நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படுவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இப்போது சில பாடசாலை அதிபர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
பின்தங்கிய மாவட்டமான நுவரெலியா மாவட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி மிகக் குறைவாகும். இதைப் பயன்படுத்தி வெளி மாவட்ட மாணவர்கள் பல்கலைக்கழக பிரவேசத்துக்காக நுவரெலியா மாவட்டத்துக்கு வந்து, பாடசாலை அதிபர்களின் ஆதரவுடன் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இந்த செயற்பாடு காரணமாக நுவரெலியா மாவட்ட மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு பிற மாவட்ட மாணவர்களால் தட்டிப்பறிக்கப்படுகின்றது. இதற்கு நுவரெலிய மாவட்டத்திலுள்ள சில பாடசாலை அதிபர்கள் துணைபோவது எமது மாணவர்களுக்கு செய்யும் துரோகமென மலையக புத்திஜீவிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
மலையக இந்திய வம்சாவளி மக்கள் 200 வருட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் அவர்களின் முன்னேற்றம் இன்னும் மந்தகதியிலேயே இருக்கின்றதை அனைவரும் அறிவர். கல்வியில் மலையக சமூகத்தின் முன்னேற்றமானது மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. 1977,1980 ஆம் ஆண்டுகளில் மலையகப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்டபின்புதான் மலையக சமூகம் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது.
இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காளியாக சுவீடன் நாட்டை குறிப்பிடலாம். சுவீடன் நாட்டின் ஒத்துழைப்புடன் கட்டடங்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்குகள், அதிகாரிகளுக்கான முகாமைத்துவக் கருத்தரங்குகள், செயலமர்வுகள், உட்பட பல முக்கிய அபவிருத்திகளை மலையகத்திற்காக கொண்டு வருவதில் பாரிய பங்களிப்பை செய்துவந்துள்ளது.
அத்துடன் ஜெர்மன் நாட்டின் நிதி உதவிகளும் எமது மலையக பகுதிகளுக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடக்கூடிய விடயமாகும். மலையக பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளை உயர்த்துவதற்காக பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் அதிகளவிலான மலையக மாணவர்களை உயர்தரத்தில் சித்தியடையச் செய்து அதனூடாக பல்கலைக்கழகங்களுக்கு அதிக மாணவர்களை உள்வாங்கச் செய்யவேண்டும் என்பதுதான். நுவரெலியா மாவட்டம் பின்தங்கிய மாவட்டம் என்ற அடிப்படையிலேயே பல்கழைக்கழக அனுமதியின்போது வெட்டுப்புள்ளி தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டு, அரசாங்கம் வெட்டுப்புள்ளியிலும் சலுகைகளை பெற்றுக் கொடுத்துள்ளது.
ஆனால் அந்த சலுகை முழுமையாக எமது மலையக மாணவர்களை சென்றடைகின்றதா என்பது கேள்விக்குறியே. தற்பொழுது நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் பல பாடசாலைகளில் வெளிமாவட்ட மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளமை கணடுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் வெளிவந்த சில மணி நேரங்களில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் விரைந்து செயற்பட்டு பல நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
கல்வி இராஜாங்க அமைச்சர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு. எம். என். ஜே. புஸ்பகுமார ஊடாக மத்திய மாகாண கல்வி பணிப்பாளர் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டார். இந்த நடவடிக்கை காரணமாக நுவரெலியா நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் தற்காலிகமாக கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்த அதிபர் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து மேலும் பல பாடசாலைகளிலும் இதுபோன்ற செயற்பாடுகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த செயற்பாடு காரணமாக மலையக மாணவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய மாவட்டங்களில் அதாவது வெட்டுப்புள்ளி குறைவான மாவட்டங்களில் உள்ள மாணவர்களும் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
இந்த செயற்பாடுகளின் பின்னணியில் அதிபர் மாத்திரம் செயற்பட்டிருக்கின்றாரா என்பது குறித்து தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் ஒரு குறித்த வலய கல்வி பணிப்பாளரிடம் வெளிமாவட்டங்களில் இருந்து வந்து பதிவு செய்துள்ள மாணவர்கள் தொடர்பான பட்டியல் ஒன்றினை கையளித்து, அது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.
எனவே, இந்த விடயம் தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம், அதிபர்கள் மீது மாத்திரம் நடவடிக்கை எடுத்தால் போதாது, அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளதுடன், இது தொடர்பாக மத்திய மாகாண சபையின், சபை அமர்விலும் கடந்த 09.08.2016 அன்று பிரஸ்தாபித்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த 09.08.2016 அன்று கல்வி இராஜாங்க அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே புஸ்பகுமார மற்றும் கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் 17 பாடசாலைகளில் இந்த நிலை இருப்பதாகவும், அது மட்டுமல்லாது மேலும் சில மாவட்டங்களிலும் இந்த நிலை இருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இங்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம,; விசாரணையின் பின்னர், குற்றங்கள் நிருபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அதிபர்கள் அனைவரும் கடமையிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப்படுவதுடன், வெளிமாவட்டங்களில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பற்றியும், அவர்களின் பெறுபேறுகள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கூறினார்.
அதற்கு பதிலளித்த கல்வி இராஜாங்க அமைச்சர், மாணவர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் அது அவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கும். எனவே அவர்கள் எந்த மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்கின்றார்களோ அது உறுதிப்படுத்தப்பட்டபின்பு அந்த மாவட்டத்தின் வெட்டுப்புள்ளி அடிப்படையில் அவர்களுக்கான பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொடுப்பது சிறந்தது என கூறினார். அதனை பரீடசைகள் ஆணையாளரும் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் எக்;;;காரணம் கொண்டும் வெளிமாவட்ட மாணவர்களை குறித்த மாகாணங்களில் விசேட காரணங்கள் தவிர உள்வாங்க முடியாது என்பதை கல்வி அமைச்சின் 2008ஃ17 ஆம் இலக்க சுற்றுநிருபம் தெளிவாக குறிப்பிடுகின்றது.
சுற்றுநிருபம்
6.0
க.பொ.த (உ.த) வகுப்புகளில் கற்பதற்காக வசதியான மாவட்டங்களில் இருந்து பின்தங்கிய மாவட்ட பாடசாலைகளுக்கு செல்லல்.
6.1 பல்கலைக்கழக பிரவேசத்தின்போது பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பின்தங்கிய மாவட்டங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படும் சலுகையை இலஞ்சமாக பெற்றுக் கொள்ளும் நோக்குடன் வசதியான மாவட்டங்களில் இருந்து க.பொ.த சாதாரண தரம் சித்தி பெற்ற பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள உயர்தர வகுப்புகளை கொண்ட பாடசாலைகளுக்கு அனுமதி பெற முயற்சிக்கும் மாணவர்களுக்கு இடமளித்தல் கூடாது.
6.2
எனினும் கீழ் வரும் விசேட காரணங்களின் கீழ் அவ்வாறான வேண்டுகோள்கள் விடுக்கப்படின் உரிய காரணத்தை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அக்காரணம் நிருபிக்கப்பட்டால் மாத்திரமே அனுமதியை கருத்திற்கொள்ள முடியும். இது பற்றி உண்மையாகவே உரிய பிரதேசத்தில் தமது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் வசிப்பதனை அதிபர் வசிப்பிடத்திற்கு சென்று பரீட்சித்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
6.2 அ
அரச சேவையின் பொருட்டு பெற்றோர் இடமாற்றம் காரணமாக
இடமாற்றத்தின் பின்பு தமது குடும்ப உறுப்பினர்கள் சகிதம் புதிய சேவை நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு பிரதேசத்திற்கு உண்மையாகவே தமது வதிவிடத்தினை மாற்றியிருந்தால் மாத்திரமே இக்காரணத்தின் கீழ் அனுமதியை பெற்றுக் கொள்ள முடியும். இவர் வதிவிடத்தினை மாற்றியிருப்பதுபற்றி உரிய நிறுவன தலைவரிடம் இருந்தும் உரிய பிரதேசத்தின் கிராம சேவக அலுவலர் ஊடாக பிரதேச செயலாளரிடம் இருந்து அத்தாட்சிப்படுத்திய ஆவணங்களை பெற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
6.2 ஆ
பாதுகாப்பு காரணங்களுக்காக
இக் காரணத்திற்காக பெற்றோர் தமது வதிவிடத்தினை மாற்றியிருப்பின் பாதுகாப்பு காரணங்களுக்காக தமது வதிவிடத்தினை மாற்றியிருப்பதாக உரிய பிரதேசத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொண்ட சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தை அதிபர்கள் எவ்வாறு உடைத்தெரிந்தார்கள் அல்லது எவ்வாறு மீறினார்கள் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாகவுள்ளது. இந்த செயற்பாடுகள் காரணமாக எமது சமூகத்தின் கல்வி நிலை இன்னும் பின்னடைவதை இவர்கள் ஏன் உணரவில்லை? சமூகத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பாக சிந்தித்து செயற்படக்கூடியவர்கள் ஏன் இவ்வாறு செயற்படுகின்றார்கள்?
ஒரு சிலர் கூறுவதுபோல அதிபர்கள் பணத்திற்காக இவ்வாறு செய்தார்களா என்ற கேள்வியும் மக்களிடம் எழுந்துள்ளது. அதனை உறுதியாகக் கூறமுடியாது. அது விசாரணையின் பின்பு வெளிக்கொணரப்பட வேண்டிய ஒரு விடயமாகும். எனவே எதிர்காலத்தில் அதிபர்கள் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். விசாரணைகளின் பின்பு உண்மை நிருபிக்கப்பட்டால் அவர்களின் தொழில் ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படும். எனவே எந்த ஒரு விடயத்தையும் து}ரநோக்குடன் சிந்தித்து செயல்படுவது அனைவருக்கும் நன்மையளிக்;கும் ஒரு விடயமாகும். இதனை அவர்கள் உணர்வார்களா?
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...