இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கி வருகின்ற தேயிலை தொழிற்றுறை இன்று நலிவுப் போக்கை நோக்கி நகர்ந்து வருகின்றது. இற்றைக்கு இருநூறு வருட கால வரலாற்றை தொட்டுள்ள பெருந்தோட்ட தொழிற்துறையில் தேயிலை பயிர்ச்செய்கை இந்திய வம்சாவளி மலையக மக்களின் கறை படிந்த வரலாற்றினையும் அந்நிய செலாவணி வருமானத்தின் மூலம் இலங்கை பொருளாதாரம் கண்டுள்ள எழுச்சியினையும் எமக்கு எடுத்துக் கூறுகின்றது.
மலையகத்திலுள்ள பெருந்தோட்டங்களை அரசாங்கம் குத்தகை அடிப்படையில் தனியார் கம்பனி நிர்வாகங்களின் கீழ் கையளித்த நாளிலிருந்து தேயிலை பயிர்ச்செய்கையும் பெருந்தோட்டங்களில் தொழில் பார்த்து வரும் தொழிலாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இலாப நோக்கத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்பட்டு வரும் தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனி நிர்வாகங்கள் வருமானம் ஈட்டும் வழிகளை கண்டறிந்து பெருந்தோட்ட வளங்களை சுரண்டி வருகின்றன.
தேயிலை தொழிற்றுறையில் கடின உழைப்பை வெளிப்படுத்தி தேயிலை உற்பத்திக்கு வலு சேர்த்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அதிகளவில் தோட்டங்களை விட்டு வெளியேறி வேறு தொழில்களுக்கு செல்வது அதிகரித்து வருகின்றது. சில தோட்டங்களில் ஆண், பெண் தொழிலாளர்கள் நூறிற்கு குறைவாகவே உள்ளனர். இவ்வாறான தொழிலாளர் வெளியேற்றத்திற்கு காரணமாக கம்பனி நிர்வாகங்கள் அவர்கள் மீது மேற்கொள்ளும் கெடுபிடிகள் உள்ளன. இந்த நிலைமை தொடர்கின்ற பட்சத்தில் இன்னும் சில வருடங்களில் அதிகமான பெருந்தோட்டங்கள் மூடுவிழா காணும் நிலைக்குத் தள்ளப்படும்.
கம்பனி நிர்வாகங்களின் கீழ் மலையக பெருந்தோட்டங்கள் வந்த நாளிலிருந்து தோட்டங்களில் இருக்கும் கருங்கற்கள் தொடக்கம் பல்வகையான விலைதரு மரங்களும் ஒப்பந்தக்காரர்களுக்கு விலைபேசி விற்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை தோட்ட நிர்வாகங்கள் முன்னெடுக்கும் வேளையில் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு சட்ட ரீதியான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றன.
இதன் காரணமாக தோட்டங்களில் உள்ள பெறுமதியான மரங்களை ஒப்பந்தக்காரர்கள் வெட்டி அகற்றும் போது தொழிலாளர்கள் அதற்கெதிராக எதிர்ப்புக் காட்டினாலும் அது பயனற்றுப் போகிறது. தொழிலாளர்கள் தங்களது குடியிருப்புகளில் திருத்தங்களை மேற்கொள்ள முனையும் போது பல்வேறு கெடுபிடிகளை கையாள்கின்றனர். எனினும் நூற்றாண்டு காலமாக பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்த குடியிருப்புக்களுக்கு முன்னால் வளர்ந்து நிற்கின்ற பலா மரங்கள் உட்பட பயன்தரு மரங்கள் தோட்ட நிர்வாகங்களால் சட்ட ரீதியான முன்னெடுப்புகளுடன் வெட்டித் தரிக்கப்படுகின்றன.
தேயிலை செய்கைக்குப் பதிலாக மலையகத்தில் பெரும்பாலான தோட்டங்களில் இறப்பர், கருவா, மிளகு, கமுகு மற்றும் வாழை போன்ற செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பெருந்தோட்டத்துறையில் தொழிலாளர் குறைப்பு மறைமுகமாக இடம்பெற்று வருகின்றது. ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வேலைநாட்கள் குறைக்கப்பட்டு வருவதால் அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு சுயமாக தோட்டங்களை விட்டு வெளியேறுகின்றனர். குறிப்பாக பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று பணிப்பெண்களாக செல்கின்றனர். இது மலையக குடும்பங்களில் சமூக சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
காணி, வீட்டுரிமை அற்று காணப்படுகின்ற மலையக மக்களுக்கு தாங்கள் வாழ்கின்ற இடத்திலே எதுவுமே சொந்தமில்லை என்ற எண்ணக்கருவை ஏற்படுத்துவதில் தோட்டங்களில் உள்ள “குடும்ப நல உத்தியோகத்தர்கள்” முக்கிய பங்காற்றுகின்றனர். எமது சமூகத்திலே பிறந்த இவர்கள் கம்பனிகளின் கைக்கூலிகளாக செயற்பட்டு எமது சமூகத்தின் இனவிருத்தி தொடக்கம் அபிவிருத்தி விடயங்களில் பாரிய முட்டுக்கட்டையாக இருந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும். இவர்களின் நடவடிக்கை தொடர்பாக பெருந்தோட்ட மனிதவள பொறுப்பின் (டிரஸ்ட் நிறுவனம்) தலைவர் வீ.புத்திரசிகாமணி முறையான ஆய்வுகளை மேற்கொண்டு சில முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
கம்பனி நிர்வாகங்கள் தோட்டத்தில் உள்ள வளங்களை அதிக லாபத்தில் ஒப்பந்தக்காரர்களுக்கு விற்கும் போது முறையான சட்டதிட்டங்களைக் கடைபிடித்து வருகின்றன. இதன் காரணமாக தொழிலார்கள் மத்தியில் இருந்து வரும் எதிர்ப்புகளை இலகுவில் சமாளித்து விடுகின்றன. இச்சந்தர்ப்பங்களில் தொழிற்சங்கங்களும் முறையான சட்ட ஏற்பாடுகளுடன் அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கையை விரித்து விடுகின்றன. இதனால் தொழிலாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.
மலையகத்தில் உள்ள இயற்கை வளங்கள் பல்வேறு வழிகளில் சூறையாடப்படுவது எதிர்காலத்தில் புவியியல் சமூகம் சார் பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் எமது சமூகத்தின் இருப்பையும் கேள்விக்குறிக்குள்ளாக்கும். எனவே மலையக தொழிற்சங்கங்களும் கூட்டு ஒப்பந்த தரப்பினரும் மக்கள் பிரதிநிதிகளும் பெருந்தோட்டங்களில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக சில நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கம்பனி நிர்வாகங்களுக்கு அனைத்து மட்டங்களிலும் அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசரமான அவசியமாகும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...