Headlines News :
முகப்பு » , , , , » அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை - என்.சரவணன்

அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 28

“உங்களுக்கு அநீதி நடக்கிறதென்றால் ஏன் நீங்கள் உங்கள் தாய்நாட்டுக்கே போய் விடலாமே. இது உங்கள் தாய் நாடல்ல. சென்று விடுங்கள் இந்தியாவுக்கே.  அங்கே உங்களுக்கு பாரபட்சம் நிகழாது. உங்கள் கோவில், கலாசாரம் அனைத்தும் அங்குண்டு. உறங்கிக் கொண்டிருக்கும் சிங்களவர்கள் எழும்பி ஈழத்துக்கான முஸ்தீபுகளைக் கண்டால் நிறையவே நிகழ்ந்துவிடும். தூங்கிக் கொண்டிருக்கும் சிங்களவர்களை எழுப்பி விடாதீர்கள் என்பதற்கான எச்சிரிக்கை இது. அவர்களை எழுப்பிவிட்டால் அதன் பின்னர் அமைதி இருக்காது.”
யாழ் நூலக எரிப்பு பற்றி அது நிகழ்ந்து சில நாட்களில் 1981 ஜூனில் பாராளுமன்றத்தில் நிகழ்ந்த சூடான விவாதத்தின் போது அப்போதைய அமைச்சர் வி.ஜே.மு.லொக்குபண்டார தெரிவித்த கருத்துக்கள் அவை. ஐ.தே.க. பாராளுமன்றத்தில் அதிகமான ஆசனங்களைக் கொண்டிருந்தது. வழமையாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகியவை எதிரெதிரே இரண்டு பக்கங்களும் அமர்ந்திருப்பார்கள். ஆனால் 77 வெற்றியின் பின்னர் எதிர்க்கட்சிவரிசையிலும் நிறைந்து இருந்தார்கள் ஐ.தே.க வினர். அவர்கள் கத்தினாலும் கரகோஷம் செய்தாலும் சுற்றி உள்ள அத்தனை பக்கத்திலிருந்தும் அந்த சத்தம் எழும். அப்படிப்பட்ட நிலையில் வெறும் சொற்ப ஆசனங்களைக் கொண்ட தமிழ் உறுப்பினர்களின் பேச்சின் போது எதிர்ப்பும், மறுப்பும், கர்ஜனைகளும் பேச்சை குழப்பிக் கொண்டிருக்கும். அதேவேளை ஆளுங்ககட்சியினரின் பேச்சின் போது கர்ஜனைகளும், மிராட்டலும், ஆதரவு கரகோஷமும் மேலோங்கி இருக்கும்.

81 மே. ஜூன் நிகழ்வுகள் குறித்து லொக்குபண்டாரவின் இனத்துவேச வெறுப்புமிழும் உரையின் போது தமிழர் விடுத்தலைக் கூட்டணியினரின் உரைகளும் இந்த நிலைமையை மோசமாக எதிர்கொண்டன.

அதே நாள் விவாதத்தில் அமைச்சர் திருமதி விமலா கன்னங்கர..
“எங்களுக்கு தேவையானபடி தான் நாங்கள் ஆட்சி நடத்துவோம். நாங்கள் இந்த நாட்டில் சிங்களவராகத் தான் பிறந்தோம். பௌத்தராகத் தான் பிறந்தோம். நாகல் பெரும்பான்மையினர். நாங்கள் சிறுபான்மையினருக்கு அடிபணிய முடியாது. பெரும்பான்மையினரான நாங்கள் எங்களுக்குத் தேவையானபடி தான் ஆள்வோம்...” என்றார்.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.வீ.புஞ்சிநிலமே ஒரு படிமேலே போய்
"சிங்கள அரசர்கள் கொடுத்த தண்டனையைப் போல இரண்டு பாக்குமரத் தூண்களில் இரு பக்கமும் கயிற்றிலே கட்டி பின், அதனை வெட்டும்போது, உடல் நடுவில் இரண்டாக பிளந்து சிதறுவதைப் போன்ற தண்டனையை இந்த நாடு இத்தகையவர்களுக்கு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
வரலாற்றில் பேரம் பேசும் ஆற்றல் பலவீனப்படும்போதெல்லாம் சிங்கள அரசாங்கங்கள் இப்படித்தான் அலட்சியமாக தலைவிரித்தாடின.

முழு வீடும் எரித்து சாம்பலாக்கப்பட்ட நிலையில் உயிர்பிழைத்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தனக்கு நடந்த கொடூரத்தை விளக்கிய போது “யோகேஸ்வரன் அப்போது அங்கு பயங்கரவாதிகளுடன் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார் என்று சிறில் மெத்தியு போய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். வி.தர்மலிங்கம் எம்.பி அதற்கு பதிலளிக்கையில் “சிறில் மெத்தியு வழங்கிய தகவலின் பேரில்தான் பொலிஸார் யோகேஸ்வரனின் வீட்டைத் தாக்கினார்கள்” என்று சாடினார். அதற்கு சிவசிதம்பரம் எம்.பி பதிலடி கொடுத்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்
இந்த கொடூர நிலைமையின் கீழ் எதிர்க்கட்சி தலைமை பாத்திரம் ஏற்றிருந்த தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, ஐ.தே.க அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தது. அதைப் பார்த்து எள்ளி நகையாடினர் ஆளுங்கட்சி. ஆனால் அமிர்தலிங்கம் 6/5 பெரும்பான்மையைக் கொண்ட ஆளுங்கட்சியை வீழ்த்துவது சாத்தியமில்லை என்று தெரிந்திருந்தும் தமது எதிர்ப்பை பதிவு செய்ய கூடியபட்ச ஜனநாயக வழியாகப் பார்த்தார். மே, ஜுன் கலவரமானது அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களின் தலைமையில், அவர்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டமையினால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழப்பதாக 1981 யூலையில் கூட்டணி அறிவித்தது.

ஆனால் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் இனத்துவேச பேச்சுக்களால் பாராளுமன்றத்தை நிரப்பியதுடன் இதனை மறுதலித்து அப்படியே மறுபக்கம் புரட்டினார். அதாவது எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அவர்கள் முன்வைத்தார்கள். 36 பேரின் கையெழுத்துடன் நெவில் பெர்னாண்டோ சபாநாயகர் பாகீர் மாக்காரிடம் அந்த பிரேரணையைக் கையளித்தார். அந்தப் பிரேரணையை பிரேரித்தவர் நெவில்ல பெர்னாண்டோ.


யார் இந்த நெவில் பெர்னாண்டோ
2004 இல் லண்டனில் வெளியான “அமிர்தலிங்கம் சகாப்தம்” என்கிற நூலில் நெவில்ல பெர்னாண்டோ எப்படி இதன் சூத்திரதாரியானார் என்பது பற்றி இப்படி குறிப்பிடப்படுகிறது.

“இந்தியாவில் இருந்து கதிர்காமக் கந்தனை வணங்க யாத்திரை சென்ற திரு.தளபதி என்ற கனவானை சிங்களவர்கள் கோடாரியால் வெட்டிக் கொலை செய்தார்கள். இந்தியா பகைக்கும் என்ற அச்சத்தில் கொலை செய்யப்பட்டவனுக்கு சித்தசுவாதீனம் என்று அரசு சின்னது. பின்னர் தமது கட்சியைச் சேர்ந்தவர்தான் கொலை செய்வித்தார் என்று ஜனாதிபதி ஜெயவர்த்தன ஒப்புக்கொண்டார். அந்தக் கொலையின் பின்னணியில் டொக்டர் நெவில் பெர்னாண்டோ உள்ளதாகக் கூறி அவரை கட்சியில் இருந்து வெளியேற்றிப் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்கப் பாராளுமன்றக் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார். அந்த விசாரணைக் குழு முன்னிலையில் நெவில் பெர்னாண்டோ தோன்றி வாக்கு மூலம் அளித்தபோது அவர் சொன்னார்
‘அமிர்தலிங்கம் அவர்களுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணையை அமைச்சர்களே தயாரித்துப் பிரேரிக்கும்படி தன்னிடம் தந்தார்கள் என்றும், தான் அதனை எடுத்துக் கொண்டு ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடம் போய் அதனைப் பிரேரிக்கலாமா என்று கேட்டதாகவும், அதனைக் கேட்டதும்
“நீர் தான் அதனைச் செய்ய வேண்டும், நீர் விரும்பியதைப் பேசலாம், நீர் கொண்டுவருகிற இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கையில் இரத்த ஆறு ஓடும். அப்போது அமிர்தலிங்கம் வந்து முழந்தாளில் நின்றி எங்கள் உரிமையைப் பற்றி இனிப் பேசமாட்டேன், எங்கம இனத்தைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுவார்” என்று ஜனாதிபதி ஜெயவர்த்தன சொன்னதாக டொக்டர் நெவில் பெர்னாண்டோ பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் கூறினார்.”
அந்த நெவில் பெர்னாண்டோ வேறு யாருமில்லை இன்றைய சர்ச்சைக்குரிய சைட்டம் (SAITM) நிறுவனத்தின் உரிமையாளர். இடதுசாரிக் கட்சி நீண்டகாலமாக வெற்றிபெற்று வந்த பாணந்துறை தொகுதியை 1977க்குப் பின் தலைகீழாக மாற்றியவர் நெவில். அந்தத் தேர்தலில் லெஸ்லி குணவர்தனவை விட பத்தாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார் நெவில். அதேவளை சிறிமாவின் குடியியல் பறிப்பு உள்ளிட்ட பல வாக்கெடுப்புகளின் போது அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காது இருந்தார்.

குறுகிய காலமே பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நெவில் பெர்னாண்டோ ஜே.ஆரால் நீக்கப்பட்ட கதையையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். "மவ்பிம" என்கிற சிங்களப் பத்திரிகைக்கு 2017-07-23 அன்று வழங்கிய பேட்டியில் கேட்கப்பட்ட 26 கேள்விகளில் 7வது கேள்வி
“அப்படியென்றால் உங்கள் பாராளுமன்றப் பதவி எப்படி பறி போகிறது?”
“அச்சுவேலியில் விமானப்படையினர் சிலர் கொல்லப்பட்டு சடலங்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டன. நான் அப்போது பாணந்துறையில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து பேசும்போது ‘ஜே.ஆருக்கு இதனை செய்ய முடியாவிட்டால், செய்யக் கூடியவர்களுக்கு கொடுத்து விட்டு போகவேண்டும் என்று பேசினேன். எனது பேச்சு உள்ளூர்ப் பத்திரிகைகளைப் போல சவூதி பத்திரிகையிலும் வெளியானது. அப்போது ஜே.ஆர். சவுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இலங்கை வந்தவுடன் கட்சியின் நிறைவேற்றுக் குழுவைக் கூட்டி என்னை கட்சியிலிருந்து வெளியேற்றினார். இதனை எதிர்கொள்ள நான் நீதிமன்றம் செல்வதா அல்லது தெரிவுக் குழு விசாரணையை எதிர்கொள்வதா என்கிற முடிவை எடுக்க நேரிட்டது. நான் பாராளுமன்ற தெரிவுக் குழுவைத் தெரிவு செய்தேன். அந்த தெரிவுக்குழு இறுதியில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானித்தது. ஜே.ஆருக்கு ஆறில் ஐந்து பலத்தைக் கொண்ட பாராளுமன்றத்தை நான் எதிர்கொள்வது என்பது கேலிக்குரியது. எனவே வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்னர் நானே இராஜினாமாவை கையளித்து விலகிவிட்டேன்.”
நாடாளுமன்ற ஜனநாயக முறையின் வரலாற்றிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ஒருவருக்கு எதிராக ஆளும் கட்சி அத்தகைய பிரேரணையொன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றிய முதன் முதலான சந்தர்ப்பம் இது. எதிர்கட்சித் தலைவர் என்பது அரசாங்கம் வழங்கிய ஒரு பதவியல்ல; அது சம்பிரதாய பூர்வமான பதவி. எதிர்கட்சித் தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது ‘வெஸ்மினிஸ்டர்’ நாடாளுமன்ற மரபில் இல்லாத ஒன்று. ஜனாதிபதி ஜெயவர்தன நினைத்திருந்தால் அந்தக் கேலிக்கூத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால், அதை அவர் வேடிக்கை பார்த்தார்.”

நெவில் பெர்னாண்டோவின் விலகளைப் பயன்படுத்திக் கொண்ட சிறிமா சுதந்திரக் கட்சியில் வந்து இணையுமாறு அழைப்பு விடுத்தார். அதனை ஏற்றுக் கொண்ட நெவில் பெர்னாண்டோவுக்கு சிறிமா சுதந்திரக் கட்சியின் இணைச் செயலாளராக நியமித்தார். அவரின் சக இணைச் செயலாளராக அன்று இருந்தவர் தான் பின்னால் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஷ. 1994 வரை சுதந்திரக் கட்சியில் இருந்த நெவில் சந்திரிகா பண்டாரநாயக்க பதவியேற்றதும் சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி அரசியலில் இருந்தும் ஒதுங்கி தனது வியாபாரத்தில் ஈடுபட்டார். இன்று நெவில் இலங்கையில் விரல் விட்டு எண்ணக் கூடிய முக்கிய செல்வந்தர்களுள் ஒருவர்.


வேடிக்கையான மரபு மீறல்
1981 ஜூலை 23 ஆம் திகதி அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அமிர்தலிங்கம் தன்னிலை விளக்கத்தை தெரிவிக்க தயாரானபோது ஆளுங்ககட்சியினர் பெரும் கூச்சலுடன் எதிர்த்தனர். இந்த பிரேரணையின் சூத்திரதாரியான டொக்டர் நெவில் பெர்னான்டோ, அமிர்தலிங்கம் தன்னிலை விளக்கம் அளிப்பதற்கு மறுப்புத் தெரிவித்தத்துடன், பாராளுமன்றம் அனுமதித்தால் மட்டும் தான் அதனைச் செய்யமுடியும் என்றார்.

அமிர்தலிங்கம், சபாநாயகர் பாகீர் மாகாரிடம் தனக்கான தன்னிலைவிளக்கத்தை வழங்க சந்தர்ப்பம் கோரியபோது, சபாநாயகர் பாகீர் மாகார் அதனை நிராகரித்தார். தன்னிலைவிளக்கம் கொடுப்பது தமது அடிப்படி உரிமையென்றும், கருத்துரிமை என்றும் கூறி அமிர்தலிங்கமும் கூட்டணி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தார்கள்.

சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்த மைத்திரிபால சேனநாயக்க மூன்று காரணங்களை முன்வைத்து இந்த பிரேரணை ஏன் செல்லுபடியாகாது, ஏன் அர்த்தமற்றது என்பதை சபாநாயகருக்கு விளங்கப்படுத்தினார். உலகில் எங்கும் இப்படி நிகழ்ந்ததில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். ஆனால் அந்த மறுப்பு காலங்கடந்த ஒன்று என்றும் பிரேரணையை வழி நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

Bakeer Markar
அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரும், கொம்யூனிஸ்ட் கட்சியும் பேச முயன்ற போது சபாநாயகரால் குறுக்கிடப்பட்டு தடுக்கப்பட்டதால் அவர்களும் சபையை விட்டு வெளியேறினார்கள். சம்பந்தப்பட்ட எவரும் இல்லாமல் சபையில் வெறும் ஐ.தே.க. உறுப்பினர்கள் நிறைந்திருந்து எதிர்ப்பும், மறுப்புமின்றி தமது பேச்சால் விலாசித்தள்ளினார்கள். அமிர்தலிங்கத்தை காலிமுகத்திடலில் நிற்கவைத்து சுட்டுக்கொல்லவேண்டுமென்றும், புரதான முறைப்படி தண்டனை வழங்கவேண்டுமென்றும், சவுக்கால் அடிக்கவேண்டும் என்றும், பேற வாவியில் முக்கிக்கொல்ல வேண்டும் என்றெல்லாம் மிகக் குரூரமாக வெறுப்பைக் கொட்டினார்கள். இந்த துவேச உரையை இயன்றவர்கள் ஹன்சாட் அறிக்கையை சென்று பார்வையிடலாம்.
மகா பாதகப் படுகொலைகளையும், அழித்தொளிப்புகளையும் புரிந்து விட்டு அது பற்றி எந்த மன்னிப்புமன்றி, குற்ற உணர்ச்சியுமின்றி,  சம்பந்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் தாம் குரல் கொடுக்க வேண்டிய இடமான மக்களவையில் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கும் மறுக்கப்பட்ட ஒரு நிலையை என்னவென்பது. அரசாங்கம் தமது செயலை நியாயப்படுத்தியதையும், இனவெறியைக் கக்கியதையும் வரலாறுதான் மறக்குமா?

இந்த விவாதத்தில் அமிர்தலிங்கத்துக்கு ஆதரவாக பேசியவர் அரசாங்க அமைச்சராக இருந்த தொண்டமான் மட்டும்தான்.

யூலை 24 அன்று நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நிகழ்ந்தது. தொண்டமான் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சமூகமளித்திருந்த 121 பேர் அமிர்தலிங்கத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

ஷெல்டன் ரணராஜா – நடராஜாவாக
அங்கு ஒரேயொருவர் மாத்திரம் தான் அந்த பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருந்தார். அவர் மிகவும் நேர்மையானவர் என்று பேர் பெற்ற ஷெல்டன் ரணராஜா. தனது சொந்த கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று என்று அவரை துரோகியென்று திட்டினர். ரணராஜா என்கிற அவரது பெயரை நடராஜா என்று அழைத்து கேலி செய்தனர். தொண்டமானைப் போல ரணராஜாவும் விவாதத்தில் கலந்துவிட்டு வாக்கெடுப்பின் போது வெளியேறியிருக்கலாம் என்று ஜே.ஆர்.கடிந்துகொண்டார். ஷெல்டன் ரணராஜா இந்த விடயத்தில் மாத்திரமல்ல சிறிமாவின் குடியியல் உரிமையை பறிப்பதற்கான பிரேரணையின் போதும் இதுபோன்றே தனது மனசாட்சிக்கு உட்பட நடந்துகொண்டார்.

ஷெல்டன் ரணராஜா பிரதி நீதிமைச்சராக இருந்தார். ஜே.வி.பியின் வெலிக்கடை உடைப்புக்கு தார்மீக பொறுப்பேற்றும், ஜெயவர்த்தன அரசாங்கத்தைக் கலைக்காமல் அநீதியான முறையில் காலத்தை நீடிப்பதையிட்டு தனது மறுப்பை வெளிப்படுத்தும் வகையிலும் அவர் 1988இல் இராஜினாமா செய்தார். 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகள் அமைக்கப்பட்டபோது வடகிழக்கு மாகாணத்துக்கான ஆளுநராக ஜே.ஆர். ரணராஜாவைத் தான் தெரிவு செய்தார். ஆனால் ரணராஜா அதனை நிராகரித்தார். பிரேமதாச 1989 தேர்தலில் ரணராஜாவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை என்பது இதன் தொடர்ச்சி தான்.

அமிர்தலிங்கத்தின் மீதான இந்த பிரேரணை இறுதியில் கேலிக்கூத்தாகவே முடிந்தது. அந்த பிரேரணையை மிகக் கேவலமான முறையில் நிறைவேற்றிக்கொண்டபோதும் அந்த தீமானத்தை நடைமுறைப்படுத்த எந்த சட்ட வாய்ப்புகளும் அரசியலமைப்பு வழங்கியிருக்கவில்லை. அரசாங்கத்தின் வெற்றியில் எந்த அர்த்தமும் இருக்கவில்லை. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக தொடர்வதில் எந்தத் தடையும் கூட சட்ட ரீதியில் இருக்கவில்லை. ஆக ஐதேவுக்கு அது வெற்றியல்ல முழுமையான தோல்வி. வெற்றிக் களிப்புக்குப் பதிலாக அவமானத்தையே அவர்கள் உணர்ந்தனர். அரசாங்கத்தில் இருந்த இனவாதிகள் இன்னொரு இனவெறி நடவடிக்கைகளால் தம்மை சுயகளிப்பூட்ட திட்டமிட்டார்கள்.

தோல்வியை வெற்றிகொள்ளும் கைங்கரியம்
ஏற்கெனவே தனது அக்கிரமங்களுக்கு தண்டனை கிடைக்காதது மட்டுமன்றி அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட சிறில் மெத்தியு அது தனது செய்கைக்களுக்கான லைசன்ஸ் என்று கருதிக் கொண்டார்  போலும். அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவர் தொடக்கினார்.

சிறில் மெத்தியு தென்னிலங்கையில் பாரிய அளவில் இனவாத பிரச்சாரத்தை முன்னெடுத்தார். துண்டுப்பிரசுங்கள், சுவரொட்டிகள், நூல்கள் வெளியீடு, கூட்டங்கள் நடத்துதல் என்று ஓயாமல் தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். தமிழர்கள் வந்தேரிகள் என்றும் அவர்களுக்கு சொந்தமில்லாத இலங்கைத் தீவை உரிமைகொண்டாடி தனி நாடாக பிரித்துக் கொண்டு செல்லப்போகிறார்கள் என்பதே அதன் அரசியல் உள்ளடக்கமாக இருந்தது. “கவுத கொட்டியா” (புலிகள் யார்) என்கிற நூலின் அட்டைப்பட கேலிச்சித்திரத்தில் வெள்ளை வேஷ்டியுடன் நெற்றியில் விபூதிபட்டை பூசிய உருவம் அமிர்தலிங்கத்தை குறிப்பதாகவே இருந்தாலும் அப்படியான அடையாளத்தை தமிழர்களை பொதுவாக குறிக்க சிங்கள ஊடகங்கள் நெடுங்காலமாக பாவித்து
வந்துள்ளதை நாம் அறிவோம். அடுத்ததாக அவர் “சிங்ஹலயாகே அதிசி சதுரா” (சிங்களவர்களின் மறைமுக எதிரிகள்), “சிஹளுனி! புதுசசுன  பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!) ஆகிய மூன்று நூல்களும் பல்கலைக்கழக சிங்கள இளைஞர்கள், இனவாதமயப்பட்டு வந்த படித்த தரப்பினர் மத்தியில் பிரபல்யமாக இருந்ததுடன் அந்நூல்கள் தமிழரெதிர்ப்புக்கு வேகமாக எண்ணெய் வார்த்தவை.

இந்த நூல்களில் சிறில் மத்தியு தனது கட்டுரைகளையும், தனது பாராளுமன்ற உரைகளையும் உள்ளடக்கியது மட்டுமன்றி ஜே.ஆர். மற்றும் இன்னும் பல சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிராக முன்வைத்த கருத்துக்களையும் தொகுத்து வெளியிட்டார். அந்த நூலின் அட்டையில் இப்படி இருக்கிறது.
“மண்டையில் மூளையிருந்தும்  இதைப் பற்றி சிந்திக்காதிருப்பது
கண்களிரண்டிலும் ஆணி அடித்திருப்பதாலா சிங்களவர்களே”
தமிழர்களுக்கு எதிரான புனைவுகளையும், சிங்கள பௌத்தர்களின் நாடு இது என்பதை நிறுவ கையாளும் போலிக் கதைகளையும் ஆதாரங்களையும் நிரப்பி வெளியிடப்பட்ட நூல்கள் அவை. “”சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!” என்கிற நூலின் 12வது அத்தியாயம் முழுவதும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழ் மக்களின் தாயகக் கோரிக்கைக்கு எதிராக அதுவரை வெளியிட்ட கருத்துக்கள் பல தொகுக்கப்பட்டுள்ளன.

“தமிழர்களுக்கு எதிராக எழுங்கள்” என்கிற கோசத்துடன் சுவரொட்டிகளை எங்கெங்கும் ஓட்டினார். சிங்கள பௌத்த நாட்டைப் பாதுகாப்பதற்கு தமிழர்களின் பிரதேசங்களில் குடியேறுங்கள் என்று அறைகூவினார்.

சிறில் மெத்தியு உள்ளிட்ட சிங்கள இனவாதிகளின் பிரச்சாரங்கள் வெற்றி காணத் தொடங்கின. சாதாரண அப்பாவி சிங்கள மக்களை இனவாத ரீதியில் திசை திருப்பி தமிழர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை விதைத்தது அவர்கள் இன்னொரு வன்முறைக்கு தயார் செய்யப்பட்டார்கள். அதன் விளைவு யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக அடங்கியிருந்த மே – யூன் வன்முறைகள் யூலையில் பாராளுமன்றத்தில் கர்ஜனைகளாக மேலெழுந்தது.ஓகஸ்ட் மாதம் மீண்டும் இன வன்முறைகள் தலைவிரித்தாடத் தொடங்கியது. ஓகஸ்டில் ஆணைக்கோட்டையில் பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டதில் ஒரு பொலிஸ் காரர் இறந்து போனார். அந்த சடலத்தை அணைத்துக்கொண்டு களத்தில் இறங்கியது இனவாதக் கும்பல்.

மீண்டும் கலவரம்
குறிப்பாக மலையகத்திலும், கிழக்கின் எல்லைப்புற பிரதேசங்ககளிலும் வன்முறைகள் வெடித்தன. தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வீடுகள் கொளுத்தப்பட்டு, பல தமிழர்கள் தாக்கப்பட்டு காயத்துக்கு உள்ளானார்கள்.

பதுளையில் ஆரம்பித்த இந்தக் கலவரம் பின்னர் பண்டாரவளைக்குள் புந்து சப்பிரகமுவா மாகாணத்துக்கு விரிவடைந்தது. 12 ஓகஸ்ட் அன்று ரத்தினபுரி மாவட்ட தோட்டத் தொழிலாளர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். காட்டுமிராண்டித்தனமாக தொழிலாளக் குடும்பங்கள் கொல்லப்பட்டனர். இரத்தினபுரி மாவட்டத்தில் மாத்திரம் 40 தோட்டங்கள் பாதிக்கப்பட்டதாக “இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம்” வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் (MIRJE) இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை நேரில் போய் விசாரணை செய்து விரிவான அறிக்கைகளை வெளியிட்டிருந்தஹ்டு. “அவசரகாலம் 1979” (Emergency” (1979)), “யாழ்ப்பாணத்தில் நடந்ததென்ன பயங்கரவாத நாட்கள் (1981)” (What Happened in Jaffna: Days of Terror -1981) “வவுனியாவில் வதையும் பதட்டமும் - 1982” (Torture and Tension in Vavuniya” 1982) போன்ற அறிக்கைகள் மிகவும் முக்கியமானவை.

மலையகத்தின் தோட்ட லயன்களுக்குள் புகுந்து வீடுகளில் ஒதுங்கியிருந்த இந்திய வம்சாவழி மக்களை வெளியே இழுத்துப் போட்டு தாக்கினர். முப்பதாயிரத்திலிருந்து நாற்பதினாயிரம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டதாக மேர்ஜின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகளாக கஹாவத்தை புனித அன்னம்மாள் தேவாலயத்தில் தங்கியிருந்த போது அவர்கள் மீது ஒரு பொலிஸ்காரர் தலைமையில் ஒரு கும்பல் போய் தாக்குதல் நடத்தியது. அவர்களின் குறைந்தபட்ச இருப்பிடமான லயன்களை உடைத்து துவம்சம் செய்தனர். அன்றைய சண் “Sun” பத்திரிகை “இந்த அழிப்பை நிறுத்துங்கள்” (Stop this Havoc) என்கிற தலைப்பில் தனது ஆசிரியர் தலையங்கத்தை எழுதியது.


இந்த சம்பவத்தால் பொறுமையிழந்த தொண்டமான் இ.தொ.க.வின் செயலாளர் செல்லச்சாமியையும் அழைத்துக் கொண்டு ஜே.ஆரை அவரது இல்லத்தில் ஓகஸ்ட் 17 அன்று சந்தித்து உரையாடினர். இந்த சம்பவங்களுக்குப் பின்னணியில் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டியதுடன்,  இந்த நிலைமை நீடித்தால் தோட்டத் தொழிலாளர்களும் திருப்பி தாக்க நேரிடும் என்கிற எச்சரிக்கையையும் தொண்டமான் செய்தார். ஜே.ஆர்.நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உறுதி கொடுத்தார்.

கண்துடைப்புக்காக ரத்னபுரி எம்.பி. ஜீ.வி.புஞ்சிநிலமே என்பவரை ஜே.ஆர் அமைச்சு பதவியில் இருந்து நீக்கினார்.

இதன் எதிரொலி இந்திய பாராளுமன்றத்திலும், தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தன. வெளிவிவகார அமைச்சர் நரசிம்மராவ் இந்திய தோட்டத் தொழிலாளர்கள் பலரும் கூட பாதிக்கப்பட்டிருப்பதையும், அவர்களின் மீது அக்கறைகொள்வது இந்தியாவின் பொறுப்பும் கூட என்று உரையாற்றினார் நரசிம்மராவ்.

செப்டம்பர் 15 அன்று கருணாநிதி தலைமையில் நிகழ்ந்த எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதி பல தொண்டர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்த நிகழ்வுகள் உலகின் பல நாடுகளின் கவனத்தை எட்டியது.

அரசாங்கம் ஒருபுறம் சர்வதேசத்துக்கு பதில்சொல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுக் கொண்டிருந்ததால் இந்த இன வன்முறைகளுக்கு தற்காலிக இரு வருட ஓய்வு எடுத்துக் கொண்டது என்று தான் கூற வேண்டும். அந்த இரு வருட காலத்துக்குள் இனவாதம் மேலும் கூர்மையுடன் தன்னை இன்னொரு பேரழிப்புக்கு தயார்படுத்திக் கொண்டிருந்ததை தமிழ் மக்கள் உணரமுடியவில்லை. அது இலங்கை வரலாற்றின் கோரக்கரை.

துரோகங்கள் தொடரும்..

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates