தமிழர் பலத்தைப் பாதியாக்கிய பின் படுகுழி தோண்டுவதே ஆட்சியாளர் திட்டம்.
அடியடியாக வரும் மலைநாட்டுத் தமிழர் உரிமையை மறுப்பது அநியாயம் – சரித்திரம் காணா அக்கிரமம்
தந்தை செல்வா அவர்களின் இந்த முக்கிய உரை 10.10.1954 அன்று வெளியான சுதந்திரன் பத்திரிகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. மலையக மக்களை நாடுகடத்துவதற்கென்று நேரு – கொத்தலாவல ஒப்பந்தத்தை செய்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து தூதுக்குழு பயணப்படுகையில் தந்தை செல்வா தலைமையிலான ஒரு பெரும் கூட்டத்தை தமிழரசுக் கட்சி நடத்தியது. அதன் மூலம் மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காகவும், நாடுகடத்தலுக்கு எதிராக இந்திய அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்காகவும் இந்த கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. பல முக்கியமான தகவல்கள் இதில் உள்ளடங்கியிருக்கிறது. கூடவே தந்தை செல்வாவின் தீர்க்கதரிசமான உரை. தெட்டத் தெளிவான, உறுதிமிக்க நிலைப்பாட்டை பல இடங்களில் தெறிக்கின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த உரையை பதிவு செய்வதற்காக “நமது மலையகம்” வாசகர்களுக்காக மீள தட்டெழுத்திட்டு இங்கு பகிரப்படுகிறது.
இலங்கையைப்போன்ற ஒரு சிறிய நாட்டிலே ஒரு பெரிய பிரச்னையை நாம் எதிர் நோக்கி நிற்கிறோம். இந்த நாட்டிலே நிலைபதிகளாக வாழ்ந்து வரும் 800,000 இலங்கைவாசிகளை இந்தியாவுக்கு அனுப்பிவிட இலங்கையின் ஆட்சியாளர் திட்டமிட்டுள்ளார்கள் இந்த எட்டு லட்சம் மக்களும் இந்த நாட்டு மொத்த ஜனத்தொகையில் 10 சதவீதத்தினர். இது நாங்கள் நம்ப முடியாத அளவுக்கு ஒரு பயித்தியக்காரத்தனமான நடவடிக்கை ஆனால் இது தான் உண்மை நாட்டின் நிலை.
அடுத்த வாரத்திலே இந்த நாட்டின் உயர்தர அரசியல் மேதைகள் எனப்படுவோரைக் கொண்ட ஒரு தூதுகோஸ்டி புதுடில்லி போகிறது. அங்கே இந்த நாட்டிலுள்ள இந்திய வம்சாவழியினரான எட்டு லட்சம் பேரையும் இந்தியப் பிரஜைகளாக பதிவு செய்யுமாறும் இறுதியில் இவர்களே இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துவிடுமாறும் இந்த தூதுகோஷ்டி இந்திய அரசாங்கத்த கேட்டுக்கொள்ளும்: இந்த வெளியேற்று படலத்திற்கு பச்சை விளக்கு காட்டுவதற்கான சில வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன: இந்த மக்களை "இந்தியர்" என்றும் நாடற்றவர் என்றும் அழைக்கின்றனர் ஆனால் உண்மையில் அவர்கள் இந்தியர்களோ நாடற்றவர்களோ அல்ல; எனவே நாடுகடத்தவிருக்கும் இந்த மக்கள் யார் என்பதையும், இந்த நடவடிக்கையை ஆட்சியாளர் எடுப்பதற்கான காரணம் என்ன என்பதையும், இதன் அரசியல்-மற்றும் விளைவு என்னவாக இருக்குமென்பதையும், அரசாங்கத்தினது இந்த திட்டத்தின் மானுஷிசமும் மற்றும் நிலைமையையும் நாம் ஆராய்வது அவசியம்.
குடியேற்றம் புதியதல்ல
நாடுகளில் மக்கள் குடியேறுவது சகல பகுதிகளிலும் வெவ்வேறு வேளைகளில் நடந்திருக்கிறது. இன்றும் ஓரளவுக்கு இது நடக்கத்தான் செய்கிறது. வடக்கும் மேற்கும் கொண்ட அமெரிக்க கண்டத்தின் ஜனத்தொகை சென்ற மூன்று நான்கு நூற்றாண்டுகளாக அந்த நாட்டிலே வந்து குடியேறியவர்களர்களாலேயே அமைந்துள்ளது: இந்தக் கண்டத்தித்திலே தங்கள் தங்கள் சொந்த நாட்டின் பிரதிநிதிகள் இவர்கள். இலங்கையைப் பொறுத்த மட்டில் அது நிலைபதிகளான பூர்வீகக் குடிகளைக் கொண்ட ஒரு நாடு. ஆனால் சொல்லணாக்காலம் தொட்டு இந்த இந்த நாட்டிலே அலை அலையாக குடியேற்றம் நடத்திருக்கிறது. இவர்களில் பெரும் பகுதி ஏன் முற்றுமே இந்தியாவிலிருந்து வந்தவர்கள்? இவர்கள் இந்த நாட்டிலே வாழ்ந்து வந்த மக்களுடன் சங்கமமானார்கள். டச்சு ஆட்சியின் கடைசிக் காலத்தில் கூட தென் இந்தியாவிலிருந்து மக்கள் தென் கோடிகளில் குடியேறியுள்ளார்கள்: இவர்கள் சிங்கள மக்களுடன் இரண்டறக கலந்துவிட்டார்கள் இவர்களைப் பொறுத்தமட்டில் இவர்கள் இலங்கையர்களா என்பதில் எள்ளளவும் சந்தேகமும் இன்று இல்லை. இதே போன்று குடியேற்றமும் சங்கமமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல நூற்றாண்டுகளாக நடந்திருக்கிறது.
கொண்டுவந்தது யார்?
சென்ற நூற்றாண்டு காலத்திலே அன்று நாட்டை ஆண்டு வந்தோர் தென் இந்தியாவிலிருந்து தமிழர்களை இந்த நாட்டின் மத்திய பகுதிகளுக்கு அழைத்து வந்தார்கள். இவர்களே இன்று இலங்கை-இந்திய அரசாங்கங்களின் தகராறு பிரச்சினையாக உள்ளார்கள்.
இந்த தமிழ்ர்கள் 1837லே முதன் முறையாக தோட்டங்களில் வேலை செய்வதற்கு தொழிலாளிகளாக கொண்டு வரப்பட்டார்கள். 1839 தொடச்சம் திட்டமிட்டு இவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். 1939 ஆகஸ்ட் முதலாம் தேதி இந்திய அரசாங்கம் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடியேறுவதை தடுத்து சட்டம் செய்யுமட்டும் இந்த குடியேற்றம் நடந்து கொண்டிருந்தது. இதன் மூலம் குடியேறிய அத்தனே பேர்களும் இந்த நாட்டிலே 15 வருடங்களாகவோ அதற்குமேலாகவோ வாழ்ந்துள்ளார்கள். 1928 டொனமூர் அறிக்கையை மேற்கோள் காட்டுவதாக இருந்தால் "குடியேறிய இந்ததொழிலாளர்களின் பெரும்பகுதியை 40 லிருந்து 50 சத வீதம்வரை இலங்கையின் நிரந்தரக் குடிகள் என்றே கருத வேண்டும், தோட்டத் தொழிலாளிகளின் பெரும்பகுதியினர் பிறந்திருக்கிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது. அன்று 1928 ல் அது அப்படியென்றால் இன்று அந்த அறிக்கைக வெளியான 26 ஆண்டுகளுக்கும் பின்னால் இந்த மக்களின் நிரந்தரக் குடியுரிமை பற்றிய நிலைமை நிச்சயமாக நல்லதாகத் தான் இருக்க முடியும். குடியேற்றத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ள நாடுகள், குடியேறிய ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அந்த தொழிலாளிகளுக்கு அந்த நாட்டின் தொழிலாளிகள் அனுபவிக்கும் சகல உரிமைகளும் சலுகைகளும் அளிக்கப்படவேண்டும் என்று சர்வதேசிய தொழிலாளர் ஸ்தாபனம் (ஐ.எல்.ஒ) தீர்மானித்துள்ளது. எனவே சர்வதேசிய ரீதியாக உள்ள சட்டப்படியும், மானுஷிக அடிப்படையிலும் மலைநாட்டிலே வாழும் இந்தத் தொழிலாளிகள் இந்த நாட்டின் நிலைபதியான மக்களின் பகுதியாகவே கருதப்பட வேண்டும்.
உரிமையை மறுக்கமுடியாது
குடிமதிப்பு கணக்குபடி 15 வயதுக்குட்பட்டவர்களே ஜனத்தொகையின் எனவே 40 சத வீதத்தினர். எனவே இந்த மக்களில் 4 லட்சப் பேர் 1939 க்குப் பிறகு இலங்கையில் பிறந்தவர்களாகத்தான் இருக்க முடியும்: மிகுதி 6 லட்சம் பரும் இந்த நாட்டில் 1939 க்கு முன் வந்து குடியேறியவர்களும் 1939க்கு முன்பிறந்தவர்களும், இந்த மக்களுக்குள் ஒரு பகுதியினர் இந்தியாவில் தமது கிராமங்களுடன் தொடர்புகொண்டுள்ளார்கள் என்பது உண்மை தான் ஆனால் அது ஒரு சிறு பகுதியே. என்றாலும் அவர்களும் இந்த நாட்டிலே, இந்த நாட்டின் பிரஜைகளாக வாழ அவர்கள் விரும்பினால் அதற்கு லாயக்குள்ளவர்களே. எனவே இந்த மக்கள் இந்த நாட்டின் நிரந்தரப் பிரஜைகளாக வாழ இருக்கும் உரிமையை யாராலும் மறுக்க முடியாது – சந்தேகிக்கவும் முடியாது.
ஆட்சியாளர் பித்தலாட்டம்
அரசாங்கமும், இந்த மக்களை இந்த நாட்டைவிட்டு துரத்த விரும்புவோரும் இவர்களை இந்தியர்கள் என்றும், இந்தப் பிரச்சினைய இலங்கை- இந்தியப் பிரச்னை என்றும் கூறுகிறார்கள் இது இலங்கை இந்தியப் பிரச்சினையல்ல இவர்கள் இந்திய வம்சாவழியினரென்பதில் சந்தேகமில்லை. என்றாலும் இந்தியா தனது பிரஜாவுரிமைச் சட்டங்களை வைத்திருந்தும் கூட இவர்களை இந்தியர்களாக கருதமுடியாத அளவுக்கு இவர்கள் இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்து விட்டார்கள். அவர்களுடைய பிரச்சினை எந்த நாட்டிலே அவர்கள் இவ்வளவு நீண்ட நெடுங்காலம் வாழ்ந்தார்களோ அந்த நாட்டின் தேசியப் பிரச்சினையே இது. இந்தப் பிரச்சினையில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவதில் அர்த்தமில்லை இது அடிப்படையில் ஒரு தமிழ்-சிங்கள பிரச்சினை. இவர்கள் சிங்களம் பேசுபவர்களாக மாறினால் இந்த அரசாங்கம் இவர்களை ஏற்றுக்கொள்ளும் என்பதில் உண்மை உணர்ந்தவர்களுக்கு சந்தேகம் இருக்க முடியாது: இவர்கள் இலங்கையர்கள் என்று ஏற்க அரசாங்கம் மறுக்கிறதென்றால் இவர்கள் தமிழ் பேசும் மக்கள் என்பதே காரணம் இலங்கை; தமிழ்ப் பேசும் மக்களுக்கும் சிங்களம் பேசும் மக்களுக்கும் பொதுவானது-உரியது என்று ஆட்சிப் பீடத்திலே இருப்பவர்கள் தினே தினே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதுபற்றி எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. சரித்திரமறிந்த காலம் தொட்டு இந்த நாட்டிலே தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். இதில் ஒவ்வாரு இனத்தவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளே தனித்தும், தேசம் பூராவையும் ஒருமித்தும் வெவ்வேறு காலங்களில் ஆண்டிருக்கிறார்கள். வந்தேறு குடிகளை தங்கள் தங்கள் சமூகத்தோடு சமாதான ரீதியில் சேர்த்துக்கொள்ள இந்த இருபகுதியினருக்கும் உரிமை உண்டு மலைநாட்டிலே வாழும் தமிழ்த் தொழிலாளிகள் இந்த நாட்டின் ஜனத்தொகையுடன் சங்கமமாகிவிட்டதுடன் தமிழ் பேசும் சமூசத்தின் ஒரு பகுதியாகவும் இருக்கிறார்சள் 8 அல்லது 10லட்சம் கொண்ட இவர்களை இந்த நாட்டிலே ஏற்க முடியாது என்று அரசாங்கம் கூறுவது தவறானதாகும்.
வெளியேற்றினால் ஆட்சி பங்கலோட்டாகும்
இந்த நாட்டின் பெரிய தொழிலும், அரசாங்கத்தின் பெரிய வருவாயுமுள்ள தேயிலைத் தொழிலின் முதுகெலும்பு இவர்கள். இவர்களில் அரைவாசிப்பேரை ஒரு வருடத்துக்குள் அனுப்பிவிடுவதாக வைத்துக் கொண்டால் இந்த நாட்டின் தேயிலைத் தொழில் ஸ்தம்பிப்பதுடன் அரசாங்கம் பங்கலோட்டாகிவிடும். என்றாலும் இந்த மக்களின் பிரச்சினை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகக் கூறப்படுகிறது. இது தவறு. ஒரு குறுகிய காலத்திற்குள் இவர்களை அனுப்பலாகாது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. எனவே தான் இவர்களை இந்தியப் பிரஜைகளாக பதிவு செய்ய அரசாங்கம் விரும்புகிறது. அதன் மூலம் தனக்கு தேவை இருக்குமட்டும் இவர்களை உபயோகித்துவிட்டு, இவர்களின் இடத்தில் சிங்களத் தொழிலாளர்களை நிரப்பக்கூடிய நேரம் வந்ததும் இவர்களை நாடுகடத்தலாம் என்று அது திட்டமிடுகிறது. அதுவரையும் இந்தத் தமிழ் தொழிலாளர்களை இந்த நாட்டிலே அரை அடிமைகளாக எந்தவித மனித உரிமைகளைக் கூட அனுபவிக்க முடியாது வாழ வேண்டுமாம். உண்மையில் அரசாங்கம் இவர்களை ஏதோ தட்டுமுட்டுச் சாமான்களாகவே கருதுகிறது.
அதிகாரம் துஷ்பிரயோகிக்கப்படுகிறது.
நாடு சுயாதீனமடைந்த பிறகு இந்த நாட்டிலே வாழும் ஒரு பகுதி மக்களை எதிர்த்தே இதெல்லாம் நடக்கிறது என்று நாம் உணரக் கொடிய வேளையில் இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை இனம் இந்த நாட்டு மக்களுக்கு கைமாற்றப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறது என்றுதானே அர்த்தம் எந்த அளவுக்கு இந்த தமிழ்த் தொழிலாளிகளை இந்த நாட்டின் நிரந்தரக் குடிகளாகக் கருத வேண்டும், எந்த அளவுக்கு இவர்கள் வாக்குரிமை அனுபவிக்க வேண்டும் என்ற பிரச்சினைகளை டொனமூர் கமிஷனும், சோல்பரி கமிஷனும் ஆராய்ந்தன. இந்த நாட்டை ஆளுவதற்கான அதிகாரத்தை இந்த நாட்டிற்கு சோல்பரி அரசியல் சட்டம் மாற்றியபோதும் மக்களுக்கும் அது அளிக்கப்பட்டது. எதிர்காலத்திலே நாட்டில் குடியேறக் கூடியவர்களைப் பொறுத்து இலங்கை அரசாங்கத்திற்கு நடவடிக்கை எடுக்கும் உரிமையை ஏற்றுக்கொண்ட சோல்பரி அறிக்கை ஏற்கெனவே இந்த நாட்டிலே குடியேறி இந்த நாட்டில் பொதுவாக வசித்துவரும் மக்களின் உரிமையில் தலையிடப்படாது என்று கேட்டுக்கொண்டது. அந்த அரசியல் சட்டம் இந்த மக்களின் பெரும் பகுதியினருக்கு வாக்குரிமை அளித்திருந்தது. அதனால் தான் சென்ற பாராளுமன்றத்திலே இலங்கை இந்திய காங்கிரசுக்கு 7 பேர் தேர்த்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்க முடிந்தது. சுதந்திரம் என்றால் பெருவாரி இனத்தினர் தமிழ்த் தொழிலாளிகளின் வாக்குரிமையைப் பற்றியது என்றோ, பலாத்காரத்தாலோ, நிர்ப்பந்தத்தாலோ மற்றும் சூழ்நிலைகளாலோ இந்தத் தொழிலாளிகளை இந்த நாட்டிலிருந்து விரட்டிவிடுவது என்றோ யாரும் என்றும் கனவு கண்டது கூடக் கிடையாது.
“1939ல் இலங்கைக்கு குடியேறுவதை இந்திய அரசாங்கம் தடுத்தால் இலங்கையிலுள்ள இந்தியத் தொழிலாளிகளில் ஒரு சிறு பகுதியினர் கூட ஐந்து வருடங்களுக்குக் குறைவாக இந்த நாட்டில் வாழ்ந்ததாக இருக்கமுடியாது. இவர்களில் பெரும்பகுதியினர் இந்த நாட்டிலேயே பிறந்திருக்கிறார்கள். புதிய அரசியல் சட்டத்தின் கீழ், எமது ஆலோசனைகள் ஏற்கப்பட்டால் இலங்கைக்கு புதிய குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கு அதிகாரமுண்டு. இலங்கையிலுள்ள இந்திய சமூகத்தை இலங்கை சமூகத்தில் சேர்த்துக்கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு திறமையுண்டு; அது அப்படிச் செய்யவும் விரும்புகிறது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சோல்பரி அறிக்கையின் 240வது பத்தி கூறுகிறது.
அநியாயச் சட்டங்கள்
ஆனால் சுதந்திரத்தின் பின் நடந்ததென்ன? முதலாவதாக வம்சாவழியாலேயே பிரஜா உரிமையை நிர்ணயிப்பது என்று இலங்கை பிரஜா உரிமைச்சட்டம் செய்யப்பட்டது. வம்சாவழிக்கு வேண்டிய சகல தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத தமிழ்தொழிலாளர்களின் பிரஜா உரிமையை மறுப்பதே இதன் உள் நோக்கம். இதன் பின் இந்திய பிரஜா உரிமைச் சட்டத்தை அரசாங்கம் இயற்றியது. இதன் மூலம் தமிழ் தொழிலாளிகளை பிரஜைகளாக பதிவு செய்வதாகக் கூறப்பட்டது. இந்த சட்டம் கர்ண கடூரமாக இருந்ததாலும், இதன் நடைமுறை நியாயமற்ற முறையில் அமுல் செய்யப்பட்டதாலும் பல வருடங்களுக்குப் பிறகு 9000 மனுக்களுக்கே இடமளிக்கப்பட்டன. இதன் மூலம் 27000 பேர் பிரஜைகளாகப் பதிவு செய்யப்பட்டனர் 57000 பேர் கொண்ட 19000 மனுக்கள் மறுக்கப்பட்டன, முதலாவது பாராளுமன்றத்திலே இயற்றப்பட்ட சட்டத்தின் மூன்றாவது பிரிவு பிரஜைகளாகப் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை அளித்தது. மலா னுடன் மட்டுமே ஒப்பிடத்தக்களவுக்கு இந்த சட்டம் முற்றிலும் ஜனநாயக விரோதமாது. இலங்கை சுதந்திரம் பெற்றபோது மலை நாட்டுத் தமிழர்கள் அனுபவித்த வாக்குரிமையை மிருகத்தனமாக அரசாங்கம் பறித்தது. இலங்கைச் சட்டப்பிரகாரம் இந்த மக்கள் இந்த நாட்டின் பிரஜைகளல்ல என்று அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் கூறுவது அர்த்தமற்றது, இந்த சட்டங்கள் குரோதமானவை, நியாய பூர்வமற்றவை என்றும் இந்த நாட்டிலே வாழும் ஒரு பகுதி மக்களை அரசியல் ரீதியாக கிடுக்கியில் மாட்டுவதற்கான சூழ்ச்சி என்றும்; இதை இந்த நாட்டிலே வாழும் தமிழ் சமுதாயம் முழுவதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும்தான் நாங்கள் கூறுகிறோம், இவை வாபஸ் பெறப்படவேண்டும் என்று தமிழினம் கோருகிறது. இந்த நாட்டிற்கே உரித்தான மக்களின் ஒரு பகுதியை இந்த சட்டங்கள் நாடற்றவர்களாக்கிவிட்டது:
அடியறச் செய்வதே ஆட்சியாளர் திட்டம்
இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டம், இந்தியப் பிரஜா உரிமைச் சட்டம், வாக்குரிமை திருத்தச் சட்டம் போன்ற சட்டங்கள் எவ்வளவு நியாயமற்றவையாக, அதர்மமானவையாக இருந்த போதிலும் இவற்றை நிறைவேற்றுவதில் அரசாங்கத்திற்கு அவ்வளவு கஷ்டம் இருக்கவில்லை. எதிர்ப்புகள் இருந்த போதிலும் அரசாங்கத்தால் இவற்றை நடைமுறையில் கொண்டுவர முடிந்தது ஆனால் அதன் நாசகாரத் திட்டங்களை நாட்டிலே சட்டம் நிறைவேற்றி விடுவதன் மூலம் அடைந்துவிட முடியாது இந்த எட்டு லட்சம் மக்களை இந்த நாட்டிலிருந்து வெளியேற்றுவதே ஆட்சியாளரின் இறுதித் திட்டம் இதைச் சாதிப்பதற்கு அரசாங்கத்தால் அவர்களைப் பிடித்து கடலிலே வீசிவிட முடியாது.
அவர்களை வரவேற்கத் தயாராக உள்ள ஏதோ நாட்டிற்குத் தான் அவர்களே அனுப்பமுடியும். முதல் தடவையாக இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்த மக்களை இந்தியா ஏற்கமறுத்தது: இவர்கள் இந்தியப்பிரஜைகள் அல்ல என்று சரியாகவே கூறியது. இலங்கைப் பிரஜா உரிமையை வேண்டுமானால் மறுக்கலாம் ஆனால் அவர்கள் மீது இந்தியப் பிரஜா உரிமையைத் திணிக்க முடியாது; இந்த நாட்டிலே பொதுவாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அதுவும் 15 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்தநாட்டிலே வாழ்ந்து வருபவர்களை அரசாங்கம் இந்த நாட்டுப் பிரஜைகளாகவே ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும், எனவே தமது திட்டங்கள் முடமாகி நிற்கும் அரசாங்கம் இன்று இந்தியாவிடம் கிண்ணில் பிச்சை எடுக்க அன்னக் காவடி தூக்கிப்போகிற து; இந்தநாட்டுப் பிரஜைகளாக பதிவு செய்யப்படவேண்டிய ஆனால் அரசாங்கம் மறுக்கும் தமிழ்த் தொழிலாளிகளை இந்தியப் பிரஜைகளாக பதிவுசெய்யுமாறு இந்தத் தூதுகோஷ்டி இந்தியாவைக் கேட்பதற்காகப் போகிறது. நம் அரசாங்கத்தின் இந்த அக்கிரமச் செயல்கள் போல் சரித்திரத்தில் எங்கும் காணமுடியாது. எந்தவித சர்வதேச சட்டத்தையும் இது மீறுவதாகும். ஏன் இந்த அரசு இப்படிச் செய்கிறது என்று யாராவது கேட்கக் கூடும். இதற்கு விடை எளிதானது இந்த நாட்டிலே ஏற்கெனவே பெலமிழந்துநிற்கும் 20லட்சம் தமிழ் பேசும் சமூகத்தை 10 லட்சத்திற்குக் குறைத்து மேலும் பெலயினமடையச் செய்யவே இதை தேசியம் என்று கபடத் தனமாக மூடிமறைத்துப்பேசப்படுகிறது. இதைவகுப்பு வெறி வெறியாட்டம்போட ஆரம்பித்துவிட்டது என்று தான் என்னால் குறிப்பிட முடியும். பெருவாரி இனத்தின் வெறியைத் “தேசீயம்” என்று பட்டுத்திரை இட்டு பவனிவிடுகிறார்கள், பெருவாரி இனத்தின் நியாயமற்ற செயல்களை எதிர்ப்பதை வகுப்பு வாதம் என்று முத்திரைகுத்திவிடுகிறார்கள்.
இந்த ஈனச் செயலை நிறுத்த வேண்டும்
தமிழ்மக்களுக்கு எதிராக இந்த ஈனச் செயல், பழிகாரச் செயல் தொடர்ந்து நடைபெற இடமளிப்பதாக இருந்தால் அது இந்த நாட்டு மக்களின் தவறு, சிங்களவர்களினதும் தமிழர்களினதும் தவறு: ஜனநாயகத்தின் கீழ் அக்கிரமத்தை எதிர்த்து கிளர்ச்சி செய்ய எந்தமக்களுக்கும் அவர்கள் எவ்வளவு குறைந்தவர்களாக இருந்தாலும் உரிமை இருக்கிறது.
இந்தநாட்டிலே வாழும் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக உயிரோடு இருக்கிறார்கள் என்றால் உணர்வுகொண்டிருக்கிறார்கள் என்றால் இந்த அநியாயாயத்தை எதிர்த்து அவர்கள் இமயம்போல் எழ வேண்டும் அதற்காகவே நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். இனிப் பேசவிருப்பவர்கள் இந்த விஷயத்தின் வெவ்வேறு பகுதிகளை விளக்கமாக எடுத்துச்சொல்லுவார்கள்: இந்த நாட்டிலே எங்கள் இனத்தின் பிரிக்கப்பட முடியாத மக்களை இந்த நாட்டிலிருந்து பிரித்தெடுத்து தமிழ் இனத்தின் மனதைப்புண்படுத்த ஒப்ப வேண்டாம் என்று இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானமும், இலங்கை அரசாங்கத்தின் போக்கை கண்டிக்கும் தீர்மானங்களும் உங்கள்முன் வைக்கப்படும்,
நன்றி - நூலகம்
+ comments + 2 comments
சிறந்த சேவை மேலும் தொடரட்டும்
பிரயோஜனமானது.....
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...