Headlines News :
முகப்பு » , , » எஸ்.எம்.ஜி. காலம் ஆனார்

எஸ்.எம்.ஜி. காலம் ஆனார்


இலங்கையில் மூத்த தமிழ் பத்திரிகையாளரான கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் அன்பாக அழைக்கப்பட்ட எஸ்.எம். கோபாலரெத்தினம் இன்றையத்தினம் (15.11.2017) காலை 87-வது வயதில் மட்டக்களப்பில் காலமானார்.

1930ஆம் ஆண்டு ஒக்ரோபர் 03ஆம் திகதி பிறந்தார் எஸ்எம்ஜி. தமிழ் பத்திரிகை துறையில் 1953-ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார்.

1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'ஈழநாடு' நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அதில் பணியாற்றினார்.

பின்னர் யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான " தினக்கதிர் " நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில வருடங்கள் பணியாற்றினார்.

யாழ்ப்பாணத்தில் வெளிவந்த " ஈழமுரசு "பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை 1987ம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரின் அந்த அந்த கொடுங்ககதையை பின்னர் “ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்கிற பேரில் ஒரு நூலாக வெளியிட்டிருந்தார் எஸ்.எம்.ஜி அவர்கள். அக் கட்டுரை "ஜுனியர் விகடன் " இதழில் தொடர் கட்டுரையாக வெளியாகியிருந்தன.

அவர் எழுதிய “ஈழம்: முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” என்கிற நூல் 2008இல் வெளிவந்தது. வை.கோ. அவர்கள் அதற்கு அணிந்துரை எழுதியிருந்தார். அப்போதே அவர் மிகவும் தளர்ந்தே இருந்தார். எஸ்.எம்.ஜி அவர்கள் அந்த நூலில் எழுதிய முன்னுரையின் இறுதியில் இப்படிக் குறிப்பிடுகிறார்.

“மிக வேகமாக எழுதிய கைகள் இனிமேலும் ஒருவரிக் கூட எழுத
முடியாது என உடல்நிலை மோசமாகிய போது ஒரு இளம் கவிஞர் என்னுடன் தங்கி கடைசி முப்பது பக்கங்கள் நான் சொல்லச் சொல்ல எழுதப்பட்டது.
எழுதப்படவேண்டும் என நான் எண்ணியிருந்த சில முக்கியமான சம்பவங்கள் எழுத முடியாமல் போய்விட்டன. எத்தனை நாள் அகதி வாழ்க்கையில் தவிப்பது தள்ளாத வயதில் உடல் நிலை தளர்வுற்ற போது என் தாய் மண்ணில் கால் பதிப்பது போல் இனிமையானது வேறொன்றுமில்லை என்ற உணர்வுடன் புறப்படுகிறேன்.”

ஆம் அவர் இலங்கையில் நிகழ்ந்த அரசியல் நெருக்கடி காரணமாக தமிழகத்தில் அகதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். யுத்தத்தின் பின் அவரின் ஆசைப்படி நாடு திரும்பிய போது அவர் எழுதும் இயலுமையுடன் இருக்கவில்லை.

அவர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் 2004ஆம் ஆண்டு ஜூன் 04ஆம் நாள் விருது வழங்கி கௌரவமளிக்கப்பட்டார்.

இலங்கை தமிழ் பத்திரிகை உலகில் எஸ்.எம்.ஜி அவர்கள் துணிச்சளும், ஆணித்தரமும் மிக்க கட்டுரைகளையும், ஆசிரியர் தலையங்கங்களையும்  எழுதி பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கு வீதியிலுள்ள அவரது வீட்டில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு...
Sanjith - 0778363531
Athiran - 0773112601




Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates