Headlines News :
முகப்பு » » மலையகத் தமிழரின் முதல் அரசியல் குரல் கோ.நடேசய்யர் - மல்லியப்புசந்தி திலகர்

மலையகத் தமிழரின் முதல் அரசியல் குரல் கோ.நடேசய்யர் - மல்லியப்புசந்தி திலகர்

தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம்   7

ஆய்வரங்கின் முதல் அமர்வு மலையகத தமிழர் குடியேற்ற வரலாறு எனும் தலைப்பில் எழுத்தாளரும் ஆய்வாளருமான மு.சி.கந்தையா தலைமையில் இடம்பெற்றது.

இந்த அரங்கு இலங்கையில் இருந்து ஆய்வரங்கில் கலந்துகொண்ட மலைநாட்டு எழுத்தாளர் மன்ற உப தலைவர் மு.சிவலிங்கம், மலைநாட்டு எழுத்தாளர் மன்ற இணைச்செயலாளர் இரா.சடகோபன் ஆகியோராடு, ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்ததின் கீழ் தமிழகம் திரும்பிய எழுத்தாளர் சி.பன்னீர்செல்வம், சட்டத்தரணி தமிழகன் ஆகியோரின் கட்டுரை சமர்ப்பிப்பதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் இத்தகைய மாநாடு ஒன்றை நடாத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதில் அதிகளவு பங்களிப்பைச் செய்திருந்த இணைச் செயலாளர் இரா.சடகோபன் தவிர்க்க முடியாத காரணங்களினால் ஆய்வரங்க மாநாட்டில் பங்குகொள்ள முடியாத நிலையில் அவரது கட்டுரை தொகுப்பு நூலில் வெளியாகியிருந்தது. ஏனைய நால்வரும் பங்குபற்றி தமது கட்டுரைகளை சமர்பித்து உரையாற்றி யிருந்தனர். 

தலைமை வகித்து 'மலையக வரலாற்றில் அரசியல்' எனும் தலைப்பில் உரையாற்றிய மு.சி.கந்தையா இலங்கையில் கண்டிப் பகுதியில் வாழ்ந்து ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகம் திரும்பியவர். தற்போது கூடலூரில் வசித்துவரும் இவர் 'நிசங்களின் சப்தம்' எனும் கவிதைத் தொகுப்பையும் 'சிதைக்கப்பட்ட மலையக மக்கள்' என்ற வரலாற்று ஆய்வு நூலையும் எழுதியுள்ளார். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தீவிர இடதுசாரி செயற்பாட்டாளராக செயற்பட்டுள்ள இவர் தமிழகம் சென்றதன் பின்னரும் கூட இலங்கை மலையக மக்கள் தொடர்பிலேயே தமது ஆய்வுகளை செய்து வருபவர். 

மலையக வரலாற்றில் அரசியல் எனும் கட்டுரையின் ஊடாக இலங்கை சனத்தொகையில் இரண்டாம் நிலையில் இருந்து இன்று நான்காம் இடத்தில் உள்ள மலையக சமூகம் மொழி, பண்பாட்டு அடையாளப்படுத்தல்களுடன் இன சமூகமாக வாழும் இவர்களின் வரலாற்றில் அரசியல் பங்காற்றல் எத்தகையது என்பதை மூன்று காலப்பகுதியாக பிரித்து வழங்கியிருந்தார். 

1820 முதல் 1920 வரையான குடியேற்ற காலத்தை முதலாம் பகுதியாகவும், 1920 முதல் 1970 வரையான காலப்பகுதியை இரண்டாம் பகுதியாகவும் 1960 முதல் 2010 வரையான காலத்தினை மூன்றாம் பகுதியாகவும் வகைபடுத்தி யிருக்கிறார். 

1820 முதல் 1920 வரையான நூற்றாண்டு காலப்பகுதியில் பெருந்தோட்ட உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்ட இலட்சக்கணக்கான உழைப்பாளர்கள் கூலிகள் என்ற ஒற்றை அடையாளப்படுத்தலுடன், தோட்டம் என்ற தனித்த உலகில் அடைக்கப்பட்டார்கள். நாட்டில் உள்ள ஏனைய சமூகத்தினருடனும், அரச சிவில் நிர்வாகத்தோடும் தொடர்புகளற்று காட்டு நிலப்பகுதியோடு முடங்கினார்கள்.

நூறு ஆண்டுகளாக தொடர்ந்த கொத்தடிமை வாழ்வில் கல்வி, சமூகம், விழிப்புணர்வு, தொழிற்சங்க செயற்பாட்டுக்கான புற உந்துதல் தோன்றாமையால் அரசியல் செயற்பாட்டுத்தடமும் கண்காணும் தொலைவிலும் அவர்களுக்குத் தென்படவில்லை என மலையகத்தின் இருநூறு வருடகால வரலாற்றின் முதல் நூறு ஆண்டு காலத்தின் சோகத்தை தனது கட்டுரையிலே பதிவு செய்துள்ளார். 

உண்மையில் மலையக வரலாற்றின் இரண்டாம் நூற்றாண்டு காலத்தை ஒப்பிடும்போது முதல் நுறு ஆண்டுகளில் மலையக மக்கள் அடக்கி ஒடுக்கி வைக்கபட்டிருந்த பிரித்தானியர் ஆட்சிக்காலம் என்பது நினைப்பதற்கே ஒரு பயங்கரத்தைத் தோற்றுவிப்பதாக உள்ளது. 

எனினும் இரண்டாவது காலப்பகுதியாக அவர் எடுததுக்காட்டியுள்ள 1920 க்கும் 1970 க்குமான ஐம்பது ஆண்டு காலப்பகுதி முன்னைய நூறு ஆண்டுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக மலையக மக்களின் வரலாற்றில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளதை சுட்டிக்காட்டுகின்றார்.

தொழிற்சங்கங்களின் தோற்றமும் போராட்டங்களும், வாக்குரிமை, அரசியல் பிரதிநிதித்துவம், இந்திய தேசியவாதம், இடது சிந்தனை வருகை, உள்ளாட்சியில் வாக்களிப்பு மறுப்புச்சட்டம், நாடு விடுதலையும் குடியுரிமை பறிப்பும், இனவன்முறைகள், நாடுகடத்தும் உடன்படிக்கைகள், புரட்சி மூர்க்கங்களும் பொதுவுடமை சிந்தனைகளும், மலையகத் தமிழர் என அடையாளப்படுத்தும் சிந்தனைத்தோற்றம் என பல நிகழ்வுகள் நடந்தேறிய காலமாக இந்த இரண்டாவது ஐம்பதாண்டு காலத்தை அடையாள ப்படுத்துகின்றார். 

   1916 ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் திகதி இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழக மக்கள் குறித்த ஆய்வினைச்செய்ய என அகமது தம்பி மரைக்கார், மார் ஜொரிபங்ஸ் ஆகிய இரண்டு உயர் அதிகாரிகளை பிரிட்டிஷ் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பியது.இந்த அதிகாரிகளின் வருகைக்கு பின்னர்  இலங்கை சட்ட நிர்ணய சபைக்கு இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுகின்றார். 

இந்திய வம்சாவளி இனம் அரசியல் பிரவேசத்திற்கான நுழைவாயிலாக அது அமைந்தது. 1924ஆம் ஆண்டு சட்ட நிர்ணய சபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் கோ.நடேசய்யர் பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். தோட்டத் தொழிலாளர்கள் எதிர்க்கொள்ளும் அடக்கு முறைகளையும், அவலங்களையும் சட்ட நிருபண சபையில் எடுத்துரைக்கும் அரசியல் குரலாக கோ.நடேசய்யராக இருந்தார் என மு.சி.கந்தையா தனது கட்டுரையில் பதிவு செய்கிறார்.

உண்மையில் இந்த காலப்பகுதியில் இலங்கை மலையக மக்களிடையே ஊடுருவியே கோ.நடேசய்யரே அவர்களிடையே தொழிற்சங்க கட்டமைப்பை உருவாக்கியவர் என்ற வகையில் அவரே மலையக தந்தையானார். இந்த உண்மையை மறைப்பதற்கு எத்தனை எத்தணிப்புகள் செய்யப்படுகின்ற போதும் மலையக வரலாற்றில் கோ.நடேசய்யரின் வகிபாகம் என்பது தொழிற்சங்கம், அரசியல், கலை, இலக்கியம், பத்திரிகை என அனைத்து துறைகளிலும் முதன்மையானவராக நின்று வழிகாட்டி யமைக்கான வரலாற்று ஆதாரங்கள் நிரம்பவே உண்டு. இந்த வரலாற்றை தேடி ஆராய்ந்து அறிந்து உண்மையான மலையகத் தந்தையை உணர்ந்துகொள்ளும் கடப்பாடு மலையக இளைய சமுதாயத்துக்குரியது.

1936 ஆம் ஆண்டு சட்ட நிர்ணய சபையில் அங்கம் வகித்த கோ.நடேசய்யரின் நிழற்படம் இன்றும் இலங்கை பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 
1925 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசியல் களத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களின் அரசியல் பயணிப்போடு எழத்தொடங்கிய பேரினவாதம் தொடர்ச்சியாக அவர்களது அரசியல் எழுச்சிக்கு தடையாக இருந்துள்ளது. சட்ட நிரூபண சபைக்கு உறுப்பினரை தெரிவு செய்யும் உரிமை இலங்கை குடிமக்களுக்கு  உரிய அரசியல் அங்கீகாரமாக அமைந்தது. 

தங்களின் இருப்பையும் எதிர்கால வாழ்வையும் செழுமைப்படுத்தும் என்று எண்ணியவர்களின் அரசியல் நீண்டகாலம் நீடிக்கவில்லை. 1928 ஆம் ஆண்டே சர்வஜன வாக்குரிமை வழங்கப்படக்கூடாது என எதிர்ப்பதை தெரிவித்தவர்கள் 1936ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்ததும் 1936 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை ரத்துச்செய்தார்கள். 

இந்த உள்ளூராட்சி மன்ற விடயங்கள் குறித்த மு.சி.கந்தையாவின் பதிவு இன்றைய காலகட்டத்தில் மீள சிந்திக்கப்பட வேண்டியது. 1931ஆம் ஆண்டு சர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்றபோதும் 1936 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு வாக்களிப்பதற்கு மலையக மக்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டள்ளது. இந்த நிலைமையில் இன்று வரை பாரிய மாற்றம் ஏற்படவில்லை.

 1990களுக்குப்பிறகு மலையக மக்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பு பெற்றபோதும் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபகைள் சட்டம் தோட்டப்பகுதி மக்களுக்கு பிரதேச சபை நிதியில் சேவையாற்றும் வாய்ப்பை மறுக்கிறது. இதுதொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டு இப்போது திருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றபோதும், மலையக மக்களுக்கு அடிமட்ட அரசியல் அதிகார அலகு மறுக்கபட்டு இன்று  ஏறக்குறைய எண்பது வருடங்கள் சென்றிருக்கின்றன என்பதையும் மலையக மக்களின் அரசியல் விடயங்களை முடக்குவதில் மிக நுட்பமாக காய்கள் நகர்த்தப்பட்டுள்ளதையும் இவரது கட்டுரையில் இங்கு அவதானிக்கலாம். 

அன்றைய நாட்களிலேயே இந்திய தேசிய வாத பரப்புரையை மறுத்த கோ.நடேசய்யர், இலங்கை தேசிய அரசியல் நீரோட்டத்தோடு இணைக்கும் குடியுரிமை, வாக்குரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார் என மு.சி.கந்தையா பதிவு செய்கின்றார். இதே காலப்பகுதியில் இடதுசாரிகளின் தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் பொதுவுடமை சித்தாந்த பரப்புரைகளில் ஈடுபட இந்திய தேசியவாத சிந்தனைகளுடனான இலங்கை இந்திய காங்கிரஸ் தோற்றம்பெற்றதையும் நினைவபுடுத்துகின்றார். 

1948 ஆண்டு சோல்பெரி அரசியலமைப்பு நடைமுறையில் இருந்தபோது இலங்கை தேசியத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட மலையகத் தமிழர்கள் வாக்குரிமை இழந்தனர். நாடற்றவர் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதுவரையான இருபத்தைந்து ஆண்டுகள்  அவர்கள் அனுபவித்த வாக்களிக்கும் அரசியல் தளம் இடையறுந்தது. குடியுரிமை பறிப்பை மீளப்பெறும் அரசியல் போராட்டதை வழிநடாத்தியிருந்தால் மலையகத் தமிழர்களின் தேசிய இன அடையாளம் வெளிப்பட்டிருக்கும் எனக்குறிப்பிடும் மு.சி கந்தையா, இருநாடுகளும் சொந்தமற்று பதினாறு ஆண்டுகள் நீடித்த வேளை சிறிமா- சாஸ்திரி உடன்படிக்கை பூதம் வெளியில் வந்தது என குறிப்பிடுகின்றார். 

இந்த ஐம்பது ஆண்டு காலப்பகுதி என்பது மலையக வரலாற்றில் மிக முக்கியமானது. வாக்குரிமை பெற்றது, இழந்தது. தேசியத்தை பெற்றது இழந்தது என்பதோடு தனது மக்கள் தொகையில் ஒரு பகுதியை இலங்கை இந்திய அரசுகள் பங்குபோட்டுக்கொள்ள, ஆட்சியாளர்களின் செயல்கள் அனைத்தும் சட்டங்களை முன்னிலைப்படுத்தியதாக மலையகத் தமிழர்களுக்கு எதிராக இனவாத ரீதியாக தொடுக்கப்பட்ட சட்டப்போர் மலையகத்தை நிலை குலையச் செய்தது என குறிப்பிடுகின்றார். 

1970 முதல் 2010 வரையான நாற்பது ஆண்டுகளில் அறம்சார் அரசியல் இயக்கங்கள் தேசிய ரீதியாக தோன்ற தவறியதால் மலையகத் தமிழர்கள் வஞ்சிப்புகளை எதிர்கொண்டார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் ஏப்பிரல் கிளர்ச்சி, தோட்டங்கள் தேசிய மயமும் துண்டாடலும் தனித்துவத்தை இழக்கச் செய்தலும், காலத்திற்கு காலம் இன மேலான்மை எண்ணத்தோடு தேர்தல் தொகுதிகள் மாற்றியமைப்பும் மலையகத் தமிழரின் வாக்குகள் சிதறலும், ஈழத்திற்கான போராட்டமும் எதிர்வினையாற்றலும் இனவன்முறையும், தேர்தல் கால மலையக அரசியல், ராஜீவ்- ஜே.ஆர் ஒப்பந்தம் போன்ற காரணங்களால் மலையகம் மீணடும் பல சிதைவுகளைச் சந்தித்தது என்கிறார்.

தேசிய இன அடையாளத்தைக் கொண்டுள்ள மலையகத் தமிழர்கள் மத்தியில் இயங்கும் அரசியல் கட்சிகள் சமூக நலன்சார்ந்த கொள்கை நிலைப்பாட்டை மேற்கொள்வதே ஆராக்கியமான அரசியலாகும். பெரும்பான்மை மக்கள் இனவாத சிந்தனைத தடத்தில் இருந்து விடுபடும் அரசியல் தடத்தோடு உள்ள உறவு வலிமையடைவதால் மட்டுமே மலையகத் தமிழர்கள் உரிமைகளைப் பெறும் அரசியல் தடத்தை வெற்றித்தடமாக்க முடியும் என்றும் மு.சி.கந்தையா தனது கட்டுரைக்கு முத்தாய்ப்பு வைத்துள்ளார். 

நன்றி சூரியகாந்தி


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates