Headlines News :
முகப்பு » , , , , » பிரேசரின் திட்டமும், பிடிபட்ட கள்வர்களும்! (1915 கண்டி கலகம் –46) - என்.சரவணன்

பிரேசரின் திட்டமும், பிடிபட்ட கள்வர்களும்! (1915 கண்டி கலகம் –46) - என்.சரவணன்

ஏ.ஜீ.பிரேசர் (A. G. Fraser)
பொய் சாட்சிகளால் குற்றவாளிகளாக்கப்பட்டவர்கள் பற்றிய பல சம்பவங்கள் பதிவாகின. இவை குறித்து விரிவாக போன்ன்னம்பலம் இராமநாதன், ஆர்மண்ட் டீ சூசா போன்றோர் விளக்கியுள்ளனர்.

பண்டாரநாயக்க
சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ள பிரெடெரிக் டயஸ் பண்டாரநாயக்க கலவரம் நிகழ்ந்தபோது தனது ஓய்வு இல்லத்தில் தங்கியிருந்தார். பல முஸ்லிம்களையும், அவர்களின் சொத்துக்களையும் பாதுகாப்பதற்காகவும், கலவரத்தை அடக்குவதற்காகவும் அவர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். ஆனால் ஜூன் 13 அன்று அவரும் கைதானார். அவரின் வேட்டை சோதனையிட்ட பஞ்சாப் படையினர் அங்கிருந்த பல ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். அப்படி சோதனையிட்டவேளை ஒரு பஞ்சாப் படையினன் அவரின் கைக்கடிகாரத்தையும், தங்க மாலை ஒன்றையும் களவாடினான். இது குறித்து அங்கு வந்திருந்த கட்டளை அதிகாரியிடம் பண்டாரநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு வந்ததும் அந்த பஞ்சாப் படியினனை சோதனை இட்டார்கள். இறுதியில் தலைப்பாகைக்குள் மறைத்து வைத்திருந்த அந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மூன்று நாட்களாக நடந்த விசாரணையின் இறுதியில் அவர் மீது எதுவித குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையில் ஆணையாளர் ஒல்னட் அவரை விடுவிப்பதற்கு முன்வந்தார். ஆனால் இன்னொரு ஆணையாளரான முவர் பண்டாரநாயக்கவை இராணுவ நீதிமன்றத்தில் ஒப்படைக்கும்படி தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தொடர்ந்து ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. நான்கு நாட்களில் இராணுவ நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஜூன் 15ஆம் திகதி வழக்கின் போது அவருக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இருவர் அளித்த சாட்சிகளைத் தவிர மேலதிக சாட்சியங்கள் எதுவும் இல்லை. தேசத்துரோகம், கடைகள் இரண்டை உடைத்தது என்கிற மூன்று குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. தான் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கு நான்கு நாட்கள் போதுமானது அல்ல என்று அவர் ஆணையாளரிடம் வேண்டினார். அதன் விளைவாக அவருக்கு ஓகஸ்ட் 19 வரை காலக்கெடு வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கால இடைவெளிக்குள் பண்டாரநாயக்கவின் நண்பர்கள் ஆதாரங்களைத் திரட்டினார்கள். சாட்சியமளித்த அந்த இருவரும் சம்பவ தினத்தன்று தொம்பவின்ன தோட்டத்தில் தோட்ட அதிகாரியின் பாதுகாப்பிலேயே இருந்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்தார்கள் அவர்கள். பண்டாரநாயக்க விடுதலை செய்யப்பட்டார். ஆனால் பொய் சாட்சி கூறிய இருவருக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொலிஸ் அல்லது விசேட ஆணையாளரால் இரண்டு மாதங்களுக்கு முன்னரே எளிமையாக விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிந்திருக்க முடியும். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அதேவேளை இந்த பாதகச் செயல்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பட்டவேளை அதற்கு பதிலளித்த தேசாதிபதி “இராணுவ நீதிமன்றத்துக்கு அனுப்பட்ட அத்தனை வழக்குகளும் தீர விசாரணை செய்யப்பட்டவை தான்” என்று புளுகினார். 

சிவில் நீதிமன்றங்கள் குறைந்தபட்சம் நியாயமாகவே நடந்துகொண்டது. அதற்கான முக்கிய காரணம், சிவில் நீதிமன்றங்கள் துறைசார் நிபுணத்துவத்துடன் அதனை மேற்கொண்டது தான். பெரும்பாலும் இத்தகைய குற்றச்சாட்டுகளில் மாட்டப்பட்டோர் தனவந்தர்களாகவோ, சமூக அந்தஸ்துடையவர்களாகவோ இருந்தார்கள் என்பது இங்குகவனிக்கத்தக்கது.

கலவரம் செய்தது, கடயுடைத்தது, கொள்ளையடித்தது போன்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு நீதிமன்றத்தில் நால்வருக்கு எதிராக ஒரு வழக்கு தொடரப்பட்டது. ஒருவர் கிராமத்தளைவரான எம்.ஜே.ரொத்ரிகோ, இன்னொருவர் அரசாங்க கன்ராக்டரான டீ.சீ.லூயிஸ், கேபிரியல் டி சில்வா, கிரினேலிஸ் ஆகியோரே அவர்கள். இவர்கள் நால்வரும் செல்வந்தர்கள். சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்பட்ட இடத்தில் அவர்கள் இருக்கக்கூட இல்லை என்பது சாட்சியங்களில் தெரியவந்தது. சாட்சியமளித்தவர்கள் பொய் சாட்சியளித்திருக்கிறார்கள் என்பதை அறிந்த நீதிபதி நால்வரையும் விடுதலை செய்தார். இதே வழக்கு இராணுவ நீதிமன்றத்தில் நடந்திருந்தால் நிச்சயம் இவர்கள் நால்வரும் குற்றவாளிகளாக்கப்பட்டிருப்பார்கள்.

கண்டியில் பெரஹர நிகழ்ந்த போது தொடங்கிய கலவரத்தில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு நடந்தது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பீ.பீ.ரத்னாயக்க அந்த கலவரத்திற்கு தலைமை தாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். ஐரோப்பியர்களை கொலை செய்ய சதி செய்தது, கலவரம் மேற்கொண்டது, கடையுடைப்பு, கலவரத்துக்கு மக்களை தூண்டியது உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன. ஜூனிலிருந்து ஒக்டோபர் வரை அவர் சிறையிலிருந்தார்.

இந்த வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட மாவட்ட நீதிபதிபதியால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அவரது வீட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களை சமர்ப்பிப்பதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.  ஆனால் அந்த ஆவணங்கள் எதுவும் இந்த வழக்குடம் சந்மபதப்பட்டதில்லை என்றும் வழக்கை திசைதிருப்பும் நோக்குடன் இப்படி கூறப்பட்டிப்பதாகவும் பகிரங்கமாக நீதிபதியால் கண்டிக்கப்பட்டது. நீதிபதி ரத்னாயக்கவை விடுவித்தார். அதற்கான இன்னொரு காரணம் கலவரம் நிகழ்ந்த அடுத்த நாள் அந்த கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட 28 பேர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியளை பொலிஸ் விசாரணையாளரால் சமர்ப்பிக்கப்பட்டது அல்லவா. அந்த பட்டியலில் ரத்நாயக்கவின் பெயர் எங்கும் இருக்கவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். மேலும் அவரை குற்றவாளியாக்க போலியாக முற்பட்ட முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மூவர் குறித்தும் அவர் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

“இந்த மூன்று சாட்சியாளர்கள் குறித்தும் நான் கொஞ்சமும் நம்பவில்லை. அவர்கள் குறித்து நீண்ட விளக்கம் அளிக்கத் தேவையில்லை.” என்றும் அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

100 பவுன்
கலவரம் நிகழ்ந்த போது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் பலமுள்ள சிங்களவர்களிடம் தஞ்சமடைந்தார்கள். இன்னும் பலர் தமது குடும்பங்களுடன் பாதுகாப்பு தேடி நகரை விட்டு வெளியேறி காடுகளுக்குள் இருந்தார்கள். ஏனையோர் வந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்வரை அவர்கள் இருந்தார்கள். கலவரம் தனிந்தபோதும் கொள்ளையர் மற்றும் காடையர்களை இராணுவ சட்டத்தால் அடக்கியதன் பின்னர் தைரியமாக வெளியில் வந்தவர்கள்; அந்த இடைவெளிக்குள் நிகழ்ந்தவற்றை காணாதபோதும் நேரடியாகக் கண்டதைப் போன்று வெளியில் தெரிவித்தார்கள். தமக்கு தொந்தரவு செய்தவர்கள் குறித்தும், தமது அதிருப்தியாளர்கள் குறித்தும் சத்தியம் செய்து கற்பனாபூர்வமாக சாட்சியமளித்தனர் என்கிறார் சூசா. இவர்களில் பலர் நீதிமன்ற விசாரணைகளை துஸ்பிரயோகம் செய்தனர். இதன் மூலம் பணம் வசூலிக்க எத்தனித்தனர்.

கண்டியில் நிகழ்ந்த ஒரு வழக்கை ஆர்மண்ட் டீ சூசா ஒரு உதாரணமாக காட்டுகிறார். கண்டியில் இருந்த முஸ்லிம் கடையொன்றின் சொந்தக்காரரான லெப்பை முகமது இஸ்மாயில் சிங்களவர்கள் குறித்த பீதி, முஸ்லிம்களின் மீதான அனுதாபம் என்பவற்றை வஞ்சகமாக துஷ்பிரயோகம் செய்து பலன்பெற பலமுறை முற்பட்டார்.  ஒரு முறை ஜூன் மாத நடுப்பகுதியில் அவர் தேசிய வங்கியில் (நேஷனல் பேங்க்) காசாளராக பணிபுரிந்த வல்லிபுரம் என்பவரை தொடர்புகொண்டார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி கூறிய கருத்தை இங்கு பகிர்வது நல்லது.

“வல்லிபுரத்தை சாட்சியொன்றை அளிக்கும்படி கேட்டுள்ளார். வல்லிபுரத்திடம் பணத்தைக் கொடுத்து 100 பவுன் தங்க நகைகளை பெற்றுக்கொண்டதாக கூறும்படி கேட்டுள்ளார். இதன்படி தன்னிடம் இருந்து அந்த 100 பவுன் தங்க நகை கொள்ளயடிக்கப்பட்டுவிட்டதாக கலவரத்தில் ஏற்பட்ட நட்டங்கள் குறித்து ஆராய்ந்த விசேட  ஆணையாளரை நம்பச் செய்ய முற்பட்டுள்ளார். வல்லிபுரம் தன்னால் இதனை செய்ய முடியாது என்று மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த இஸ்மாயில் வல்லிபுரமும் கொள்ளையர்களில் ஒருவரென்று பெயர் பட்டியளைக் கொடுப்பேன் என்று மிரட்டியுள்ளார்.”

இது போன்ற உண்மைகள் பல இராணுவ ஆணையாளரால் மேற்கொண்ட மீள் விசாரணையில் வெளிக்கொணரப்பட்டது.

இப்படி இன்னும் சில சம்பவங்களை குறிப்படலாம்

கையும் களவுமாக
மேர்கன்டைல் வங்கியில் காசாளராக பணிபுரிந்த ரத்வத்தே பலரும் அறிந்த பௌத்தர். அவரின் தகப்பனாரும் ஒரு பௌத்த விகாரையின் அறங்காவலர். ஜூலை 20 அன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் வந்து அவரின் (ரத்வத்தே) பெயரை கலவரக்காரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தன்னை சாட்சிக்கு அழைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அப்படிப்பட்ட அசிங்கச் செயலை தான் செய்ய மாட்டேன் என்றும் என்றாலும் தான் ஒரு வருமயானவன் என்பதால் தனக்கு ஏதாவது தந்தால் தான் அமைதியாக இருப்பேன் என்றும் ரத்வதேயிடம் கூறியிருக்கிறார். இது குறித்து நீதிபதி இப்படி தெரிவிக்கிறார்.

“இதனை இன்னொரு வகையில் சொல்லப்போனால் அவர் பணம் வழங்காவிட்டால் பொய் வழக்கொன்றில் சிக்கவைபதாக ரத்வத்தே மிரட்டப்பட்டுள்ளார். ரத்வத்தே இதனால் பீதியுற்றார். முஸ்லிம்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் எந்தவொரு அப்பாவியும் பொய் வழக்கில் சிக்கவைப்படலாம் என்கிற கதை நாடெங்கும் ஏற்கெனவே பரவியிருந்தது. ரத்வத்தே பணத்தை கொடுக்கலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அதேவேளை இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் முடிவு எடுத்தார்.

அன்றைய ட்ரினிடி வித்தியாலயத்தின் அதிபர் வணக்கத்துக்குரிய பிதா ஏ.ஜீ.பிரேசர் (A. G. Fraser) உடன் இது குறித்து உரையாடினார். அவரின் ஆலோசனைப்படி அந்த வஞ்சகத்தனத்தை கையும் களவுமாக பிடிப்பதற்கு திட்டமிடப்பட்டது. ரத்வத்தே பணத்தை கொடுப்பதை அவதானிப்பதற்காக தனது மாணவர்கள் இருவரை ஏற்பாடு செய்தார் பிரேசர். குறித்த நபர் வங்கிக்கு வந்தார். ரத்வத்தே அவருக்கு 20 ரூபாவை கொடுத்தார். அப்பணம் கொடுக்கப்படுவதை அங்கிருந்தோர் பலர் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த முஸ்லிம் நபர் வங்கியிலிருந்து வெளியேறும்போது கைதுசெய்யப்பட்டார். வழக்கின் போது அந்த நபர் தனது வீட்டில் ரத்வத்தே உட்பட இன்னும்சிலர் தனது வீட்டை கொள்ளையடித்ததாகவும் கூறினார். நீதிபதி தனது தீர்ப்பில் இப்படி குறிப்பிட்டார்.

“இந்த குற்றச்சாட்டு வெட்கம்கெட்ட பொய். இந்த நபர் கலவரத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயற்சித்துள்ளார். இந்த நபர் மிரட்டியபடி செய்திருந்தால் அந்த சாட்சி நம்பப்பட்டிருந்தால் ஒரு அப்பாவி முகம்கொடுத்திருக்கக்கூடிய விளைவை நினைத்தால் எவரும் நடுங்குவார்கள். சிலவேளை ஒரு அப்பாவி மரண தனடைக்கும் உள்ளாகியிருக்கக்கூடும். இது போன்றே இன்னும் சில சாட்சியாளர்கள் சில அப்பாவிகளை மாட்டிவிட முற்பட்டுள்ள போதும் அது நிறைவேறவில்லை. இது போன்றவை நிகழ்ந்திருந்தால் உலகில் அப்பாவித்தனத்துக்கு இடமில்லாது போய்விடும்....”

நீதிபதி அந்த பொய் சாட்சியாளருக்கு நான்கு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டையை நிறைவேற்றினார். குற்றவாளி மேன்முறையீடு செய்தபோதும் உயர்நீதிமன்றம் அதனை நிராகரித்தது.

வழக்குகள் தள்ளுபடி
அரச கல்வித் திணைக்களத்தில் பாடத்திட்ட ஆய்வாளரான ரணசிங்கவின் மனைவியும், சொபியா சில்வா எனும் இன்னொரு பெண்ணும் கண்டி நகரைச் சேர்ந்த ஆராச்சியான மொகிதீன் மீரா லெப்பையால் 1000 ரூபா கோரி மிரட்டப்பட்டிருக்கிறார். ரணசிங்கவின் பெயர் கலவரக்காரராக பெயர் குறிப்பிடப்பட்டிக்கிறது என்றும் இந்தப் பணத்தைத் தந்தால் அதனை மூடிவிட முடியும் என்றும் கூறியுள்ளார். ரணசிங்கவால் மேலும் 100 ரூபாவும் வழங்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த இருவரும் ட்ரினிட்டி கல்லூரியின் அதிபர் வணக்கத்துக்குரிய பிதா பிரேசர் அவர்களை அணுகியிருக்கிறார்கள். பிரேசர் தனது கல்லூரியில் கற்பிக்கும் ஐரோப்பியரான ஹோல்டர் என்பவரை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தினார். மொகிதீன் மீரா லெப்பை பணம் வாங்குவதை கையும் களவுமாக பிடித்தார்கள். மிரட்டிப் பணம் பறிக்க முற்பட்டமைக்காக வழக்கு தொடரப்பட்டது. நவம்பர் 9 இந்த வழக்கு ஆரம்பமானது. ஆனால் வழக்கு நாள் கிட்டிய வேலையில் ஆளுநர் வெளியேறும்போது வழங்கிய மன்னிப்பான “அதுவரை கால கலவரம் குறித்த வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யும் வகையில்” கட்டளை பிறப்பித்தார். அதன் பிரகாரம் இது போன்ற வழக்குகளில் சிக்கிய பலர் விடுதலையானார்கள். ஆனால் பொய் சாட்சிகளின் மூலம் ஏற்கெனவே தண்டனை பெற்றவர்கள் தண்டனையை தொடர்ந்தும் அனுபவிக்க நேரிட்டது.

12 சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையில் வெளியான செய்தியின்படி மொகிதீன் மீரா லெப்பை வழக்கிலிருந்து தப்பியபோதும் அவர் அரச சேவையிலிருந்து நீக்கப்பட்டார். 

தொடரும்..

நன்றி - தினக்குரல்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates