கலவரக்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபுறம், ஆங்கிலேயப் படைகளால் விசாரணைகளே இல்லாமல் உடனடி தண்டனைக்கு (சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவங்கள்) உள்ளாக்கப்பட்ட சம்பவங்கள் இன்னொருபுறம் இருக்க; விசாரணையே உரிய முறையில் செய்யப்படாமல் நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட பாரபட்சமான தீர்ப்புகள் மேலும் பெரும் கொடுமைகளை நிகழ்த்தியிருந்தது. இந்த நிலையில் தான் அதே பொய்சாட்சிகளின் விளைவாக சிறைத்தண்டனை மட்டுமன்றி குற்றப்பணம் செலுத்தும்படியும், இழப்பீடுகளை வழங்கும்படியும் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
சாதாரண நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் பலவற்றை இராணுவ நீதிமன்றம் மீண்டும் தன்கையில் எடுத்து கடும் தீர்ப்புகளை வழங்கியது. எனவே சாதாரண நீதிமன்றங்களில் தீர விசாரிப்பதற்கு இருந்த வாய்ப்புகள் இராணுவ நீதிமன்றங்களில் இல்லாது செய்யப்பட்டன. பொய் சாட்சி கூறுவோருக்கு இது வாய்ப்பாக அமைந்தன. மேலதிக விசாரணயின்றி துரிதமாக வழங்கப்படும் தீர்ப்புகளால் பொய் சாட்சி கூறுவோர் லாபமடைந்தனர்.
ஆர்மண்ட் டி சூசா, பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோர் தமது நூல்களில் இப்படி பல வழக்குகள் பற்றிய விபரங்களை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அவற்றில் சில சம்பவங்ககளை நாம் இங்கு கவனிக்கலாம்.
ஆர்மண்ட் டீ சூசா நேரடியாகவே இப்படி சாடுகிறார். முஸ்லிம் ஒருவர் இழப்பீடு வேண்டுமெனில் அவர் செய்யவேண்டியதெல்லாம் தன்னிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டதாக அறிவிப்பதே. அப்படி கொள்ளையடித்ததாக ஒருவர் மீது குற்றம் சுமத்துவதே. இத்தகைய பொய் சாட்சிகளால் உண்மையான குற்றவாளிகள் தப்பி அப்பாவிகள் குற்றவாளியாக்கப்பட்டார்கள். தண்டனைக்கு உள்ளானார்கள்.
நீர்கொழும்பைச் சேர்ந்த எவுஜீன் சில்வா முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான அலுமாரிகள் இரண்டை கொள்ளையடித்தார் என்கிற குற்றச்சாட்டில் 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அவருடன் இன்னும் சிலரும் தண்டனை பெற்றார்கள். அதில் ஒருவர் மேன்முறையீடு செய்தார். குறிப்பிட்ட அந்த முஸ்லிம் நபர் அந்த அலுமாரிகளை ஏற்கெனவே விற்றுவிட்டார் என்கிற உண்மை வெளியானது. அதனை கொள்வனவு செய்தவர் செலியஸ் சில்வா என்பவர். குற்றம்சாட்டப்பட்டவர் தனது தன்னை நிரபராதி என்று நிரூபிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்காமையால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் விடுவித்தது.
கலவரத்தில் ஈடுபட்டதகாகவும், சிங்கள கடைக்காரர் ஒருவரை மிரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்ட ரத்தினபுறியச் சேர்ந்த ஒரு முக்கியஸ்தர் 6 மாத சிறைத்தண்டனைக்கு உள்ளானார். முறைப்பாடு செய்தவரே அங்கு எந்தவித கலவரமும் நடக்கவில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் தீர்ப்பு அப்படி வழங்கப்பட்டிருந்தது. இந்த நபரும் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
பாணந்துறையில் வீடுகளை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு ஒரு ஆண்டு கால தண்டனை பெற்ற ஐந்து பேர் குறித்த உயர்நீதிமன்ற மீள் விசாரணையில் குறித்த சாட்சிகள் நம்பகமற்றவை என்றும் எற்றுக்கொள்ளமுடியாதவை என்றும் கூறி அவர்களை விடுவித்தது.
மேன்முறையீடு செய்யமுடியாத அப்பாவி ஏழைகள் சிலரின் வழக்குகளும் கூட இவ்வாறு மீள் விசாரிக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். 90 வயதுடைய இயலாத நிலையில் நோய்வாய்ப்பட்ட ஒருவர் மீதும் கலவரகாரர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் தண்டனைக்கு உள்ளாகப்பாட்டிருந்தார். அபாயகரமான ஆயுதங்களைப் பயன்படுத்தியமை, முஸ்லிம் தனவந்தர் ஒருவரின் பணகலாவை உடைத்து 68,000 ரூபா பணத்தை கொள்ளையடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்தார். இவருடன் சேர்ந்த இன்னொருவருக்கு இரண்டு வருடகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்த வழக்கின் மீதான மேன்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட சாட்சி எற்றுக்கொள்ளமுடியாதவை என்றும் விருப்புவெறுப்பின் பேரில் தண்டனைக்கு உள்ளாக்கப்ப்டிருப்பத்தையும் சுட்டிக்காட்டி அவர்களை விடுவித்தது.
ஜே.ஏ.தனபால என்பவரால் எழுதப்பட்டு 28.10.1915 அன்று வெளியான கட்டுரையொன்றில் இந்த நிலைமை குறித்து இப்படி விபரிக்கிறது.
“கலவரம் புரிதல், முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு சேதம் விளைவித்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக குறுபோபில பிரதேசத்தைச் சேர்ந்த 17 பேருக்கு எதிரான மாத்தளை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே இறந்துபோனார். இருவர் விடுதலையானார்கள். ஏனைய அனைவருக்கும் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து 12 பேர் தொடுத்த மேன்முறையீட்டு வழக்கின் போது விருப்பு வெறுப்புகளின் காரணமாக அளிக்கப்பட்ட சாட்சிகள் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கப் போதுமானவையல்ல என்று தீர்ப்பின் போது அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூவர் பரம ஏழைகள் அவர்கள் தம்மீதான வழக்குகள் குறித்து சட்ட உதவியை பெற முடியாத நிலையில் தண்டனைக்கு உள்ளாகியியுள்ளனர்.இந்த 12 பேரும் விடுதலையானார்கள். தத்தமது குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கு சட்ட உதவிகளை பெற முடியாத நிலையில் பலர் தண்டக்குட்பட்டிருந்தார்கள் என்பது இது போன்ற சம்பவங்கள் தெளிவுறுத்துகின்றன.
சிங்கள தோட்ட உரிமையாளரான டீ.ஜே.அமரதுங்க என்பவருக்கு நிகழ்ந்த இன்னொரு சம்பவமும் இந்த அநீதிக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. ஜூன் 1 அன்று மீரிகமவில் அமரதுங்கவின் வீட்டுக்கு முன்னால் கலவரம் நிகழ்ந்து கொண்டிருந்தது. முஸ்லிம்களுக்கு சொந்தமான இரண்டு கடைகளை அவர் பாதுகாத்தது மட்டுமன்றி 13 முஸ்லிம் நபர்களுக்கு அவர் அடைக்கலம் வழங்கினார். ஜூன் 2 அன்று கலவரம் நடக்கும் இன்னொரு இடத்திற்குச் சென்று அதனை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த அதிகாரிகளுக்கு உதவினார். அவர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களும் இப்படி அதிகாரிகளுக்கு உதவினார். ஆனால் ஜூன் 1 அன்று இராணுவம் அவரை கைது செய்து சிறையில் அடைத்ததுடன் அவரது வெட்டில் உள்ள ஆவணங்களை பரிசீலித்தனர்.
அடுத்த நாள் அவர் ஜூன் 2 அன்று அவரது வீட்டிலிருந்து சற்று தொலைவிலுள்ள பெரு முஸ்லிம் பள்ளிவாசலையும், கடைகளையும் உடைத்த 3000 பேரைக் கொண்ட ஒரு குழுவுக்கு அமரதுங்க தலைமை தாங்கியதற்காகவே அவர் கைதாகியுள்ளதாக எச்.எச்.எம்.முவர் எனும் விசேட ஆணையாளர் மூலம் அறியக்கிடைத்தது. அவரது நண்பர்களையோ, கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்ட வழக்கறிஞர்களையோ அவரைப் பார்வையிட அனுமதிக்கவில்லை. அமரதுங்க ஒரு கொடியையும், இரும்புக் கம்பியையும் கையில் வைத்துக்கொண்டு முஸ்லிம்களின் வீடுகளை உடைக்கும்படி தூண்டினார் என்று காஹோவிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சாட்சியளித்துள்ளார். மேலும் 8 முஸ்லிம் நபர்கள் அந்த சாட்சியை உறுதிசெய்துள்ளனர்.
இன்னும் இரு தினங்களில் அவரை இராணுவ நீதிமன்றத்தில் ஒப்படைக்கவிருப்ப்தால் ஏதேனும் தெரிவிக்க இருந்தால் அதனை தெரிவிக்கலாம் என்று விசேட ஆணையாளரால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு நிகரான வேறு சம்பவங்களில் 9 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் நிறைவேற்றப்பட்டிருந்தது. அமரதுங்க குற்றம் சாட்டப்பட்ட அந்த நாள் தான் எங்கு எப்படி இருந்தேன் என்பதை நிரூபிப்பதற்காக அரசாங்க அதிபர், மாவட்ட நீதவாநான் ஒரு முதலியார், கொப்பரா தொழிற்சாலையொன்றின் அதிகாரியான டேலர் எனும் ஐரோப்பியர் ஆகியோரின் பெயர்களை சாட்சிகளாக அறிவித்திருக்கிறார். ஜூன் 2 அன்று தான் அந்த கலவரத்தில் ஈடுபட்டதாக இந்த சாட்சியாளர்கள் ஆர்களின் குர் ஆனின் மீது சத்தியம் செய்ய முடியுமா என்று அவர் கேட்டார். அவர்களில் சிலர் சற்று சலசலப்புக்கு ஆளாகி, பின்னர் அவர்கள் அப்படி சத்தியம் செய்ய முடியும் என்று கூறினார்.
மாவட்ட முதலியார், டேலர் ஆகியோர் அன்றைய தினம் அமரதுங்க எங்கு எப்படி இருந்தார் என்பதை குர் ஆன் மீது சத்தியம் செய்ய தயாராக இருந்தவர்கள் மறுதலிக்க முடியாதபடி விரிவாக விளக்கினர். அமரதுங்க இறுதியில் விடுதலையானார். பொய் சாட்சிக்கு தயாராக இருந்தவர்கள் எவர் மீதும் எந்த வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஆனால் திரும்பவும் பிரச்சினை கிளம்பியது. ஜூன் 22 அன்று மீண்டும் அமரதுங்க இரண்டாவது தடவை கைதாகி இராணுவ ஆணைக்குழுவின் கீழ் நீதிபதியாக கடமையாற்றிய இரயில் இஞ்சினியர் ஒருவர் முன் நிறுத்தப்பட்டார். இம்முறை ஜூன் முஸ்லிம்களின் சொத்துக்களை பாதுகாத்த அமரதுங்க அதே கடைகளை அவர் 500 பேரைக் கொண்டு தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டார். அன்றைய தினம் தன்னால் அடைக்கலம் கொடுக்கப்பட்ட முஸ்லிம் ஒருவரும் அவருக்கு எதிராக சாட்சி கூறிய ஆறு பேரில் இருந்தார் என்பது தான் வேடிக்கை. மீண்டும் டேலர் மற்றும் இன்னொரு இராணுவ அதிகாரியும் அமரதுங்க எவ்வாறு அன்றைய தினம் பலருக்கு பாதுகாப்பளிக்கும் பணியில் ஈடுபட்டார் என்பதை விளக்கினார்கள். மீண்டும் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் இம்முறை பொய் சாட்சி கூறிய ஆறு முஸ்லிம் நபர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் பல வழக்குகளில் இருந்து அப்பாவி சிங்களவர்கள் மீள விசாரணை செய்து விடுவிக்கப்பட்ட தொடர் நிகழ்வின் போது இந்த வழக்கும் அப்படியே கைவிடப்பட்டது.
அமரதுங்க அனுப்பிய சத்தியக் கடதாசியில் இப்படி குறிப்பிட்டார்.
“திருவாளர் டேலர் அன்றைய தினம் நான் எங்கிருந்தேன் என்பதை நிரூபிப்பதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக இல்லாமல் போயிருந்தால் இது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் 17, 18 திகதிகளில் இராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தவர்களுடன் நானும் நிச்சயமாக கொல்லப்பட்டிருப்பேன்.
இந்த பொய் சாட்சி வழங்கியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்குடன் வழக்கு விபரங்களின் பிரதி ஒன்றை கோரியிருந்தேன். ஆனால் விசேட ஆணையாளரோ; அந்த சாட்சியாளர்களின் சாட்சிகளின் பேரில் வெறும் சிலர் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால் வழக்கு விபர பிரதிகளை வழங்க முடியாது என்று மறுத்தார். எனது வழக்கறிஞர்களால் இந்த கோரிக்கையை வேறு அதிகாரிகளிடமும் முன்வைக்கப்பட்டபோதும் அதுவும் நிராகரிக்கப்பட்டது.”
ஆங்கிலேய ஆட்சி தான் செய்த தவறுகளை சரி செய்வதற்குப் பதிலாக மூடிமறைத்த வெட்கம்கெட்ட செயல் அதற்கு முன்னர் எப்போதும் நிகழ்ந்திருக்க முடியாது என்றார் ஆர்மண்ட் டீ சூசா.
தொடரும்..
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...