மலையகத்தில் தரம் ஐந்து வரையும் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களை மட்டுமே கொண்டு இயங்கி வந்த பெருந்தோட்டப் பாடசாலைகள் 1977, 1980 காலப்பகுதியில் தான் தேசியக் கல்வி நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டன என்பது வரலாறு. நாட்டில் உள்ள ஏனைய பாடசாலைகள் இருநூறு, இருநூற்றைம்பது ஆண்டுகள் வளர்ச்சி கண்ட நிலையில் பெருந்தோட்டப் பாடசாலைகள் வெறும் முப்பது ஆண்டுகள் வரலாற்றை மட்டுமே கொண்டுள்ளன. எனவே, எமது சமூகத்தின் கல்வி வளர்ச்சி நூறு வீத வேகத்தை தொட வேண்டும்.
ஒற்றை வகுப்பறை கட்டடங்களை மட்டுமே கொண்டிருந்த பாடசாலைகள், SIDA, GTZ போன்ற வெளிநாட்டு நிறுவனங்களாலேயே இன்றைய வளங்களைப் பெற்றன. அரசாங்கங்களின் பங்கு மிகவும் சொற்ப அளவிலேயே இருந்தன, இருக்கின்றன என்பதே வேதனை அளிக்கும் உண்மைகளாகும்.
அரசு பொறுப்பேற்ற பாடசாலைகளில் இருந்த 598 ஆசிரியர்கள் முதல் தடவையாக கல்வி அமைச்சால் நிரந்தர நியமனம் பெற்றனர். இவர்களுடன் 402 ஆசிரியர்கள் புதிதாக சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இவ்வாறுதான் ஆயிரம் ஆசிரியர்கள் அமைச்சில் உள்ளீர்க்கப்பட்டார்கள். அதன்பின் பெருந்தோட்ட கல்வி அபிவிருத்தி பிரிவால் பயிற்றப்பட்டும் தொலைக்கல்வி பயிற்சி பெற்றும் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன. இதேவேளை, ஊவா மற்றும் மத்திய மாகாண சபைகளில் தமிழ்க் கல்வி அமைச்சுகள் உருவாக்கப்பட்டன. மேலதிகத் தமிழ்க் கல்வி பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தனி ஒருவராக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மேற்சொன்னவைகளை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் பணி புரிந்தார். மேலும், ஆசிரியர் பயிற்சி கலாசாலை மற்றும் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரி போன்றவை உருவாகவும் அவர் காரணமாகத் திகழ்ந்தார். இவர் தனது செல்வாக்கைச் செலுத்த முக்கியமான காரணம் ஒன்றிருந்தது. எழுபதுகளில் ஆட்சியில் இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வீழ்த்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆருடன் தோளோடு தோள் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு ஐ.தே.க. ஆட்சியைக் கொண்டு வர உறுதுணையாக இருந்தவர் அவர். முஸ்லிம் மக்கள் சார்பில் அமரர் ஏ.சி.எஸ். ஹமீட்டும் சத்தியாக்கிரகம் போன்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.
இப்போது சரித்திரம் மீண்டும் திரும்பியிருக்கிறது. அதே கட்சி ஆட்சியை அகற்ற ஐ.தே.க.வுடன் கரம் கோர்த்த எம்மவர்கள் ஏழு பேர் பாராளுமன்றத்திற்கு போய் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம் ஆகிய இருவரும் எமது மக்கள் சார்பாக பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். அன்று தனி ஒருவராக சௌமியமூர்த்தி தொண்டமான் செய்த சாதனைகளை விடவும் பல மடங்கு அதிகமாக இவர்கள் செய்து காட்ட வேண்டும். அன்று போராடி பெற்ற பலவற்றை இன்று இழந்து நிற்கும் நிலையையாவது உடன்போக்க செயலில் இறங்க வேண்டும்.
யதார்த்தத்தில் நிலைமை பாராட்டும் படியாக இல்லை. தொழிலாளர்களின் சம்பள உயர்வு, கூட்டு ஒப்பந்தம் மற்றும் பல்கலைக்கழகம் என அனைத்து பிரச்சினைகளும் தீர்வுகள் இல்லாமலேயே இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் நுவரெலியா மாவட்ட கல்வி நிலை உள்ளது. முழுநாட்டிற்கும் கல்வி இராஜாங்க அமைச்சராக எம்மவர் ஒருவர் இருக்கும் போது இவ்வாறான ஒரு நிலை இருப்பது வேதனைக்குரியதாகும்.
பல்கலைக்கழகம், பல்கலைக்கழக கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, திறந்த பல்கலைக்கழகம் என பலவாறு பேசப்பட்டாலும் உருப்படியாக எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. எம்மவர்கள் பலமான நிலைமையில் இருக்கும் போதே நுவரெலியா மாவட்டத்தில் தனியான தமிழ்க் கல்வி வலயம் ஒன்றை அமைப்பது முக்கியமான தேவையாகும். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்றார்கள். வடகிழக்கிற்கு புறம்பாக தமிழ் மக்கள் இங்குதான் அவ்வாறான ஒரு நிலைமையில் இருப்பது பெருமைக்குரியது. ஆனால், கல்வி நிலையில் வடகிழக்கு மக்கள் பெற்றுள்ள உரிமைகளும் சலுகைகளும் இங்கு இல்லை. இருந்த உரிமைகள் படிப்படியாக இல்லாமல் செய்யப்படுகின்றன. அடுத்த மூன்றாண்டுகளில் எமது தலைமைகள் கல்வியில் மாற்றத்தைக் காண உதவ வேண்டும்.
பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்லூரி அமைப்பதற்கு முன்பதாக தனித் தமிழ் கல்வி வலயம் ஒன்றை நுவரெலியாவில் ஏற்படுத்தி தமிழ்க் கல்வி துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சீர்கேடுகளைப் போக்க வேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பாடசாலைகளின் நிலையை இங்கு பார்ப்பது சிறந்தது.
நுவரெலியா மாவட்டம் ஐந்து கல்வி வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, ஹட்டன், வலப்பன, ஹங்குராங்கெத்த மற்றும் கொத்மலை ஆகியவைகளே அவை. தமிழ்ப் பாடசாலைகளைப் பொறுத்தளவில் நுவரெலியாவில் 116, ஹட்டனில் 106, வலப்பனையில் 26, ஹங்குராங்கெத்தவில் 11, கொத்மலையில் 37 என்ற அளவில் மொத்தமாக 296 இருக்கின்றன. வலப்பன, ஹங்குராங்கெத்த மற்றும் கொத்மலை வலயங்களில் சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் பெரும்பான்மையாக உள்ளன. நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் 222 இருக்கின்றன. சிங்கள மொழி மூலப் பாடசாலைகள் சுமார் 75 தான் இவ்விரு வலயங்களிலும் உள்ளன. எழுபது சதவீத தமிழ்மொழிப் பாடசாலைகள் உள்ள போதும் நுவரெலியா கல்வி வலயத்தில் பெரும்பான்மை சமூக கல்விப்பணிப்பாளரின் கீழேயே நிர்வாகம் நடக்கிறது. ஹட்டன் வலயத்தில் தமிழ் கல்விப் பணிப்பாளர் இருக்கின்ற போதும் எந்த வேளையிலும் அங்கு தமிழல்லாதவர் பதவிக்கு வரும் சூழலே நிலவுகிறது.
நுவரெலியா கல்வி வலயத்தில் மேலதிக கல்விப் பணிப்பாளராக தமிழர் ஒருவர் பதவியில் இருப்பது பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்தது. கடந்த சில வருடங்களாக அந்தப் பதவி இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. சகல கருமங்களிலும் சிங்கள மொழியிலேயே இடம்பெறுகின்றன. தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு சிங்களப் பணிப்பாளர்களும் சிங்கள ஆசிரிய ஆலோசகர்களும் சென்று மேற்பார்வை செய்யும் நிலைமை காணப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். சில தமிழ் அதிபர்கள் தங்கள் சுயலாபத்திற்காக மேலதிக தமிழ்க் கல்விப் பணிப்பாளர் நியமனம் இடம் பெறாமல் இருக்க பின்னணியில் செயற்படுகின்றார்கள்.
நுவரெலியா கல்வி வலயத்திற்கு வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் உதவி பெருமளவு கிடைப்பதாகக் கூறப்படுகிறது. விடுமுறை தினங்களில் செயலமர்வுகள், மேற்பார்வைகளுக்காக ஐந்தாயிரம் ரூபாவரை வழங்கப்படுவதாகத் தெரிகிறது. கிழமை நாட்களில் அலுவலகத்திற்கு கடமையில் இல்லாதவர்களும் வார இறுதி நாட்களில் தவறாது கடமைக்கு வந்து மேலதிகக் கொடுப்பனவுகளை தாராளமாகப் பெற்றுக்கொள்வதாகத் தெரிகிறது. தமிழ்ப் பாடசாலைகளுக்கும் தமிழ் அதிகாரிகளுக்கும் கிடைக்க வேண்டிய கொடுப்பனவுகள் சம்பந்தமில்லாதவர்களுக்கு வழங்கப்படுகிறதாம். மொழி புரியாதவர்களால் எவ்வாறு தமிழ்க் கல்வி நிலையை உயர்த்த முடியும் என கேள்வி எழுப்பப்படுகிறது.
நுவரெலியாவிலும் ஹட்டனிலும் தனித் தமிழ் மொழி மூல கல்வி வலயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழ் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பதவிக்காலத்தில் இது நிறைவேற்றப்படுமானால் காலம் அவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும். மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் கல்வி வலயங்கள் வடகிழக்கில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் தமிழ் மொழி மூல பாடசாலைகள் சிறப்பாக இயங்குகின்றன.
இதே நிலைமை தான் நுவரெலியா கல்வி வலயத்திற்கும் ஏற்பட்டுள்ளது. நுவரெலியாவில் இருந்து டயகம, கொட்டகலை, எல்ஜின், ரகன்வத்தை, கந்தப்பளை, தலவாக்கலை மற்றும் அக்கரப்பத்தனை போன்ற தொலை தூரங்களில் இருந்து அலுவலகம் Aகல்வி வலயம் என்ற பெயரில் 100% முஸ்லிம் பாடசாலைகளைக் கொண்ட வலயம் ஒன்றும் உருவாக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் திகாம்பரம் ஃபுருட்ஹில் கிராமத்தில் றோயல் கல்லூரி ஒன்றை நிறுவப்போவதாக கூறியிருக் கிறார். திறந்த பல்கலைக்கழக நிர்மாணத்துக்கு திலகராஜ் எம் .பி. உதவ முன்வந்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக மாவட்ட செயலாளர் அலுவலகங்கள், தொழில் நுட்பக் கல்லூரி, பல்கலைக்கழகம்,பல் கலைக்கழக கல்லூரி என்றும் 5 ஆண்டு திட்டம், 10ஆண்டு திட்டம் என நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை ஒருபுறம் வைத்துக்கொண்டு உடன டி டியாக நிறைவேற்றக்கூடிய தனித் தமிழ் கல்வி வலயத்தை நிறுவ முயற்சிகள் வேண்டும் என நலன் விரும்பிகள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...