இலங்கை அரசியலிலும் வரலாற்றிலும் தமிழர் இரு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என்ற இந்த வகைப்படுத்தல் 1911க்குப் பிறகே ஆரம்பிக்கப்பட்டது. அதுவரையிலும் இந்த வகைப்படுத்தல் இல்லாதிருந்ததோடு
இந்தியாவுடன் இலங்கைத் தமிழர்களின் தொடர்பும் அதிகமாகவே இருந்த தெனலாம்.
நில, இன, மத, மொழி. கலாசாரத் தொடர்புகளால் இந்தியாவின் இலங்கைக்குள்ள
இத் தொடர்பினை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதையே கற்றறிந்த அறிஞர்கள் பலரும் வலியுறுத்தி
வந்திருக்கின்றனர்.
உண்மையில் மேற்கத்திய நாடுகளை விட, இந்தியாவுடன் நீடிக்கும் தொடர்பையே இலங்கையினர்
வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் அப்போது மேலோங்கியிருந்தது. கலாநிதி
ஆனந்தா குமாரசுவாமி போன்ற ஆய்ந்தடங்கிய அறிஞர்கள் இதை வெளிப்படையாகவே கூறினர்.
1906ம் ஆண்டு யாழ் இந்துக்
கல்லூரியில் உரை நிகழ்த்தும் போது இந்தக் கருத்தை வெளிப்படுத்தினார். 1907ம் ஆண்டு இலங்கை சமூக சீர்திருத்த சபையினர் யாழ்ப்பாணத்தில்
நடத்திய விழாவின் போது அந்த விழாவுக்குத் தலைமைவகித்த ஆனந்தா குமாரசுவாமி அவர்கள் தனது
தலைமையுரை யில் இதை அதிகமாகவே வலியுறுத்தினார்.
எனவே, இலங்கையிலிருந்த தமிழர்களின் மொழி, பண்பாடு, கலை, கலாச்சார உணர்வுகள் பெருமளவில் இந்தியாவின் செல்வாக்குக்குட்
பட்டிருந்தது என்பது இலகுவில் விளங்கிக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே.
அதிலும், மலையகத் தமிழர் என
இன்று இனம் காணப்படுகின்ற இந்திய வம்சாவளியினரின் பண்பாட்டுணர்வுகள் தென்னிந்திய கலாச்சாரத்தின்
மறு பதிப்பாகவே இருந்து வருகின்றது எனலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மூன்றாம் தசாப்தத்தில்
இங்கு குடியேற ஆரம்பித்தவர்களின் தொடர் குடியேற்றச் சந்ததியினரான இந்த மலையக மக்கள்
இந் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை அந்தப் பாதிப்பிலிருந்து விடுபடவே இல்லை எனலாம்.
இலங்கை பிரித்தானிய ஆட்சியினரிடமிருந்து சுதந்திரம் பெற்றுக்
கொண்டதன் பின்னால் இந்தப் பாதிப்பு குறைய ஆரம்பித்தது. இது நடந்தது 1948ல் என்றாலும் இதற்கான எண்ணங்கள் வேர்விட ஆரம்பித்தது.
டொனமூர் ஆணைக்குழுவினரின் சிபார்சுகள் மேற்கொள்ளப்பட்ட 1930களின் ஆரம்ப காலப் பகுதியில் எனலாம்.
இந்தக் காலப்பகுதியில் மலையகத் தமிழரின் குரலை உரத்து
ஒலித்தவர் கோ. நடேசய்யர் ஆவார்.
தனது தெளிவான சிந்தனையாலும், துணிவான அரசியல் நடவடிக்கைகளாலும் ஒழுங்கு படுத்தப்பட்ட
தொழிற்சங்கப் பணிகளாலும் இந்திய வம்சாவளி மக்களின் மனோ பாவத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, இலங்கைத் தமிழரைப் போல அரசாங்க உத்தியோகங்களில்
பங்கேற்கவும் சிங்களவரைப் போல அரசியலில் பங்கேற்கவும் வேண்டுமானால் இலங்கை மண்ணை தாய்
நாடாக கருதும் மனோபாவம் அவர்களிடையே வளர வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார். இந்த
வலியுறுத்தலை மகாத்மாகாந்தி (1927), ஜவகர்லால் நேரு (1939) ஆகியோரின்
இலங்கை விஜயத்தின் போது - இந்தியத் தலைவர் களை மாத்திரம் நம்பி நாம் வாளா இருப்பதில்
பிரயோசனமில்லை, நம்மிடையேயிருந்து தலைவர்கள்
தோன்ற வேண்டும். நமது காலில் பலத்தில் நாம் நிற்பது அவசியம் என்று
அரசாங்க சபையில் பேசியும், பத்திரிகைகளில்
எழுதியும், நூல்களில் எடுத்துக் காட்டியும்
பலவிதங்களில் மேற்கொண்டார்.
1931ல் “அகில
இலங்கை இந்தியத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்" என்ற பெயரில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட
இயக்கமே இந்த மக்களை ஓர் அணியில் திரட்டி செயல்படத் தூண்டிய முதல் தொழிற் சங்கமாகும்.
அது சமூகப் பணிகள் ஆற்றி மக்களின் பண்பாட்டை உயர்த்துவதில் பெரும் பணி ஆற்றியது. (தேசபக்தன்
கோ. நடேசய்யர் - சாரல் நாடன) அவர் பல பத்திரிகைகளைத் தோற்று வித்தார். ஆங்கிலத்திலும், தமிழிலும் அவைகள் வெளியாயின. அவைகளில் குறிப்பிடத்தக்கவை
தேசநேசன் 1921, தேசபக்தன் 1924, தோட்டத் தொழிலாளி என்பவைகளாகும். அவரால் எழுதி
வெளியிடப்பட்ட பதினான்கு புத்தகங்களில் மூன்று தமிழ் புத்தகங்கள் (தொழிலாளர் அந்தரப்
பிழைப்பு நாடகம். இந்தியா - இலங்கை ஒப்பந்தம், தொழிலாளர் சட்டப் புத்தகம்) முழுக்க முழுக்க மலைநாட்டு மக்கள் சம்பந்தப்பட்டவைகளாகும்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பிளாண்டர் ராஜ், த சிலோன் இண்டியன் கிரைஸிஸ் என்ற இரண்டு நூல்களும் அந்த மக்களின் சமூக, பண்பாட்டு, அரசியல் குறித்தெழுதப் பட்ட ஆய்வு நூல்களாகும்.
இலங்கையைத் தாயகமாக வரிக்கும் இந்த மனோபாவத்தில் ஒரு
மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அதற்கு அடி கோலியது டொனமூர் சிபார்சின் பேரிலமைந்த அரசாங்க
சபை காலத்திலேயாகும் (193-1947) அதன்
உச்சகட்ட நிகழ்ச்சியாக அமைந்தது 1949ல் பிரதமமந்திரி டி. எஸ். சேனநாயக்காவால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய - பாகிஸ்தானிய
பரிரஜாவுரிமைச் சட்டமாகும் . சாத்தியமற்ற நிபந்தனைகள் சிலவற்றைக் கொண்ட அந்தச் சட்டத்தின்
கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த எட்டு லட்சம் பேரில் ஒரு லட்சத்து முப்பத்து நாலாயிரத்து
முன்னுாற்றியிருபது பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டது. பெரும்பான்மையினரான இந்திய
வம்சாவ்ளி மலைநாட்டுத் தமிழர்கள் குடியுரிமை அற்றவர்களாக,
இலங்கைத் தீவினதோ, இந்திய உபகண்டத்தினதோ குடிகளாக ஏற்கப்படாதவர்களாக நட்டாற்றில் விடப்பட்டனர்.
இலங்கை சிங்கள அரசியல்வாதிகளால் ஒதுக்கப்பட்டும். இலங்கைத்
தமிழ் அரசியல் வாதிகளால் வஞ்சிக்கப்பட்டும் செய்வதரியாது திகைத்து இந்தியாவின் உதவியை
நாடிய இந்த மக்கள் கூட்டத்தினர் அப்போது ஏமாற்றத்தையே கண்டனர்.
மலையகத் தமிழரின் பிரசனத்தை இந்த நாட்டில் அதிகமாக வெறுத்தவர்கள்
கண்டிய விவசாயிகளே ஆவர். அரசியலில் தீவிர இடதுசாரிக் கட்சிகளை ஆதரித்த (அதற்கும் இந்தியத்
தொடர்பே பெரும் காரணமாயிருந்தது). நிலைப்பாட்டால், கண்டிச் சிங்களவரின் வெறுப்பை இவர்கள் பெருவாரியாகச் சம்பாதித்துக் கொண்டனர்.
மனிதாபிமான நோக்கில் இந்த மக்களை ஆதரித்து நின்ற சிங்களத்
தலைவர்கள் கூட பின்னர் இந்த மக்களுக்கு எதிராகப் பேசத் தலைப்பட்ட ஒரு நிலைமையை இலங்கை
அரசியல் வரலாற்றில் காணலாம் எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவையும் கன்னங்கராவையும்
இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகக் கூறலாம். கறுப்பர்களின் குடியுரிமை நிலைபாட்டில் அமெரிக்காவிலும்
இப்படியான நிலையே உருவானது.
1947ல் இந்திய பிரஜாவுரிமைச்
சட்டத்தின் போதும். காலந் தாழ்த்தியெனினும் 1952ல் அந்தச் சட்டத்தை எதிர்த்து இலங்கை இந்தியன் காங்கிரஸ் சத்யாக்கிரகப் போராட்டம்
நடத்தி எதிர்ப்புக் காட்டத் தொடங்கிய போதும் பெரும்பான்மைக் கட்சிகள் இந்த மக்களின்
உதவிக்கு வரவில்லை: வட புலத்து மேல்மட்ட தமிழ் அரசியல் வாதிகளும் இந்த மக்களின் போராட்டத்துக்கு
ஆதரவு காட்டவில்லை. அந்த மக்களைப் பற்றிய தமது மனிதாபிமான புரிந்துணர்வை தங்களது மனச்
சாட்சியின் அடித்தளத்தில் அந்தத் தலைவர்கள் புதைத்துக் கொள்ளத் தலைப்பட்டனர். அமெரிக்க
வரலாற்றிலும் கறுப்பின மக்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட விதத்தில் இதேவித நிலைமைதான்
என்று பேஜ் ஸ்மித் (டிசென்டிங் ஒப்பீனியன்ஸ்) குறிப்பிட்டுள்ளார்.
மொழியாலும் மதத்தாலும் ஒன்றாக இருந்தாலும் தாம் வேறுபடுத்தப்பட்டிருப்பதை
உணர்ந்த இந்த மக்கள் "இந்திய உணர்வை தம்மிடையே வளர்த்துச் கொள்ள ஆரம்பித்தனர்.
அந்த உணர்வை பயன்படுத்திய தொழிற் சங்கங்கள் வளர்ந்து வேரூன்றின.
1956ல் "சிங்களம் மட்டும்"
மசோதா எழுப்பிய மொழியுணர்வின் தாக்கத்தை மலைநாட்டுத் தமிழர் பூரணமாக உணர்ந்து செயல்படுத்த
முடியாத அளவுக்கு 1952ல் சத்தியாக்கிரகப்
போராட்டச் செயல்பாடுகள் அமைந்திருந்தன. அந்தச் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது
வடபுலத்து உயர் மட்ட அரசியல்வாதிகள் காட்டிய அலட்சியப் போக்கு மலைநாட்டுத் தமிழர்களிட்ம்
மாறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. அதையும் மீறி அரும்ப ஆரம்பித்த உணர்வுகள்
அதிகார பலத்தாலும். நியமன பதவி களாலும், ஆசை வார்த்தைகளாலும் மழுங்கடிக்கப் பட்டன. எனினும், இந்து சமயமும். தமிழ் மொழியும் யாழ்ப்பாணத்தில்
தமிழ் மக்களின் விழிப்புணர்வுக்கு உதவியதுபோல இந்திய உணர்வும் தமிழ் மொழியும் மலையகத்தில்-விழிப்புணர்வுக்கு
உதவி இருக்கின்றது.
தென்னிந்திய முக்கியத்துவத்தைக் குறைத்துச் சிந்திக்கும்
போக்கு யாழ்ப்பாணத்திலும் , இலங்கையிலேயே
தமது நிலைபாட்டை வேறுபடுத்தி வளர்க்கும் போக்கு மலையகத்திலும் மலர ஆரம்பித்தன, 1956ல் இலங்கை அரசியரில் மெளனப் புரட்சியாகக் கருதப்படும்
நிகழ்ச்சி அதன் தாக்கத்தை இவ்விதம் இரண்டு வகைப்பட்ட தமிழர்களிடையேயும் விட்டுச் சென்றிருக்கின்றது.
என்றாலும், இதையும் மீறிய ஒரு தாக்கத்தை
கோ. நடேசய்யரின் பக்களிப்புச் செய்திருப்பதை நோக்குதல் அவசியம்.
யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் தமிழ் வளர்த்துப் பெருமைக்குரியவர்கள் - பிரசங்கம் பண்ணுவதிலும், புத்தகங்கள் அச்சிடுவதிலும் பணியாற்றிய பல தமிழ்
சான்றோர்கள் தென்னிந்தியாவிலேயே அதிக நாட்கள் வாழ்ந்து, தொழில் புரிவதிலும் கவனம் செலுத்தியிருக்கின்ற னர். ஆறுமுகநாவலர், விபுலானந்த அடிகள், ஞானப்பிரகாச சுவாமிகள், வி.
கனகசபைப்பிள்ளை, தி. கனகசுந்தரம்பிள்ளை
என்று பலரை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இதற்கு நேர்மாறாக, தென்னிந்தியாவில் பிறந்திருந்தாலும், இலங்கையில் குடியேறி தமிழ் வளர்க்கவும், பிரசங்கம் பண்ணவும்,
நூல்கள் வெளியிடவும், பத்திரிகைகள் அச்சிடவும் முனைந்தவராக மிளிர்பவர் கோ. நடேசய்யராவார். பத்திரிகைப்
பணியில் எச். நெல்லையா, வ. ரா. என்ற
தென் இந்தியர்கள் இலங்கையில் ஆற்றி பதிலும் பார்க்க நடேசய்யர் சிறப்பாகச் செய்திருக்கின்றார்.
அவர்கள் இருவரும் பணியாற்றிய "வீரகேசரி" நிறுவனம் தனிப்பட்ட ஒரு முதலாளிக்குச்
சொந்தமாயிருந்ததும், அதன் கட்டுப்பாட்டுக்குள்
அவர்கள் பணியாற்ற நேர்ந்ததும் அதற்குக் காரணமாயமைந்தன. வீரகேசரியில் சேர்ந்து பணி யாற்றிய
ஆசிரியர்கள் இந்தியாவிலிருந்து தேயிலைத் தோட்டத்துக் கூலியாட்களைச் கங்காணி ஆள் பிடித்துக்
கொண்டது போல சேர்க்கப்பட்டார்கள் என்று புதுமைப் பித்தன் கூறியது இதனாலேயாம் (புதுமைப்பித்தன்
ரகுநாதன்)
இலங்கையில் தமது நிலைப்பாட்டை வேறுபடுத்தி வளர்க்க முனைந்த
மலையகத் தமிழர்களிடையே நடேசய்யரை ஒத்த ஆற்றல் மிகுந்த இன்னொருவர் இல்லாத நிலையில்
(1947 ல் அவர் மரணமாகியிருந்தார்) தென்னிந்தியாவிலிருந்து
வெளி வருகின்ற சஞ்சிகைகளும், புத்தகங்களும்
ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. தென்னிந்தியாவில் விசாலித்து வளர்ந்த திராவிட இயக்கத்தினரின்
கருத்துக்களும் படைப்புக்களும் இலங்கைத் தமிழர் பலராலும் ஆதரிக்கப்பபட்டன.
1956ல் அறிமுகப்படுத்தப்பட்ட
தாய்மொழி மூலக் கல்வியின் காரணத்தால் இயல்பாகவே இலங்கையில் தமிழில் ஆர்வம் காட்டுபவர்களின்
தொகையும் வளர்ந்தது. இலங்கை மலைத் தோட்டப் பகுதிகளில் திராவிடக் கருத்துக்களில் லயித்தவர்கள்
உருவானர்கள். தமிழில் ஈடுபாடு காட்டும் மனிதர்களும், மன்றங்களும் ஏடுகளும் தோன்றலாயின. ஐம்பதுகளில் மலை நாட்டில் ஏறக்குறைய முப்பது
பத்திரிகைகள் தோன்றி மறைந்ததாகக் கூறக் கூடியதாயிருக்கின்றது. இதில் குறிப்பிட்டுச்
சொல்லப்பட வேண்டிய அளவுக்கு பாரிய பணி ஆற்றியவர் டி. எம். பீர்முகம்மது என்பவராவார்.
தோட்டப் பகுதிகளில் தொழிற் சங்கத் துறை யில் ஆதிக்கம்
செலுத்திய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரசார பீரங்கியாக வர்ணிக்கப்பட்ட இவர் எழுத்திலும்.
மேடைப் பேச்சிலும் தென்னிந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தினரினைப் பல வழிகளிலும் பிரதிபலித்தார்.
அவர்களது சமூக, சமூதாயக் கருத்துக்களை
அதே வேகத்தில் தோட்டப்புறங்களில் பரப்புவித்தார்.
மலைநாட்டில் புத்தக உருவில் வெளி வந்த முதல் குறுநாவல்
இவர் எழுதிய "கங்காணி மகள்" என்ற படைப்பே ஆகும். இவரது தொழிற் சங்கப் பிரசாரம்
தோட்டங்களில் நடைபெற்றது. மலைநாட்டு நகரப் பாடசாலைகளில் அப்போது மிக விமரிசையாகக் கொண்டாடப்படும்
தமிழ் விழாக்களில் இவர் பிரதம பேச்சாளராக அழைத்துக் கெளரவிக்கப்பட்டார். மு. கருணாநிதி, வி. ஆசைத்தம்பி, அண்ணாதுரை ஆகியோர் எழுதிய நாடகங்கள் தோட்டங்களில் விரும்பி மேடையேற்றப்பட்டன.
போதாதற்கு அதே பாணியில் அமைந்த நாடகங்களை இலங்கையில் எழுதுபவர்களும் அரவணைக்கப்பட்டார்கள்.
எம். ஏ. அப்பாஸ் "கள்ளத்தோணி" "துரோகி” என்ற நாடகங்களை
எழுதினார். கள்ளத்தோணி முதற் பதிப்பு அச்சாகி ஒரே மாதத்தில் முழுவதும் விற் பனையாகி
சரித்திரம் படைத்தது. இரண்டாம் பதிப்பு மூன்றாம் பதிப்பு,
நான்காம் பதிப்பு ஆகிய அனைத்தும் ஒரே வருடத்தில் வெளியானது. இப்போது
நினைத்தால் நம்பமுடியாத ஒரு நிகழ்ச்சியாகும்.
மலையகத்தில் நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி
ஏற்பட்டது இந்தக் காலப்பகுதியில் தான். நவீன முறைகளில் நாடகத்துறையில் ஏற்பட்டு வரும்
மாற்றங்களை மலையகத்திலுள்ளவர்களும் கையாளத் தொடங்கினர். படிப்பறிவு குறைவாக இருந்த
மலையகத்தில் வெகுநீண்ட காலமாக பார்த் தறிவு மக்களின் பரிபூரண ஆதரவைப் பெற்றிருந்தது.
தங்களது சமய புராண சம்மந்தமான நாடகங்களைத் தோட்டங்கள் தோறும் கற்று வந்திருக்கின்றனர்.
இரண்டாம் மகாயுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில்கூட மாத்தளை பகுதியில் வாழ்ந்தவர்கள் மாத்தளை
ஸ்டார் தியேட்டரில் ஒரு நாடக விழாவையே ஏற்பாடு செய்திருந்தனர். பல தோட்டங்களிலிருந்து
ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் என்று இந்த முயற்சிகளுக்கு ஆதரவாக இருந்த தோட்ட நிர்வாகி
ஒருவர் கூறியிருப்பதைக் காணலாம்.
இக்காலப் பகுதியில் பொதுவாகவே இலங்கையின் பல பகுதிகளிலும்
மரபு ரீதியாக ஒதுக்கப்பட்டிருந்தவர்களும் இலக்கிய முயற்சிகளில் ஈடுபடலாயினர். கல்வி
தராதரத்தைப் பற்றி கவலைப்படாத அளவுக்கு கம்யூனிஸ் சித்தாந்தம் அவர்களுக்கு தைரியமூட்டியது.
மொழி வழியாகத் தெரிந்தது வைத்திருந்த தி.மு.க. கொள்கைகளும் கட்சி ரீதியாக அறிந்து வைத்திருந்த்
கம்யூனிசக் கொள்கைகளும் தோட்டப் புறங்களில் ஒன்றாக இணைந்து செயல்பட்டன.
மொழியின் பேராலும், கவிஞர்கள் பேராலும் மன்றங்கள் தோற்றுவிக்கப்பட்டன. சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன
நாவலப்பிட்டி, மாத்தளை, ஹட்டன், கண்டி, நுவரெலியா, பண்டாரவளை, இரத்தினபுரி, பதுளை, எட்டியாந்தோட்டை, கேகாலை ஆகிய நகரங்களில் இதன் பிரதிபலிப்புகள் தெட்டெனத் தெரிந்தன. பதுளையில்
பாரதிகல்லூரி ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி விஜயபாரதி
தனது கணவர் சுந்தரராஜனோடு இலங்கை வந்திருந்த போது (18 -
9-1967) கண்டியில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய புதுமைப்பித்தன்
விழாவில் கலந்து கொண்டு 'பாரதியின்
பெயரால் ஒரு கல்லூரி நடத்துவது தன்னைப் பொறுத்தவரையில் ஒரு புதினமாகும். என்று குறிப்பிட்டு
மகிழ்ந்தார். 'பாரதி என்ற பெயரில் ஓர்
இலக்கியச் சஞ்சிகையை 1964ல் இலங்கையில்
நடத்த முன்னின்றவர் கே. கணேஷ் என்ற மலைநாட்டு இலக்கிய கர்த்தாவே என்பதும் கவனத்தில்
கொள்ளத்தக்கது.
1960ல் இந்த உணர்வுகள் - நகள்ப்
புறங்களில் கல்வி பெற்றதால் பெற்ற அநுபவங்களும், நகள்புறங்ளில் ஏனைய தோட்ட மக்களோடு இணைந்து பெற்ற அநுபவங்களும் உத்வேகம் பெற்றன.
தமிழகத்துப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்று திரும்பியிருந்த மலையகத்து இளைஞர்கள்
இதற்கு வழிகாட்டினர்.
தமிழகத்துணர்வுகளை பத்திரிகைகளில் மாத்திரமே கண்டு வந்த
பலர், அந்த உணர்வுகளில் திளைத்து வளர்ந்து
வந்தவர்களின் பின் அணி திரள்வாராயினர். மலை நாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் என்ற ஓரியக்கம்
இவர்களை ஒன்றிணைத்தது. அதனோடு இணைந்து பணியாற்றிய பலரும் பல்வேறுபட்ட அரசியல் அணிகளில்
பிரிந்திருந்தனர் எனினும் சமூக நல்வாழ்வுக் கண்ணோட்டத்தில் அவர்களை ஒன்றுசேர்ந்து பணியாற்றினர்.
இந்த விழிப்பால் உந்தப்பட்டவர்கள் அறுபதுகளில் மலைநாட்டின்
விழிப்புணர்ச்சிக்குப் பல விதங்களிலும் பணியாற்றத் தொடங்கினர். அறுபதுகளில் ஏற்பட்ட
எழுச்சி இப்படி மலர்ந்த ஒன்றேயாகும்.
(நன்றி - மல்லிகை வெள்ளி விழா
மலர் 1990)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...