தேசிய கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும் தத்தமது கட்சிகளை பலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுவருவதை அண்மைக் காலமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல தேசிய கட்சிகள் இவ்வாறான கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
தற்போதைய நல்லாட்சி அரசில் பிரதான கட்சிகளாக ஸ்ரீல.சு.கவும், ஐ.தே.க.வுமே இருக்கின்றன. இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து ஆட்சியில் பங்கு கொண்டிருந்தாலும், தத்துமது கட்சிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் இரண்டு கட்சிகளுமே தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்திவரும் அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகிறது. இரண்டு கட்சிகளுமே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாணசபைத் தேர்தல்கள் என்பவற்றை இலக்காகக் கொண்டும், தனித்தனியாக போட்டியிட்டு பெரும்பான்மை பலத்தை அடைவதை கருத்திற் கொண்டுமே இவ்வாறு செயல்படுகின்றன.
மலையகத்திலும் கூட இதுபோன்றதொரு நிலைமையே காணப்படுகின்றது. மலையகத்தின் பிரதான கட்சித் தலைவர்கள் தத்தமது கட்சிகளைப்பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடியும்.மலையகத்தில் பிரதான கட்சிகிளாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன செயற்பட்டு வருகின்றன.
இ.தொ.கா.தனியாக செயற்பட்டுவரும் அதேவேளை, தொ.தே.ச., ம.ம.மு., ஜ.ம.மு, ஆகிய மூன்றும் ஓரணியாக தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி அதனூடாக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
அந்தவகையில், மலையகக் கட்சிகள் அனைத்தும் பல்வேறுவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இளைஞர் அமைப்புகளை உருவாக்குவது, பழைய இளைஞர் அமைப்புகளை மறுசீரமைப்பது, புதிய அங்கத்தினர்களை சேர்த்துக் கொள்வது பிற கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை தமது கட்சியுடன் இணைத்துக் கொள்வது போன்றவற்றை முன்னெடுத்து வருகின்றன. இது காலத்துக்குக்காலம் நடந்து வருவது வழக்கம்தான்.
ஆனால், தற்போது இதில் வேகம் காட்டப்படுகின்றது.இதற்குக் காரணம் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்தான் என்பதை மிக இலகுவில் புரிந்து கொள்ளமுடியும்.மலையக மக்கள் முன்னணி நீண்டகாலத்திற்குப் பின்னர் கடந்த 16 ஆம் திகதி கொட்டகலை சித்தி விநாயகர் ஆலய கலாசார மண்டபத்தில் தனது இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது.
மலையக மக்கள் முன்னணி 1989 ஆம் ஆண்டு மறைந்த தலைவர் பெ.சந்திரசேரன், மறைந்த வி.டி.தர்மலிங்கம், பி.ஏ.காதர், ஏ.லோறன்ஸ் மற்றும் சரத் அத்துக்கோரள போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்ததாக மலையக தொழிலாளர் முன்னணி, மலையக இளைஞர் முன்னணி, மலையக ஆசிரியர் முன்னணி போன்ற துணை அமைப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
மலையக தொழிலாளர் முன்னணி தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் மலையக மக்கள் முன்னணி அரசியல் உரிமைகளுக்காகவும், இளைஞர் முன்னணி இளைஞர் அபிவிருத்திக்காகவும், ஆசிரியர்களின் உரிமைகளுக்காக ஆசிரியர் முன்னணியும் தோற்றுவிக்கப்பட்டாலும், இவற்றுள் முதலிரண்டு அமைப்புகள் மாத்திரமே தொடர்ச்சியான செயற்பாடுகளை கொண்டிருந்தன.
எவ்வாறாயினும், மறைந்த தலைவர் சந்திரசேகரனின் காலத்துக்குப் பின்னர் புதிய தலைவரும், இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தலைமையில் இளைஞர் முன்னணி மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தமாநாட்டில் உரையாற்றிய ம.ம.மு. தலைவர் வே.இராதாகிருஷ்ணன், ‘இளைஞர்களை ஒன்றிணைத்து மலையகத்தில் ஒருசிறந்த சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நடத்தப்படுவதாகவும், மாறாக இதனை அரசியிலை நோக்காகக் கொண்ட ஒரு நிகழ்வாகக் கருதவேண்டாம்.மலையக இளைஞர், யுவதிகளை நல்வழிப்படுத்துவதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் ம.ம.மு. தலைவர்களுடன் அதிதிகளாக பிரதியமைச்சர் அமீர் அலி, ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் மலேஷியப் பிரமுகர்கள், கொரிய இளைஞர்கள் என பலரும் அழைக்கப்பட்டுக் கலந்துகொண்டனர்.
மலையகத்தைச் சாராத கட்சிகளின் பிரமுகர்கள், தலைவர்கள், எம்.பி.க்கள் போன்றோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட போதும், மலையகத்தின் ஏனைய கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை. குறிப்பாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏனைய கட்சிகளான தொழிலாளர் தேசிய முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர்களையோ அல்லது அவர்களின் பிரதிநிதிகளையோ காணக்கிடைக்கவில்லை.
இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா? அழைப்பு விடுத்தும் அவர்கள் வரவில்லையா அல்லது முரண்பாடுகள் காரணமா என்பன புரியவில்லை. இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் ‘திகா மன்றம்’ அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம், ‘மலையகத்தில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்ற நீண்டகால நோக்கத்தில் ‘திகா மன்றம்’ அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதன் பணிகள் பக்கச்சார்பின்றி அனைவருக்கும் போய்ச் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மன்றத்தின் கெப்டன்களாக பதவியேற்றுள்ள இளைஞர்களின் கைகளிலும், ஆயிரக்கணக்கான உறுப்பினர்களின் கைகளிலுமே அது தங்கியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரமுகர்களுடன், ஸ்ரீல.சு.க.வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.ராஜாராம் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது.
அதேவேளை ஏனைய மலையகக் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை. இதுபோன்று ஒவ்வொரு மலையகக் கட்சியும் தனித் தனியாக தங்களது கட்சிகளையும், இளைஞர் அமைப்புகளையும் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. கூடுமானவரை தோழமைக்கட்சிகள் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றதாகவே சந்தேகிக்கவேண்டியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், தமிழ் முற்போக்குக் கூட்டணியிலுள்ள தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு திட்டமிடப்படுவதாக சில முக்கிய பிரமுகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
அதேபோன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஆனால், இப்போது அதையெல்லாம் கைவிட்டுள்ளதாகவும், தத்தமது கட்சியை பலப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுத்தேர்தல் என்பவற்றின் மூலம் மலையக மக்களிடையே ஒரு நம்பிக்கையை தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்படுத்தியது. 7 பேர்ச் காணி, தனிவீடு, கல்வி, சுகாதாரம் (வைத்தியசாலை), வீதி அபிவிருத்தி, நுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகள் என பலவற்றைக் கூறலாம். ஒன்றுபட்ட சக்தி, மக்கள் ஆதரவு, அரசியல் தூரநோக்கு என்பவை காரணமாகவே இவையெல்லாம் சாத்தியமானது.
தனித்தனியாக செயல்பட்டிருந்தால் எதுவும் கிடைத்திருக்காது. கிடைக்கவும் மாட்டாது. இதனை கருத்திற்கொண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி செயற்பட வேண்டும்.
அதுவே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வாய்ப்பாக அமையும். தமிழ் முற்போக்குக் கூட்டணியில் உள்ள பங்காளிக்கட்சிகள் நடத்தும் விழாக்கள், நிகழ்வுகள் திறப்பு விழாக்கள் என்பவற்றில் முன்னெல்லாம் சகல தலைவர்களும் அல்லது முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதைக் காணமுடிந்தது.
ஆனால் தற்போது அவ்வாறு காணப்படுவதில்லை. எனினும் ‘பெயருக்காக’ யாராவது ஒருவரை அனுப்பி வைக்கும் நிலைமையே காணப்படுகிறது.இதற்கு என்ன காரணம் என்ற கேள்வி மலையக மக்களிடம் எழுந்துள்ளது. கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள் என்பவற்றில் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பு. அவ்வாறிருந்தால், அது உடனடியாகக் களையப்பட வேண்டும். ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். அடுத்தவருட முற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படுவது அவசியமாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...