Headlines News :
முகப்பு » , , , , » ஆங்கிலேயர் விற்ற “மன்னிப்பு”! (1915 கண்டி கலகம் –44) - என்.சரவணன்

ஆங்கிலேயர் விற்ற “மன்னிப்பு”! (1915 கண்டி கலகம் –44) - என்.சரவணன்


கலவரம் குறித்து வழங்கப்பட்ட தீர்ப்புகளில் பெரும்பாலானவை தீர விசாரிக்காமல் உடனடியாக வழங்கப்பட்ட தீர்ப்புகள் என்பது வெளிப்படையானது. அப்படி வழங்கப்பட்ட தீர்ப்புகளின் போது குற்றவாளிகளாக்கப்பட்ட நிரபராதிகள் பலரை இழப்பீடு வழங்கும்படியும் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் பெருந்தொகை, வெகு குறுகிய காலத்தில்.

கலவரத்தில் உண்மையாக சம்பத்தப்பட்டவர்கள் பலர் தப்பிவிட்டார்கள். அப்படி நேரடியாக பலத்த சேதம் விளைவித்தவர்கள் பலர் அங்கிருந்த சண்டியர் கூட்டமே. ஆனால் குற்றவாளிகளாக்கப்பட்ட சாதாரண அப்பாவிகள் பலர் இந்த இழப்பீடுகளை வழங்கமுடியாது தண்டனையை அனுபவித்தனர்.

இந்த தீர்ப்புகள் வழங்கப்பட ஏதுவான காரணிகளாக வஞ்சம் தீர்த்தல், பொறாமை போன்றனவற்றின் பாத்திரத்தை ஆர்மண்ட் டி சூசா தனது நூலில் விளக்குகிறார்.

இந்த கலவரம் அரசுக்கு எதிரான சதி என்று நம்பிய ஆங்கில அரசு அதன் பின்னணியில் வசதிபடைத்த சிங்களவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் திடமாக நம்பியது. எனவே இந்த தண்டனைகளின் வாயிலாக அவர்களின் சொத்துக்களை அரசுடமை ஆக்குவதற்கோ அல்லது அதிக இழப்பீட்டு தொகையை வசூலிப்பதற்கோ முயற்சித்தது.

பொலிசாரும், கிராம அதிகாரிகளும் வழங்கிய பதில்களை வைத்தே பெரும்பாலான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. எனவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாம் குற்றமற்றவர்கள் என்பதை தாமே நிரூபிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பொலிசாரும், கிராமத் தலைவர்களும் அலட்சியமும், ஊழல் மிகுந்தவர்களுமாக இருந்தார்கள். பொலிசாரின் மீது நம்பிக்கை வைத்திருக்காத மக்கள்; இத்தகைய கிராமத் தலைவர்களை கிஞ்சித்தும் நம்பவில்லை.


கிராமத் தலைவர் என்கிற சர்வாதிகாரி
இந்த காலப்பகுதியில் கிராமங்களில் தலைவர்களாக இருந்த கிராமத்
தலைவர்கள் (சிங்களத்தில் கம்முலாந்தெனி அல்லது “கம்பதி” என்று அழைப்பார்கள்.) எத்தகைய மோசடி மிக்கவர்களாக இருந்தார்கள் என்பதை இரண்டு நூல்களில் அழகாக விபரிக்கின்றன. இலங்கை – சிவில் சேவையில் நீண்ட கால அனுபவமுடைய எல்.எஸ்.வுல்ப் எழுதிய “த  விலேஜ் இன் த ஜங்கிள்” (The village in the jungle : Woolf, Leonard) என்கிற நாவல். சிங்கள சமூக சாதிப்பிரச்சினையை மையமாகக் கொண்டு அன்றைய சூழலை சிறப்பாக விளக்கும் இந்த நாவல் 1980இல் “பத்தேகம” என்கிற பெயரில் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் ஒரு திரைப்படமாக வெளியிட்டிருந்தார்.

அதுபோல இன்னொரு சிவில் உயர் அதிகாரியான எச்.பார்கர் எழுதிய புராதன இலங்கை (Ancient Ceylon: H.Parker) என்கிற நூலும் வரலாற்று ஆய்வாளர்கள் பலர் பயன்படுத்தும் நூல். இந்த நூலில் இந்த கிராமத் தலைவர்கள் குறித்து இப்படி குறிப்பிடப்பட்டிருந்தது. "மோசடிமிக்க, இறுமாப்பு மிக்க சர்வாதிகாரிகள், அவர்களின் அதிகாரத்தை அடக்கவும் வாய்ப்பில்லை".

அவர்களின் பதவி அரசாட்சி காலத்தில் வெகுமதிகளை நம்பியே இருந்தது. அதன் பின்னர் வந்த போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய காலனித்துவ சக்திகள் இந்த அமைப்பு முறையை தமக்கு சாதகமான வகையில் தொடர்ந்து கையாண்டு வந்தனர். ஆனால் அவர்களுக்கு எந்தவித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை மாறாக ஒரு கௌரவப் பதவியாக அது இருந்தது. அவர்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு பரிசாக ஏதாவது வழங்குவது உண்டு. அதே அவர்கள் கையூட்டாகவே காலப்போக்கில் ஆக்கிக்கொண்டார்கள். அரசும் இவர்களின் அட்டகாசங்களை கண்டும் காணாதிருந்தது. 1963 காலப்பகுதியிலிருந்து இந்த முறைமை குறித்த உரையாடல்கள் வெகுஜன மற்றும் அரச மட்டத்தில் எழுந்தன. 1970 இல் ஆட்சிக்கு வந்த சிறிமா அரசாங்கம் இந்த முறைமையை நீக்கிவிட்டு கிராம சேவை அதிகாரி முறைமையை அமுலுக்கு கொண்டுவந்தது.

ஆக பொறமை, வஞ்சம் தீர்த்தல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட பொய் சாட்சி, ஊழல் மிக்க பொலிஸ் மற்றும் கிராமத் தலைவர் அமைப்புமுறை என்பவை குற்றம்சாட்டப்பட்டவர்களை பீதிக்கு உள்ளாக்கியிருந்தது. சாதாரண நீதிமன்றங்களில் பொய் சாட்சிகளை உறுதிப்படுத்துவதற்காக இருந்த வாய்ப்புகள் இங்கு இருக்கவில்லை.

இந்த காலப்பகுதியில் மூன்றுவகையான விசாரணை அமைப்புகள் இயங்கின. ஒன்று சாதாரண சிவில் நீதிமன்றம். அங்கு நடக்கும் வழக்குகளில் பெரும்பாலும் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கும். அடுத்தது விசேட ஆணையாளர்களின் தலைமையில் நடக்கும் விசாரணைகள். மூன்றாவது இராணுவ நீதிமன்றம். இவை இரண்டுமே நினைத்த இடத்தில் இருந்துகொண்டு எந்தவித தீர்ப்பையும் போதுமான விசாரணயின்றி வழங்கும் அதிகாரமுடையவர்களாக இருந்தனர். குற்றம்சுமத்தப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுக்காக்கத் தவறிய இந்த இரண்டு நீதிமன்றங்களிலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழங்கப்பட்ட சாட்சிகள் கணக்கில் எடுக்கப்படவில்லை. அந்த சாட்சிகள் சந்தேகிக்கப்பட்டன. அலட்சியப்படுத்தப்பட்டன. அந்த சாட்சிகளில் பெரும்பாலானோர் சிங்களவர்களாக இருந்தனர். உடனடி தீர்ப்புகள் வழங்கப்பட்டன. இவை குறித்து மைக்கல் ரொபர்ட்ஸ் (Hobgoblins, Low-country Sinhalese Blotters, or Local Elite Chauvinists?: Directions and Patterns in the 1915 Communal Riots - Michael Roberts), ஆர்மண்ட் சூசா, பொன்னம்பலம் ராமநாதன் ஆகியோர் போதுமான அளவு விளக்கியுள்ளனர்.

மன்னிப்பு விற்பனைக்கு
ஜூன் முதலாம் திகதி ஆளுநர் சார்மர்ஸ் மாவட்ட நீதிபதிகளாக அவசரமாக சிலரை நியமித்தார். அவர்களில் ஒருவர் கொழும்பு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட சீ.வீ.பிரைன் (Charles Valentine Brayne). அதன் பின்னர் அதே மாத இறுதியில் அதனைக் களைத்துவிட்டு சம்பவங்களை உடனடியாக விசாரிப்பதற்கென சிறப்பு ஆணையாளர்களாக சிலர் நியமிக்கப்பட்டனர். அதே அதிகாரிகள் மீண்டும் நியமிக்கப்பட்டார்கள். சீ.வி.பிரைன் மேல் மாகாணத்துக்கு சிறப்பு விசாரணை ஆணையாளராக நியமிக்கப்பட்டார். அநீதியாக தீர்ப்பு வழங்கியவர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்களில் ஒருவர் இவர். இவர் வழங்கிய இரண்டு தீர்ப்புகளைப் பார்ப்போம்.

வெலிக்கடையில் வசித்து வந்த டொன் கொர்னலியஸ் லூயிஸ் (Don Cornelius Lewis) எனும் 70 வயது வயோதிபர் கலவரத்தில் ஈடுபட்டதாக கோட்டே பொலிசாரால் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு அழைத்துவரப்பட்டார். அவர் குற்றமற்றவர் என்று நீதவான் நீதிமன்றம் விடுவித்துவிட்டது. அவர் வீடு வரும் வழியில் மீண்டும் விசேட ஆணையாளர் பிரைனின் ஆணையின் பேரில் மீண்டும் கைதானார். அவரை வெல்லம்பிட்டியவில் உள்ள ஆணையாளர் முகாமில் தடுத்து வைத்தனர். அவரை 5000 ரூபாய் பிணையில் விடுவிப்பதாகவும், அதன்படி அப்பணத்தை எடுத்துவர அனுமதிப்பதாகவும் லூயிசுக்கு ஆணையிடப்பட்டது. பிரைன் வழங்கிய ஆணைப்பத்திரத்தில் இப்படி இருந்தது.

“வெலிக்கடைச் சேர்ந்த டொன் கொர்னலியஸ் லூயிஸ் இன்று பிணையாக 5000 ரூபா பணத்தை மாதாந்தம் 1000 வீதம் “கலவர நிதியத்துக்கு” வழங்குகிறார். முழுதொகையையும் வழங்கி மன்னிப்பை கொள்வனவுசெய்து கொள்வதன் மூலம் (hereby purchases amnesty from all further or pending criminal charges) அவர் மீது சுமத்தப்பட்டுள்ள கலவரக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
10.08.1915 வெல்லம்பிட்டியவில் இது வழங்கப்படுகிறது.
சீ.வி. பிரைன் (சிறப்பு ஆணையாளர்)

“ஒருவகையில் 5000 ரூபாய்க்கு மன்னரின் மன்னிப்பை விற்று குற்றங்களை மறைக்கும் செயல் இது” என்றார் பொன்னம்பலம் இராமநாதன்.

தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஆசிரியரான டீ.ஏ.சமரசேகர கலவரத்தில் ஈடுபட்டார் எனும் குற்றச்ச்ட்டில் மேலும் 46 பேருடன் கைதானார். இவர்களில் 10 பேர் உடனடியாக சீ.வி.பிரைன் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். அவரின் நீதிமன்றம் அப்போது “தொம்பே முகாம்” என்று அழைக்கப்பட்டது. சாட்சிக்காக இரு முஸ்லிம் இனத்தவர்கள் அழைக்கப்பட்டார்கள். அந்த 10 பேரில் சமரசேகர என்கிற 16 வயது இளைஞனைத் தவிர அனைவரும் குற்றவாளிகள் என்று அந்த இருவரும் கூறினார். 7 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து மூவர் விடுவிக்கப்பட்டனர். சமரசேகர கலவரத்தில் ஈடுபட்டதாக ஒருவர் மட்டுமே கூறினார். மற்றவர் தான் அப்படி அவரைக் காணவில்லை என்றார். சமரசேகர தான் வகுப்பில் இருந்ததற்கான பதிவேட்டைக் காட்டி தான் அந்த இடத்தில் இருக்கவில்லை என்பதை ஒப்புவித்தார். இறுதியில் பிரைன் இப்படி தீர்ப்பளித்தார்.

“குற்றம்சாட்டப்பட்ட முதலாமவர் (சமரசேகர) கலவரத்துக்கு தலைமை வகித்தவன் என்பதின் எனக்கு எந்தவித சந்தேகமுமில்லை. வகுப்புப் பதிவேடு மாற்றப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதற்காக ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 500 ரூபா அபராதமும் விதிக்கிறேன். அபராதத்தை கொடுக்காத பட்சத்தில் 7 வருடங்கள் அதே தண்டனையை அனுபவிக்கவேண்டும்.

குறிப்பிட்ட முஸ்லிம் நபர் வழங்கிய சட்ட்சியிலும் சமரசேகர அந்த இடத்தில் இருந்தார் என்று மட்டுமே கூறியிருந்தார். கலவரத்தில் தலைமை தாங்கினார் என்று எவரும் கூறவில்லை. 16 வயதுடைய இன்னொரு இளைஞர் அந்த இடத்தில் சமரசேகர இருக்கவே இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் “கலவரத்தின் தலைமை வகித்தவன் என்பதில் சந்தேகமில்லை” என்று பிரைன் வழங்கிய தீர்ப்பு அன்றைய அலட்சிய, அராஜக தீர்ப்புகளுக்கு சிறந்த உதாரணங்களில் ஒன்று. ஒரு சாட்சியால் உறுதிப்படுத்தாத, மறு சாட்சியால் மறுதளித்த ஒன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பு எப்படி இருந்திருக்கிறது பாருங்கள்.

சமரசேகரவின் என்கிற இளைஞரின் முதிய தந்தை செய்வதறியாது தனது மகன் தண்டனைக்குள்ளானதை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருந்தார். சமரசேகர நிரபராதி என்பதை அந்த ஊர் முழுதுமறியும். அவருக்காக ஒரு வழக்கறிஞரையும் அமர்த்த முடியவில்லை. விசாரணை கூட இராணுவ முகாமிலேயே நடந்து முடிந்தது. ஏனைய வழக்குகளைப் போல இந்த வழக்கிலும் பஞ்சாப் படையினர் சூழ நடந்தது.

மாதங்கள் ஓடின. இராணுவ நீதிமன்ற விசாரணை இல்லை. மாவட்ட சிறப்பு நீதிமன்றமே இதனை விசாரித்தது என்பதைக் கூட இறுதியில் தான் அறிந்துகொண்டார் தந்தை. எனவே முறையீடு செய்தார். ஆனால் காலதாமதம் எனக் கூறி அது நிராகரிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறந்த ஒரு வழக்கறிஞரை அமர்த்திக்கொண்டு மீண்டும் ஒரு மேன்முறையீட்டை செய்தார். உயர்நீதிமன்றம் அந்த தீர்ப்பில் மாற்றம் செய்ய முன்வந்தது. நீதிபதி ஷோ என்பவர் முன்னைய தீர்ப்பு குறித்து ஆச்சரியமடைந்தார்.  அவர் அந்த வழக்கை மீள விசாரணைக்கு எடுத்து சமரசேகரவை விடுதலை செய்தார். அப்போது சமரசேகர 6 மாதகால கடூழிய தண்டனையை அனுபவித்து முடித்து இருந்தார்.

தொடரும்..

நன்றி - தினக்குரல்Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates