Headlines News :
முகப்பு » » பொருத்துவீடு: மலையகத்துக்குப் பொருந்துமா?

பொருத்துவீடு: மலையகத்துக்குப் பொருந்துமா?


போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு கிழக்கில் அமைக்கப்படவிருந்த 65,000 இரும்பு பொருத்து வீடுகள் எதிர்ப்பு காரணமாக செயலிழந்துள்ள நிலையில் அது மலையகத்திற்குப் பொருத்தமானதா என்பது பற்றி பரிசீலிக்கும் படி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர், அமைச்சர் மனோ கணேசன் பிரதமரிடம் சிபாரிசு செய்திருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

“அடுத்த ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் தனி வீடுகள் மலைநாட்டில் கட்டப்படுவது தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இலக்குகளில் ஒன்றாகும். இதன் மூலமாகவே தோட்டத்துறை வாழ் தமிழ் மக்களின் லயன் வாழ்க்கை முறைமையை முழுமையாக ஒழித்து, வீடில்லா பிரச்சினையை தனி வீடுகள் மூலம் தீர்க்க முடியும். இந்நிலையில், தனி வீடுகளை அமைப்பதில் நாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை வீடுகள் கட்டப்படுவதற்கான மூலப்பொருட்களை மலைநாட்டில் திரட்டுவதாகும். இதனால், பாரிய தாமதம் ஏற்படுகிறது. ஆகவே, மாற்று மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உதிரிப் பாகங்களை  தொழிற்சாலைகளில் செய்து, அவற்றைக் கொண்டு வந்து பொருத்தி வீடுகளை சடுதியாகக் கட்டும் திட்டத்தை நாம் ஆராய வேண்டும். உலகின் பல குளிர்வலய பகுதிகளில் சடுதியாக வீடுகள் கட்டப்பட வெற்றிகரமாக வழி ஏற்படுத்தியுள்ள பொருத்து வீட்டுத் திட்டம், மலைநாட்டில் நடை முறையாக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை நாம் ஆலோசித்து பார்க்கவேண்டும். இத்திட்டம் மலையக சீதோஷ்ண நிலைமைகளுக்கு பொருந்துமா என்பது விஞ்ஞானபூர்வமாக பரிசீலிக்கப்பட்டு நடைமுறையாக்கப்படுமானால் அடுத்த ஐந்து வருடங்களில் ஐம்பதாயிரம் தனிவீடுகள் என்ற எங்கள் திட்டம் மலையகத்தில் வெற்றி பெற பெரும் வாய்ப்பு உள்ளது.”
அமைச்சர் மனோகணேசன் மேற்கண்டவாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பொருத்து (இரும்பு) வீட்டுத்திட்டம் அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து, ஆலோசித்து, ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்போம் என்ற தீர்மானத்துக்கு அமைச்சர் மனோ கணேசன் வர முன்னர் உண்மையிலேயே இந்த வீட்டுத்திட்டம் 200 வருடங்களுக்கும் மேலாக லயன் அறைகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு பொருந்துமா? என்பது குறித்து சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகிறது.

வடக்கு – கிழக்கு பகுதிகளில் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்புகள் வலுத்தமை வெறுமனே சீதோஷ்ண நிலைமையை மட்டும் காரணமாக முன்வைத்து அல்ல என்பது அமைச்சர் மனோ கணேசனும் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

சீதோஷ்ண நிலைமையைத் தவிர ஏனைய அனைத்து பிரச்சினைகளும் மலையகத்துக்கும் பொருந்தும் என்பதை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே நான் நினைக்கிறேன்.

இந்தப் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பான பின்னணியை கொஞ்சம் பார்த்துவிட்டு வருவோம்.

‘ஆர்சிலர் மிட்டல்’

வடக்கு கிழக்கில் நிறுவப்படவிருந்த பொருத்து வீட்டுத்திட்டத்தை ஆர்சிலர் மிட்டல் எனும் பல்தேசிய நிறுவனம்தான் அமுல்படுத்தப் போவதாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் நாடாளுமன்றில் குறிப்பிட்டிருந்தார். அந்த நிறுவனம் தெரிவு செய்யப்பட்டதில் பல குளறுபடிகள் இருப்பதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகை கட்டுரைகள் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் சர்வதேச பங்குசந்தையில் ஆர்சிலர் மிட்டலின் பங்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அதனால், தனது இலாபப்பங்கை இரத்துச்செய்து, நிறுவன விஸ்தீகரிப்புக்கான திட்டங்களை நிறுத்தி, ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கின்ற தொழிற்சாலைகளை மூடி நிறுவனத்தின் மொத்த கடன் தொகையாகிய 15.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீளக்கட்டுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு இருக்கின்றது.

இந்த நிலையில், தனது இருப்பில் இருக்கின்ற – விற்கமுடியாமல் இருக்கும் இரும்புகளை இலங்கையில் குவிப்பதனால் இலாபத்தை ஈட்ட முடியும் என்றும், இதனாலேயே இலங்கை அரசுக்கு சில சலுகைகளை வழங்குகிறது என்றும், இதே திட்டத்தை கல்வீடுகளாக கட்டித்தருமாறு கேட்டிருந்தால் இச்சலுகைகள் கிடைத்திருக்காது என்றும் பொறியியலாளர் கலாநிதி. முத்துகிருஷ்ண சர்வானந்தன் குறிப்பிடுகின்றார்.

ஆகவே, விற்கமுடியாமல் இருக்கின்ற இரும்புகளை கொட்டும் இடமாக இலங்கையின் வடக்கு கிழக்கை மீள்குடியேற்ற அமைச்சு முதலில் தெரிவுசெய்திருந்தது. அவர்கள் விழித்தெழ தற்போது மலையகத்தை தெரிவுசெய்திருக்கிறது தமிழ் முற்போக்குக் கூட்டணி.

ஏனைய பிரச்சினைகள்

இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் பொருத்தப்படும் வீடுகள் இரும்பிலான கட்டமைப்புக்களினையும், ஏற்கனவே தொகுதியாக்கப்பட்ட அமைப்புக்களினையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு வீட்டுக்குமான செலவு ரூபாய் 2.18 மில்லியன் ஆகும் (ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மலையகத்தில் கட்டப்படும் வீட்டின் பெறுமதி ரூபா 1.2 மில்லியன் என்றும், இராணுவத்தினரைக்  கொண்டு மீரியாபெத்தை மக்களுக்காக நிறுவப்படும் வீட்டின் பெறுமதி ரூபா 1.3 மில்லியன்  என்றும் மீள்குடியேற்ற அமைச்சின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது).

ஒரு கொங்கிரீட் வீட்டிற்கு அதிகபட்சம் ரூபாய் 1 மில்லியன் மாத்திரமே செலவாகும் என துறைசார் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, பொருத்து வீடு ஒன்றிற்கு ரூபா 2.18 மில்லியன் என்ற அடிப்படையில் மொத்தம் ரூபா 141 பில்லியன்கள்  இந்த வீட்டுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும், தொகுதியாக்கப்பட்ட இரும்புகளைப் பொருத்தி வீடுகள் அமைப்பதற்கு குறைந்த செலவே செல்கிறது. முன்தயாரிக்கப்பட்ட இரும்புத் தகடுகளை வீடு கட்டப்படும் இடத்தில் பொருத்துவதனால் வீடுகட்டுவதற்கான கூலித்தேவை இல்லாதுபோகிறது. எனவே, கல்வீடொன்று கட்டுவதை விடவும் இரண்டு மடங்கு பொருத்து வீட்டுக்கு செலவாகிறது என்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

உலோகத்தினால் வீட்டின் முழுக்கட்டமைப்பும் உள்ளதால் வீட்டை புதுப்பிக்கவோ, திருத்தவோ முடியாத நிலை காணப்படுகிறது. பொருத்திய நிறுவனத்தை நாடி செல்லவேண்டிய நிலை ஏற்படும்.

ஒவ்வொரு வீடும் 520 சதுர அடி பரப்பைக் கொண்டிருக்கும் எனவும், ஒவ்வொரு வீட்டிற்கான நிதியில் தொலைக்காட்சி, சில தளபாடங்கள் மற்றும் சூரியஒளிச் சேகரிப்பான் (சோலர்) போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும், வடக்கே அமைக்கப்பட்டிருந்த வீடொன்றைச் சென்று பார்வையிட்டவர்கள், பின்வருமாறு கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்:

அத்திவாரம் பலமாகப்போடப்படவில்லை. கொங்கிரீட் ஒரு படை அளவே அத்திவாரத்திற்கு போடப்பட்டுள்ளது. யன்னல்களுக்கு கம்பிகள் போடப்படவில்லை. வீட்டு யன்னல்களை பொருத்தும் ஆணிகள் வீட்டின் வெளிப்புறமாகவே காணப்படுகின்றன. வீட்டின் சுவர்கள் வீட்டை பொருத்தி  ஒரு மாதத்திற்குள்ளேயே பிளவுபடத் தொடங்கிவிட்டதாகவும் அவதானிப்புக்கள் உள்ளது. வீட்டினுள் புகை போக்கிகளோ அடுப்புகளோ அமைக்கப்படவில்லை. இதற்குப் பதிலாக வாயு அடுப்பு (கேஸ்) வழங்கப்பட்டுள்ளது. எனவே, இவ் வீடுகளில் வாழும் குடும்பங்கள் எரிபொருளுக்கு வாயு சிலிண்டர்களையே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

60 ஆண்டு ஆயுள்காலம்

ஆகவே, இன்னும் 5 ஆண்டுகளில் 50,000 வீடுகளை எப்படியாவது, என்ன செய்தாவது, இரும்பு வீட்டையாவது கட்டிமுடித்து அடுத்துவரும் தேர்தலில் மக்கள் முன் சென்று நிற்பது மட்டும்தானா முற்போக்குக் கூட்டணியின் இலக்கு? 200 ஆண்டுகளுக்கும் மேலாக லயன் அறைகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு தரமான வீடுகளை அமைத்துக்கொடுக்காமல் 60 ஆண்டுகள் ஆயுள்காலத்தைக் கொண்ட பொருத்து வீட்டுத் திட்டத்தை கொடுக்க முனைவது எந்தளவு நியாயமாகும்…?

பொருளாதார ரீதியில் வளமில்லாமல் இருக்கும் தோட்டத்  தொழிலாளர்கள் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் என்ன செய்வது…? அதற்கு இந்த லயன் அறை வாழ்க்கை சிறந்தது எனலாம்.

மூலப்பொருள் கிடைப்பதில் தாமதமா?

கல்வீடுகளை அமைக்க மலையகத்தில்  மூலப்பொருட்களை திரட்ட முடியாத காரணத்திற்காக பொருத்து வீட்டுத்திட்டத்தை பரிசீலிக்கச் சொல்வது மலையக மக்களை எப்படியும் ஏமாற்றலாம் என்ற தோற்றப்பாட்டையே காட்டுகிறது. ஒரு கல்வீடு கட்டுவதற்கான மூலப்பொருட்களாக கருங்கல், மணல், செங்கல் அல்லது சீமேந்துக் கல், சீமேந்து, கூரை வேய மரங்கள் தேவைப்படுகின்றன. இங்கு அமைச்சர் மூலப்பொருட்களாக கருங்கல், மணல், செங்கல் அல்லது சீமேந்துக் கல்லையே குறிப்பிடுகின்றார். வெறும் 50,000 வீடுகளைக் கட்டிமுடிக்க மூலப்பொருட்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறும் அமைச்சர் மனோகணேசன் இலங்கையின் ஏதாவது அபிவிருத்தி நடவடிக்கை ஒன்றில் இவ்வாறு தாமதம் ஏற்பட்டிருக்கின்றது என்று கூறுவாரா?

அத்தோடு, சீன அரசாங்கத்துடன் நல்லாட்சி அரசாங்கம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி நிதிநகரம் (துறைமுக நகரம்) 695 (2011) இலிருந்து 670 ஏக்கராக விஸ்தீரமடைந்திருக்கிறது. 670 ஏக்கர் கடல்பகுதியையும் நிரப்பி நிலமாக்க பெரும்பாலும் மலையகப் பகுதிகளில் உள்ள கருங்கல் மலைகளே குடைந்தெடுக்கப்படவுள்ளன. அங்குள்ள ஆறுகளிளே மணலும் அள்ளப்படவிருக்கிறது. இந்த அபிவிருத்தித் திட்டத்தில் மூலப்பொருளால் தாமதம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்பதை அமைச்சரும் அறிந்திருப்பார். ஆனால், மலையகத்தில் செறிந்து கிடக்கும் மூலப்பொருட்கள் மக்களது அபிவிருத்திக்காக மட்டும் தாமாக தாமதிக்கிறதா?

65,000 பொருத்து வீட்டுத் திட்டத்திற்காக செலவாகும் ரூபா 141 பில்லியனில் அதைவிட இரண்டு மடங்கு கல் வீடுகளை மலையகத்தில் அமைக்கலாம் என்ற விடயத்தை புரிந்துகொண்டு அதனை அமுல்படுத்த பிரதமரின் ஆலோசனையைக் கேட்டிருக்கலாம்.

அவ்வாறு செய்யாமல், பசித்தவனுக்கு கஞ்சியைக் காட்டிவிட்டு வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால்… இதையும் விட்டால் ஒன்றும் கிடைக்காது என்ற நிலையில் பொருத்து வீட்டையும் மக்கள் ஏற்கத்தான் செய்வார்கள்.

இவை யாவற்றையும் கவனத்தில் கொள்ளாமல் பிரதமரிடம் கிரீன் சிக்னல் கிடைக்கப்பெற்று பொருத்து வீட்டுத் திட்டம் மலையகத்தில் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் அது ஏமாற்றுவதற்கான திட்டம் என்பதை தோட்டத் தொழிலாளர்கள் அறிந்திருப்பது அவசியம்.

செல்வராஜா ராஜசேகர்

நன்றி - மாற்றம்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates