தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கொடுப்பனவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு அந்தக் கொடுப்பனவு கிடைப்பதற்கான தீர்வு காணப்பட்டிருக்கிறது. எனவே 2500 ரூபா கிடைப்பது உறுதியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகளுக்குமிடையில் கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே 2500 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
வரவு செலவுத் திட்டத்தில் தனியார்து றையினருக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென்று அப்போது அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் பெருந்தோட்டக் கம்பனிகள் அந்தத் தொகையை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தே வந்தன.
பெருந்தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாலும் உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாலும் 2500 ரூபா கொடுப்பனவை வழங்கமுடியாத நிலையிலிருப்பதாகவும் பெருந்தோட்டக் கம்பனிகள் தெரிவித்து வந்தன. இது தொடர்பாக பல தடவைகள் பல்வேறுபட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தபோதிலும் எந்தவொரு தீர்வும் எட்டப்படாமலிருந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் இதனால் விரக்தியடைந்திருந்தனர். கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படாமலும் அதன்மூலம் கிடைக்கவேண்டிய சம்பள உயர்வு கிடைக்காமலும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தோட்டத்தொழிலாளர்கள் முகங்கொடுத்து வந்தனர். இந்த நிலையில் அரசினால் அறிவிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவு தங்களுக்கு நிவாரணமாக அமையுமென எதிர்பார்த்தனர்.
கூட்டு ஒப்பந்தத்தினூடாக சம்பள உயர்வு கிடைக்காத நிலையில் 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுமானால் அது தொழிலாளர்களுக்கு ஓர் இடைக்கால நிவாரணமாக அமையுமென்று அரச சார்பு மலையக அமைச்சர்கள் அரசாங்கத்திடம் தெரிவித்ததுடன் அதனை வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி வந்தனர்.
எனினும் இந்தக் கொடுப்பனவு விரைவில் வழங்கப்படவேண்டுமென மலையக அமைச்சர்கள் எதிர்பார்த்த அதேவேளை அது வழங்கப்படக்கூடாது என்பதில் எதிர்த்தரப்பினர் அதிக ஆர்வம் காட்டினர். 2500 வழங்கப்பட்டால் அதன் பெருமை மலையக அமைச்சர்களுக்குச் சென்றுவிடும் என்று எண்ணினர். மட்டுமின்றி "அந்தத்" தொகை கிடைக்காது என்றும் அவ்வாறு கொடுப்பதில் சட்டச் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறிவந்தனர். இதற்கமைய இலங்கை தேயிலைச் சபை பெருந்தோட்டக் கம்பனிகளுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்துக்கமைய உரியநிதி இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியூடாக பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு வழங்கப்படும். இந்த நிதியினைப் பெற்று தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவுடன் இந்த (இடைக்கால) கொடுப்பனவை பெருந்தோட்டக் கம்பனிகள் வழங்க வேண்டும். எவ்வாறெனினும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான நிலுவைக் கொடுப்பனவும் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
ஏதோ ஒருவகையில் 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதற்குரிய தீர்வு காணப்பட்டுள்ளது. இந்தக் கொடுப்பனவு தொழிலாளர்களின் கைகளுக்கு கிடைத்த பின்புதான் இதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
இது இவ்வாறிருக்க தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்று இ.தொ.கா.முன்வைத்த கோரிக்கை எந்த நிலையில் உள்ளதென பெருந்தோட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 1000 ரூபா சம்பளவுயர்வு பெற்றுக்கொடுக்கப்படவேண்டுமென்று போராட்டங்களும் கையெழுத்து வேட்டைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தோட்டத் தொழிலாளர்களுடைய சம்பளப் பிரச்சினை அடுத்தமாத முற்பகுதியில் பேசப்பட இருப்பதாகவும் இ.தொ.கா.வின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை பேசி முடித்து வைக்கப்போவதாகவும் இ.தொ.கா.பொதுச் செயலாளரும் நுவரெலியா ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 25 ஆம் திகதி டிக்கோயா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு பேசும் போதே இதனைத் தெரிவித்திருக்கிறார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைபற்றி பேசப்படும் காலப்பகுதியில் சிலர் அதனைக் குழப்பியடிப்பதற்கு முயற்சிப்பது வழக்கமாகிவிட்டதாகவும் அதன் காரணமாகவே சம்பளப் பேச்சுவார்த்தை இழுபறி நிலையை அடைந்துள்ளதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு (தேர்தல் காலத்தில்) தோட்டத் தொழிலாளரின் சம்பளமாக நாள் ஒன்று 1000 ரூபா வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை இ.தொ.கா.வே முன்வைத்தது. அப்போது 1000 ரூபா சம்பளக் கோரிக்கை சாத்தியமற்றது என்று பல்வேறு சங்கங்கள் கூறின. என்றாலும் பின்னர் இ.தொ.கா.வின் கோரிக்கைக்கு அந்தத் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இன்றும்கூட ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இவ்வாறான நிலையில் தொழிலாளரின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அது தொழிலாளருக்கு செய்யும் துரோகமாகும். எனவே அவ்வாறான தொழிற்சங்கங்களை ஆதாரங்களுடன் வெளிப்படையாகவே மக்கள் முன் அறிவிக்க வேண்டும். இ.தொ.கா. பொதுச் செயலாளர் இதனை காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும்.
கூட்டு ஒப்பந்தம் 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. 2015 ஏப்ரல் 1 ஆம் திகதி புதிய கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் ஏறக்குறைய 17 மாதங்களாகியும் இதுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவில்லை. சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை. இதற்கு யார் காரணம்? 1000 ரூபா நாட்சம்பளம் வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த இ.தொ.கா.வா? தோட்டங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகக்கூறி 1000 சம்பளம் வழங்க மறுத்த தோட்டக் கம்பனிகளா? அல்லது இ.தொ.கா.பொதுச் செயலாளர் கூறியதுபோன்ற எதிர்த்தரப்பு தொழிற்சங்கங்களா?
எவ்வாறெனினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இ.தொ.கா., இ.தே.தோ.தொ.ச, தொழிற்சங்கக் கூட்டுக் கமிட்டி என்பவற்றுக்கு தொழிலாளருக்குரிய சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதிலிருந்து அவர்கள் ஒதுங்கிக்கொள்ளமுடியாது.
17 மாதகாலமாக கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாமைக்கும் அதன்மூலம் பெற்றுக் கொடுக்கப்படவேண்டிய சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கத் தவறியமைக்கும் இந்த மூன்று அமைப்புக்களுமே பொறுப்பேற்க வேண்டும்.
அதைவிடுத்து மாற்று தொழிற்சங்கங்கள்மீது குற்றஞ்சாட்டுவதோ அல்லது சிலர் குழப்பியடிப்பதாக குறை கூறுவதிலோ அர்த்தமில்லை.
வெகுவிரைவில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதுடன் 1000 ரூபா சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும். கடந்த 17 மாதங்களுக்குரிய நிலுவையுடன் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
ஒருவகையில் அரசாங்கம் அறிவித்த 2500 ரூபா கொடுப்பனவு தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைத்துள்ளமை தொழிலாளர்களுக்கும் அரசசார்பு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...