கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கான 1000 சம்பள உயர்வு என்பன தொடர்பில் இலங்கை தொழி லாளர் காங்கிரஸ் பாரிய சவாலையும் நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளதாகவே தெரியவருகிறது.
இனியும் காலம் தாழ்த்தாமல் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்வதுடன் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய நிலையிலேயே இ.தொ.கா. இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
தனியார் துறையினருக்கு அரசின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண் டும் என்ற உறுதிமொழி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பெருந்தோட்டக் கம்பனிகள் மேற்படி கொடுப்பனவு வழங்காமல் மழுங்கடிக்க மேற்கொண்ட முயற்சி உடைத்தெறியப்பட்டுள்ளது.
கம்பனிகள் பல்வேறு காரணங்களைக் கூறி 2500 ரூபாவை கொடுப்பதை தவிர்ப்பதற்கு பல் பிரயத்தனங்களை மேற்கொண்டன. ஆனால் மலையகத்தின் அரச சார்பு அமைச்சர்கள் குறிப்பாக, தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் முயற்சி காரணமாக தொழிலாளர்களுக்கு குறித்த கொடுப்பனவை வழங்குவதிலிருந்து தவிர்க்கமுடியாத நிலைக்கு கம்பனிகள் தள்ளப்பட்டுவிட்டன.
தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கடும் முயற்சி மற்றும் அழுத்தம் காரணமாக அரசாங் கம் குறிப்பாக தொழிலமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தினர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்விடயத்தில் தீவிர அக்கறை காட்டினார். அதன் காரணமாக நஷ்டத்தில் தோட்டங்கள் இயங்குவதாகக் கூறிய கம்பனிகளுக்கு அரச வங்கிகளினூடாக கடன் வழங்கி அதன்மூலம் 2500 ரூபா கொடுப்பனவை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இது மலையக மக்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அத்துடன் அரசாங்கத்தின் பங்காளிகளாகவுள்ள மலையக அமைச்சர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கு இது ஒரு பெரும் வெற்றியாகும்.
இவ்வாறான நிலையில் இ.தொ.கா.வுக்கு, தாம் தோட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேறறவேண்டிய தொரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. காலம் தாழ்த்தாமல் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும். அத்துடன் 1000 நாட்சம்பளத் தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இரு வாரங்களுக்கு முன்னர் இ.தொ.கா.பொதுச் செயலாளரும் பாராளுமன்ற, உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஆகஸ்ட் மாதமளவில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என்று கூறியிருந்தார். அத்துடன் சம்பள உயர்வும் பெற்றுத் தரப்படுமென தெரிவித்திருந்தார்.
தற்போது கடந்தவாரம் ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பெண்களுக்கான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இ.தொ.கா.தலைவர் முத்துசிவலிங்கம், இரண்டு வாரங்களுக்குள் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
எனவே, இந்தத் தலைவர்களின் கருத்துக்கள் மூலம் அவர்கள் கூட்டு ஒப்பந்தத்தை வெகுவிரைவில் செய்யத் திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.
எனினும் கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டாலும் இ.தொ.கா.முன்வைத்த 1000 ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு தோட்டக்கம்பனிகள் முன்வருமா என்றதொரு கேள்வி எழுந்துள்ளது. இதுவே இன்றைய நிலையில் பலரிடமும் எழுந்துள்ள சந்தேகமாகும்.
வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 2500 ரூபாவை நாள் ஒன்றுக்கு 100 ரூபா வீதம் மாதமொன்றில் வழங்கப்படும் 25 வேலைநாட்களில் வழங்குமாறு தோட்டக்கம்பனிக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டபோது அதையே வழங்குவதற்கு பின்வாங்கிய தோட்டக்கம்பனிகள் 1000 ரூபாவாக சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க முன்வருமா?
தற்போது கொடுப்பனவுகள் உட்பட 620 ரூபா நாட்சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த 620 ரூபாவுடன் 100 ரூபா (25x100=2500) சேர்த்து 720 ரூபா நாட்சம்பளமாக வழங்கப்படவுள்ளது. இது ஒரு இடைக்கால கொடுப்பனவு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டு ஒப்பந்தம் கைச்சாதிடப்படும் போது எவ்வாறான தொகை வழங்கப்படப்போகிறது என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு 1000 ரூபா சம்பள உயர்வே தவிர அதற்குக் குறைந்த ஒரு தொகையல்ல. கடந்த வருடம் கூட்டு ஒப்பந்தம் காலாவதியான காலப்பகுதியில் இ.தொ.கா.தன்னிச்சையாகவே 1000 ரூபா கோரிக்கையை முன்வைத்தது. தவிர மக்களோ அல்லது வேறு சங்கங்களோ 1000 ரூபா கோரிக்கையை முன்வைக்கவில்லை.
தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நியாயமான சம்பள உயர்வையே எதிர்பார்த்தனர். 1000 ரூபா அவர்களது எதிர்பார்ப்பாக இருந்திருக்கவில்லை.
எவ்வாறாயினும் தற்போதைய வாழ்க்கைச் செலவு உயர்வுக்கேற்ப 1000 ரூபா நாட்சம்பளம் போதாத தொகையாகவே காணப்படுகின்றது. அதைவிட அதிகமான தொகையே வழங்கப்பட வேண்டும். எனவே தற்போதைய நிலையில் 1000 ரூபா சம்பள கோரிக்கையிலிருந்து இ.தொ.கா. மட்டுமின்றி எந்தவொரு தொழிற்சங்கமும் பின்வாங்கக் கூடாது.
இதேவேளை 1000 ரூபா சம்பள உயர்வினை இ.தொ.கா. பெற்றுக் கொடுக்காவிட்டால் அது இ.தொ.கா.வுக்கு தொழிலாளர்கள் மத்தியில் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை மறுக்கமுடியாது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் தாம் வாக்களித்தபடி 2500 ரூபா கொடுப்பனவை பெற்றுக்கொடுத்துள்ள நிலையில் இ.தொ.கா. 1000 ரூபா நாள் சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதே தொழிலாளர்களின் வாதமாக அமைந்துள்ளது. இன்றைய நிலையில் இதுவே தொழிலாளர்கள் மற்றும் மாற்று தொழிற்சங்கவாதிகள் அனைவரிடமும் பேசு பொருளாக இருக்கிள்றது.
கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள முடியாவிட்டால் அதனுடன் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் தமது இயலாமையைத் தெரிவித்து அதிலிருந்து விலகிக்கொண்டால் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தயாராக இருப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரும் அமைச்சருமான பி.திகாம்பரம் அறிவித்திருப்பதைபோல் செய்ய வேண்டியதொரு நிலை ஏற்படக்கூடும்.
என்ன செய்யப் போகிறது இ.தொ.கா?
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...