99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 38
1983 யூலை இனப்படுகொலையைத் தொடர்ந்து அரசாங்கத்தின் மீதான கரை, இந்தியத் தலையீடு, சர்வதேச அழுத்தம் உள்நாட்டு சிவில் நெருக்கடி, வடக்கில் ஆயுத இயக்கங்கள் பலமடைதல் போன்ற சூழ்நிலைகளால் தடுமாறிக்கொண்டிருந்தது ஜே.ஆர். அரசாங்கம். தெற்கில் பிரதான எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியின் தலைவி சிறிமாவின் குடியியல் உரிமையைப் பறித்தாகியாயிற்று, பிரதான இடதுசாரிக் கட்சிகளையும் தடை செய்தாகியாயிற்று, இப்போது வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் சக்திகளை ஒடுக்குவது தான் அடுத்து மிஞ்சியிருக்கும் அரசியல் சவால்.
சட்டம் நிறைவேற்றம்
மேலும் தமிழ் மக்களின் உரிமையை நசுக்குவதற்காக 05.08.1983 அன்று 6வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது அரசாங்கம். அதன்படி மூன்று மாதங்களுக்குள் அரச பதவிகளில் உள்ளவர்கள் அனைவரும் 6வது திருத்தச் சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்தாக வேண்டும். 150 பேர் இதற்கு ஆதரவளித்திருந்தனர். எந்த எதிர்ப்புமின்றி அது நிறைவேற்றப்பட்டது. அதே மாதம் அத்தாட்சிப்படுத்தப்பட்டு வேகமாக அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாக்களிப்பில் அன்றைய தினம் கலந்துகொண்ட தமிழ் உறுப்பினர்களான கே.டபிள்யு.தேவநாயகம் (கல்குடா), செ.ராஜதுரை (மட்டக்களப்பு), திருமதி ரங்கநாயகி பத்மநாதன் ஆகியோர் வாக்களித்ததுடன் 9ஆம் திகதி அச்சட்டத்திற்கு அமைவாக சத்தியப்பிரமாணம் எடுத்தார்கள்.
சகல அரசாங்க ஊழியர்களும் பிரிவினைக்கு எதிராகவும் அரசியலமைப்புக்கு விசுவாசமாகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள வேண்டும் என்று அரசு சகல அரச காரியாலயங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியதன் மூலம் அவ்வூழியர்கள் விரும்பியோ விரும்பாமலோ பிரமாணம் எடுக்க வலிந்து தள்ளப்பட்டனர்.
முதலில் இந்த சட்டத்திற்கு அமைவாக சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளக்கூடாது என்று எச்சரிக்கின்ற பிரசுரங்களை தமிழ் இயக்கங்கள் வெளியிட்ட போதும் தமிழ் ஊழியர்கள் அனைவரும் அதனால் பதவி இழக்க நேரிடும் என்பதால் யதார்த்த நிலையை புரிந்து கொண்டு தமது நிலைப்பாட்டைத் தளர்தத்தின. வேலையை இழக்க நேரிடும் என்பதால் சத்தியப்பிரமாணம் எடுப்பதை தாம் எதிர்க்கப்போவதில்லை என்றும் புலிகள் சார்பில் பிரபாகரனது பெயரில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டது.
அதன் அர்த்தம் சத்தியப்பிரமானப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதல்ல என்று புலிகள் அறிவித்தனர். வேலைகளை இழக்க நேரிடும்.
கூட்டணியின் மறுப்பும் பதவி துறப்பும்
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனிநாட்டுக்கான கோரிக்கையைத் முன்னிறுத்தி, அதற்கான மக்களாணையைப் பெற்றிருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர், அந்த மக்களாணைக்கு முற்றிலும் முரணாக அமைந்த, 6ஆம் திருத்தத்தின் கீழான சத்தியப்பிரமாணத்தை, நிச்சயம் செய்ய முடியாது. அது, தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கியிருந்த ஆணையை மட்டுமல்லாது, அவர்கள் முன்னிறுத்தியிருந்த அடிப்படைக் கொள்கைக்கே விரோதமாக அமையும்.
அரசியலமைப்பை பாதுகாத்து 6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாக 1983 ஓகஸ்ட் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளப்படவேண்டும். அந்த சத்தியப்பிரமாணத்தை செய்ய மறுத்தது கூட்டணி. உண்மையில் அப்படிப்பட்ட ஒரு சத்தியப் பிரமாணம் கூட்டணிக்கு அவசியப்படவுமில்லை.
1977 பொதுத் தேர்தல் ஆறு வருடங்கள் பூர்த்தியாகும் தினமான யூலை 22க்குப் பின்னர் தமது உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்வதில்லை என்கிற முடிவை எடுத்திருந்தது. பாராளுமன்றத்தின் காலம் முடிவடைந்தும் கூட அரசாங்கம் பதவியை நீடிபதற்காக நடத்திய சர்வஜன வாக்கெடுப்பையும் “அது ஜனநாயக விரோதம்” என்று கூறி கூட்டணி எதிர்த்தது. யூலை 23, 24 ஆகிய திகதிகளில் மன்னாரில் நடத்தவிருந்த கூட்டணியின் மாநாட்டில் இது தொடர்பான முடிவை அறிவிப்பதென்றும் முடிவெடுக்கப்பட்டிருந்தது.
தமிழ் இயக்கங்களின் நிர்ப்பந்தமும், எச்சரிக்கையும் இந்த முடிவுக்கு முக்கிய காரணம். யூன் 27 அன்று பாராளுமன்றக் கூட்டத்தில் கா.பொ.ரத்தினம் இப்படி கூறினார்.
“இளைஞர்களை அடக்க முடியாத நிலை வந்து விட்டது. சமஷ்டியை, இணைப்பாட்சியை தர மறுத்தால் பிரிவினையைத் தான் கேட்கவேண்டிவரும் என்று அன்று முதல் கூறி வருகிறோம். இன்று அது நடக்கிறது. இன்று நாம் சொல்கிறோம் இளைஞர்கள் ஒரு தற்கொலைப் படையை உருவாக்கும் நிலை தோன்றி வருகிறது....”
அதே வீ.என்.நவரத்தினம் யூலை கலவரம் வெடிப்பதற்கு முன் இரு நாட்களுக்கு முன்னர் யூலை 21 உரையாற்றும் போது,
“வன்செயல் மூலமோ, பலாத்காரத்தின் மூலமோ எமது பிரச்சினையை தீர்க்கலாமேன்ர நம்பிக்கை எனக்கில்லை. எமது இயக்கத்திற்கும் இல்லை. ஏதாவது பெரிய யுத்தத்தின் மூலம் தமிழ் ஈழத்தை மீடகலாமே ஒழிய சிறிய சிறிய வன்செயல்களினால் தமிழ் ஈழத்தை அடைய முடியாது. ஆகவே வன்செயல்களை நிறுத்த வேண்டிய, குறைக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு மட்டுமல்ல எமக்கும் உண்டு.” என்றார்.
அதே நாள் உரையாற்றிய அமிர்தலிங்கம் “ 1981 ஓகஸ்ட் 31இலிருந்து 1982செப்டம்பர் வரை ஐ.தே.க அரசுடன் கலந்துரையாடி ஒப்புக்கொண்ட விடயங்கள் கூட அமுலாக்கப்படவில்லை” என்பதை சுட்டிக்காட்டினர்.
ஜே ஆருக்கு மாலை போடும் சிறில் மெத்தியு |
அந்த விவாதத்தில் உரையாற்றிய சிறில் மெத்தியு மிகுந்த கடுப்புடன் 83 கலவரத்தை நியாயப்படுத்தியும் ஆற்றிய உரை கவனிக்கப்படவேண்டியது.
இந்த கூட்டம் தான் அவர்களின் இறுதி கூட்டம். ஏற்கெனவே எடுத்த முடிவு மற்றும் 6 வது திருத்தச் சட்டத்தின் படி சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளாது 17 பேரும் 3 மாதங்கள் விடுமுறை அனுமதி பெறாமல் பாராளுமன்றத்துக்குச் செல்லதாதால் அவர்கள் அனைவரும் பதவியிழந்தனர். இதனைத் தொடர்ந்து 5 வருடங்களும் 8 மாதங்களும் கூட்டணியின் இடம் வெற்றிடமாகத் இருந்தது.
அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக தேர்தல் ஒன்றை நடத்தியிருக்கவேண்டும் அரசாங்கம் ஆனால் வடக்கு கிழக்கு நிலைமையை சாட்டாகக் கூறி அங்கு அடுத்த பொதுத் தேர்தல் வரை தேர்தலை நடத்தவில்லை அரசாங்கம்.
அதற்கடுத்தபடியாக எதிர்க்கட்சித் தலைமைக்கு தகுதி பெற்றிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதன் தலைவரான அனுரா பண்டாரநாயக்க எதிர்க் கட்சித் தலைவரானார். நவம்பர் 8 அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 9 உறுப்பினர்களும், மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சரத் முத்தெட்டுவேகம ஆகிய 11 பேரின் ஆதரவுடன் அவர் எதிர்க்கட்சி தலைவரானார்.
தமிழர் போராட்ட நிகழ்ச்சிநிரலை மாற்றிய சட்டம்
6வது திருத்தச் சட்டமானது; தமிழ் மக்களின் உரிமைக் குரலாக ஒலித்த தமிழ் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றக் கதவுகளை மூடியது. கூட்டணி போன்ற பாராளுமன்றவாத கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலையும், வேலைத்திதிட்டத்தையும் திசைதிருப்பி விட்டது போல, தமிழ் இயக்கங்களினதும் போராட்ட வழிமுறைக்கு மறுவடிவம் கொடுத்தது என்று தான் கூறவேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் தயவை நாடித் தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டதுடன், இந்தியாவை தமிழீழ நிகழ்ச்சிநிரலுக்குள் உள்ளிழுக்கக் தள்ளப்பட்டது. படிப்படியாக பல அமைப்புகள் இந்தியாவில் தங்கியிருக்கும் நிலைக்கும் ஆளானது. கூட்டணியின் உறுப்பினர்கள் எம்.ஆலாலசுந்தரம், வி.தர்மலிங்கம் ஆகியோர் சுட்டுக்கொள்ளப்பட்டபின்னர் ஏனைய கூட்டணித் தலைவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்தார்கள்.
6வது திருத்தச் சட்டத்தை நிராகரித்த கூட்டணி 1988 ஜனவரி மாதம் ஒன்பதாவது பாராளுமன்றத் தேர்தலுக்கு நியமனப் பத்திரம் தாக்கல் செய்த போது 6வது திருத்தச் சட்டத்தின் கீழ் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது. அதே வருடம் நவம்பரில் நிகழ்ந்த முதலாவது மாகாணசபைத் தேர்தலில் பங்குகொண்ட இயக்கங்களும் கூட இந்த சத்தியப் பிரமாணத்தின் கீழ் தான் போட்டியிட்டன. அதாவது ஈழக்கோரிக்கையை ஆதரிக்க மாட்டோம் என்கிற சத்தியத்துடன் தான்.
ஈழம் என்கிற சொல்லை அரசாங்கம் பல இடங்களில் தணிக்கை செய்தாலும் 88 மாகாண சபைத் தேர்தலின் பின்னர் “ஈழம்” என்கிற சொல்லைத் தாங்கிய இயக்கங்களின் பெயர்களை அனுமதிக்க நேரிட்டது.
நாடாளுமன்றம் செல்ல மாத்திரம் அல்ல, பிரிவினையை மறுதலிக்கும் இந்த 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டபின்னர்தான் இலங்கையில் எவருமே எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடமுடியும்.
இதுதான் சட்டம். இதுதான் இலங்கையில் இருக்கின்ற நடைமுறை.
தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுவதாக ஒப்புக்கொள்ளும் 6வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறித்தான் அந்த நேரத்தில் அமிர்தலிங்கம் தலைமையிலான த.வி.கூட்டணியினர் தமது நாடாளுமன்றக் கதிரைகளைத் துறந்தார்கள்.
ஆனால் அதனைத் தொடர்ந்து, சிறிலங்காவில் அரசியல் செய்த அனைவருமே இந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறிக் கையொப்பம் இட்டுத்தான் அரசியல் செய்தார்கள்.
இன்னும் தெளிவாகக் கூறுவதானால், தமிழீழக் கோரிக்கையை சட்டபூர்வமாக - பகிரங்கமாகக் கைவிட்டே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் இலங்கையில் அரசியல் செய்தார்கள்.
இனவாதிகளின் இன்றைய வழக்கு
ஒரு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் (TGTE) கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பல இரகசியக் கூட்டங்களில் கலந்துகொண்டு விடுதலைப் புலிகளின் இலக்கான தனித் தமிழீழத்தை நோக்கிச் செயற்பட்டு ஆறாம் திருத்தத்தின் வாயிலான அரசியலமைப்புச் சட்டத்தினை மீறியுள்ளனர் எனக் குற்றஞ் சுமத்தி சிங்கள பௌத்த பேரினவாதப் பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான ரஞ்சித் சொய்சா என்பவர் 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் தான் இருக்கிறது.
அதுபோல “6வது திருத்தச் சட்டத்தை மீறி நடந்துகொள்வதால் அங்கு நடக்கவிருக்கும் தேர்தலை தடைசெய்யுமாறு ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர, தேசாபிமான பிக்கு முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக்க தேரர், சுவர்ண சங்க பதனத்தின் தலைவர் புன்யவர்தன அல்விஸ், பொதுகம சங்கத்தின் தலைவர் சதிஸ்சந்திர தர்மசிறி மற்றும் யாழ்ப்பாண பௌத்த சங்கத்தின் தலைவர் ரத்தினம் ரவிக்குமார் ஆகியோரே தாக்கல் செய்திருந்தனர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா, தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்குக்கு அம்மூவரும் சமூகமளிக்க வேண்டும் என்று 2013 செப்டம்பர் 18 அன்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.
தாம் ஒற்றையாட்சிக்கு உண்மையாக இருக்கப் போவதாகவும் தனிநாட்டுக் கோரிக்கையைத் தாம் ஏற்கவில்லையென்று கூறி கூட்டமைப்பானது பாராளுமன்ற அவைத் தலைவராகிய சபாநாயகருக்கு எழுத்து மூலம் உறுதியளித்து கூட்டமைப்பு இருப்பைப் பாதுகாத்துக் கொண்டது.
முன்னர் ஜனாதிபதி பிரேமதாசாவுடனான விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைகள் தொடக்கம் அதன் பின்னர் நிகழ்ந்த பல பேச்சுவார்த்தைகள் வரை இந்த 6வது திருத்தச் சட்டத்தை நீக்கும்படி தமிழர் தரப்பில் கோரப்பட்டது. ஆனால் இறுதிவரை இலங்கை அரசாங்கங்கள் எதுவும் அதனை ஏற்கவில்லை.
இத்தனை இறுக்கமான, வலுவான சட்டப் பூட்டுக்கள் இருந்தும் கூட சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் தனிநாட்டை பிரித்து விடுவார்கள் என்கிற பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி குறைந்தபட்ச உரிமைகளைக் கூட தடுக்கின்ற போக்கு நீடித்தே வருகின்றது.
துரோகங்கள் தொடரும்...
6வதுதிருத்தச் சட்டத்தின் உள்ளடக்கம்6 வது திருத்தச் சட்டமானது ஐ.நாவின் சாசனங்களையும் அடிப்படை மாந்த உரிமைகளையும் அப்பட்டமாக மீறும் செயலாகும்.
சிறிலங்கா அரசியமைப்பின் 6 வது திருத்தச் சட்டத்தின் 157 (A) பிரிவின் படி, குறிப்பாக இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான எல்லா வகையிலான மீறல்களையும் தடைசெய்கின்றது.
157 A (1) பிரிவின்படி எந்த ஒரு நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இலங்கைக்குள் இருந்தோ அல்லது வெளிநாடுகளிலிருந்தோ சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனி நாட்டினை அமைப்பதற்கு ஆதரவளிக்கவோ, அதற்கு இணங்கி நடக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியளிக்கவோ மற்றும் ஆதரவு திரட்டவோ கூடாது.
பிரிவு 157 (2) இன் படி, எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ அல்லது சங்கமோ சிறிலங்காவின் எல்லைக்குள் தனி நாடமைப்பதனைத் தனது நோக்கங்களில் ஒன்றாகவோ அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகவோ கொண்டிருக்கக் கூடாது.
மேற்போந்த பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளவற்றை மீறுபவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றால் விசாரணையின் பின்னர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுத் தண்டனையாகக் கீழ்வருவனவற்றை அனுபவிக்க நேரும் எனப் பிரிவு 157 (3) உறுதிப்படுத்துகின்றது.
அந்த நபரின் குடிமை உரிமைகள் (Civic Rights) 7 ஆண்டு காலத்திற்கு நீக்கப்படும்.
இந்த சட்டத்தின் கீழ்க் குற்றமிழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபரும் அவரது குடும்பமும் வாழ்வதற்குத் தேவையானவற்றைத் தவிர அவருக்கு உரித்துடைய அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
அவர் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்படும்.
பிரிவு 157(4) இன் படி, ஒரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ அல்லது சங்கமோ சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனிநாட்டை நிறுவ முனைந்தால், சிறிலங்காவின் குடிமகனாகவுள்ள எவரேனும் அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சங்கம் அல்லது அமைப்புத் தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகத் தனி நாடமைப்பதைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டு அந்த அமைப்பின் செயலாளரை எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யலாம்.
பிரிவு 157 (5) இன் படி, உச்ச நீதிமன்றம் இந்த முறையீட்டினை ஏற்றுக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சங்கம் அல்லது அமைப்பு தடை செய்யப்படும்.
மேலும் பிரிவு 157 A இன் கீழ் 7 வது அட்டவணைப்படி மற்றும் பிரிவு 161 (d) (iii) இன் படி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிவியேற்கையில் அவர்கள் சிறிலங்காவின் அரசியலமைப்பிற்கேற்ப சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனிநாடமைக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளிக்க, நிதியளிக்க, ஊக்குவிக்கச் செய்யேன் என சிறிலங்காவின் ஒற்றையாட்சி மீது பற்றுறுதியுடன் உறுதியேற்கிறேன் என உறுதிமொழியேற்க வேண்டும்.
மனித குலத்தின் உறுப்பினர்கள் அனைவரினதும் உள்ளார்ந்த கௌரவத்தையும் சமவுரிமையையும் ஏற்று நடக்க வேண்டியது இந்த உலக அமைதிக்கும் அறத்திற்கும் அடிப்படையானது என்று உறுதிமொழி தெரிவித்த 1948- 12- 10 அன்று நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் நாளன்று செய்யப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தின் 19 ஆவது பிரிவு உலக அளவில் பிரசித்தம் பெற்றது.
அதன் படி உலகிலுள்ள ஒவ்வொருக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உண்டு என்றும் பிரிவு 30 இன் படி இந்த உரிமையை இல்லாதாக்கும் படியான அல்லது மறுக்கும் படியான எந்த நடவடிக்கைகளையும் எந்த நாடோ அல்லது குழுவோ அல்லது நபரோ செய்ய முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1955 இல் ஐ.நாவின் உறுப்பு நாடாக இணைந்த இலங்கை ஐ.நாவின் சாசனத்தில் உள்ளடங்கியுள்ள கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டு கைச்சாத்திட்டுத் தான் உறுப்புரிமையைப் பெற்றுக் கொண்டது. தாம் உடன்பட்டவற்றைப் பேணும் கடப்பாடு இலங்கை அரசுக்குண்டு.
அடிப்படை மனித உரிமைகளை குழிதோண்டிப் புதைத்துவிடும் இந்த 6வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக இதுவரை உருப்படியான போராட்டங்கள் இதுவரை தமிழர் தரப்பில் மட்டுமல்ல எந்த ஜனநாயக சக்தியாலும் முன்னெடுக்கப்படவில்லை.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...