ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்
பதுளை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்
வேட்டபாளர்களான அ . அரவிந்குமாரும் வடிவேல் சுரேஷும் தலா 50 ஆயிரத்திற்கு அதிகமான
விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர்.
இப் பாராளுமன்றத் தேர்தலுக்கு
முன்னர் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தில் பதுளை மாவட்டம் சார்பாக ஐக்கிய
தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் போட்டியிட்ட தமிழ் பேசும் வேட்பாளர்கள்
தோல்வியைத் தழுவியிருந்தனர். இதன் காரணமாக ஊவா மாகாணத் தமிழர்கள் தமது பிரச்சினைகளை
தேசிய அரசாங்க மட்டத்திற்குக் கொண்டு செல்வதில் கடும் சவால்களை எதிர்நோக்கியிருந்தனர்.
அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களின்
மூலமாக மாவட்ட தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்கக் கூடிய சலுகைகளும் வரப்பிரசாதங்களும்
இல்லாமல் போயிருந்தன.
பதுளை மாவட்டத்திலிருந்து
இரு தமிழ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதற்கு முன்னர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக வடிவேல் சுரேஷ், தற்போதைய ஊவா மாகாண சபை
உறுப்பினரான எம். சச்சிதானந்தன் ஆகியோர் இ. தொ. கா. சார்பில் ஐக்கிய தேசியக் கட்சி
பட்டியலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தனர் பின்னர் இ. தொ.கா. ஐக்கிய மக்கள்
சுதந்திர கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்ததோடு, வடிவேல் சுரேஷ் இ. தொ. காவிலிருந்து வெளியேறி ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியோடு இணைந்து கொண்டு பிரதி சுகாதார அமைச்சராக நியமனம் பெற்றார்.
எம். சச்சிதானந்தன் பிரதி கல்வி அமைச்சராக நியமனம் பெற்றிருந்தார். ஆக இரு உறுப்பினர்களும்
பிரதியமைச்சர்களாக பதவி வகித்திருந்த ஆரோக்கிய நிலைமை அக்காலப்பகுதியில் நிலவியது.
நடந்து முடிந்து பாராளுமன்ற
பொதுத் தேர்தலில் பெரும்பான்மை தமிழ் பேசும் மக்களின் ஆதரவு ஆட்சி மாற்றத்தை நோக்கியதாகக்
காணப்பட்டது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியில் யானை சின்னத்தில் போட்டியிட்ட மலையகப்
பிரதிநிதிகள் பெரும்பாலான மாவட்டங்களில் வெற்றி கண்டனர். பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு
முன்னராக தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மலையக அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய தமிழ்
முற்போக்கு கூட்டணியின் செயற்பாடுகளுக்கு மலையக மக்கள் வழங்கிய அங்கீகாரமாகவும்
இத்தேர்தல் வெற்றி பார்க்கப்பட வேண்டியது அவசியமாகும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி
சார்பாக தற்போதைய அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களாக
உள்ள எம். திலகராஜ், அ. அரவிந்குமார், வேலுகுமார் ஆகியோர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர். கூட்டணி சார்பாக
இரு அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் பதவியில் உள்ளனர். அவர்களில் இருவர்
மத்திய மாகாணத்திலும் ஒருவர் மேல் மாகாணத்திலும் உள்ளார்கள்.
ஐ. தே. கவின் தேர்தல்
வெற்றிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கின்றது.
எனினும், தேர்தலுக்கு
முன்னர் ஐ. தே. க தலைமையுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய அமைச்சுப் பதவிகள்
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கூட்டணி 6 உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் கொண்டிருந்தாலும்
அது எவ்வித போனஸ் ஆசனத்தையும் பெற்றக் கொள்ள முயலவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.
பதுளை மாவட்டத்தில் கூட்டணி
சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டிய அரவிந்குமார், ஐ. தே. க வின் நேரடி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தெரிவாகிய
வடிவேல் சுரேஷ் ஆகிய இருவர் இன்று வரை பாராளுமன்ற உறுப்பினர்களாகவே வலம் வந்து
கொண்டிருக்கின்றனர். வடிவேல் சுரேஷ் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் நெருக்கமான
உறவை பேணி அவர்களின் அபிவிருத்தி பணிகளில் பங்கு கொண்டு கிட்டதட்ட கூட்டணியின்
உறுப்பினர் போலவே அண்மைக் காலங்களில் செயற்பட்டிருந்ததை காண முடிந்தது.
மத்திய மாகாணத்திற்கு
அடுத்தப்படியாக மலையக தமிழர்கள் அதிகமாக வாழும் மாவட்டமாக பதுளை மாவட்டம் உள்ளது.
இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் குறித்த இரு உறுப்பினர்களின் பாராளுமன்றத் தெரிவை
பெரும் எதிர்பார்ப்புடனேயே மேற்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்காவது பிரதி அல்லது
இராஜங்க அமைச்சு பதவி வழங்கப்படும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். இதுவரையும்
அதற்கான சாதக சமிக்ஞை எதுவும் தென்படாததால் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். அமைச்சு
பதவிகளை வகிக்க கூடிய அனுபவத்தையும் திறமையையும் இரு உறுப்பினர்களும் தன்னகத்தே
கொண்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்குமாரை
பொறுத்தவரையில் 20 வருடத்திற்கு மேற்பட்ட அரசியல் அனுபவத்தை கொண்டுள்ளார். ஊவா மாகாண
சபையின் உறுப்பினராக பல வருடங்களாக பதவி வகித்த அனுபவமும் முன்னாள் அமைச்சரும் மலையக
மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவருமான அமரர் பெ. சந்திரசேகரனின் பிரத்தியேகச் செயலாளராக
பணியாற்றிய அனுபவமும் கொண்டுள்ளார். பதுளை மாவட்ட மக்களால், நிதானமாக தான் எடுத்துக்
கொண்ட விடயங்களில் செயற்பட்டு வெற்றி காணக் கூடியவர் என்ற பெயரை பெற்றுள்ளார். மண்வெட்டி
சின்னத்தில் ஊவா மாகாண சபையை அதிக தடவை அலங்கரித்ததவர், மும்மொழி புலமையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்பினர்
வடிவேல் சுரேஷ் இ. தொ. கா. மூலம் அரசியல் பிரவேசம் செய்து தான் எதிர்கொண்ட முதல்
பாராளுமன்றத் தேர்தலிலேயே வெற்றி பெற்று பிரதி சுகாதார அமைச்சராக பதவி வகித்தவர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்ததை தொடர்ந்து தொகுதி அமைப்பளராகவும் ஊவா மாகாண
சபை உறுப்பினராகவும் பின்னர் மாகாணத் தமிழ்க் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்து, தற்போது பாராளுமன்ற உறுப்பினர்
பதவிக்குப் புறம்பாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும்
பதவியேற்றுள்ளார். இவரும் மும்மொழிகளிலும் புலமைமிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழ்நிலையில் ஐ.
தே. க. பட்டியலில் பாராளுமன்றம் சென்ற இவ்விரு உறுப்பினர்களிடமும் பதுளை மாவட்ட
மக்கள் அதிகமான சேவைகளை எதிர்பார்க்கின்றனர். எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களாக மாத்திரம் இருந்து செயற்பட்டு
வருவதால் தமது பன்முகப்படுத்தப்பட்ட நிதி என்ற வரம்புக்குள்ளேயே இருந்து கொண்டு
தமது திட்டங்களை செயற்படுத்த வேண்டிய நிலையில் இவர்கள் உள்ளனர். மாவட்ட தோட்டப்பகுதியில்
மேற்கொள்ளப்பட்ட வேண்டிய ஏனைய பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு, விடயத்திற்கு பொறுப்பாக
இருக்கும் அமைச்சர்களை தங்கியிருக்கும் நிலைக்கு இவ்விருவரும் மறைமுகமாகத் தள்ளப்பட்டுள்ளனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...