Headlines News :
முகப்பு » , , , , » ஆர்மண்ட் டீ சூசா : கண்டி கலவரத்தின் சாட்சி - என்.சரவணன்

ஆர்மண்ட் டீ சூசா : கண்டி கலவரத்தின் சாட்சி - என்.சரவணன்

“அறிந்தவர்களும் அறியாதவையும்” 25

ஆர்மண்ட் டி சூசா (1874 – 1921) அன்று பிரபல பத்திரிகையாளர். மோர்னிங் லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர். இலங்கை தேசிய காங்கிரசின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். 1915 கண்டி கலவரத்தைப் பற்றி அறிந்தவர்கள் ஆர்மண்ட் டீ சூசாவை அறியாது இருக்கமாட்டார்கள்.

ஆர்மண்ட் டீ சூசா 19.20.1874ஆம் ஆண்டு இந்தியாவில் அப்போது போர்த்துகேயரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கோவாவில் பிறந்தார். ஆனாலும் அவர் ஒரு இலங்கை தேசியவாதியாகவே இலங்கையர்களால் அடையாளப்படுத்தப்படுகிறார். அவர் ஒரு கத்தோலிக்கராக இருந்தபோதும் பிராமண குடும்பத்து வம்சாவளியைச் சேர்ந்தவர். தந்தை பிரபல வக்கீல். சிறுவயதிலேயே சூசா பெற்றோரை இழந்து அனாதையாக தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்தபோது அவர் இன்னொரு மாமனாரான டொக்டர் லிஸ்போவா பிந்தோவிடம் சூசாவை ஒப்படைத்தார். இலங்கைக்கான அமெரிக்க கவுசிலில் பணிபுரிந்த லிஸ்போவா 15 வயதுடைய சூசாவையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்து சேர்ந்தார். சூசா கொழும்பு ரோயல் கல்லூரியில் வரலாறு, ஆங்கில மொழி என்பவற்றில் புலமையுடன் கல்விகற்றார். ரோயல் கல்லூரியின் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்தார்.


கல்வியை முடித்துக்கொண்டு அவருக்கு விருப்பமான பத்திரிகைத் துறைக்குள் “The times of Ceylon” (இந்த பத்திரிகை நிறுவனம் தான் இன்று டெயிலி மிரர், லங்காதீப, சண்டே டைம்ஸ் போன்ற பத்திரிகைகளை வெளியிட்டு வருகிறது) மூலம் இணைந்த போதும் 8 வருடங்களின் பின்னர் பொது விடயங்களில் அதன் ஆசிரியர் ரோல்ஸ் இன் போக்கை விமர்சித்து வெளியேறினார். 1907 ஆம் ஆண்டு அவர் ‘மோர்னிங் லீடர்’ பத்திரிகையில் பிரதான செய்தியாளராக இணைந்தார்.  குறுகிய காலத்தில் அதன் பிரதம ஆசிரியராக ஆக்கப்பட்டார். இந்த நிறுவனம் தான் இன்று வளர்ந்து சண்டே லீடர் பத்திரிகையாக இன்று வளர்ந்துள்ளது.

இந்த பத்திரிகையின் மூலம் ஊடகத்துறையில் சமூக விடயங்களை முதன்மைப்படுத்தி துணிச்சலாக அரசை விமர்சித்து பல செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டார். அரசியலமைப்பு சீர்த்திருத்தம், இலங்கையர்களுக்கான பிதிநித்தித்துவம் என்பவை குறித்து தீர்க்கமான விடயங்களை அப்பத்திரிகை வெளியிட்டது. அதேவேளை சூசா அரசாங்க சபையில் இனவாரி பிரதிநிதித்துவத்துக்கு எதிரானவராக இருந்தார்.

1914ஆம் ஆண்டு “நுவரெலியாவில் நீதி” என்கிற தலைப்பில் மலையகத்தில் தோட்டத்துரைமார்களுக்கு சாதகமாக இயங்கும் பொலிசார் பற்றி ஆசிரியர் தலையங்கம் தீட்டினார். சூசா மீது வழக்கு தொடரப்பட்டு அவருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக ஐந்தாவது நாள் சூசா அன்றைய ஆளுநர் சேர் ரொபர்ட் சார்மர்ஸின் ஆணையின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

1915 கண்டி கலவரம் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்டபோதும் அதன் விளைவாக கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆங்கிலேயே அரச படையினரால் தான். இலங்கையில் இராணுவச் சட்டத்தை நிறைவேற்றி ஆங்கிலேயர்கள் செய்த அட்டூழியம் தான் இந்தக் கலவரத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவர்கள் செய்த அந்தக் கோரக் கொடூரங்களை வெளியுலகுக்கு கொண்டு வந்தவர் சூசா.

Hundred days in ceylon under martial law 1915- Armand de Souza
அவர் 1916இல் வெளியிட்ட “இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கையில் 100 நாட்கள்” (Hundred days in ceylon under martial law 1915- Armand de Souza) என்கிற நூல் தான் இன்று வரை அந்தக் கலவரத்தைப் பற்றி அறிய மிகவும் முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது. சிலோன் மோர்னிங் லீடரில் வெளிவந்த பல செய்திகளையும், சூசாவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் நிகழ்ந்த கடிதப் பரிமாற்றங்களும் அந்த நூலில் அடங்கும்.

இந்த நூல் சிங்களவர்களுக்கு சாதகமாக அமைந்ததாலேயோ என்னவோ இந்த நூல் வெவ்வேறு நபர்களால் மொழிபெயர்ப்பு செய்ய்யபட்டு சிங்களத்தில் பல பதிப்புகளைக் கண்டுவிட்டது. ஆனால் நேரடியாக சூசா வைத்த தலைப்பை வைக்கவில்லை. சிங்களத்தில் “மரக்கல கலவரம்” (மரக்கல கோலாஹலய) என்றே தலைப்பு வைத்தனர். “மரக்கல”  என்று ஒரு காலத்தில் முஸ்லிம்களை அடையாளப்படுத்திய போதும் இன்று முஸ்லிம்களின் இனத்துவ அடையாளம் வேறு வடிவத்துக்கு வளர்ந்துவிட்ட நிலையில் “மரக்கல” என்று அழைக்கப்படுவதானது இனவாதத் தொனியிலேயே. இன்றுவரை சிங்களத்தில் வெளிவந்துள்ள சகல ஆய்வுகளும், கட்டுரைகளும் கூட அப்படித்தான் இந்த கலவரத்தை அழைக்கின்றன. இலங்கையின் இனச்சிக்கல் குறித்து ஆராய்பவர்கள் எவரும் இந்த நூலை தவிர்த்திருக்க மாட்டார்கள். அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நூல்.

இந்த நூலைத் தவிர தவிர பொன்னம்பலம் இராமநாதன் எழுதிய “கலவரமும் இராணுவச் சட்டமும்” (Riots and Martial Law in Ceylon – 1915 – P.Ramanathan) என்கிற நூலும் அடுத்தபடியாக உள்ள முக்கிய நூலாக இனங்காணப்பட்ட போதும் சூசாவின் நூல் அதைவிட அதிமுக்கியமான நூலாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

விரிவான ஆதாரங்களுடனும், தகவல்களுடனும் கலவரம் நிகழ்ந்து சரியாக ஒரே வருடத்தில் 369 பக்கங்களில் இல் இந்த நூல் வெளியாகிவிட்டது.

நூலின் முன்னுரையை அவர் தொடக்கும் போது,
“இராணுவச் சட்டம் அமுலிலிருந்த போது ஒடுக்குமுறைக்கு உள்ளான இலங்கையர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்காக பிரித்தானியாவின் மனசாட்சியை தட்டியெழுப்புவதற்கு விரும்புகிறேன். இலங்கையில் பிறக்காதபோதும் நான் வாழ்வதற்கான நாடாக இலங்கையைத் தெரிவு செய்தேன். கடந்த மூன்று தசாப்தகாலமாக நான் இலங்கையர்களோடு ஒன்று கலந்து வாழ்கிறேன். நான் இந்த நாட்டின் எந்தவொரு இனத்துக்கோ, வேறு வகுப்பினருக்கோ, குழுக்களுக்கோ பாரபட்சமுடையவன் அல்ல... இந்த கலவரத்தின் ஒரு சாட்சியாகவே இதனைப் பதிவு செய்கிறேன்.” என்கிறார்.

Robert Chalmers
பிரித்தானிய அரசுக்கு உண்மையை விளக்கும் நோக்குடனும், நீதி கோருவதற்காகவுமே இந்த நூலை அவர் சிரமப்பட்டு தொகுத்திருப்பது தெரிகிறது. குறிப்பாக அவர் அன்றைய ஆளுநர் ரொபெட் சால்மஸ் (Robert Chalmers) மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறார். இந்த கலவரத்தின் போது முறைகேடாக நடந்துகொண்டதற்காக பிரித்தானிய அரசு ஆளுநர் ரொபெட் சால்மசை நீக்கி விட்டு இலங்கைக்கான புதிய ஆளுனரை நியமித்தது இன்னொரு கதை. இலங்கை வரலாற்றில் அப்படிப்பட்ட நீக்கம் எந்த ஒரு ஆளுநருக்கும் நிகழ்ந்ததில்லை.

ஆங்கிலேய மேலதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் முறைப்பாடுகள் செய்வது, அவர்களிடம் நேரடியாகவே பெட்டிகளை மேற்கொள்தல், தணிக்கையையும் மீறி விசாரணை விபரங்களை தொடர்ச்சியாக பத்திரிகையில் வெளியிட்டமை, கடுமையான விமர்சனங்களை முன்வைத்து நீதி கோரி வழிப்புணர்வுக்கான கட்டுரைகளை எழுதுதல் போன்ற கடமைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டார் அவர்.

ஆங்கிலேய ஆட்சி தான் செய்த தவறுகளை சரி செய்வதற்குப் பதிலாக மூடிமறைத்த வெட்கம்கெட்ட செயல் அதற்கு முன்னர் எப்போதும் நிகழ்ந்திருக்க முடியாது என்றார் ஆர்மண்ட் டீ சூசா.

இந்த கலவரம் நிகழ்வதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் தான் 1914ஆம் ஆண்டு அவருக்கு முதல் குழந்தையாக டொரிக்  (Anthony Theodoric Armand de Souza) பிறந்தார். 

ஆர்மண்ட் சூசாவின் மகன் டொரிக் டீ சூசா இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.  இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தலைமறைவு அரசியலில் ஈடுபட்ட லங்கா சமாஜ கட்சியைச் சேர்ந்த ட்ரொஸ்கிஸ்ட் டொரிக். 1946இல் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும், 1956இல்  செனட்டராகவும் தெரிவாகி 1969வரை பதவியில் இருந்தவர். 70இல் களனி பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக இணைந்து 1982 வரை கடமையாற்றியவர். கொல்வின் ஆர்.டீ.சில்வா அரசியலமைப்பு விவகார அமைச்சராக இருந்த காலத்தில் டொரிக் செயலாளராக கடமையாற்றினார்.
இன்னொரு மகன்  டொரி டீ சூசா (Tori de Souza) டைம்ஸ் ஒப் சிலோன் பத்திரிகையின் ஆசிரியராக பலராலும் போற்றப்பட்டவர்.

ராஜரீக  ஆசிய கழகம் - இலங்கைக் கிளை (Royal Asiatic society - CEYLON BRANCH) என்கிற புலமையாளர்களின் சங்கத்தில் சூசாவும் உறுப்பினராக இருந்து பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து வந்திருக்கிறார்.

1921இல் தனது 47வது வயதில் குடலில் நோய் ஏற்பட்டுமரணமானார்.
“அவர் இலங்கையின் சகல இனங்களினதும் ஐக்கியத்துக்காகவும், அமைதிக்காகவும், பரஸ்பர புரிந்துணர்வுக்காகவும் கனவு கண்டார். பாடுபட்டார்.”
என்று அப்போதைய திருத்துவக் கல்லூரியின் அதிபரும் அரசியல் செயற்பாட்டாளருமான A.G.பிரேசர் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
நன்றி - வீரகேசரி- சங்கமம்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates