Headlines News :
முகப்பு » » நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - வர்த்தமானி அறிவித்தல் வந்தபின்பே தெளிவாகும்

நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - வர்த்தமானி அறிவித்தல் வந்தபின்பே தெளிவாகும்


உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகின்றது. நிர்வாகம் உள்ளூராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. சபைகளின் செயலாளர்கள் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்து வருகின்றார்கள். இதுவரை தேர்தல் நடத்தப்படாததால் பிரதேச, நகர, மாநகர சபைகளில் முறையான சேவைகள் கிடைக்காமல் மக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருவதாக தெரிவிப்பட்டுள்ளது. எனவே, தேர்தலை உடனடியாக நடத்தும்படி அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்துள்ளன.

இலங்கை வரலாற்றில் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி வாரியாக ஒரே திகதியில் ஒரே நாளில் நடத்தப்பட்டு வந்துள்ளன. ஒரு தொகுதியில் வெற்றிடம் ஏற்படும்போது இடைத் தேர்தல் நடத்தப்படும் முறையும் இருந்தது. இந்த இடைத் தேர்தல் மூலம் ஆளுங்கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் எவ்வாறு இருக்கின்றது என்பதை நாடி பிடித்துப் பார்த்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது. எனினும், விகிதாசார தேர்தல் முறை அமுலுக்கு வந்த பிறகு இடைத் தேர்தல் நடைபெறவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர் ஒருவர் கட்சி விட்டு. கட்சி தாவினால் உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என்பதால் ஆளுங் கட்சியின் பலம் தக்க வைத்துக் கொள்ளப்பட்டு வந்தது. இதுவே, ஐக்கிய தேசியக் கட்சி 1977 முதல் 1994 வரை 17 ஆண்டுகள் தொடர்ந்து பதவியில் இருக்கக் காரணமாக இருந்தது.

தொடர்ந்து மாகாண சபை நிர்வாகமுறை அமுலுக்கு வந்த பிறகு, ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தல்களும் அவ்வாறே நடத்தப்பட்டு வந்தன. கடந்த அரசாங்கம் பதவியில் இருந்தபோது, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் கட்டம் கட்டமாக நடத்தப்படும் கலாசாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு நடத்தப்படும்போது, அரச இயந்திரங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும்போது வெற்றி வாய்ப்பு ஆளுங்கட்சிக்கே கிடைக்கக் கூடியதாக இருந்தது. ஒரு பிரதேசத்தில் அல்லது மாகாணத்தில் கிடைக்கும் வெற்றியைக் கருத்திற் கொண்டு ஏனைய பிரதேசங்களிலும் அரசாங்க தரப்பு வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று திட்டமிட்டு இவ்வாறு கட்டம் கட்டமாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் நீடிக்கக் கூடியதாகவும் இருந்தது.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வந்தார். அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் பாராளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட்டு, தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. வழமையாக புதிய அரசாங்கம் பதவிக்கு வரும்போது, மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகங்களையும் தனக்குச் சார்பாக வைத்துக் கொள்ளவே முயற்சிக்கும். அதேபோல்தான், முன்னைய ஆட்சி அதிகாரத்தின் கீழிருந்த உள்ளூராட்சி சபைகளும் கலைக்கப்பட்டன. எனினும், உடனடியாக தேர்தலை நடத்த முடியவில்லை. அரசாங்கம் தனது பலவீனத்தை மறைக்கவே தேர்தலை பிற்போட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வந்தன. ஒரு ஆண்டுக்கும் மேல் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இறுதியாக கடந்த வாரத்தில் திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய டிசம்பர் மாத முற்பகுதியில் அல்லது ஜனவரி மாதத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பத்தாயிரம் அல்லது அதற்குக் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ள பிரதேசங்களுக்கு ஒரு பிரதேச சபை இருக்கும்போது இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகள் உட்பட நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த பிரதேச சபைகள் அடங்கலாக மொத்தம் 5 பிரதேச சபைகளே இருந்து வருகின்றன. புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படும் போது நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை மக்கள் தொகைக்கு ஏற்ப 12 க்கு மேல் அதிகரிக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி, இ.தொ.கா., மலையக மக்கள் முன்னணி உட்பட அரசியல் கட்சிகள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தன. பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியில் கடந்த வாரம் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், நுவரெலியா பிரதேச சபை மூன்றாக பிரிக்கப்படவுள்ளது. அவை நுவரெலியா, கொட்டகலை, அக்கரபத்தனை ஆகிய மூன்று பிரதேச சபைகள் ஆகும். இவற்றில் தனி உறுப்பினர் வட்டாரங்கள் இரட்டை அங்கத்தவர் வட்டாரம் ஆகியவையும் அடங்குகின்றன. அம்பகமுவ பிரதேச சபை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படவுள்ளது. அவை அம்பகமுவ, நோர்வூட், மஸ்கெலியா ஆகியவை ஆகும். அதேபோல், வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த ஆகிய பிரதேச சபைகள் ஒவ்வொன்றும் இரண்டு பிரதேச சபைகளைக் கொண்டனவையாக இருக்கும். தனி வட்டாரங்கள் மற்றும் இரட்டை வட்டாரங்களில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் தொகைக்கு ஏற்ப, விகிதாசார முறையில் உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள். இது 60வீதம் அல்லது 70வீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும் இன்னும் தீர்க்கமான முடிவு வெளியிடப்படவில்லை.

இந்த விபரங்கள் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வரும்போது தான் சரியான உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதியாகவும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். வர்த்தமானி வெளிவந்த பிறகு எல்லை நிர்ணயம், வட்டார முறை, விகிதாசார முறை சம்பந்தமான விபரங்கள் பொது மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் சரியான முறையில் தெளிவு படுத்தப்பட வேண்டும். புதிய முறை என்பதால் வாக்காளர்கள் குழப்பத்தில் இருப்பார்கள் இதைத் தெளிவு படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு அரசியல் கட்சிகளிடம் உள்ளது.

புதிய தேர்தல் முறையில் தோட்டப்பகுதிகள் பிரதேச சபை நிர்வாகத்தின் கீழ் நேரடியாக பங்குபற்றக் கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது. அதன் மூலம் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களையும் அமுல் படுத்திக்கொள்ள முடியும். அத்தோடு, மலையக இளைஞர், யுவதிகள் பெருமளவில் தெரிவாகக் கூடிய நிலையும் தோன்றியுள்ளது. அதேநேரம் தேர்தலில் 25வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கவும் சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. இவ்வாறு புதிய தேர்தல் முறையில் அந்தந்த வட்டாரத்தைத் தவிர குறிப்பட்ட வேட்பாளர்கள் வேறு வட்டாரங்களில் பிரசாரம் செய்யவோ வாக்கு கேட்கவோ முடியாது. வட்டாரத்தில் செல்வாக்கு மிக்க ஒருவருக்கே அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. தேர்தல் பணிகளுக்கான செலவும் குறைவாகவே இருக்கும். கட்சிகளின் தெரிவே பொருத்தமான வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வழி வகுக்கும். இதை பெருந்தோட்ட மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.     

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates