மலையகத்துக்கு தனிப்பல்கலைக் கழகம் தேவை என்ற கோரிக்கை பல காலமாக பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. பேராசிரியர்களும் கல்வியியலாளர்களும் இது குறித்து ஆதாரபூர்வமாக தங்கள் கருத்துக்காளை எடுத்துரைத்து வருகின்றனர். ஊடகங்களில் பக்கம் பக்கமாக எழுதி வருகிறார்கள். எமக்கு தனியான பல்கலைக்கழகம் ஏன் தேவை என்பதை மிகத் தெளிவாகக் கூறி வருகிறார்கள். எமது அரசியல் தலைமைகளும் தேர்தல் காலங்களில் தங்களது ஆதரவை வழங்கியுள்ளார்கள்.
பொதுவாகவே அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை வாரி வழங்குவது பற்றி நாம் அறிவோம். இதற்கு மலையக அரசியல்வாதிகள் மட்டும் விதிவிலக்கல்ல. தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக இவர்களது முன்னுக்குப் பின் முரணான செயற்பாடுகளை கண்கூடாகவே பார்க்கிறோம். தொழிலாளர்களின் வாக்குகளினால் பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டு அவர்களது வயிற்றிலேயே அடிப்பதை இவர்கள் கூசாமல் செய்து வருகிறார்கள். சினிமாக்களில் வீர வசனம் பேசுவது போன்றே வெற்றிப் பேச்சுக்களால் காலம் கடத்துகிறார்கள். எமது மக்களின் உயர்வுக்கு கல்வியே முதல் தேவை என்பதை எல்லா அரசியல்வாதிகளும் பேசுகிறார்கள். ஆனால் நடைமுறையில் அதற்கு எதிராகவே செயற்படுகிறார்கள்.
'இவனுங்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தால் போதும். மேலே படித்தால் எங்களுக்கு எதிராகவே கொடிபிடிப்பானுங்க' என்று பகிரங்கமாகவே கூறிய தலைவர்கள் இன்றும் அரசியலில் இருக்கிறார்கள். வாக்குரிமையை பறித்து நாடற்றவர்களாக ஆக்கிய ஐக்கிய தேசிய கட்சியும் கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டைத் தான் கொண்டிருந்தது. எழுபதுகளில் பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலேயே தோட்டப் பாடசாலைகள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டமை கவனத்தில் கொள்ளத்தக்கது. 1977,1980 ஆண்டுகளில் அனைத்து பாடசாலைகளும் அரசால் பொறுப்பேற்கப்பட்டது. அரசியல் தலைமைகள் விரும்பியோ விரும்பாமலோ எமது சமூகம் கல்வித்துறையில் இன்றைய நிலைமைக்கு உயர்வடைய இதுவே காரணமாக அமைந்தது.
ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடற்ற நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியை அறிமுகப்படுத்தியது என பல முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசே செய்தது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி ஐ.தே.க. ஆட்சியில் அமைக்கப்பட்டது. இந்த இரண்டு தேசிய கட்சிகளும் இன்று இணைந்து ஆட்சி செய்கின்றன. எமது தலைமைகளும் அவற்றில் பங்காளிகளாக இருக்கின்றன. கடந்த காலங்களில் செய்ததைவிடவும் பலமடங்கு அதிகமாக இந்த ஆட்சியில் கேட்டுப்பெற முடியும். நிலை மாறாத எண்ணம் மட்டுமே எமது தலைவர்களுக்கு வேண்டும். சந்தர்ப்பத்துக்கு ஏற்ப ஒத்து ஊதும் போக்கு மாற வேண்டும்.
வடக்கில் பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திலா ஓமந்தையிலா என்பதில் பெரும் இழுபறி ஏற்பட்டது. ஒரே கட்சிக்குள்ளேயே பெரும் போராட்டமாக இது பார்க்கப்பட்டது. இறுதியில் இரண்டு இடங்களிலும் தனித்தனியாக அமைக்கப்படும் என முடிவாகியுள்ளது. எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு இதனை இவர்கள் சாதிக்கிறார்கள். உரிமைகளை என்றுமே அங்கே விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இந்த உண்மையை எமது தலைமைகள் உணர்ந்து செயல்பட வேண்டும். அற்ப சலுகைகளுக்காகவும் பதவிகளுக்காகவும் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது.
மலையகத்துக்கென தனிப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்பது கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்கான ஆயத்தங்களிலும் அரசு இறங்கியது.
பல்கலைக்கழகம் அமைக்கும்போது அதற்குத் தேவையான பௌதீக வளங்கள், ஆளணி வளங்கள் அவசியம் தேவை என்ற ரீதியில் அவற்றை வழங்கும் வகையில் முதலில் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் முன்வைத்திருந்தார். நூறு நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் கொத்மலையில் இதற்கென ஐந்து ஏக்கர் காணியும் பெறப்பட்டது.
ஆனால், இப்போது நடைமுறையில் உள்ள அரசாங்கம் குறிப்பிட்ட இடத்தில் தொழில்நுட்ப கல்லூரியை அமைக்கவிருப்பதாக அமைச்சர் கூறுகிறார். அந்த தொழில்நுட்பக் கல்லூரி மலையக தமிழ் மக்களுக்கு மட்டுமா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. அத்தோடு தமது தற்போதைய அரசு மந்த கதியில் செயல்படுவதாக அவரே கூறி இருக்கிறார். அமைச்சர் இராதாகிருஷ்ணன் பிரதேச சபைத் தலைவராக இருந்த காலந்தொட்டே தனித்துவமாக சுறு சுறுப்பாக செயல்பட்டவர். மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக இருந்த போது காத்திரமான பல செயற்றிட்டங்களை செயற்படுத்தியவர். அரசு பொறுப்பேற்ற பெருந்தோட்ட பாடசாலைகளை நாட்டின் ஏனைய பாடசாலைகளுக்கு நிகராக வளர்ச்சி அடைச் செய்ததில் அவருக்கு பெரும்பங்கு உண்டு. கொட்டகலையில் அமைக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் கல்லூரி ஒரு சிறந்த உதாரணமாகும். ஆனால் செயற்பட முடியாமல் அவர் முடக்கப்பட்டுள்ளார் என்பதே உண்மையாகும். இதன் அடிப்படையில்தான் பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக தொழில்நுட்பக் கல்லூரி என்பதையும் நாம் நோக்க வேண்டும். ஏற்கனவே தொழில்நுட்பக் கல்லூரிகள் பல இங்கே இருக்கின்றன. ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் முற்று முழுதாக மலையக இளைஞர், யுவதிகளுக்காகவே உருவாக்கப்பட்டது. அந்த நிலையத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அமரர் தொண்டமான் அங்கு பேசியபோது கண்ணீர் வடித்தார். பல ஆண்டுகள் தான் கண்ட கனவு இன்று பலித்துவிட்டது என கண்ணீர் மல்கக் கூறினார்.
இன்று சகல வசதிகளுடனும் கூடிய அந்த தொழில்பயிற்சி நிலையம் ஊடாக எத்தனை பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்? அமரர் தொண்டமான் கண்ட கனவு நிறைவேற்றப்பட்டதா? ஊழல்களும் மோசடிகளும் சந்தி சிரித்ததை மறக்க முடியுமா? கொட்டகலையில் அமைக்கப்பட்ட CLF காங்கிரஸ் தொழில்நுட்ப கல்லூரியின் நிலை எப்படி இருக்கிறது. மலையக இளைஞர் யுவதிகள் எத்தனை பேர் பயன் அடைந்திருக்கிறார்கள்.
நுவரெலியாவில் பாரிய தொழில்நுட்ப கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. அங்கு எமது இளைஞர்கள் பயிற்சிபெற எது தடையாக இருக்கிறது. கந்தப்பளை போன்ற பல இடங்களில் தொழில்நுட்ப கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தமிழ் மொழியிலும் விரிவுரை நடந்தும் ஒழுங்குகளைச் செய்தாலே எமது இளைஞர்களும் யுவதிகளும் ஆயிரக்கணக்கில் பயன் அடைவார்கள்.
அட்டனில் உள்ள தொண்டமான் தொழிற் பயிற்சி நிலையம் கொட்டகலை தொழில்நுட்ப கல்லூரிகளைத் தரம் உயர்த்தினாலே எமது சமூகம் உரிய பயனை அடையமுடியும். மேலும் பாடசாலைகளிலும் இந்த வசதிகளை செயற்படுத்தலாம். தொழில்நுட்ப கல்லூரி என்பது தேசிய ரீதியில் அமைக்கப்பட வேண்டியது. இங்கே முழுநேர விரிவுரைகள் தேவைப்படாது. செயற்பாடுகளே அதிகம் இருக்கும். புரிந்து கொள்ளும் வகையில் தமிழ்மொழியில் விரிவுரைகள்தான் தேவை.
எனவே தனியான பல்கலைக்கழகம் என்ற கோரிக்கையை போட்டு குழப்பியடித்துக் கொள்ளக் கூடாது. பல்கலைக்கழகம் ஆரம்பித்தால் போதிய மாணவர்கள் கிடைக்க மாட்டார்கள் என கூறுகிறார்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி ஆரம்பித்த போதும் இவ்வாறுதான் கூறினார்கள். இன்று அங்கு அனுமதிக்காக நூற்றுக்கணக்கானவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள நிர்வாக சீர்கேடுகளை அமைச்சர் இராதாகிருஷ்ணன் நேரில் கண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இருக்கின்ற வளங்களைப் பயன்படுத்துவதை கண்காணித்தாலே பல பிரச்சினைகள் தானாகவே தீரும்.
கொட்டகலையில் இயங்கி வரும் ஆசிரிய பயிற்சி கலாசாலை ஆரம்ப காலகட்டத்தில் எவ்வாறு இயங்கியது என்பது பலருக்குத் தெரியாது. பண்டாரவளையில் உள்ள பிந்தினுவேவ சிங்கள ஆசிரிய பயிற்சி கலாசாலையின் ஒரு மூலையில்தான் இந்த கலாசாலை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இயங்கியது. முன்னாள் அதிபர் அமரர் பாலசுப்ரமணியம் அவர்களின் அயராத முயற்சி காரணமாக தலவாக்கலை பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அது இடம் மாறியது. அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவருக்கு உறுதுணையாக இருந்தார். தேயிலைத் தொழிற்சாலையில் மேல்மாடியில் தமிழ் மகாவித்தியாலயம் இயங்கியது. பலகையிலான மேல் தட்டில் மாணவர்கள் நடமாடும்போது தூசிகள் பயிற்சி பெறும் ஆசிரியர்களின் மீது விழும். தூசியைத் தட்டிக் கொண்டு கற்றலைத் தொடர வேண்டும். தோட்டத்துக்கு உரக்களஞ்சியமாக இருந்த காம்பராக்களே ஆசிரியர் விடுதிகள்.
அமரர் பாலசுப்பிரமணியம் நாட்டின் பல பாகங்களிலும் இருந்த ஆசிரியர் கலாசாலைகளில் சேவையாற்றியவர். ஆங்காங்கே இருந்த உடைந்த கதிரைகள், மேசைகள், அலுமாரிகள், கடிகாரங்கள் பற்றிய விபரங்கள் அதிபருக்குத் தெரியும். உரிய அனுமதி பெற்று அவற்றை தலவாக்கலை புகையிரத நிலையம் வரை கொண்டு வந்து சேர்த்தார். ஓய்வுநாள் என்றபடியால் புகையிரத நிலையத்திலிருந்து கலாசாலைக்கு தானே முன்னின்று தோலில் சுமந்து லொறிகளில் ஏற்றி இறக்கியது இன்றும் கண்முன்னே தெரிகிறது.
தனி ஒரு மனிதனாக அன்னார் நமது சமூகத்திற்காக ஆற்றிய சேவை அளப்பரியது. அவரது மரணமும் கலாசாலையிலேயே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. கொட்டகலையில் தற்போது இயங்கி வரும் ஆசிரிய பயிற்சி கலாசாலைக்கான இடத்தைப் பெறுவதிலும் அவர் பெருமுயற்சி மேற்கொண்டிருந்தார். சொற்ப எண்ணிக்கையிலான ஆசிரியர்களே இங்கு ஆரம்பத்தில் பயிற்சி பெற்றனர். இன்று நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் இங்கு நூற்றுக்கணக்கில் பயிற்சி பெறுகிறார்கள்.
இன்று எமது சமூகத்தில் பலரும் உரிய இடத்தில் இருக்கிறார்கள். பட்டதாரிகளும் பேராசிரியர்களும் துணைவேந்தர்களும் இருக்கிறார்கள். நிதியைப் பெற்றுத்தர அலைய வேண்டியதில்லை. கோரிக்கையை முன்வைக்க நல்ல மனம் மட்டுமே வேண்டும். மனமுண்டானால் இடமுண்டு. எமது மக்கள் பிரதிநிதிகள் அரசியல் தொழிற்சங்க கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். அரசு மந்த கதியில் செயல்படுவதாக நாமே கூறுகிறோம். அடுத்த தேர்தல் ஐந்து ஆண்டுகளில் நிச்சயமாக வந்தே தீரும். அதில் மந்த நிலை இருக்க முடியாது. எனவே அடுத்த ஆட்சியில் அல்லது பதவியில் நீடிக்கவாவது உருப்படியாக செயல்பட வேண்டும். ஒட்டுமொத்த சமூகத்தில் உயர்ச்சி கல்வியிலேயே தங்கி இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...