க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளில் சித்தியடைவோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக மலையகத்தில் அதிகரித்து வருகின்றது. எனினும் அநேகமான மாணவர்கள் பொருளாதார நெருக்கடி மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக உயர்கல்வியை தொடரமுடியாமலும், அதனால், சமூகத்தில் உரிய அந்தஸ்தை பெறமுடியாமலும் எதிர்காலத்தை தொலைத்துவிட்டவர்களாக காணப்படுகின்றனர்.
இவ்வாறான நிலையை தடுப்பது மலையக சமூகத்தவர்கள் கைகளிலேயே உள்ளது. நாட்டின் பல பகுதிகளிலும் அதிக வருமானங்களை பெறும் நிலையங்களாக வணக்கஸ்தலங்கள் உள்ளன. ஆதாவது இந்து கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் என்பன காணப்படுகின்றன. இவற்றை பரிபாலனம் செய்துவரும் சபைகள் அப்பிரதேசத்தில் க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகைமை பெற்றுள்ள மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி அவர்களது கல்வி வளச்சிக்கு பெரும் பணியாற்ற முடியும்.
மலையகத்தில் ஐம்பதுக்கும் அதிகமான தோட்டத் தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன. இந்த தொழிற்சங்கங்கள் தமக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகள் உயர் கல்வி பெற மாதாந்தம் நிதியுதவி வழங்க வேண்டும்.
தொழிற்சங்கங்களும், அத்தொழிற்சங்கம் வழிவந்த அரசியல் கட்சிகளும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தொழிலாளர்களின் பிள்ளைகளும் தோட்டத் தொழிலாளர்களாக மாறினால் தமக்கு சந்தாப்பணம் அதிகளவில் கிடைக்கும்; என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள தொழிற்சங்கங்கள் அவை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர்களின் பிள்ளைகளை; வெவ்வேறு துறைகளில் ஈடுபட வைத்து அவர்களின் எதிர்காலத்தை சுபீட்சம் அடையச் செய்து வருகின்றன. அத்துடன் அவர்களது உயர்கல்வி வாய்ப்புக்களுக்கும் பெரும் உதவி வழங்கி வருகின்றன.
இந்த நாட்டில் அரசியல் ரீதியாக செயற்பட்டு வரும் தோட்டத் தொழிற்சங்கங்கள் இங்கு வாழும் இந்திய வம்சாவழி தமிழ் மாணவர்களின் கல்வியிலும், தோட்டத்தொழிலாளர்களது பிள்ளைகளின் கல்வியிலும்; அக்கறை காட்டி செயற்படுவதில்லை.
ஆகவே, இந்தக் காலகட்டத்தில் பொருளாதார வசதி படைத்த இந்திய வம்சாவளி தமிழர்களும், மலையக அரசியல் கட்சிகளும், தோட்டத்தொழிற்சங்கங்களும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவ முன்வரவேண்டும்.
ஒரு சமுதாயத்தின் ஈடேற்றத்திற்கு கல்வி அத்தியாவசியமாகும். எனவே உயர் கல்வியைப் பெறத் தகைமையுடைய மலையகத் தமிழ் மாணவர்கள் உயர் கல்வி பெற வழியேற்படுத்திக் கொடுப்பதுடன் அவர்களை பட்டதாரிகளாக்கி அந்தந்தப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக்கச் செய்தால் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிரந்தரமாகத், தீர்க்க நடவடிக்கை எடுக்கமுடியும் இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையை இல்லாதொழித்து எமது சமூகத்தில் கல்வி புரட்சியையும் ஏற்படுத்த முடியும்.
தோட்டத்தொழிலாளர்கள் தோட்டத்தில் நாளாந்தம் இரத்தத்தை வியர்வையாக சிந்தி தோட்டக் கம்பனிக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இலாபத்தை பெற்றுகொடுத்து வருகின்றார்கள். அப்படி இலாபத்தை பெற்றுகொடுத்தும் தொழிலாளர்களின் படித்த பிள்ளைகளுக்கு தோட்டத்தில் தொழில் வழங்குவது குறைவாகவே காணப்படுகின்றது.
தோட்டப்பகுதிகளில் ஏராளமான படித்த இளைஞர், யுவதிகள் வேலைவாய்பின்றி வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றார்கள். இவர்களை பற்றி எவரும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. நாட்கூலியாகத் தொழில்புரியும் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தோட்டப்பகுதிகளில் தொழில் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக் கம்பனி என்பன அக்கறை கொள்வதில்லை. தோட்டப்பகுதிகளில் ஏராளமான தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு தொழிலாளர்களின் பிள்ளைகளை நியமித்தால் தொழில்வாய்ப்புக்கெனக் காத்திருக்கும் இளைஞர் யுவதிகளின் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய முடியும்.
அதேவேளை, தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகள் வெளிப்பிரதேசங்களில் இருந்து இளைஞர், யுவதிகளை கொண்டுவந்து அவ்வெற்றிடங்களை நிரப்பி வருகின்றன. தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தோட்டத்துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்றுகொடுப்பதில் மலையக தலைவர்கள், தொழிற்சங்கங்கள், மலையக அரசியல்வாதிகள் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...