நாட்டில் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறுவதற்கான சூழல் காணப்படுவதால் அரசியல் கட்சிகள் விழித்தெழுந்துள்ளன. தேசிய மட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
மலையகத்திலும் இப்போது தேர்தல் காய்ச்சல் வைரசு பரவி வருகின்றது. “நீயா? நானா? பார்த்துவிடுவோம் ஒரு கை” என தலைவர்கள் சவால்விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர்களை ‘உசுப்பி’ விடும் கைங்கரியத்தில் கட்சிகளுக்குள் உள்ள குட்டித் தலைவர்கள் மிக மும்முரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேட்பாளர் பட்டியலில் தங்கள் பெயர்களும் உள்ளடங்க வேண்டும் என துடியாய்த் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். பிளேன்டீக்குக் கூட வழியில்லாமல் உழன்று கொண்டிருந்த பலர் தலைவர்களின் தயவால் சபைகளில் தெரிவு செய்யப்பட்டு இன்று கோடீஸ்வரர்களாகத் திகழ்வதைப் பார்க்கிறோம். இதன் காரணமாக கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் தங்களையும் இணைத்துக்கொள்ள எல்லாவிதமான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
பல கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதை இத்தகைய பேர்வழிகள் விரும்புவதில்லை. கூட்டாகப் போட்டியில் இறங்கினால் குறிப்பிட்ட ஒரு சிலருக்கே இடம் கிடைக்கும். ஒவ்வொரு கட்சிக்கும் இடம் ஒதுக்க வேண்டும். எனவே கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்துவிட வேண்டும் என தூபம் போடுகிறார்கள். கடந்த தேர்தல்களில் வெற்றிபெற முடியாதவர்கள் எதிரணி பலமாக இருப்பதை விரும்பவில்லை. எப்படியாவது ஐக்கியத்தை சீர்குலைத்துவிட பல வழிகளிலும் முயன்று வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், தனியாக போட்டியிடுங்கள் என்ற அறைகூவல் எழுந்துள்ளது. ஒத்தைக்கு ஒத்தை நில்லுங்கள். நீயா? நானா? பார்த்து விடுவோம். என சில தலைவர்களிடமிருந்து குரல் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையின் மூலம் ஒரு உண்மை தெளிவாகின்றது. தனித்தனியாக மோதினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எதிரணி கூட்டுச் சேர்ந்தால் நிச்சயம் அவர்களை தோற்கடிக்க முடியாது என பெருந்தலைகள் கருதுகின்றன. தேர்தல் வருவதற்கு முன்பே அவர்களுக்கு உதறல் எடுத்துவிட்டது.
இங்கே வேறு ஒரு விடயத்தையும் எண்ணிப் பார்க்கவேண்டும். தேர்தல் என்றால் என்ன? தொழிற்சங்கம் என்றால் என்ன? யார் யாரோடு மோதுவது என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. முன்னாள் தலைவர் ஒருவர் கூட்டங்களில் பேசும் போது, “ ஐம்பது வருடங்களுக்கு முன்பு இந்திய தலைவர்களால் ஆரம்பிக்கப்பட்ட சங்கம் இது, சில்லறைக் கடைக்காரர்களுக்கெல்லாம் நாம் பதில் சொல்லத் தேவையில்லை. இந்த பெட்டிக்கடைகள் காலப்போக்கில் இல்லாமல் போய் விடும். இப்படி பல வருடங்களுக்கு முன் பேசியிருந்தார். பரதன் இராமனின் காலணியை வைத்து ஆட்சி செய்தான். அது போல் “நான் ஒரு கழுதையை நிறுத்தினாலும் அது தேர்தலில் வெற்றிபெறும்” என்று ஒரு தேர்தலின் போது பேசியிருந்தார். ஆனால் அப்போதே நிலைமை மோசமாகி லயம் லயமாக ஏறி இறங்கி வாக்கு கேட்கும் நிலை உருவானது.
கடந்த தேர்தலின்போது கூட்டு அணியினரின் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது. சுனாமி போல் வந்த அலையால் விளைந்த பயன் என்று கூறுகிறார்கள். எந்த அலையால் பெற்ற வெற்றி என்றாலும் அது வெற்றிதான். அந்த வெற்றியை எப்படித் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை கூட்டுத் தலைவர்கள் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
வலுவான கூட்டணி ஒன்றை அமைத்துக்கொள்வதென்பது எளிதான காரியமல்ல. கூட்டணிகள் வெற்றிபெற்றமைக்கு பல சம்பவங்களைக் கூறலாம். தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆளுமை செலுத்துவதற்குக் காரணம் 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட மாபெரும் கூட்டணிதான். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் தமிழகத்தில் அசைக்கமுடியாத காங்கிரஸ் ஆட்சி நிலவிவந்தது. இந்தியாவின் பிரதமர்களை நியமிக்கும் ஆற்றல் மிக்க தலைவராக இருந்த காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியை இல்லாமல் செய்வதென்பது கற்பனைக்கெட்டாத ஒன்றாகவே இருந்தது. பேரறிஞர் அண்ணா தனது சாமர்த்தியத்தால் மாபெரும் கூட்டணியொன்றை அமைத்தார்.
நாத்திகவாதிகளான தி.மு.க வினர், பழுத்த ஆன்மீக வாதியான ராஜகோபாலாச்சாரியாரையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும், பார்வார்ட் புளக் போன்ற பல்வேறு கட்சிகளையும் ஒன்றிணைத்து பிரமாண்டமான கூட்டணியை உருவாக்கினர். தேர்தலில் அக்கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது. தனிப்பெரும்பான்மையோடு தி.மு.க மாபெரும் சாதனை படைத்தது. அண்ணா முதலமைச்சரானார். இருபது வயதும் நிரம்பாத பல மாணவத் தலைவர்கள் காமராஜர், பக்தவத்சலம், சுப்ரமணியம் போன்ற தலைவர்களை கட்டுப்பணம் இழக்கச்செய்தனர். குப்புற விழுந்த காங்கிரஸால் இன்றுவரை மேலெழும்ப முடியவில்லை. சொற்ப இடங்களுக்காக தி.மு.கவை நாடிக்கொண்டு இருக்கிறது.
இந்த வரலாறு தெரிந்த காரணத்தினாலேயே கூட்டணிகள் குறித்து எதிரணிகள் கலங்கி நிற்கின்றன. எதிரியின் பலம் எதிரிக்குத்தான் தெரியும் என்பார்கள். ஆனால் கூட்டணிக் கட்சிகள் குழம்பி நிற்கின்றன. யானைக்கு தன் பலம் தெரியாது என்பதைப் போல இவர்களுக்கு தங்கள் பலம் என்ன என்பது புரியவில்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கட்சிக்குள்ளும் தனி ஆவர்த்தனம் நடந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒன்றாகக் கூடி காட்சியளித்தவர்கள் இன்று பிரிந்து நிற்கிறார்கள்.
பெரும்பான்மையின அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் கூட்டணிக்குள் உள்ளவர்களுக்கு தரப்படுவதில்லை.
கடந்த தேர்தலின் போதே பெரும்பான்மை வாக்குகளைப்பெறுவதில் குத்து வெட்டுகள் நடந்தன.
அதிகப்படியான ஓட்டுக்களைப் பெறுபவரே கபிநெட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியைப் பெறலாம் என்ற முனைப்பில் இறுதிநேர பிரசாரங்களில் அனல் பறந்தது. பணமும் பாதாளம் வரை பாய்ந்தது.
இந்த முறை அந்த வாய்ப்பைப் பெற்றுவிட ஒரு சாராரும், இருப்பதைத் தக்க வைத்துக்கொள்ள ஒரு சாராரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
‘அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விடக்கூடாது’ என்பதே ஆதரவாளர்களின் ஏக்கமாக இருக்கிறது.
இதைத்தவிர தமிழகத்தில் தற்போதைய அ.தி.மு.க படும்பாட்டைப் போல இங்கும் ஒரு சாராரின் கட்சிக்குள்ளேயே உட்கட்சி மோதல்கள் உச்சக் கட்டத்தை எட்டியிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமிகளும், ஓ.பி. பன்னீர்செல்வங்களும், டி.டி.வி.தினகரன்களும் கட்சிக்குள் கச்சை கட்டிக் கொண்டு அலைகிறார்கள்.
கடந்த தேர்தலின் போது சாமானியர்களும் தலைமையைப் பிடிக்க முடியும், அமைச்சர்கள் ஆக முடியும் என்பதை மக்கள் நிருபித்தார்கள். ஐந்து வருடங்களுக்குள் அதனை இல்லாமல் செய்து விடக்கூடாது என்பதுதான் நலன் விரும்பிகளின் ஆவலாகும். இவற்றைத் தெரிந்து கொண்டு செயலில் இறங்குவார்களா கூட்டணித் தலைவர்கள்?
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...