Headlines News :
முகப்பு » , , , , , » 83 கலவரத்தில் மலையகம்: - என்.சரவணன்

83 கலவரத்தில் மலையகம்: - என்.சரவணன்

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 36

83 வன்செயல்களின் போது வடக்கு கிழக்கு பகுதியை விட அதிகமான பாதிப்பு அதற்கு வெளியில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கே நிகழ்ந்தது. இலங்கையில் தமிழ் சிங்கள சிவில் வன்செயல்களுக்கு வரலாறு முழுக்க அதிக பாதிப்பு; வடக்கு கிழக்குக்கு வெளியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த தமிழ் மக்களின் மீது தான் நிகழ்ந்துள்ளன. ஆனால் அக்கலவரங்களுக்கான ஊற்று மலையக மக்கள் மத்தியில் இருந்து தொடங்கப்பட்டதில்லை.

குறிப்பாக மலையகத்திலும், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாழ்ந்த மக்களே அதிக இழப்புகளையும், இடப்பெயர்வுகளையும் சந்தித்து வந்திருக்கிறார்கள். இலங்கையின் தமிழர் அரசியல் வரலாறு என்பது இந்திய வம்சாவழி மக்களின் அரசியலாகவும், இலங்கைத் தமிழர்களின் அரசியலாகவும் வெவ்வேறு அரசியல் தேவைகளுடன் பயணித்து வந்தாலும் கூட “தமிழர் அரசியல்” என்கிற பொதுப் போக்குடன் இணைந்த ஒரு போக்கும் துல்லியமாக இயங்கி வந்த காலமொன்றும் இருந்தது. சுந்ததிரத்துக்கு முன்னைய மூன்று தசாப்தங்களும் சுதந்திரத்துக்குப் பிந்திய மூன்று தசாப்தங்களும் மலையக அரசியல் என்பது தொழிற்சங்க அரசியலாகவும், “நாடற்றோர்”, “வாக்குரிமையற்றோர்” சார்ந்த பிரச்சினைகளில் மையம் கொண்டிருந்ததாலும், தேசிய அளவிலான தமிழர் அரசியலில் மலையக அரசியலின் வகிபாகம் குறைந்த அளவிலேயே இருந்தது.

அதேவேளை வடக்கு கிழக்கு சார் தமிழர் அரசியல் என்பது மலையக மக்களின் பிரச்சினைகளையும் தமது நிகழ்ச்சி நிரலில் இணைத்துக் கொண்டு தான் இயங்கியதைக் காணலாம். 1948 பிரஜாவுரிமைப் பறிப்புக்கு துணைபோன தமிழ் காங்கிரசே பிளவுற்று தமிழரசுக் கட்சி தோன்ற காரணமாயிற்று. தமிழரசுக் கட்சியோ 77 வரையான காலப்பகுதி வரை தமது மாநாட்டுத் தீர்மானங்களில் கட்டாயமாக மலையக மக்களின் பிரச்சினையை முன்னிருத்தி வந்திருப்பதுடன் செயலளவிலும் மலையகத்துக்காக இயங்கி வந்திருக்கிறது. ஸ்ரீ லங்கா அரசின்  தமிழர்களின் மீதான அநீதிகளைப் பட்டியலிடும் போது அதன் நிகழ்ச்சிநிரலில் மலையக மக்களின் பிரச்சினை தலையாய பிரச்சினையாக ஆரம்பத்தில் இருந்தும் வந்திருக்கிறது.

காலாகாலமாக தமிழர்களுக்கு எதிரான இனவெறித்தனத்தைக் வெளிப்படுத்த லாவகமாக அகப்பட்டவர்கள் சிங்களவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் தான். குறிப்பாக மலையகத்தில் திருப்பித் தாக்க திராணியற்ற அப்பாவி மக்கள் மீது அதிக வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன. வரலாறு நெடுகிலும் சிறிதுசிறிதாக நூற்றுக்கணக்கான வன்செயல்கள் தோட்டப்புறங்களில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்தை நிறுவனமயப்படுத்திய முதன்மையாளரான அநகாரிக்க தர்மபாலாவின் எதிர்ப்புணர்ச்சி இந்திய வம்சாவழி மக்களுக்கு எதிராக நூற்றாண்டுக்கு முன்னரே தொடங்கப்பட்டுவிட்டன.

இந்திய வம்சாவழி மக்களை நாட்டை விட்டுத் துரத்துவதற்கான பணிகளில் சிங்கள அரசியல் தலைவர்கள் சகல தளங்களிலும் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் அவர்களால் அம்மக்களுக்கு எதிரான விஷக் கருத்துக்களை ஸ்தூலமாக விதைத்தாயிற்று. இலங்கையில் பிறந்த - இந்தியாவே அறியாத மலையக மக்களைக் கூட இந்தியாவுக்கு விரட்டிவிடவேண்டும் என்கிற கருத்து நிலையை சாதாரண சிங்கள மக்களை ஏற்கச் செய்து அச்சிங்கள மக்களே இந்திய வம்சாவழி மக்களுக்கு எதிராக களமிறங்கச் செய்யும் அளவுக்கு வெற்றி கண்டிருந்தார்கள் சிங்களத் தலைவர்கள்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனக்கலவரமே மலையத்தில் இருந்து தான் தொடங்கியது என்பதை நாமறிவோம். ஜீ.ஜீ.பொன்னம்பலம் 1939இல் நாவலப்பிட்டியில் மகாவம்சத்தை விமர்சித்து ஆற்றிய உரையை பிரதானப்படுத்தி துவேஷத்தைப் பரப்பிய இனவாதத் தரப்பு பெரும் கலவரத்தை உண்டுபண்ணியது. மலையக மக்கள் செறிவாக வாழும் பசறை, நாவலப்பிட்டி, மஸ்கெலியா, நுவரெலியா பகுதிகளில் தொடங்கிய தாக்குதல் யாழ்ப்பாணம் வரை பின்னர் விஸ்தரிக்கப்பட்டது.

அதன் பின்னர் 1956, 1958, 1977, 1981 என அனைத்துக் கலவரங்களிலும் மலையகத்திலிருந்து பாதிக்கப்பட்டு வடக்கை நோக்கி அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கிறார்கள், தமிழகத்துக்கு புலம்பெயர்ந்துமிருக்கிறார்கள். இந்த எந்த கலவரத்திலும் அவர்கள் திருப்பித் தாக்கியதில்லை. 

இந்தப் பின்னணியில் இருந்து தான் அதுவரையான தமிழர்கள் மீதான படுகொலைகளின் உச்சமாக அமைந்த 83 படுகொலைச் சம்பவங்களின் போதான மலையகத்தில் முன்னைய வன்செயல்களின் நீட்சியையும், நிலைமையையும் கணிக்க முடியும்.

83 யூலை 23 அன்று கலவரம் ஆரம்பமான அதே நாள் கொழும்பிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஆடிவிழா கொண்டாட ஆயத்தமாகிகொண்டிருந்தார்கள் தமிழ் மக்கள். இனவாதிகளை விட சண்டியர்களும், காடையர்களும், கொள்ளையர்களும் தான் இந்த வன்செயலை உச்ச அளவுக்கு கொண்டுபோய்க் கொண்டிருந்தார்கள்.


தொண்டமான் கலவரத்தின் பங்காளியா
மலையகத்தில் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருந்த போது ஜூலை 26 ஆம் திகதி, அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஜனாதிபதி ஜே.ஆரைக் காண ஜனாதிபதி மாளிகைக்கு விரைந்தார்.

உடனடியாக அவசரகாலநிலையைப் பிரகடனப் படுத்த வேண்டும் என்று ஜே.ஆரைச் சந்தித்த தொண்டமான் வேண்டினார். ஆனால், ஜே.ஆர் தயக்கம் காட்டினார். “அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டாலும், படைகள் என்னுடைய உத்தரவுக்குப் பணிவார்களா”? என்று ஜே.ஆர் தனது தயக்கத்தை வெளிப்படுத்தியதாக தொண்டமான் பற்றிய தன்னுடைய நூலில் ரீ.சபாரட்ணம் குறிப்பிடுகிறார். 3 மணித்தியால உரையாடலுக்குப் பின்னர் தான் ஜே.ஆரை வழிக்குகொணர முடிந்திருக்கிறது.

அதேவேளை 03.08.1983 அன்று தொண்டமான் வெளியிட்ட கடும் தொணியிலான ஒரு அறிக்கை பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது. அதில்
“இந்திய வம்சாவளி மக்கள், ஏறத்தாழ 100 வருடங்களுக்கு மேலாகத் தாங்கள் வேரூன்றிய இடங்களில் இருந்து பிடுங்கியெறியப்பட்டிருக்கிற இந்த சூழலில், அண்மையில் நடந்த இன அழிப்புச் சம்பவங்களை, எமக்கெதிரான சிங்கள மக்களின் எழுச்சி என்று சிலர் சொல்வதைப் போன்றே பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகியுள்ளோம். எங்களின் எண்ணத்தின்படி, இது வன்முறைத் தாக்குதல்கள், கலவரம், கொள்ளை மற்றும் எரியூட்டல் என்பவற்றில் திட்டமிட்டு ஈடுபட்ட குழுக்களின் செயற்பாடாகத்தான் தெரிகிறது. இந்த அழிவுச் சக்திகள், குண்டர்கள், கீழ்மையானவர்கள் வீதிகளிலே சுதந்திரமாகத் திரண்டு, இந்த அழிவையும் அவலத்தையும் இந்தளவுக்குச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது துரதிஷ்டவசமானது" என்று இருந்தது.
ரஜீவ விஜேசிங்ஹ, மலையகத்தில் நடந்த தாக்குதல்கள் பற்றித் தனது நூலொன்றில் “கொழும்பிலே தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்காது, பிரிவினைக்குச் சோரம் போகிறார்கள் என்று அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் சாக்குச் சொன்னார்கள்.

ஆனால், மலையகத்தின் பிரதிநிதியான சௌமியமூர்த்தி தொண்டமான், கடந்த ஐந்து வருடங்களாக, இந்த அரசாங்கத்துக்கு ஆதரவாக, அரசாங்கத்தோடுதான் இருந்து வருகிறார். இன்று அவருடைய மக்களின் நிலையும்தான் மோசமாகியிருக்கிறது. இது அரசாங்க ஆதரவாளர்களின் மேற்கூறிய தர்க்கத்தைத் தகர்க்கிறது” என்கிறார்.

உண்மை தான் அப்போது முழு மலையக மக்களினதும் ஏகபோக அரசியல் சக்தியாக வடிவமெடுத்திருந்த தொண்டமான் அம்மக்களை தனக்கூடாக ஐ.தே.க ஆதரவாளர்களாக ஆக்கியிருந்தார். 1977 பொதுத் தேர்தல், 1982 இல் ஜனாதிபதித் தேர்தல், ஆட்சி நீடிப்புக்கான சர்வஜன வாக்குரிமை என்பவற்றில் ஜே.ஆர் அமோக வெற்றியடைந்தது மலையகத்தில் தான். அவ்வெற்றியை எற்படுத்திக் கொடுத்தவர் தொண்டமான் தான். ஜே.ஆர். தான் தமது ஆபத்பாந்தவனாக காட்டியே ஜே.ஆருக்கு மலையக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தார் தொண்டமான். அதற்கு கைமாறாக சிறிமாவோ அரசாங்கத்தின் போது சுவீகரிக்கப்பட்ட தொண்டமானின் லெவண்டன் தோட்டத்து தேயிலைத் தொழிற்சாலை ஜே.ஆர்.அரசாங்கத்தினால்  தொண்டமானுக்கு திருப்பிக் கையளிக்கப்பட்டது. ஆனால் கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட அம்மக்களை அம்போவென கைவிட்டார் ஜே.ஆர்.

அதே அரசாங்கத்தைச் சேர்ந்த சக அமைச்சரும்; இந்தக் கலவரங்களில் கணிசமான பாத்திரத்தையும் வகித்தவருமான காமினி திசாநாயக்க 1983 இல் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது அட்டனில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் இ.தொ.க வை “நாயுண்ணி” என்றார். நாயுண்ணி என்பது நாயின் ரோமங்களுக்கு இடையில் ஒட்டிக்கொண்டு தோலினூடாக இரத்தைத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டு தன் தேவையை நிறைவு செய்துகொள்ளும்.

“மலையகத் தமிழர் படுகொலை” என்கிற நூலை எழுதிய B.A.அஜந்தா குறிப்பிடுகையில்
“83 ஜூலையின் போது மலையகத்தில் பாதிக்கப்படாத ஒரு  குடும்பந்தானும் கிடையாது. சுமார் 2000 பேர் கொல்லப்பட்டார்கள். சுமார் ஒன்றரை லட்சம் பேர் அகதிகளாயினர். நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் காமினி திசாநாயக்கவின் நேரடித் தூண்டுதலிலேயே நிகழ்த்தப்பட்டன. இதன் பின்னணியில் அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்களே இருந்தன என்பது பலருக்கும் தெரியும்.” என்கிறார்.
இத்தனைக்கும் மலையக மக்கள் தமிழீழத்தை வெளிப்படையாக ஆதரித்தவர்களாகவும் இருக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து தொண்டமான் தலைமையிலான இ.தொ.க "தனி நாட்டை மலையக மக்கள் ஆதரித்து நிற்பது அவர்களின் இருப்பை தகர்த்துவிடும்" என்கிற கருத்துடன் அதிலிருந்து வெளியேறிவிட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது. மலையக மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்கு எதுவும் இருக்கவில்லை. ஆனால் அவர்களை துன்புறுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கு எச்சரிக்கையையும், மிரட்டலையும் இந்த கலவரத்தின் மூலம் பேரினவாதம் நிகழ்த்தியது. தாக்கியவர்களை திருப்பித் தாக்கிய சில இடங்களில் இராணுவம் குறுக்கிட்டு; இராணுவமே அந்த வெறியாட்டத்தை நிகழ்த்திய சம்பவங்களும் பல இடங்களிலும் பதிவாகின. அத்தகைய சம்பவங்கள்  மலையகத்தில் மாத்திரமல்ல கொழும்பில் கொச்சிக்கடை, புறக்கோட்டை பகுதிகளிலும் நிகழ்ந்தன.

83 கலவரத்தைத் தொடர்ந்து (78-1985 காலப்பகுதிக்குள் ஒப்பந்தத்தின்படி குடிபெயர்ந்தவர்களில்) அதிகமானோர் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது 84 ஆம் ஆண்டு தான். 84இல் 20,133 பேர் தமிழகம் அடைந்தார்கள். 1985 இல் அத்தொகை 154 பேர் மட்டும் தான். (Immigration and Emigration Department, Economic and Social Statistics, Vol. X, Dec 1987, Central Bank of Sri Lanka, p.13). வீ.சூரியநாராயணன் கூறுவது போல “இலங்கையில் வேண்டப்படாதவர்களாகவும், இந்தியாவில் வரவேற்கப்படாதவர்களாகவும் இருந்த அபாக்கியசாலிகள்” இறுதியில் தமது உயிரை மட்டும் எடுத்துக் கொண்டு தமிழகம் திரும்பினார்கள். எஞ்சியவர்கள் உயிரச்சத்துடன் வாழப் பழகிக்கொண்டார்கள்.

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட காலத்தில் தொண்டமான்.

நுவரெலியாவில்
மலையகத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவங்கள் பற்றி பலர் இதற்கு முன் பதிவு செய்திருக்கிறார்கள். அவற்றில் கேசெல் என்பவர் எழுதிய நூலில் (Sri Lanka - Paradise in Ruins - Anti-Tamil Riots in July - August 1983, Kassel, West Germany,) கொடுக்கப்பட்ட விபரங்கள், ஆதாரங்களை பலரும் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதில் நுவரெலியாவில் நிகழ்ந்தவை பற்றி ஓரிடத்தில் இப்படி குறிப்பிடப்படுகிறது.
“அந்த நகரத்துக்கு இராணுவம் பாதுகாப்பளித்திருந்தது. அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்பட்டன. பஸ் நடத்துனர்களுக்கு தமிழர்களை ஏற்றக்கூடாது என்று உத்தவிடப்பட்டது. முன்னை நாள் கைது செய்யப்பட்டு மீண்டும் விடுவிக்கப்பட்டிருந்த பலரறிந்த ரவுடிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர். இரும்பு ஆயுதங்கள் பெட்ரோல் போத்தல்கள், சகிதம் வெளிக்கிளம்பிய அவர்கள்  இரண்டு தமிழ் பாதிரிமாரை போட்டுத் தாக்கத் தொடங்கினர். ஆனால் அவர்கள் தப்பிச் சென்றார்கள். அந்த முயற்சி தோல்வியடையவே அவர்கள் அங்கிருந்து கடந்து செல்லும் போது இன்னொரு கும்பலும் அவர்களுடன் இணைந்து கொண்டது. அவர்கள் அங்கிருந்த கடைகளை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள். இவர்களுக்கு பெற்றோல்களை அங்கிருந்த இராணுவமே விநியோகித்தது. அங்கு பீதியுடன் கடந்து சென்ற தமிழர்கள் இராணுவத்தினரால் தாக்கப்பட்டார்கள். தீயணைக்கும் படையினர் இராணுவத்தினரதும், ரவுடிகளினதும் வேலை முடியும்வரை காத்திருந்தார்கள். ரவுடிகளால் தீயிடப்படாமல் எஞ்சியிருந்த கடைகளை இராணுவமே தீயிட்டது. மதியம் நுவரெலியா தீக்கடலாக காட்சியளித்தது.
அதன் பின்னர் ஆளும் ஐ.தே.க வின் அமைப்பாளர் ஜெயரட்ணத்தின் வீட்டைத் தாக்கினார்கள். வெளிக்கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் அந்த வீட்டைச் சுற்றி தீயிதத் தொடங்கினார்கள். ஆனால் அதற்குள் வீட்டு உரிமையாளர் துப்பாக்கியை எடுத்துச் தற்காப்புக்காக சுட்டார். சுடப்பட்டதில் வந்த கும்பலில் இருந்த ஒருவன் கொல்லப்பட்டான். “பயங்கரவாதி சிங்களவரைக் கொன்று விட்டான்” என்று கத்தியபடி அந்த இடலை இழுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினார்கள். அந்தச் செய்தி மின்னல் வேகத்தில் பரவியது. 200 பேர் அடங்கிய படையினர் அந்த வீட்டை நோக்கி பின்னர் வந்தார்கள். அவர்கள் அந்த வெட்டுக்கு தீயிட்டார்கள். அந்த வீட்டுக்குள்ளிருந்து ஒரு சிறுமி தப்பியோடி வெளியே வந்தாள். அவளை மீண்டும் அதே தீக்குள் தள்ளியது அந்தக் கும்பல். அந்த வீட்டில் இருந்தவர்களும் அவர்களின் உறவினர்களுமாக 13 பேர் அந்தத் தீயில் கருகி மாண்டார்கள்.”
1983ம் ஆண்டு யூலை கலவரத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் பலர் நாட்டில் பல பாகங்களுக்கு அகதிகளாகச் சென்றார்கள். 11.08.1983 அன்று வெளியான பத்திரிகைச் செய்தியொன்றில் “சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா செல்வோரை மன்னார், மாங்குளம், வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் ஈழவாதிகள் குடியமர்த்தியுள்ளனர்” என அனுராதபுர கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர் யசபால தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தது. இந்த வகைப் கலவரம் முடிந்த பின்னும் அம்மக்களை வடக்கு கிழக்கிலுள்ள தமிழர்கள் தஞ்சம் அளிப்பது என்பது அத்தனை தூரம் சிங்கள இனவாதிகளை எரிச்சலூட்டயிருந்தது. மேலும் கலவரம் நிகழ்ந்த 24ம் திகதியன்று திருகோணமலையிலுள்ள 500 தமிழ் அகதிகள் தாமிருந்த முகாம்களிலிருந்து இராணுவத்தினரால் பலவந்தமாக அரசாங்க பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்டு மலைநாட்டிற்கு கொண்டு சென்று அங்கு பல இடங்களில் சாலையருகே இறக்கிவிடப்பட்டார்கள். இவர்கள் குடியிருந்த காணிகளில் சிங்களவரை குடியிருத்தும் நோக்கத்துடனேயே இதனை அவர்கள் மேற்கொண்டார்கள்.

1983 கலவரத்தின் மூலம் மலையகத்தை அச்சுறுத்தியதன மூலம்; தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து அவர்களை தூர விளக்கிருக்கச் செய்தது பேரினவாதம். ஆனாலும் மலையகத்தில் இருந்து இன உணர்வாளர்களாக இளம் சந்ததியிலிருந்து கணிசமானோர் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஈழப் போராட்டத்தில் இணைவதையோ, ஆதரவளிப்பதையோ எந்த சக்தியாலும் தடுக்க இயலவில்லை.

துரோகங்கள் தொடரும்

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates