இலங்கையில் ஆண்கள் தொகையை விட, பெண்கள் தொகை அதிகம் என்பதே சனத்தொகை கணிப்பீட்டின் ஆவணப்பதிவாகும். ஆண்கள் தொகையை விட பெண்கள் தொகை அதிகமாக இருந்தபோதிலும், அரசியலில் பெண்களின் பங்குபற்றல் பின்னடைவாகவே இருந்து வருகின்றது.
மலையகப் பெருந்தோட்டங்களில் உழைக்கும் வர்க்கமாக இருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையானோர் பெண்களாகவே இருக்கின்றனர். தற்காலத்தில் ஆண்கள் தோட்டத் தொழிலில் கிடைக்கும் ஊதியம் போதாமையினால் தோட்டத்தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் உழைப்பவர் பட்டியலில் பெண்களே முன்னணி வகிக்கின்றனர்.
இவ்வாறான காலகட்டத்தில் உள்ளூராட்சி சபைத்தேர்தல், பல மாறுதல்களை உள்ளடக்கி, விரைவில் வருமென்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை என்னும் அடிப்படையில் நடைபெறும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் ஒவ்வொரு சபைக்கும் 25 சத வீதம் பெண் வேட்பாளர்கள் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மலையகப் பெண்களும் அரசியலில் பிரவேசிக்க அதிகார பூர்வமாக பாதை திறக்கப்பட்டுள்ளது அல்லது ஆரம்பமாக திணிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகள் கிராமத்தின் எழுச்சிக்கும் மக்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் அடிப்படை வசதிகளை ஆற்றுப்படுத்தக் கூடிய அத்திபாரமான அரசியல் சேவைக்களமாகும். சட்டத்தால் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அரசியலில் பங்குபற்றும் வரப்பிரசாதம் மலையகப் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது சட்டப்படி நிகழ்வாக இருந்தபோதும், சமகாலத்தில் உடனடியாக ஆற்றலுடன் அரசியலில் வீச்சுடன் ஈடுபடக்கூடிய மகளிர் எத்தனை வீதம் மலையகத்தில் உள்ளனர் என்பது கேள்விக்குறியாகும். அப்படி ஒரு சிலர் இருந்து, அரசியலில் ஈடுபட்டு, பிரதிநிதிகளாக வரக்கூடியவர்கள் எத்தனை பேர் என்பதும் ஓர் ஆர்வப்பார்வையாகும்.
இதுகால வரையில் மலையக அரசியலில் பெண்கள் பங்குபற்ற முயற்சித்ததும் இல்லை. பங்குபற்றுவதற்கான பக்கப்பலங்களை பயனுறுதியுடன் வழங்கி அர்ப்பணிப்புடன் உருவாக்க முயன்றதாகவும் தடயம் ஏதுமில்லை.
தொழிற்சங்கங்களில் ஒரு சில பெண்கள் மகளிர் அணி தலைவிகளாக மட்டும் இருக்க மட்டுப்படுத்தப் பட்டிருந்தார்கள். ஓரிருவர் மாகாண சபை பிரதிநிதிகளாக இருந்தனர். திருமதி. சரஸ்வதி சிவகுரு மத்திய மாகாண சபையில் பிரதிநிதியாக தற்போது இருந்து வருகிறார்.
இது பெண்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க ஆரம்ப முன்மாதிரி அடையாளமாகும். பொதுவாக அரசியல், தொழிற்சங்கங்களில் ஆண் தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் அதி உச்ச சக்தியாக தோற்றம் பெற்றிருந்தது.
அதுவே தொடர்கிறது. மலையகத் தமிழ் கலாசார சூழலில் பெண் மூலம் பெறக்கூடிய அனைத்து நலங்களையும் பெற்றுக்கொண்டு ஆண்மைக்கு ஆதிக்க அடிமையாகவும் அல்லது அன்பான அடிமையாகவும ஆக்கிக்கொண்டு ஆண் தலைமைத்துவம் நீட்சிபெற்றுள்ளது. அதுவே மலையக அரசியலாகவும் முன்னேறியிருக்கிறது. அந்த மரபில் மாறுதலாக இடஒதுக்கீடு அமையும்.
மலையகத்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்கள் மத்தியில் குடும்பப் பொறுப்புகளை தமதாக்கிக்கொண்டு, சில பெண்கள் சிறப்பாக வாழ்க்கையை செப்பனிட்டு வருகிறார்கள்.
மேலும் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்று மேன்மையடைய வேண்டும் என்ற கடும் முயற்சியை பெண்களே முன்னெடுத்து வருகின்றனர். “நம்ம காலந்தான் இப்படி போச்சி, நம்ம புள்ளங்களாவது நல்லா படிச்சு, நல்ல நெலமைக்கு வரணும்” என்பது இன்றைய அனேக மலையகப்பெண்களின் எண்ணக்கருவாகும்.
அந்த வகையில் மலையகப்பெண்கள் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுக்குரிய சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்பதுவே நிதர்சனமாகும். நிதானமாகவும், தூர நோக்குடன் முடிவெடுக்கும் திறன் இயல்பாகவே மகளிரிடம் இருக்கும் சிறப்பம்சமாகும்.
கல்வி ஞானத்தில் பின் தங்கியிருந்தபோதும் கேள்வி ஞானத்தில் கீர்த்தியான காரியங்களை நேர்த்தியாக செய்யக்கூடிய ஆற்றல் இயல்பாகவே இருப்பதை மலையக் தாய்மார்களிடம் காணலாம். சமூக களத்தில் செயல்படும் நிர்வாகத்திறன், பேச்சாற்றல் அனைவரையும் கவர்ந்து அரவணைத்துச் செல்லும் சாமர்த்தியம் ஆகியவற்றை முறைப்படி கற்பதற்கு மலையக அமைப்புகள் பயிற்சிபட்டறையை உடன் தொடங்குவதும் உந்து சக்தியாகும்.
அரசியலில் பிரதிநிதித்துவம் வகிக்கும் ஆற்றலை மலையகப் பெண்கள் கட்டாயம் அடைய வேண்டும் என்பது இடஒதுக்கீடு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டதனால் நிர்ப்பந்தம் காரணமாகவே மலையகப்பெண்கள் அரசியலில் களம் இறங்கும் எதிர்நீச்சல் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
எதிர்நீச்சல் என்று குறிப்பிடுமிடத்து ஆண்களின் அதிகார, அடாவடித்தன ஆள்பல அணிசேர்க்கை, அத்துடன் அதற்கு பக்கபலமான மதுபரிமாறல், அதன் தொடராய் அநாகரிக அரசியல் வன்முறைகள், ஏச்சுகள், பேச்சுகள் மத்தியில் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்படையுடன் அரசியல் களத்தில் குதிப்பது வெள்ளமாய் பிரவாகம் எடுக்கும் கங்கையில் எதிர்நீச்சல் போடும் கடுமையான முயற்சியாகும்.
முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை. ஆகவே மலையகப்பெண்கள் அரசியலில் பங்காளிகளாக மாறுவதற்கு , மலையகட்சிகள், தலைவர்கள் தெளிவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் நிச்சயம் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நியாயமான அறுவடையை மலையகப்பெண்கள் பெறக்கூடியதாக இருக்கும்.
மலையகக்கட்சிகள் பெரும்பாலும் தேசியக்கட்சிகளில் கூட்டாகவே சேர்ந்து போட்டியிட முனையும் பட்சத்தில் மலையகப்பெண்கள் பிரதிநிதித்துவத்தை தேசியக் கட்சிகளுக்கு தாரைவார்த்துவிடக்கூடாது. பிரதேச, நகர, மாநகர சபைக்குள் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள் விகிதாசாரத்துக்கேற்ப மலையகப்பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும். நேரடி தேர்தல் போட்டியை விட, 40 வீத விகிதாசார பிரதிநிதித்துவத்திலும் பெண்களுக்கென குறிப்பிட்ட சிறப்பு தேர்வு முறை இருப்பதினால், இம்முறையிலும் மகளிர் பிரதிநிதித்துவத்தைப் பேண முடியும். பேரம் பேசுதலில் இது விடயம் ஆணித்தரமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மலையகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூக, சமய அமைப்புகளில் ஈடுபட்டு வரும் பெண்கள் விழிப்புணர்வு, நிர்வாகத்திறன் , பேச்சாற்றல், தலைமைப்பண்பு கொண்டவர்களாக உருவாகியுள்ளார்கள், உருவாகிவருகிறார்கள். கட்சிக்கொள்கை, சித்தார்ந்தம் என்ற கோட்பாடுகளை கடந்து சமூக நலனில் நாட்டங்கொண்ட சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்களே அவசர தேவைகருதி வேட்பாளர்களாக நியமிக்க, ஆய்ந்துணர்ந்து முடிவெடுக்கலாம்.
25 வீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு என்பதால் தமது உறவுகள், நட்புகள் என்ற அடிப்படையில் பெயர்ப் பட்டியலைப் பூர்த்தி செய்ய முனைவது பெண்களுக்குச் செய்யும் அரசியல் துரோகமாகும்.
இனிவரும் எல்லாத் தேர்தல்களிலும் 25 வீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது சட்டமாகி இருப்பதால் அரசியலில் ஆர்வம் உள்ள மகளிர், சமூகப்பணியில் பகுதி நேரமாக ஈடுபடுபவர்கள். தமது அரசியல் அறிவை மேம்படுத்திக்கொள்வதோடு தமக்குப் பிடித்த அரசியல் கட்சிகளில் இணைந்து தங்களைத் தயார்படுத்திக் கொள்வது எதிர்காலத்துக்கு ஏற்புடையதாகும். சமூக நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையும், சமகால நிகழ்வுகளை அறியும் கூர்மையும், வாசிப்புத் திறனையும் வளர்க்க சகலமும் நம் வசமாகும்.
அரசியல் கட்சிகளும், சமூக, சமய அமைப்புகளும் இதற்கான ஆற்றுகையை பெண்களின் முன்னேற்றம் கருதி நெறியாள்கைப்படுத்தினால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மலையகத்திலிருந்து இரண்டு பெண்கள் தெரிவாகும் புதிய ஆரோக்கியமான மாற்றம் ஏற்படும்.
இட ஒதுக்கீடு மாற்றத்தை பயன்படுத்திக்கொண்டு, பெண்களுக்கு உரிய இடமும், சந்தர்ப்பமும் சார்ந்து நில்லாத சமத்துவமும் நல்கினால் சமூகம் சகல துறைகளிலும் சடுதியாக முன்னேறும். ஆதலால், பெண்களை அடிமட்டத்திலிருந்து உற்சாகப்படுத்தி, அரசியல் ரீதியாக அற்புதசக்தியாக வலுப்படுத்துவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அனைவரும் வழங்க தயாராகி முன்வர வேண்டும்.
உள்ளூராட்சி சபைத்தேர்தல் நடக்கும் காலம் கிட்டியிருப்பதால், ஆர்வமும் அசைக்க முடியாத துணிச்சலும் கொண்டு, குறுகிய காலத்திலும் வெற்றிப்படிகளில் வீரநடை போட முடியும். இட ஒதுக்கீடு இனி ஒரு விதி செய்ய ஏற்ற மாற்றுவழியாக மலர்ந்திருக்கின்றது வேட்பாளர் பட்டியலில் பெண்கள் பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு, வெற்றி வாய்ப்பை ஆண்களே பெறும் கபடம் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் எடுபடக்கூடாது. பெண்கள் அனைவரும் தமது வாக்குகளை பெண் வேட்பாளருக்கே அளித்து பெண் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு, முழு முயற்சியாக ஐக்கியப்பட வேண்டும். அப்போதுதான் இந்த இடஒதுக்கீட்டின் நன்மையை நாம் அனுபவிக்க முடியும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...