Headlines News :
முகப்பு » , » பட்டதாரிகள் நியமனங்களை ஏற்கத்தயங்குவது ஏன்? - என்னெஸ்லி

பட்டதாரிகள் நியமனங்களை ஏற்கத்தயங்குவது ஏன்? - என்னெஸ்லி


 கல்வித்தரம் உயர்வடையவேண்டுமானால், சகல பாடசாலைகளிலும் பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டுமென்பது கல்விச் சமூகத்தின் குறிக்கோளாக இருக்கிறது. இதன் அடிப்படையில் பாடசாலைக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். பட்டதாரி ஆசிரியர்களினால் சிறந்த முறையில் நிறைய விடயங்களை மாணவர்களுக்கு வழங்க முடியும் என்பதே இதன் எதிர்பார்ப்பாகும்.

இதற்காக பட்டதாரிகள் அல்லாத ஆசிரியர் சிறப்பாக படிப்பிப்பதில்லை என்று குறை கூறவில்லை. ஏனெனில், தற்போது மலையகத்தில் கற்பித்தலில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களினால் 90 வீதமானவர்கள் பட்டதாரிகள் அல்லாத பயிற்றப்பட்ட அல்லது பயிற்றப்படாத ஆசிரியர்கள்தான். அந்த வகையில் அவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

பிரபல பாடசாலைகள் எல்லாமே பட்டதாரி மற்றும் பயிற்றப்பட்ட ஆசிரியர்களையே கேட்டுப்பெறுகின்றன.

பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதனூடாக இரண்டு விதமான விடயங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
ஒன்று பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு வழங்குதல். இரண்டு பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிப்பதனூடாக கல்வித் தரத்தை உயர்த்துவது.

பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமனம் பெறும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர் கலை, வர்த்தக மற்றும் அழகியல் பட்டதாரிகளாவே உள்ளனர். குறைந்தளவிலானோரே விஞ்ஞான பட்டதாரிகளாக உள்ளனர்.

பொதுவாக நாட்டில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பின்மை அண்மைக்காலமாகவே அதிகரித்துக் காணப்படுகிறது. வேலைவாய்ப்பு வழங்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பட்டதாரிகள் வீதியில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

மலையகத்திலும் பட்டதாரிகள் தொழிலின்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டபோதும் வடக்கு மற்றும் கிழக்கைப் போன்று மலையகப் பட்டதாரிகள் பெரிதாக போராட்டங்களில் ஈடுபடவில்லை.

இதேவேளை, மலையகத்திலுள்ள பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டுமென்று பரவலாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மாகாண சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக வலியுறுத்தி வந்தனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே மத்திய மாகாண சபையினால் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்ய வேண்டும் என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கு இதன்மூலம் தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதே இதன் நோக்கமாகும். அதேவேளை, ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கும் இது ஒரு தீர்வாக அமையுமென்று எதிர்பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சினால் 742 பட்டதாரிகளுக்கு அண்மையில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 460 தமிழர்களும், 282 முஸ்லிம்களும் அடங்குவர்.

இவர்கள் மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும், ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், இவர்களில் 100 க்கும் மேற்பட்டோர் உரிய பாடசாலைகளுக்குச் சென்று தமது கடமைகளை பொறுப்பேற்கவில்லை என்று மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.

இதுபற்றி மத்திய மாகாண அமைச்சர் ரமேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்; "மலையகப் பட்டதாரிகளுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பமாக இருந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலைவாய்ப்புக்காக அங்குள்ள பட்டதாரிகள் போராட்டம் நடத்தினர். ஆனால், அவ்வாறானதொரு நிலைமைக்கு இடமளிக்காமல் மலையகப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

கிடைத்த வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, வேறொருவருக்கு கிடைத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் இதனால் இல்லாமல் போனது. தவிர, இது போன்ற ஆசிரியர் நியமனம் மீண்டும் வழங்குவதற்கான சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லை.

கடமைகளை பொறுப்பேற்காமைக்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டன. சிலர் தமது வீட்டுக்கு அருகிலேயே பாடசாலை கிடைக்கவில்லையென்றும், தூரப் பாடசாலைகக்குச் செல்ல முடியாதென்றும், பெற்றோர் சுகவீனமுற்றிருப்பதால் தூரப் பாடசாலைக்குச் செல்ல முடியாது என்று கூறினர். வேறு சிலர் பட்டதாரி நியமனம் கிடைத்துள்ள தம்மால் ஆரம்பப்பிரிவுக்கான நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது என்றும் கூறியதாக மாகாண அமைச்சர் தமது ஆதங்கத்தை வெளியிட்டார். தமிழ்க் கல்வி அமைச்சர் கூறியதுபோன்று கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதே சிறந்ததாகும். உயர்தரம் பயின்ற பலர் ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொண்டு அத்துடன், நின்றுவிடவில்லை. பாடசாலைகளில் கற்பித்துக்கொண்டே உயர்கல்வியையும் தொடர்ந்தனர். பலர் பட்டதாரிகளாகவும், கல்வி டிப்ளோமா பட்டங்களையும் பெற்று தமது கல்வித் தரத்தை உயர்த்திக் கொண்டனர். அதன்மூலம் அதிபர்களாகவும், கல்வி ஆலோசகர்களாகவும், உதவி கல்விப்பணிப்பாளர்களாகவும் உயர்ந்துள்ளனர். இவையெல்லாம் உதாரணங்கள்தான்.

எனவே, பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெறுபவர்கள் மென்மேலும் உயர்வதற்கும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதற்கும் முடியும். மனது வைத்தால் முடியாது எதுவுமில்லை.

அதேவேளை, மலையகம் தற்போதுதான் கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றது. எல்லா பாடசாலைகளிலும் எல்லா வசதிகளும் இல்லை. நகரப் பாடசாலைகள் என்று கூறப்படும் பாடசாலைகளிலேயே பல்வேறு குறைபாடுகள் நிலவுகின்றன. மலையகத்திலுள்ள எந்தவொரு பாடசாலையும் முழுமையான வசதிகளைக் கொண்டவையல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். போக்குவரத்து வசதிகள் மட்டுமே ஒரு சில நகரப் பாடசாலைகளின் தகுதியாக இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

எனவே, வசதிகளற்ற கஷ்டப் பிரதேச, தூரப் பிரதேச பாடசாலைகளை பொறுப்பேற்று அங்கு கல்வித் தரத்தை உயர்த்தவும், பின்தங்கியுள்ள சமூக மேம்பாட்டிற்காக உழைக்கவும் சமூகக் கடமையாகக் கொண்டு அவ்வாறான பாடசாலைகளை பொறுப்பேற்க வேண்டும்.

இதேவேளை, தமக்கு வழங்கப்பட்ட பாடசாலையில் கடமையை பொறுப்பேற்கச் சென்ற பட்டதாரி ஆசிரியர்களை ஒரு சில அதிபர்கள் ‘வேண்டா வெறுப்புடன்’ வரவேற்றதாகக் கூறப்படுகிறது. ‘இந்தப் பாடசாலைக்கு ஏன் வந்தீர்கள், நல்லதொரு பாடசாலையைப் பெற்றுக்கொண்டு போய்விடுங்கள்’ என்று அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாகவே அந்த அதிபர்கள் இவ்வாறு கூறுவதாகத் தெரியவருகிறது. ஆனால், யாரும் எதற்காகவும் அச்சப்படத் தேவையில்லை. திறமையுள்ளவர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள். இதில் தவறு இருக்காது; இருக்க முடியாது.

பட்டதாரிகள் தமக்கு கிடைத்த நியமனங்களை விட்டுவிடாது, ஏற்றுக்கொள்வதும், அதனூடாக தம்மை உயர்த்திக்கொள்வதும் அவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்.

நன்றி - தினக்குரல்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates