- ஜகத் ஜெயசூரிய மட்டுமல்ல எந்த ஒரு இராணுவத்தினரின் மீதும் கை வைக்க நான் உலகில் எவருக்கும் விடப்போவதில்லை.
- என்.ஜீ.ஓ.க்கள் சொல்வதற்கெல்லாம் நான் ஆடப்போவதில்லை.
- போலி டயஸ்போரா காரர்களின் விருப்பத்துக்கு நான் ஆடப்போவதில்லை.
கடந்த செப்டம்பர் 2 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66வது மாநாட்டில் அதன் தலைவரும், நாட்டின் ஜனாதிபதியுமான மைத்திரிபால ஆற்றிய உரையில் குறிப்பட்டது அது. அதை அவர் குரலை உயர்த்தி, வீராவேசத்துடன், முஷ்டியை தூக்கிக்கொண்டு தான் கதைத்தார். யுத்தத்துக்குப் பின்னர் இனவாதிகளின் தொடர் கர்ஜனை அதுவாகத்தான் இருந்து வந்துள்ளது. அதனை எதிர்த்து பதிலடி கொடுத்து வந்தவராகத் தான் மந்திரிபாலவை தமிழ் மக்கள் பார்த்தார்கள். ஜெயிக்கவும் வைத்தார்கள்.
காலாவதியான தமிழர்கள்?
மைத்திரிபால ஆட்சியமைத்த பின்னர் சுதந்திரக் கட்சியின் மாநாடுகள் இரண்டு நடந்திருக்கின்றன. இந்த இரண்டிலும் அவர் ஆற்றிய உரையில் இனப்பிரச்சினை குறித்த விடயத்தில் வேறுபாடுகளை காணமுடியும்.
2016 ஆற்றிய உரையில்...
“பான்கீ மூன் 2009 மே மாதம் யுத்தம் முடிந்ததுமே இலங்கைக்கு வந்து பார்வயிட்டுவிட்டுச் சென்றார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நம்மால் உலகம் இரண்டாக பிரிவுற்றது. நம்மால் ஐ.நா.சபை இரண்டாக பிளவுற்றது. நம்மால் ஐ.நா. மனித உரிமை பேரவை இரண்டாக பிளவுற்றது. இறுதியில் மனித உரிமையகத்தில் நிகழ்ந்த வாக்களிப்பில் நமது நாடு தோல்வியடைந்தது. நாங்கள் மோசமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சுமத்தினார்கள். அதனை சரி செய்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு நாம் இணங்கவேண்டி வந்தது. இந்த நேரத்தில் ஏற்பட்ட ஜனாதிபதித் தேர்தல், போதுத்தேர்லின் மூலம் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின் மூலம் நாம் தப்ப முடிந்தது.”
தமிழ் மக்கள் தமக்கு இருந்த இறுதித் துருப்புச் சீட்டாக இருந்த சர்வதேச மனித உரிமை ஆணையகத்தின் அழுத்தமும் கைநழுவிப் போவதற்கு வெறும் கால இழுபறி மாத்திரம் காரணமல்ல. மெதுமெதுவாக சர்வதேசத்தின் கண்களில் இருந்து மறைந்துபோகச் செய்வதற்கான இனவாத நிகழ்ச்சி நிகழ்ச்சிநிரலின் வெற்றி ஒரு முக்கிய காரணம். பேரம் பேசும் ஆற்றலை தமிழ் மக்கள் முற்றாக இன்று இழந்த நிலையில் பேரினவாத அரசின் வீறாப்பான பேச்சும், நீதிமறுப்பும் இலகுவாக தலைதூக்கி வருவதையே ஜனாதிபதியின் உரையிலிருந்தும் காண்கின்றோம்.
கூடவே இந்த நாட்டின் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்து ஜனாதிபதியான ஒரு ஏழை தான் தான் என்றும் ஒரு விவசாயியின் மகனாகப் பிறந்ததினாலா என்னைத் தாக்குகிறீர்கள் என்றும் அவறது உரையில் குறிப்பிடுகிறார். ஆனால் அவரைவிட ஏழ்மைநிலையில் இருந்து பதவியேற்ற ஒருவர் வலாற்றில் இருக்கிறார் என்பதையும் அவர் மறந்திருந்தார். அவர் பிரேமதாசா. பிரேமதாசா சிறுவயதில் தாய் செய்துதரும் “லெவேரியா”யாவை விற்று அதில் வளர்ந்தவர். ஆக அடிமட்டத் தொண்டனாக இருந்து கட்சியில் படிப்படியாக சகல அங்கங்களுக்கும் தெரிவாகி இறுதியில் நாட்டின் தலைவராக ஆனவர் அவர் ஒருவர் தான். அதைத் தவிர மிக்க முக்கியமான இன்னொன்றும் உள்ளது. மைத்திரிபால ஒரு உயர் கொவிகம (வெள்ளாள) சாதியைச் சேர்ந்தவர். ஆனால் பிரேமதாச மிகவும் அடிமட்ட சிங்கள தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்என்பதையும் சேர்த்தே பார்க்கவேண்டும். சாதியாலும் வர்க்கத்தாலும் அதிக தடைகளைத் தாண்டி வந்த விளிம்பு நிலையைச் சேர்ந்தவர் (சலாகம சாதியினருக்கு சலவை செய்யும் வண்ணார் சமூகமான “ஹின்ன” சாதிப் பிரிவு) பிரேமதாச என்பதை வரலாறு மறந்துவிடவில்லை என்பதை மைத்திரிபால மறந்துவிட்டார்.
போடுதடியாக தமிழர்கள்
கடந்த ஆண்டு மாநாட்டில் மைத்திரிபாலவின் உரையில்; பண்டாரநாயக்க SLFP யை ஆரம்பித்த போது அதன் ஆரம்ப இணைசெயலாளர்களாக மூவினத்தையும் சேர்ந்த பேர்னார்ட் அலுவிஹார (மாத்தளை) பதியுதீன் முகமத் (கம்பளை), தங்கத்துரை (யாழ்ப்பாணம்) ஆகியோரை இனப்பாகுபாடில்லாமல் நியமித்ததாக குறிப்பிடுகிறார். மைத்திரிபால மேடையில் கூறியது தவறான பெயர். தேடித் பார்த்ததில் அது தங்கத்துரை அல்ல எஸ். தங்கராஜா என்பது தெரியவருகிறது. 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முதல் கூட்டத்துக்கான அழைப்பு விடுத்தவர்களின் பட்டியலில் மூன்று தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன. எஸ்.தங்கராஜா, எம்.சுவாமிநாதன், ஏ.சீ.நடராஜா. இந்த கண்துடைப்பு காரணியைத் தவிர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் இருந்து எடுத்துக் கையாள மைத்திரிபாலவுக்கு கூட வேறெந்த உதாரணமும் மிச்சமில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.
கண் துடைப்புக்காக கருணா அம்மானை சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவராக ஆக்கி தமது தேவைகள் முடிந்தவுடன் நைசாக கழற்றி விட்டதையும் கண்டிருக்கிறோம்.
1956 அமைச்சரவை |
என்ன... பண்டாரநாயக்கவுக்கு அடுத்ததாக 60 ஆண்டுகளின் பின்னர் லஞ்ச ஊழலை இன்றைய மைத்திரிபாலவின் லஞ்ச ஊழல் ஒழிப்பில் அகப்பட்டு திண்டாடிக்கொண்டிருக்கும் சுதந்திரக் கட்சியினரும் நினைவில் வந்து தொலைக்கிறார்களா...?
தேசியமும் சுதேசிமுயம்
1951 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பிக்கும்போது அதுவரையான இரு தசாப்தங்கள் அரசியல் களம் என்பது வலதுசாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையில் தான் சமர் இருந்தது. அந்த போக்கில் ஒரு இன்னொரு அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியது தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. மீண்டும் ஐ.தே.க.வுக்கு போட்டியாக இன்னொரு வலதுசாரி கட்சியாக பரிணமித்தது தான் சுதந்திரக் கட்சி. ஆனால் தம்மை இடதுசாரி சார்பு மாயையை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டிருந்தது.
இடதுசாரிக் கட்சிகளின் சுலோகங்களையும் தனதாக்கிக்கொண்டு, இடதுசாரி ஆதரவாளர்களையும், ஐ.தே.க அதிருப்தியாளர்களையும் கவர்ந்திழுக்க வியூகம் அமைத்தது. ஐ.தே.க என்கிற மாபெரும் சக்திக்கு இணையான சக்தியை வலுவாக கட்டியெழுப்ப வேண்டுமென்றால் அது மட்டும் போதாது. சுதந்திரம் பற்றியும்அதற்கு மேல் பேசமுடியாது. சுதந்திரம் அடைந்து 3 வருடங்களை கடந்து விட்டிருந்தது. ஆக ஆங்கிலேய ஆட்சியின் எச்சசொச்சங்களைக் களைவதையும் தனது வேலைத்திட்டங்களாக முன்வைத்தது. தம்மை ஐ.தே.கவை விட தீவிரமான ஒரு சிங்கள – பௌத்த தேசியவாதிகளாக உருவாக்கிக்கொண்டு சிங்கள பௌத்தர்களின் முழு ஆதரவையும் தமக்கு சாதகமாக திருப்பி விட திட்டமிட்டது. சிறுபான்மையினரின் ஆதரவு பற்றிய எந்த பீதியும் இருக்கவில்லை. அதன் தேசியம், சுதேசியம் ஆகிய சுலோகங்களைக் கையிலெடுத்தது. ஆனால் இலங்கை தேசியத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக அந்த சுலோகங்களைக் கொண்டு சிங்கள பௌத்தமாக பரிமாற்றிய போக்கை நாம் தேர்தல் அரசியலையும் சேர்த்துக் கொண்டு தான் புரிந்துகொள்ளவேண்டும்.
சுதந்திரக் கட்சியின் அளவுகோளின்படி தமிழ் மக்களின் ஆதரவைவிட சிங்கள பௌத்தர்களின் ஆதரவே தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கும் என்பது அன்றைய கணிப்பு. சிலவேளைகளில் இந்திய வம்சாவளியினர் பிரஜாவுரிமையையும், வாக்குரிமையையும் இழக்காதிருந்தால் அந்த அளவுகோள் வேறாக இருந்திருக்கக் கூடும். ஆனால் மூன்று வருடங்களுக்கு முன்னர் அதாவது சுதந்திரம் அடைந்த அதே 1948 இலேயே இந்திய வம்சாவளியினர் பிரஜாவுரிமையையும், வாக்குரிமையையும் இழந்திருந்தார்கள். ஆக சிங்கள பௌத்தத்துக்கான பாதை தெட்டத் தெளிவாகவே இருந்தது. பண்டாரநாயக்கவுக்கு இருந்த ஒரே தாகம் வெற்றி, வெற்றி, தேர்தல் வெற்றி என்பதே.
இலங்கையின் தோட்டப்புற மக்களின் தேவைகளைப் புறக்கணித்து, விவசாயிகளின் தேவையை முன்னிறுத்தியதும் இதன் விளைவு தான். கீழ் மத்தியதரவர்க்க சிங்களவர்களின் வாக்கு வங்கியையே பிரதான இலக்காக வைத்தார்.
இலங்கையின் பிரதான கட்சிகள் அனைத்துமே தமது கட்சிக்குள் ஒரு தொழிற்சங்க பிரிவு, மகளிர் பிரிவு வைத்திருப்பது போலவே பிக்குகள் முன்னணியொன்றையும் வைத்திருப்பது ஏன் என்கிற கேள்வியை இதுவரை எவரும் எழுப்பியதாகத் தெரியவில்லை. ஜே.வி.பி உள்ளிட்ட சிங்கள இடதுசாரிக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதையும் கவனிக்க. இம்முறை சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் அதன் பிக்கு முன்னணி பிரிவு முக்கிய அங்கமாக காட்டப்பட்டது.
சிங்களம் மட்டும்
சுதந்திரக் கட்சி ஒரு சிங்கள பௌத்த தேசியவாத கட்சியாக திடீரென்று முளைத்ததல்ல அதற்கான வேர் ஏற்கெனவே முளைவிட்டிருந்தது. சிங்கள பௌத்தர்களை அணிதிரட்டுவதற்காக சிங்கள மகா சபையை அவர் ஏற்கெனவே தொடங்கியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதில் சிங்கள மகா சபையின் தலைவராகத் தான் பண்டாரநாயக்க இணைந்தார். ஐ.தே.கவிலிருந்து விலகிய போது சிங்கள மகா சபையின் உறுப்பினர்களையும் சேர்த்துக் கொண்டு தான் வெளியேறினார்.
சிங்கள மகா சபை ஒரு அனைத்து இனங்களுக்குமான ஒரு அமைப்பாக இருக்கவில்லை. மாறாக அது சிங்கள இனவாத அமைப்பாகத் தான் இயங்கியது. அதன் உத்தியோகபூர்வ பத்திரிகையான “சிங்கள பலய” (சிங்கள சக்தி) என்கிற பத்திரிகையை பார்த்தால் இதனை விளங்கிக்கொள்வீர்கள். அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஹேமபால முனிதாச அதற்கு முன்னர் அநகாரிக தர்மபாலாவின் “சிங்கள பௌத்தயா” என்கிற இனவாத பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர். அது மட்டுமன்றி சுதந்திரக் கட்சி தோற்றம் பெற்றதும் அதன் உத்தியோக பூர்வ பத்திரிகையின் பெயர் “சிங்களே” என்பது தான். அதன் ஆசிரியரும் முனிதாச தான். ஒரு இனத்துவக் கட்சியின் போக்கும், வேலைத்திட்டமும் இப்படி இருப்பதில் அதிசயிப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் சகல இனங்களுக்குமான தேசியக் கட்சியென பிரகடனப்படுத்திக் கொண்ட ஒரு கட்சி மிகவும் மோசமான சிங்கள பௌத்த கட்சியாகத் தான் இருந்து வந்துள்ளது என்பதை இங்கு குறித்தே ஆக வேண்டும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த 24 மணி நேரத்தில் அதாவது அதே 1951 செப்டம்பர் 03ஆம் திகதி பிறந்தவர் தற்போதைய ஜனாதிபது மைத்திரிபால சிறிசேன. சுதந்திரக் கட்சியின் வயது தான் அவரது வயதும்.
சுதந்திரக் கட்சியின் இணையத்தளம் (http://slfp.lk) இன்றும் சிங்களத்தில் மட்டும் தான் இயங்கிவருகிறது. சிங்களத்தில் மட்டும் தான் அனைத்து தகவல்களும் கிடைக்கும். இலங்கை தேசியம் பற்றி சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வ கீதம் சிங்களத்தில் மட்டும் தான் பாடப்பட்டு வருகிறது. இம்முறை மாநாட்டுக்கான முழுப்பக்க பத்திரிகை விளம்பரங்கள் சிங்களப் பத்திரிகைளில் மட்டும்தான் காண முடிந்தது. தொலைக்காட்சிகளிலும் அப்படித்தான். அரசாங்கப் பத்திரிகையான சிங்கள “சிலுமின” (லேக்ஹவுஸ்) பத்திரிகை 16 பக்கங்களுடன் பிரேத்தியேகமாக சுதந்திரக் கட்சியைப் பற்றி வெளியிட்டது. அக்கட்சி நடத்திவரும் சமூக வலைத்தளங்களில் கூட சிங்களத்தில் மாத்திரம் தான் விபரங்களைக் காண முடியும். மருந்துக்கும் தமிழில் எதையும் காண முடியாது. ஆக சிங்களம் மட்டும் கட்சியாக தோன்றி, சிங்களமாகவே வளர்ந்து சிங்களமாகவே இன்றும் இயங்கிவரும் கட்சியொன்று தேசியக் கட்சியாக எப்படி தன்னை சொல்லிக் கொள்ள முடியும். அது சிங்களக் கட்சியாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
சென்ற வருடம் 2016இல் நிகழ்ந்த 65வது மாநாட்டு உரை
கடந்த 2ஆம் திகதி நிகழ்ந்த 66வது மாநாட்டு உரை
அவர் ஆற்றிய உரையின் முழு வடிவம் அடுத்த நாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஊடகபிரிவின் இணையத்தளத்தில் (http://www.pmdnews.lk) சிங்களத்தில் வெளியாகியிருந்தது. தமிழில் அந்த உரை பற்றிய வெறும் சாராம்ச செய்தி மாத்திரமே வெளியாகியிருப்பதையும் நீங்கள் சென்று பார்வையிடலாம்.
இடதுசாரி மாயை
30 களில் அவர் அரசாங்க சபை உறுப்பினராக ஆற்றிய உரைகளில் சோசலிசம் பற்றிய அவரது கருத்தொன்றை பலரும் பிரஸ்தாபிப்பார்கள்.
“சோசலிசம் எனும் குழந்தையை உரிய காலத்தில் பிறப்பதற்கு முன்னரே குரடுகளைச் செலுத்தி பிறப்பிக்கும் தேவை எனக்கில்லை. அந்தக் குழந்தையை சுதந்திரமாக பிறக்கவிடவேண்டும்”.
அவர் ஒரு இடதுசாரியா என்பது ஒருபுறமிருக்க பெருவாரி சிங்கள இடதுசாரிகளைப் போலவே “சமத்துவத்தை” வெறும் பொருளாதாரத்தோடு சுருக்கி வைத்துவிட்டு பிரதான பிரச்சினையான இனப்பிரச்சினையில் “அசமத்துவமான” கொள்கையையும் நடைமுறையையும் பின்பற்றியவர் அவர் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.
இடதுசாரி முற்போக்கு போர்வைக்குள் இருந்துகொண்டு இடதுசாரிக் கட்சிகளை அனைத்துக் கொண்டே வரலாற்றைக் கடத்திவந்தது தான் சுதந்திரக் கட்சி. இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் வீழ்ச்சியில் சுதந்திரக் கட்சியின் பாத்திரம் பற்றி பலரும் ஆராய்ந்துவிட்டார்கள். இடதுசாரி கட்சிகள்; இனவாத நிலைப்பாடுகளை எடுக்கவும், வலதுசாரி கொள்கைகளை ஆதரித்துநிற்கும் சூழ்நிலைக் கைதிகளாக ஆனதற்கும் அவர்கள் சுதந்திரக் கட்சியை ஒரு இடதுசாரித்துவ ஆதரவு கட்சியாகக் கருதியதுமே முக்கிய காரணம். அந்த பந்தம் இன்னமும் முடிவுறவுமில்லை. பழைய பாரம்பரிய இடதுசாரி கட்சிகள் சுய அரசியல் தற்கொலையிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியவில்லை.
முதலாவது தடவையாக 1952 தேர்தலில் போட்டியிட்டு 9 ஆசனங்களை மட்டுமே கைப்பற்றிக்கொண்ட போதும் நான்கே வருடத்தில் “மக்கள் ஐக்கிய முன்னணி” எனும் பேரில் 1956இல் ஆட்சியைக் கைப்பற்றியது. கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய ஒரே சந்தர்ப்பம் இலங்கை வரலாற்றில் அது ஒன்று தான். ஐ.தே.க வெறும் 8 ஆசனங்களை மட்டுமே பெற்று சுருண்டது. இந்த நாட்டில் அதிகமான காலம் ஆட்சி செய்திருப்பதும் சுதந்திரக் கட்சி தலைமையில் தான் என்பதையும் மறந்துவிடலாகாது.
ஆண்டு
|
வாக்கு
|
வீதம்
|
ஆசனம்
|
நிலை
|
1952
|
321,250
|
15.52%
|
9/95
|
எதிர்க்கட்சி
|
1956
|
1,046,277
|
39.52%
|
51/95
|
அரசாங்கம்
|
1960
|
647,175
|
21.28%
|
46/151
|
எதிர்க்கட்சி
|
1960
|
1,022,171
|
33.22%
|
75/151
|
அரசாங்கம்
|
1965
|
1,221,437
|
30.18%
|
41/151
|
எதிர்க்கட்சி
|
1970
|
1839979
|
36.86%
|
91/151
|
அரசாங்கம்
|
1977
|
1,855,331
|
29.72%
|
8/168
|
எதிர்க்கட்சி
|
1989
|
1,780,599
|
31.08%
|
67/225
|
எதிர்க்கட்சி
|
1994
|
3,887,823
|
48.94%
|
105/225
|
அரசாங்கம்
|
2000
|
3,900,901
|
45.11%
|
107/225
|
அரசாங்கம்
|
2001
|
3,330,815
|
37.19%
|
77/225
|
எதிர்க்கட்சி
|
2004
|
4,223,970
|
45.60%
|
105/225
|
அரசாங்கம்
|
2010
|
4,846,388
|
60.33%
|
144/225
|
அரசாங்கம்
|
2015
|
4,732,664
|
42.38%
|
95/225
|
அரசாங்கம்
|
ஐ.தே.கவை விட அதிகமான முக்கிய தலைவர்களை உருவாக்கிய கட்சியாக சுதந்திரக் கட்சியை கூறுவது வழக்கம். ஆனால் அந்தப் பெருவாரியானோரும் இனவாத ரீதியில் வளர்ந்தெழும் பெரும் பாசறையாகவும் அதே சுதந்திரக் கட்சி இருந்திருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை.
1956 ஆம் ஆண்டு 24 மணி நேரத்தில் “தனிச் சிங்கள சட்டம்” தொடக்கம் சிங்கள பௌத்தத்தை அரசமயப்படுத்தியது மாத்திரமல்ல, அதை மக்கள்மயப்படுத்தியதிலும் சுதந்திரக் கட்சியின் வகிபாகம் குறித்து தனியாக வரிசைப்படுத்திச் செல்லலாம்.
இம்முறை மாநாட்டில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஐந்து அமைச்சர்கள் ஒவ்வொன்றாக அதனை மேடையில் பிரகடனப்படுத்தினார்கள். பொருளாதாரம் (எஸ்.பீ.திஸ்ஸநாயக்க), சர்வதேச விவகாரம் (சரத் அமுனுகம), உணவுற்பத்தியும் – சூழலியலும் (சுசில் பிரேமஜயந்த), தொழிலாளர் உரிமை (டபிள்யு.டீ.ஜே.செனவிரத்ன), இளைஞர் விவகாரம் (சாந்த பண்டார) என்பனவே அவை.
இனப்பிரச்சினை “தேசியப் பிரச்சினை” என்று அழைக்கப்பட்ட காலமும் போயிற்று, தேர்தல் விஞ்ஞாபனங்களிலும், கட்சி மாநாடுகளிலும், சர்வதேச கூட்டங்களிலும் பிரதான இடத்தைப் பிடித்திருந்த “தேசியப் பிரச்சினை” காலாவதியாக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் உணரமுடியாதவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கெடுபிடுகளும், நெருக்கடிகளும் தேய்ந்து, குறுகி, முக்கியமிழக்கப்பட்ட நிலையில் இது சிங்கள ஆட்சியாளர்களுக்கு இலகுவாக கைகூடியிருக்கிறது. ஆட்சியிலுள்ள சுதந்திரக் கட்சி மிகவும் துணிச்சலாகவே தமிழ் மக்களை மட்டுமன்றி சர்வதேசத்தையும் புறக்கணித்து வருகிறது என்பதற்கு சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபாலவின் உரை இன்றைய சிறந்த எடுத்துக் காட்டு.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...