'ஏழு பேர்ச்சஸ் காணி தனி வீட்டுத்திட்டம்' நல்லாட்சியின் கீழ் வெகு முனைப்புடன் செயற்படுத்தப்பட்டு வருகிறது. மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் நாள் ஒரு அடிக்கல்லும் பொழுதொரு தனி வீட்டுத் திறப்பும் என பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார். பெருந்தோட்டங்கள் என்றில்லாமல் மாவட்ட நகரங்களுக்கும் அவரது பார்வை நீண்டு வருவது பாராட்டுக்குரியது. அண்மைய பணியாக ஹட்டன் நகர அபிவிருத்திக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நூற்றாண்டு கால பழைமை வாய்ந்த தகர வேலி அகற்றப்பட்டு வயர் மெஸ் வேலி இப்போது அழகுடன் மிளிர்கிறது. சொல்வதைச் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்ற பாணியில் அமைச்சர் திகாம்பரம் செயலாற்றுகிறார்.
அவரது அடிப்படை எண்ணக்கருவான லயன் முறை ஒழிக்கப்படுகிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. ஹட்டனில் தகர வேலி அகற்றப்பட்டு வயர்மெஸ் வேலி அமைக்கப்பட்டதைப் போல பெருந்தோட்ட லயன்கள் உடைத்து நொறுக்கப்பட்டு தனி வீடுகள் அமைக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு அமைச்சர் செயற்பட வேண்டும். ஓரிரு இடங்களில் மட்டும் இவ்வாறான லயன் அகற்றும் பணி இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. தனி வீட்டுத் திட்டம் சந்திரசேகரன் காலத்தில் முன்னெடுக்கப்பட்டது. முற்றுமுழுதாக இலவசமாக இல்லாமல் மக்களின் பங்களிப்புடன் இது செயற்படுத்தப்பட்டது. பொருட்களும் நிதியும் வழங்கப்பட்டு சிரமதான அடிப்படையில் மக்களே வீடுகளை அமைத்துக் கொள்ளும் வகையில் அப்போது வீடுகள் உருவாகின. ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களிலும் வீட்டுத் திட்டங்கள் உருவாகின. அன்றைய காலகட்டத்தில் நிதி மட்டுப்படுத்தப்பட்டதாகவே வழங்கப்பட்டது. இன்று அமைச்சர் திகாம்பரம் நல்லாட்சி அரசின் மூலமாக பாரியளவு நிதியினை பெறக்கூடியவராக இருக்கிறார். எவ்வளவு விரைவாக லயன்கள் ஒழிக்கப்படுகிறதோ எமது மக்களுக்கும் விரைவில் விடிவு கிடைக்கும்.
மலையகத்தில் வீட்டுத் திட்டங்கள் அவ்வப்போது நிறைவேற்றப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. லயன்கள் தான் மாறாமல் இருக்கின்றன. நீண்ட லயன்கள் நடுநடுவில் பிரிக்கப்பட்டு தனி வீடுகளாக்கப்பட்டன. இடையில் உடைக்கப்பட்ட காம்பராக்களில் குடியிருந்தவர்களுக்கு தனிவீடுகள் அல்லது இரட்டைக் குடியிருப்புகள் கொடுக்கப்பட்டன. சிறிதுகால இடைவெளியில் நடுவில் பிரிக்கப்பட்ட காம்பராக்களும் மக்களால் விஸ்தரிக்கப்பட்டு மீண்டும் லயன்களாகின. இதற்கு தனிவீடுகள் அமைக்கப்படாமையே காரணமாகும்.
மகாவலித் திட்டம் அமுலாக்கப் பட்டபோது வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு இடங்களில் குடியேற்றப்பட்டனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கு மகாவலி வீடுகள் என்றே பெயரிருந்தன. பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது தான் மாடிவீட்டுத் திட்டங்கள். பல்வேறு விமர்சனங்களோடு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாடி லயன் திட்டம் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் முன்னர் இருந்த லயன் முறை ஒழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழு பேர்ச்சஸ் காணி, தனிவீடு என்ற குறைபாடு இருந்தபோதும் வாழ்க்கைத்தரம் ஓரளவு மாற்றத்திற்குள்ளானது என்பதை மறுக்க முடியாது. இவ்வாறான மாடி வீடுகள் சில இடங்களில் சுதந்திரத்திற்கு முன்னரும் கட்டப்பட்டு இருந்தன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
எனவே, எத்தகைய புதிய வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை லயன்களை ஒழித்துக்கட்டுவதாக இருக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். தீயினால் லயன்கள் அழிகின்றன. மண்சரிவால் லயன் புதைந்துப் போகின்றன. நீர் மின் திட்டங்களால் லயன்கள் இல்லாமல் செய்யப்படுகின்றன. வேறு எந்த திட்டங்களாலும் லயன்களை ஒழிக்க முடியவில்லை. ஏழு பேர்ச்சஸ் காணியுடன் தனிவீட்டுத் திட்டங்களும் இவ்வாறு லயன்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
மேல் கொத்மலை மின் திட்டத்தால் தலவாக்கலை நகரமும் சூழவுள்ள இடங்களும் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என்பது நிதர்சனமாகும். எதிர்காலத்தில் நுவரெலியாவிற்கு அடுத்த உல்லாசப் பயணிகளை கவரும் ஓர் இடமாக தலவாக்கலை விளங்கப்போகிறது. இங்கு இருந்த லயன்கள் அழிக்கப்பட்டு சுமார் 500 வீடுகளில் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் எமது சமூகத்தவர் என்பது கவனத்திற்கொள்ளத்தக்கது. அவர்கள் அனைவரின் வாழ்க்கைத் தரமும் குறிப்பிடத்தக்க அளவு மாற்றமடைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களைப் பார்த்து இன்னமும் லயன்களில் வாழும் எம்மக்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகின்றனர். லோகி, சென்கிளயர், டெவன், ஹொலிரூட் போன்ற நீர்த்தேக்கத்தை சூழவுள்ள எம்மக்களின் லயன்கள் திருஷ்டி கழிப்பவைகளாக காட்சி தருகின்றன. சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கவாவது இந்த லயன்கள் உடைத்தெறியப்பட வேண்டும்.
பெருந்தோட்ட மக்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகம் என்ற பொறாமை இனவாதிகளுக்கு இன்றும் இருக்கிறது. கடந்தகால வரலாற்றைப் பார்த்தால் இது விளங்கும். அமரர் தொண்டமான் காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பெருந்தோட்ட அமைச்சு பின்னர் படிப்படியாக பிடுங்கப்பட்டு வலுவிலக்கச் செய்யப்பட்டது. எதிர்காலத்திலும் இது நடக்காது என எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே அரசு மந்தமாக செயற்பட்டாலும் நாம் அசட்டையாக இருந்து விடக்கூடாது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். அமைச்சரின் துடிப்புக் கேற்ப அவரது தொண்டரடிப்படையும் ஈடு கொடுத்து செயற்படுவார்களா-?
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...