பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் கும்ப கர்ணனின் தூக்கம் போன்று காணப்படுகிறது. தத்தமது தொழிற்சங்கத்திற்கு அங்கத்தவர்கள் சேர்க்கும் காலமான ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் அதிரடியான கருத்துக்களைக் கூறி சங்க சந்தாவை பெற்றுக்கொள்கின்றனர்.
"சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி" போல், தொழிலாளர்கள், சிவனே என்று வழங்கப்பட்டு வந்த ஊதியத்துடன் தொழில் செய்து வந்தனர். ஆனால், இரண்டு வருட கூட்டொப்பந்தம் நிறைவு பெற்று மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பித்த நிலையில், இ.தொ.கா. அன்றைய தேர்தலை மையப்படுத்தி, தனது கட்சிக்கான வாக்கு வங்கியை அதிகரிக்க ஆயிரம் ரூபா சம்பளவுயர்வை பெற்றுக்கொடுப்பதாக, நடைமுறை சாத்தியமற்ற ஒரு வாக்குறுதியை முன்வைத்தது. ஆனால், இன்று கட்டியிருந்த கோவணமும் கழன்று விழும் நிலையில் உள்ளது மலையக நிலைமை.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் ½ ஏக்கர் தேயிலை காணி பெற்றுக்கொடுத்து, அது அவர்களுக்கே சொந்தமாக இருக்கும், சுயமாக முன்னேற வழி வகுக்கும் என்றெல்லாம் கூறினர்.
இன்று நடப்பது என்ன? கம்பனியால் வழங்கப்பட்டுள்ள ஒப்பந்த பத்திரம் 4 பக்கங்கள் சிங்கள மொழியில் அச்சிடப்பட்டுள்ளது. அதில், கடைசிப் பக்கத்தில் "மேற்படி உடன்படிக்கையின் கூற்றுக்களை வாசித்து தெளிவுபடுத்தப்பட்டதுடன், அதன் அடிப்படையான விதிமுறைகளையும், உடன்பாடுகளையும் நன்கு புரிந்து கொண்டேன் என தெரிவித்துக்கொள்கின்றேன்” என தமிழில் கையினால் எழுதப்பட்டுள்ளது. ‘மலையக மக்களுக்கு, எல்லாம் நாம் தான்’ எனக் கூப்பாடு போட்ட, கொக்கரித்த, மார்தட்டிய மலையகத் தலைமைகள் கம்பனியால் வெளியிடப்பட்ட இந்த உடன்படிக்கையை வாசித்தார்களா? அதன் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டனரா? அல்லது தமது நிலைப்பாட்டினை அச்சு ஊடகம் வாயிலாகவேனும் அறிக்கையிட்டனரா என்றால் அதுவும் இல்லை.
இதில் ஸ்பிரிங்வெளி, மேமலை, நல்லமலை, புதுமலை, கோட்டகொடை 6 ஆம் பிரிவு, 7 ஆம் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த தலைவர்களும், பொதுமக்களும் தேயிலை மலையை பிரிக்க இடம் அளிக்காது, எந்த மலையை காடு என்று நிர்வாகம் கூறியதோ, அதனை சிரமதானம் மூலம் துப்புரவு செய்வதாகவும், தமக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை வழங்கும்படியும் ஒரு அழுத்தத்தைக் கொடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்த நிலைப்பாட்டினை பாராட்டுவோம். இது ஏனைய தோட்ட தொழிலாளர்களுக்கும், தலைவர்களுக்கும் முன் மாதிரியாக அமைய வேண்டும். ஆனால், இங்கு நடப்பது என்ன? ஒரு சில தலைவர்களின் சுயலாபத்திற்காக மக்கள் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளனர்.
இப்பொழுது வறட்சியைக் காரணம் காட்டி 3 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுகிறது. ஏனைய 3 நாட்களும் புளொக் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மலையில் துப்புரவு செய்ய, கொழுந்தெடுக்க பணிக்கப்படுகின்றனர். இதில் புளொக் பெற்றோர் அந்த 3 நாட்களும் கொழுந்து பறித்து கிலோவுக்கு 30 ரூபா என நிர்வாகத்திடம் கொடுக்கின்றனர். ஏனையோர் வீட்டில் இருக்க வேண்டிய நிலை. இதில் ஒரு சிலர் முதல் நாளே மாலை நேரத்தில் கொழுந்து களவெடுத்து மறுநாள் புளொக் கொழுந்து எனக்கூறி கொடுக்கின்றனர். இது அடி தடி வரை சென்றுள்ளது. யார் எக்கேடு கெட்டால் என்ன? நிர்வாகத்திற்கு கொழுந்து வந்தால் போதும்.
மறைந்த தலைவர் அமரர் செளமிய மூர்த்தி தொண்டமான் அரசில் அமைச்சராக இருந்த நேரத்தில் காலநேரம் பார்த்து சமயோசிதமாக செயற்பட்டு சம்பள உயர்வை பெற்றுக்கொடுத்த சாணக்கியம் இன்று எவரிடமுள்ளது? தானும் முயற்சி செய்யாது அடுத்தவரையும் செய்யவிடாமல் விதண்டாவாதம் பேசி நானே ராஜா என் பேச்சே வேதவாக்கு என்ற தலைக்கணம் பிடித்த அறிக்கைகளை விடுக்கின்றனர். மலையக மக்களுக்கு இன்றைய தேவை அறிக்கைகள் அல்ல. தீர்க்கமான சம்பளவுயர்வே!
மேலும், பென்சன் பெறும் வயதை அடைந்தவர்கள், தமது சேவைக்கால பணத்தினை நிர்வாகத்திடமிருந்து பெற மிகவும் சிரமப்படுகின்றனர். வழமையாக பென்சன் பெற உரித்துடையவர்களுக்கு முதலில் சேவைக்கால கொடுப்பனவே வழங்கப்படும். அதன் பின்பே E.P.F., E.T.F. போன்றவை வழங்கப்படும். ஆனால், தற்போது இந்த சம்பளவுயர்வை மையப்படுத்தி, நட்டமெனும் காரணத்தைக் கூறி குறித்த சேவைக்கால கொடுப்பனவை வழங்க மறுத்து வருவதாக முதலில் E.P.F., E.T.F. பணத்தை எடுக்க ஒப்பமிடுங்கள், அதன் பின்பு கம்பனியில் இருந்து பணம் வந்ததும் உங்களுடைய சேவைக்கால பணத்தைப் பெறலாம் எனக் கூறுகின்றனர்.
மேலும், சிலர் ஒரு வருட காலமாக இப்பணத்தை எதிர்பார்த்து, கடன் வாங்கி தற்போது மிகவும் சிரமப்படுகின்றனர். சில வேளைகளில் தோட்ட நிர்வாகி "தொழில் செய்ய இயலாது" என்ற அரசவைத்திய சான்றிதழைக் கோருகின்றார். எனவே, இவற்றுக்கு தீர்வு காண்பது யார்? அல்லது இதற்கும் வருடக் கணக்கில் பேச்சு நடாத்தப் போகின்றனரா?
எது எப்படியோ தோட்டத் தொழிலாளரின் மரணத்திற்கு முன்பாக அவர்களுடைய சேவைக்கால பணத்தைபெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். எனவே, மலையகத் தலைமைகள் பேச்சைக் குறைத்து, விவேகமுடன் செயற்பட முன்வரவேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...