குகளையும் அல்லது ஒருவருக்கு ஒன்று என மூவருக்கும் வாக்களித்து தானே வேட்பாள்ரையும் தெரிவு செய்யும் முறை இனி நடைமுறையில் இருக்கப்போவதில்லை. எனவே இங்கு மக்களின்  (வாக்காளர்) தேர்தல் நடத்தை மாற்றமுறுகிறது என்பது தெளிவாகிறது. 

அதேபோல அரசியல் கட்சிகள், தங்களது கட்சியின் சார்பில் பல வேட்பாளர்களை பட்டியலாக வழங்கி அவற்றுள் மக்கள் (வாக்காளர்)  தெரிவு செய்து அனுப்பும் வேட்பாளர்களின்  வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடைமுறை இல்லாமல் ஆக்கப்படுவதனால் குறித்த வட்டாரம் ஒன்றிற்காக வேட்பாளராக யாரை நிறுத்துவது எனும் தீர்மானத்தை தாமே (கட்சியின் செயலாளர்) எடுக்க வேண்டியுள்ளதோடு விகிதாசார பட்டியல் மூலமாக தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள் யார் என்பதை கூட ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் பட்டியலில் இருந்து தெரிவு செய்யும் உரிமையைப் (கட்சியின் செயலாளர்) பெறுகின்றது. எனவே கட்சிகள் கொண்டிருந்த அரசியல் நடத்தைகள் மாற்றமுறும். தற்போதைய நிலையில் அரசியல் கட்சிகள் அமைத்துவந்த கூட்டணி முறைமைகள் கூட இனி மாற்றமடையும் வாய்ப்புகள் அதிகம். 

அதாவது அரசியல் கொள்கை ரீதியாக அல்லாமல் தேர்தல்களில் அதிக ஆசனங்களை வென்றெடுக்கும் அடிப்படையில் அமைக்கப் பெற்ற கூட்டணிகள் இனி மாறாக சிந்திக்கத் தலைப்படுவதனால் தமது அரசியல் நடத்தைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும். எனவேதான் இங்கு மக்களின் (வாக்காளர்)  தேர்தல் நடத்தை மாத்திரமின்றி கட்சிகளின் அரசியல் நடத்தைகளும் மாற்றமுறும் என குறிப்பிட நேர்கிறது. எனவே புதிய கலப்பு முறையிலான தேர்தல்கள் தமது வட்டாரத்திற்கான பொறுப்புக்கூறும் உறுப்பினர் ஒருவரை வழங்கினாலும் கூட மக்கள் (வாக்காளர்)  இதுவரை காலம் அனுபவித்துவந்த தாம் விரும்பிய வேட்பாளரைத் தெரிவு செய்யும் ஜனநாயக உரிமை மறுக்கப்டுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

மறுபுறத்தில் மக்களுக்கு விருப்பத்தெரிவில் உள்ள ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தி பலம் படைத்தவரும் பணம் படைத்தவரும் வேட்பாளராக நின்று வெற்றிபெற்றுவிடும் ஆபத்து தவிர்க்கப்படலாம். ஆனால், இது நிச்சயமானதல்ல. பணபலம், கட்சிதலைவர்களின் செல்வாக்குக்கு உட்பட்ட ஒருவரை வேட்பாளராக கட்சி களமிறக்கும்போது தவிர்க்க முடியாமல் மக்கள் (வாக்காளர்)  அவருக்கு வாக்களிக்க வேண்டிய நிலைமையும் பதிய முறையில் உள்ளது. 

விகிதாசார முறை 100 சதவீதமாக அமைந்தமை 40 சதவீதமாக குறைக்கப்படுவது மாத்திரமின்றி அந்த விகிதாசார முறையின் கீழ் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் யாரட என்பதைக் கூட கட்சியே தீர்மானிக்கும் என்பதனால் மக்களுக்கு (வாக்காளர்) இருந்த  சனநாயக உரிமை மறுக்கப்படுகின்றது. என்னதான் மக்கள் (வாக்காளர்) தமக்கு இருக்கக்கூடிய சனநாயக உரிமையை பயன்படுத்தி வேட்பாளர்களைத் தெரிவு செய்தாலும் அந்த உறுப்பினர்கள் தம்மை தெரிவு செய்த மக்களுக்கு அண்மித்து இல்லாமல் இருந்த நிலைமைகளை புதிய கலப்பு முறை தேர்தல் மாற்றியமைக்கின்றது என்பதே முற்போக்காகப் பார்க்கப்படுகின்றது. 

ஆனால் இந்த முற்போக்குத் தன்மையை உருவாக்குவதற்காக கையாளப்படவுள்ள கணிப்பீட்டு முறைகள் இலகுவானதல்ல. இதனை மேலாட்டமாக பின்வருமாறு புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். உள்ளூராட்சி அதிகார சபைகள் என்பது பிரதேச சபை, மாநகர சபை , நகர சபை ஆகிய ஏதேனும் ஒரு அதிகார சபையாக முன்பு போலவே இருக்கும். உதாரணத்திற்கு ஒரு பிரதேச சபையை எடுத்துக்கொள்வோமானால் அதற்குள் பல வட்டாரங்கள் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு வட்டாரம் என்பது அருகில் உள்ள ஒரு சில கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியது. 

இதுவரை காலமும் பிரதேசசபை என அறிவிக்கப்பட்டிருந்த பிரதேசத்துக்குள் அமைந்திருக்கக் கூடிய எல்லா கிராமசேவகர் பிரிவுகளில் இருந்தும் வாக்குகளை சேகரிக்க கூடிய வேட்பாளர் ஒருவர் தற்போது தாம் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் வட்டாரத்திற்கு வெளியே வாக்குகளை சேகரிக்க முடியாது. குறித்த வட்டாரத்தில் ஒவ்வொரு கட்சியின் அல்லது சுயேட்சைக் குழுவின் சார்பில் ஒருவரையே கட்சி நிறுத்தும். (பல அங்கத்தவர் வட்டாரமாயின் ஒன்றுக்கு மேற்பட்டவர் நிறுத்தப்படலாம்). எனவே, குறித்த ஒரு வட்டாரத்தில் ஒவ்வொரு கட்சியினாலும் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் யார் என்பது வெளிப்படுத்தப்படுவதோடு அந்த கட்சியின் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்கு அவருக்கு அளிக்கப்படும் வாக்காக கருதப்படும். இந்த முறையில் பிரதேச சபையில் உள்ள எல்லா வட்டாரங்களுக்கும் என நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் மூலமாக தெரிவாகும் உறுப்பினர்களைக்கொண்டு பிரதேச சபை ஒவ்வொரு வட்டாரத்திற்கும் பொறுப்புக்கூறும் உறுப்பினரைக் கொண்டதாக பூரணப்படுத்தப்படும். 

இந்த பூரணப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை அறுபது சதவீத உறுப்பினர்களின் எண்ணிக்கை எனக்கொண்டு மேலதிகமாக நாற்பது சதவீத உறுப்பினர்களை குறிப்பிட்ட ஒரு வட்டாரத்திற்கு பொறுப்புக்கூறுபவராக அல்லாமல் குறித்த பிரதேச சபையின் பட்டியல் உறுப்பினராக தெரிவு செய்வதற்கான வாய்ப்பு புதிய முறையிலே வழங்கப்படுகின்றது. இந்த உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்றமுறையானது பின்வருமாறு அமையும்.

வட்டார அடிப்படையில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளர்களுக்காகவும் மக்கள் (வாக்காளர்) அளித்த செல்லுபடியான மொத்த வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சியும் குறித்த பிரதேச சபையில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளை கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் 100 வீத விகிதாசார முறையாக தற்போது நடைமுறையில் உள்ள அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும்போது ஒவ்வொரு கட்சியும் பெற்றுக்கொள்ளக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கை அறியப்படும். 

இந்த கணிப்பீட்டின் ஊடாக ஒரு கட்சி பெற்றுக்கொள்ளக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையில் இருந்து குறித்த கட்சி வட்டாரத்தின் ஊடுhக வென்றிருக்கக் கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையைக் கழித்து விட்டு எஞ்சிய எண்ணிக்கை உறுப்பினர்கள் அந்த கட்சிக்கு வழங்கப்படும். ஆவ்வாறு வழங்கப்படும் உறுப்பினர் எந்தவொரு வட்டாரத்திற்கும் பொறுப்புக்கூறுபவராக அல்லாமல் தற்போது பாராளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவரைப்போன்று பிரதேச சபையின் எல்லாப்பகுதிகளுக்கும் சேவையாற்றக் கூடியவராக இருப்பார். 

உதாரணம் ஒன்றின் ஊடாக இதனை விளங்கிக்கொண்டால் 15 வட்டாரங்களைக்கொண்ட ஒரு பிரதேச சபையில்  15 உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் எனக்கொள்ளப்படும். எனவே 60 வீதமானோர்தான் 15 உறுப்பினர்கள் எனில் 100 சதவீத உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது என கண்டறிகையில் அது 25 எனும் விடை கிடைக்கும். எனவே 15 வட்டாரங்களைக்கொண்ட ஒரு பிரதேச சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 25 என்பதுவே புதிய முறையாகும்.

வெவ்வேறு கட்சியில் இருந்து வட்டார அடிப்படையில்  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும்போது மொத்த எண்ணிக்கை 15 என்பது 6:4:3:2 என நான்கு கட்சிகளால் வெல்லப்பட்டிருக்குமானால் குறித்த பிரதேச சபையானது ஏதாவது ஒரு கட்சியின் உறுப்பினரைக்கொண்டு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு உறுப்பினரால் நிரப்பப்படும். எனவே ஊருக்கு அதாவது வட்டாரத்திற்கு பொறுப்புக் கூறும் ஒரு உறுப்பினர் கட்டாயமாக இருப்பார். குறித்த வட்டாரத்தில் எந்த கட்சியை சேர்ந்தவர் அதிக வாக்குகளைப்பெற்றாரோ அவரே அந்த வட்டாரத்திற்கு உரிய உறுப்பினராவார். 

இப்போது விகிதாசார அடிப்படையில் உள்ள மேலதிக 10 உறுப்பினர்களை பகிரும்போது ஏற்கனவே சொன்னதுபோல ஒட்டுமொத்த வாக்களிப்பையும் 25 ஆசனங்களுக்கு அளிக்கப்பட்டதாக கணக்கெடுத்து ஒவ்வொரு கட்சிகளும் பெற்றிருக்க கூடிய ஆனசங்களின் எண்ணிக்கை மதிப்பீடு செய்யப்படும். எனவே 15 ஆசனங்களில் 6 ஆசனங்களை வென்றிருக்க கூடிய கட்சி 25 ஆசனங்களில் எத்தனையை வென்றிருக்கும் எனும் கணிப்பீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது அது பத்தாக அமைய ஏற்கனவே அந்த கட்சி வட்டாரத்தில் 6 ஆசனங்களைப் பெற்றிருப்பதால் மேலதிகமாக அந்த கட்சிக்கு 4 ஆசனங்கள் வழங்கப்படும். எனவே வட்டாரத்தில் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சிக்கு விகிதாசாரத்தில் இருந்து 4 ஆசனங்கள் கிடைக்கப்பெற மொத்தமாக 10 உறுப்பினர்களை கொண்ட குறித்த கட்சி பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றும். 

இப்போது எஞ்சியுள்ள விகிதாசார முறையிலான 6 (10ல்)  ஆசனங்கள் ஏனைய கட்சிகளுக்கு பகிர்ந்து செல்லும். மேலுள்ள உதாரணத்தின்படி வட்டார அடிப்படையில் இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற  கட்சிக்கு மேலதிக மூன்று ஆசனங்கள் கிடைக்கபெறலாம். மூன்றாவதாக தெரிவான கட்சிக்கு 2 ஆசனங்கள் கிடைக்கப்பெறலாம். நான்காவது இடத்தில் வந்த கட்சிக்கு 1 மேலதிக ஆசனம் கிடைக்கப்பெறலாம். 

இதன்படி பார்க்கும் போது விகிதாசார முறையில் கணக்கிடப்பட்ட 10 ஆசனங்கள் ஏற்கனவே வட்டாரத்தில் வெற்றிபெற்று வந்துள்ள நான்கு கட்சிகளுக்கு பின்வருமாறு பகிரப்பட்டிருக்கும். 4:3:2:1 இந்த கணிப்பீடுகளில் பின்னங்களால் எண்ணிக்கை கிடைக்கப்பெறும்பட்சத்தில் அவற்றை முழுவெண்ணாக கணக்கெடுக்கும் தீர்மானம் தேர்தல் ஆணைக்  குழுவுக்கு உரியது. இந்தக் கணக்கெடுப்பின்படி வட்டாரத்தில் ஒரு ஆசனத்தைக் கூட வென்றெடுக்காத கட்சிகளுக்கு விகிதாசார அடிப்படையில் உறுப்பினர்களை வென்றெடுக்கும் வாய்ப்பு உள்ளது. இது சிறு கட்சிகளுக்கு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இவ்வாறு விகிதாசார அடிப்படையில் தீர்மானிக்கப்படும் ஆசனங்களுக்கு யார் நியமிக்கப்படல் வேண்டும் என முன்கூட்டியே பெயர் பட்டியல் ஒன்றை தேர்தல் ஆணையகத்துக்கு கட்சிகளால் கையளிக்கப்பட்டிருத்தல் வேண்டும். வட்டாரத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற ஒருவரையும் குறித்த கட்சி செயலாளர் விரும்பினால் விகிதாசார பிரதிநிதியாக தெரிவு செய்ய பிரேரிக்கலாம். இந்த பட்டியலில் பெயரிடப்படாதவர்கள் யாரும் உறுப்புரிமையைப் பெற முடியாது. எனவே இந்தப் பெயர்களைத் தீர்மானிக்கும் பொறுப்பும் உரிமையும் கட்சி செயலாளர்களுக்கே உண்டு. இதன்பிரகாரம் கட்சி செயற்பாட்டாளர்களாக இருந்து மக்கள் பணியாற்றுபவர்கள் மாத்திரமே இனி வேட்பாளர்களாக வரமுடியும். 

மேற்படி உதாரணங்களுடன் கூடிய விளக்கங்களுக்கு மத்தியில் இன்னுமொரு விடயமும் புதிய உள்ளுராடசி அதிகார தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் உள்ளது. அது பெண்களுக்கான ஒதுக்குPடுகள் 25 சதவீதம் கட்டாயமானதாக இருக்க வேண்டும் என்பதாகும். மேலுள்ள கணப்பீடுகளைச் செய்யும்போது வட்டார அடிப்படையில் வழங்கப்படும் பட்டியலில் வட்டார அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ளவர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கு குறையாத எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்களும் விகிதாசார பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் குறையாத அளவில் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் எனும் ஏற்பாடு சட்டத்தில் உள்ளது. 

இவ்வாறு குழப்பகரமான கணிப்பீட்டு முறைமைகளின் ஊடாக திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ள உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் திருத்தச் சட்டம் தரும் இன்னுமொரு பரிமாணம்தான் எதிர்வரும் காலங்களில் மாகாண சபைகள், பாராளுமன்ற தேர்தல்களிலும் இதே கலப்பு முறை தேர்தலை அறிமுகம் செய்வதாகும். இந்த கலப்பு முறையினூடாக தேசிய ரீதியாக செயற்படும் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி போன்ற பெரிய கட்சிகளும், ஜே.வி.பி போன்ற சிறிய கட்சிகளும்  தமது பிரதிநிதித்துவ இருப்பை உறுதிசெய்து கொள்கின்ற நிலையில் சிறுபான்மை கட்சிகள் பெரும் தேசிய கட்சிகளில் தங்கியிருக்க வேண்டிய அல்லது தனித்து போட்டியிட்டால் அல்லது தங்களுக்குள்ளான கூட்டணிகள் ஊடாக விகிதாசார முறையின் கீழாக மாத்திரம் தமது உறுப்பரிமையை தக்கவைத்துக்கொள்வேண்டிய நிலைக்கே தள்ளப்படுவர். குறிப்பாக வடகிழக்கைத் தளமாகக் கொண்ட தமிழ் கட்சிகளுக்கு இது பெரிய பாதிப்பு இல்லை எனினும் கிழக்கில் செறிவாகவும் நாடுமுழுக்கவம் சிதறிவாழும் முஸ்லிம் மக்களுக்கும் மத்தியில் செறிவாகவும் தென்னிலங்கையில் சிதறிவாழும் மலையக மக்களுக்கும் சவாலானதொரு சட்டம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் திருத்தச் சட்டங்களின்போது  முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆற்றிய உரைகளில் அவர்கள் எதிர்கொள்ளப்போகும் சவால்களின் பிரதிபலிப்புகள் தெரிந்தன. எந்தவொரு மலையகத் தமிழ் பிரதிநிதியும், அல்லது முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதியும் முழுமையாக இந்த முறைமையை ஏற்றுக்கொள்வதாக தங்களது உரைகளில் தெரிவிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தங்களுக்கு இந்த முறைமை சவாலானதாக இல்லை என உணர்பவர்களாக பெண்களின் பிரதிநித்துவத்தை ஐம்பது சதவீதம் வரை உயர்த்தவேண்டும் என பொதுப்பட பேசிச் சென்றதையே அவதானிக்க முடிந்தது. 

எது எவ்வாறெனினும், இதுவரை நடைமுறையில் இருந்த முற்றுமுழுதான விகிதாசார முறையில் கூட மலையகப்பிரதிநிதிகளோ அல்லது முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளோ உள்வாங்கப்படுவதற்கான உறுதிப்பாடுகள் வழங்கப்பட்டிருக்காதநிலையில் அவர்கள் சாரந்த கட்சிகளின் அரசியல் நடத்தைகளாலும், அவர்களின் பரப்புரைகளின் ஊடான மக்களின் தேர்தல் நடத்தைகளாலுமே தமது பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொண்டனர். எனவே இந்த கலப்பு முறை நடைமுறைக்கு வரும்போது அதற்கேற்ற அரசியல், தேர்தல் நடத்தைகள் ஊடாக சிறுபான்மை கட்சிகள் தங்களது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் தந்திரோபாயங்களில் ஈடுபடுவதே தவிர்க்க முடியாத பொறிமுறையாகவுள்ளது.

(நன்றி தினக்குரல்)




Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates