Headlines News :
முகப்பு » , , » துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும் (பாகம் - 1) - மு.நித்தியானந்தன்

துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும் (பாகம் - 1) - மு.நித்தியானந்தன்


மு.நித்தியானந்தன் எழுதிய "கூலித் தமிழ்" நூலில் வெளிவந்த கட்டுரைகளில் பிரதான கட்டுரையாகக் கொள்ளப்படும் "கூலித் தமிழ்" பற்றிய கட்டுரையை மூன்று பாகங்களாக பிரித்து உங்கள் வாசிப்புக்கு முன் வைக்கப்படுகின்றன. இது முதலாவது பாகம்.

 1. முதலாவது பாகம் 
 2. இரண்டாவது பாகம்.
 3. மூன்றாவது பாகம்


இலங்கையின் மத்திய மலைநாட்டில் பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்டு, அவை காலனிகளின் கொள்ளைக்காடாக மாறிய காலத்தில் தென்னிந்தியா விலிருந்து "கூலிகளாகக் கொண்டுவந்து குவிக்கப்பட்ட தொழிலாளர்கள் இக் கொடூரச் சுரண்டலுக்குப் பூரணமாக இரையாக நேர்ந்தது. குறுகிய காலத்திற் குள் லாபத்தைக் குவித்துக்கொண்டுவிடும் பேராசை வெறியைத் தவிர தோட்ட முதலாளிகளை உந்திய காரணி வேறு எதுவுமேயில்லை. இந்தத் தேர்ட்டத் துரைமாரின் கொடும் ஒடுக்குமுறையும் கடுமையான தொழில் நிலைமைகளும் குறைந்த சம்பளமும் நோயும் மரணமும் தொழில் உறவுகளைப் போராட்டக் களங்களாக மாற்றிக்கொண்டிருந்தன. தோட்ட லயங்கள் சிறைக்கூடங்களாகவே அமைந்தன.

செக்கோஸ்லவாக்கியாவின் பிராக் நகருக்குச் சற்றுத் தள்ளி டெறளின் (Terezin) என்ற இடத்தில் இனவெறி நாஸிகள் நிர்மாணித்திருந்த யூதர்களின் வதைமுகாமிற்குள் யூதக் கைதிகள் முதன்முதலில் கொண்டுசெல்லப்படும் வாசலின் மேலே அரைவட்ட வடிவில் ஒரு அறிவிப்புப் பொறிக்கப்பட்டிருக்கிறது. அதில் காணப்படும் ஜெர்மனிய மொழி வாசகங்கள் இவை:

"Arbeit macht freio"

வேலை, வேலை மட்டுமே விடுதலை’ என்பது இதன் பொருள்.

இந்த யூத வதைமுகாம்கள் தோட்ட லயங்களைத்தான் நினைவுக்குக் கொண்டு வரும். கூலிஅடிமை முறையில் வாழும் தொழிலாளர்களைப் பட்டிகளில் அடைத்து வைப்பதன் குறியீடாகத்தான் இன்றும் அந்த லயங்கள் அமைந்திருக்கின்றன. இவை ஊழியச் சிறைக்கூடங்கள்தான் (prison cells of labour) என்கிறார் டேவிட் செல்போன். லயங்களில் அடைபட்டு, மலைக்காடுகளில் வதைபட்டு, கோப்பி, தேயிலைச் செடிகளின் தூரில் புதையுண்டுபோவதே அவனது பிறவிப் பெரும்பயனாகத் தீர்க்கப்பட்டிருந்தது. இந்த அவல வாழ்வை யார் ஏற்றல்கூடும்? பொறிக்குள் வந்து சிக்கிக்கொண்டுவிட்டதை, தோட்டங்களில் வந்து கால்பதித்த கணத்திலேயே அத்தொழிலாளி உணர்ந்துகொண்டுவிடுகிறான். தொழிற்சங்கங் களோ தொழிலாளர் நலம்பேணும் வேறெந்த அமைப்புகளுமோ இல்லாத நிலையில், தோட்டங்களில் நிலவிய துரைத்தன அடக்குமுறைக்கு எதிராகத் தொழிலாளர்களால் கையாளமுடிந்த ஒரேயொரு ஆயுதம் தோட்டங்களை விட்டு ஓடிவிடுவதுதான். கோப்பித் தோட்டக் காலப்பகுதி முழுவதிலும், பின்னர் தேயிலைத் தோட்டங்களிலும் காணப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கையாக இது ஒன்றே அமைந்தது.

குதிரைகளில் பவனி வரும் துரைமார்கள், சவுக்கடிகள், தண்டனைகள் நிறை வேற்றும் கம்பங்கள், மிருகங்களைப் போல அடைக்கப்பட்ட லய வாழ்க்கை, சங்கு ஊதி ஆரம்பமாகும் வேலைகள், பெரட்டுக்களங்கள், இயந்திரம் போன்ற உழைப்பு, கையெழுத்து மங்கும்வரை மலைக்காடுகளில் வதை, வயிற்றுக்கே போதாத சம்பளம், தோட்டத்தை விட்டும் ஒட முடியாத நிலை என்று கொடுங் கோன்மை தலைவிரித்தாடிய கோப்பி யுகத்தின் ஆரம்ப காலநிலைமை இது.

கோப்பித் தோட்டங்கள் வேகமாகத் திறக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், தொழிலாளர்களின் தேவை பெருகிக்கொண்டிருந்தபோது, லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வந்து குவிந்த நிலைமையும், அதே நேரத்தில் பெருமளவு தொழி லாளர்கள் ஓடிப்போய்விடும் சூழலும் நிலவியபோது, இப்பெருந்தொகைத் தொழிலாளர்களை ஒழுங்கிற்குள்ளும் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டுவரு வதற்கான சட்டபூர்வமான முயற்சிகள் 1830களிலேயே ஆரம்பமாகிவிட்டன. குடியேற்ற நாட்டுச் செயலாளரிலிருந்து தேசாதிபதிகள், அரசாங்க ஏஜண்டுகள், மாவட்ட நீதிபதிகள், சேர்வே ஜெனரல்கள், சாலை அமைப்பு கொமிஷனர்கள் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் எல்லோருமே தோட்டங்களாய் வாங்கிக் குவித்து முதலீடுகள் மேற்கொண்டிருந்த நிலையில் தோட்டங்களை நிர்வகிப்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கமே முன்நின்று உறுதியான சட்டங்களை ஆக்க முன்வந்ததில் வியப்புற எதுவுமில்லை.

தொழிலாளர் பிரச்சினை

கோப்பி, றப்பர், தேயிலைத் தோட்டங்களில், கரும்புத் தோட்டங்களில், தங்கச் சுரங்கங்களில், தகர அகழ்வுகளிலெல்லாம் தங்கள் சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய பிரிட்டிஷ் பேரரசின் காலனித்துவ சரித்திரம் முழுவதிலுமே தொழிலாளர்களின் பிரச்சினை, மையமான பிரச்சினையாகவே இருந்திருக்கிறது. காலனி நாடுகளில், ரத்தமும் சதையும் கொண்ட மனிதஜீவன்கள் இவர்களின் ஊழிய வேட்டைக்குச் சந்தைகளாகினர். உள்ளூரில் போதுமான தொழிலாளர்கள் கிடைக்காதபோது, கடல் கடந்து-இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்து கூலிகள் குவிக்கப்பட்டனர். இந்த அடிமை ஊழியத்திற்கு எதிராக இங்கிலாந்திலேயே கிளர்ச்சி எழும்வரை இந்த நிலைமை வெளிப்படையாகவே நீடித்தது. காலணிகளில் ஆக்கப்பட்ட சட்டங்கள் அனைத்தும் இந்த அடிமைச் சுரண்டலுக்குத் துணையாகவே அமைந்தன.

முதலாம் உலகப் போருக்கு முதல் பிரிட்டிஷ் குடியேற்ற நாட்டுச் செயலகத் திடம் தொழிலாளர் சம்பந்தப்பட்ட கொள்கை என்று எதுவுமே இருக்கவில்லை. தொழிலாளர் பிரச்சினைகள் அவர்களுக்கு முக்கியமாயிருக்கவில்லை என்பது இதன் பொருளல்ல. அக்காலகட்டத்தில் குடியேற்ற நாட்டுச் செயலகம் எந்தப் பிரச்சினை குறித்துமே பொதுவான கொள்கை ஒன்றை வரைந்தளிக்கும் பழக் கத்தைக் கைக்கொண்டிருந்ததில்லை. இப்பிரச்சினைகளில் எது உகந்தது என்று தோன்றுகிறதோ அதனை முடிவெடுத்துச் செய்வதற்குரிய அதிகாரத்தைப் பெருமளவு அந்தந்த நாடுகளில் இருக்கக்கூடிய தேசாதிபதிக்கும் நிர்வாகத்திற் கும் குடியேற்ற நாட்டுச் செயலகம் வழங்கியது. சில தனி முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் மட்டுமே விசேஷமான ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் ஒப்பந்த அடிப்படை யில் தொழிலாளர்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் இவ்வாறு விசேஷமான ஆலோசனைக்குட்படுத்தப்பட்ட ஒரு விஷயமாகும்’ என்று பி.சி. ரொபர்ட்ஸ், "கொமன்வெல்த்தின் உஷ்ணவலயப் பிரதேசங்களில் தொழிலாளர் என்ற நூலில் (1) குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.

இப்பின்னணியிலேயே இந்தியாவிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் கூலி களாகத் தருவிக்கப்பட்ட தொழிலாளர்கள் சம்பந்தமான தொழிற் சட்டங் களை சேர். வில்மட் ஹோட்டன் (1831-1837), ஸ்டூவர்ட் மெக்கென்ஸி (18371841) ஆகிய தேசாதிபதிகள் தயாரித்தளித்தபோது, குடியேற்றநாட்டுச் செயலகம் இதில் தலையிட்டமையை நோக்க வேண்டும்.

முதல் தொழிற் சட்டம்

கோப்பி யுகத்தின் ஆரம்பக் கட்டத்தில் வில்மட் ஹோட்டன் தயாரித்தனுப் பிய தொழிற்சட்ட வரைவிற்கு பிரிட்டிஷ் குடியேற்றச் செயலதிகாரியான சிலெ னெல்ச் பிரபு அங்கீகாரம் வழங்கவில்லை. பிரஸ்தாப சட்டமூலம் இலங்கைக்கு வெளியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும் கணக்கில் எடுத்துக்கொண் டிருக்கிறதென்றும், தொழிலாளர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கு வதற்கு மாவட்ட நீதிமன்றங்களுக்கு இது பெரும் அதிகாரங்களை வழங்கு கிறது என்றும், தமது ஊழியர்களுக்கு எதிராக எசமானர்கள் இழைக்கும் குற்றங் களுக்குத் தண்டனை வழங்குவது பற்றி இதில் எவ்வித ஏற்பாடுமில்லை என் றும் மூன்று முக்கியக் குறைபாடுகளைக் குடியேற்றச் செயலகம் சுட்டிக்காட்டியது. (2)

இவற்றைக்கவனத்திற்கொண்டு இச்சட்டமூலத்தில் உரியதிருத்தங்கள் செய்து, மீண்டும் தங்களுக்குச் சமர்ப்பிக்குமாறு சிலெனெல்ச் பிரபு அறிவுறுத்தினார். ஹோட்டனை அடுத்துப் பதவியேற்ற ஸ்டூவர்ட் மெக்கென்ஸி தேசாதிபதி இந்த அறிவுறுத்தல்கள் எதனையுமே துளிகூடப் பொருட்படுத்தவில்லை என் பது மட்டுமல்ல, இந்தத் தொழில் ஒப்பந்த விதிகள் மீறப்படும் பட்சத்தில் அவற்றைத் துரிதமாக பைசல் பண்ணுவதற்கு அவை சிவில் நீதிமன்றத்திடம் விடப்படாமல், கிரிமினல் நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்று தோட்ட முதலாளிகளுக்கு மிகவும் அனுசரணையான, தொழிலாளர் விரோத ஷரத்து ஒன்றையும் மேலதிகமாகச் சேர்த்துக் குடியேற்றச் செயலகத் திற்கு அனுப்பினார். செயலகம் இச்சட்டமூலத்தை நிராகரித்து, திருத்தங்கள் கோரித் திருப்பியனுப்பிவிட்டது. மெக்கென்ஸிக்குப் பிறகு பதவியேற்ற சேர் கொலின் கம்பெல் தேசாதிபதி, தொழில் ஒப்பந்த விதியைத் தோட்ட முதலாளி ஒருவர் மீறும் பட்சத்தில் அவருக்கு 10 பவுண் அபராதமும், அவ் வாறு அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாதச் சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என்ற ஷரத்தையும் சேர்த்து அனுப்பிய திருத்தச் சட்டமூலம் செயலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1841ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க எஜமான்-வேலையாள் சட்டம் இதுவேயாகும். (3)

சட்ட விதிகள்

வீட்டு வேலைக்காரர் அல்லது சரீர உழைப்பு மேற்கொள்ளும் ஒருவர் அல்லது ஒரு தொழிலாளி சம்பந்தப்பட்ட சகல எழுத்து மூலமான அல்லது வாய்மொழி மூலமான ஒப்பந்தங்கள் அல்லது உடன்பாடுகள் அனைத்தும் மாதாந்தத் தொழில் ஒப்பந்தங்களாகவே கருதப்படும் என்று இச்சட்டம் வரை யறுத்தது. இந்த ஒப்பந்தத்தைச் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஒரு வார அறிவித்தலில் விலக்கிக்கொண்டுவிடலாம். அறிவித்தல் கொடுத்த பின்போ அல்லது 15 நாள் சம்பளத்தை உடனடியாக வழங்கியோ அல்லது ஒரு தரப் பினர் நன்னடத்தையுடன் செயற்படவில்லை என்று நிறுவியோ, விலக்கிக் கொண்டுவிடலாம். எழுத்து வடிவிலான ஒப்பந்தமாயின் அதிகபட்சம் ஒரு வருடத்திற்கு அது செல்லுபடியாவதுடன், பிரஸ்தாபத் தொழில் ஒப்பந்தத்தை நீக்கிக்கொள்வதற்கு ஒரு மாத கால அறிவித்தல் வழங்கப்படவும் வேண்டும். தொழிலாளி வேலைசெய்ய மறுத்தால் அல்லது தோட்டத்தை விட்டு ஓடிவிட் டால் அல்லது வேறெந்த வழிகளிலாவது ஒழுங்காய் நடந்துகொள்ளாவிட்டால் அத்தொழிலாளியின் பாக்கிச் சம்பளத்தைப் பிடித்துவைத்துக்கொள்ளவும் கடூழிய உழைப்புடனோ அல்லது கடூழிய உழைப்பில்லாமலோ அதிகபட்சம் 3 மாதச் சிறைத் தண்டனை வழங்குவதற்கும் மாவட்ட நீதிமன்றத்திற்கு அதிகாரமுண்டு. துரைமார் சம்பளத்தை ஒழுங்காகக் கொடுக்காதுபோனால் அல்லது ஒப்பந்த விதிகளை மீறினால், ஒப்பந்தப் பிரகாரம் ஒழுங்காய் நடக்காதுபோனால், தொழி லாளர்கள் அவர்களுக்கெதிரான முறைப்பாட்டைக் கொண்டுவர முடியும். துரைமார் குற்றமிழைத்தவர்களாகக் கருதப்படும் பட்சத்தில் தொழிலாளிக்குரிய சம்பளத்தை அவர் உடனடியாகச் செலுத்த வேண்டியதுடன் அவருக்கு 10 பவுண் அபராதமும், செலுத்தத் தவறினால் மூன்று மாதச் சிறைத் தண்டனையும் வழங்கப்படும்.

ஒரு பயனுமில்லை!

தொழிலாளரின் அடிப்படை உரிமையையே நிராகரிக்கும் இச்சட்டத்தில் தோட்டத் துரைமாருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இடமிருந் தாலும் எழுத்தறிவு இல்லாத, விபரஞானங்கள் எதுவுமற்ற, சட்டங்களைப் பிரயோகிக்க எந்தவித பலமுமற்ற தோட்டத் தொழிலாளர்கள் இதனால் ஒரு பயனுமடையவில்லை. ஒரு பேரரசின் வலதுகரமாகத் திகழ்ந்திருந்த தோட்டத் துரைமாருக்கு எதிராக, சமூகத்தின் மிகத் தாழ்ந்த மட்டத்தில் பஞ்சப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த தோட்டத் தொழிலாளி சட்டரீதியில் என்ன சாதித்துக் கொண்டுவிட முடியும்?

இச்சட்டம் தோட்டத் துரைமாரைப் பூரணமாகத் திருப்தி பண்ணுமளவிற்கே செயற்பட்டுக் கொண்டிருந்ததென்றும் தொழிலாளிக்கு இச்சட்டத்தைச் சுட்டிக் காட்டி, அதன்படி நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை கூறினாலும், அவர் கள் அதன் பயனை அனுபவிக்க இயலாதவர்களாகவே இருந்தனர் என்றும் கண்டி பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எஸ். கோல் பெப்பர் இச்சட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் தெரிவிக்கிறார். (4)

தோட்டத் துரைமார் தொழிலாளர்களை வழமை போலவே மோசமாக நடத்துவதை இச்சட்டம் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. தோட்டத் துரைமார் கள் சிலர், மூன்று வருஷங்கள்கூடத் தொழிலாளருக்குச் சம்பளம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். எப்போதும் பாக்கிச் சம்பளம் தோட்டத் துரைமாரின் கையில் இருந்ததால், தொழிலாளி அந்தப் பணத்தை வாங்காமல் தோட்டத்தை விட்டு வெளியேற முடியாமல் இருந்தது. துரைமாரின் முறைகேடுகளுக்கு எதி ராகத் தொழிலாளர்கள் முறைப்பாடு செய்தால், அவர்கள் அடித்துத் தாக்கப் பட்டும், தனியாகக் கவனிக்கப்பட்டும் வாயடைக்கப்பட்டனர் என்று டென் னண்ட் எழுதுகிறார். தொழிலாளி சுகமில்லாதுபோனால் அவனைக் கவனிப்பார் யாருமில்லை. அவன் பாதை வழியே செத்துக்கிடப்பது சாதாரணமாயிருந்தது. அவ்வாறு பாதை வழிகளில் செத்துக் கிடந்தவர்களை ஒருவித விசாரணையுமின்றி பொலிஸார் புதைத்துவிட்டுப் போனார்கள்.

இக்காலகட்டத்தில் தோட்டங்களை நிர்வகித்த தோட்டத் துரைமாரோ எந்த வித மனிதாபிமானமுமற்றவர்களாகவே இருந்துள்ளனர். காலப்போக்கில் கோப் பித் தோட்டத் துரைமார் என்று சொல்லிக்கொண்டு உலகத்திலுள்ள கழிசல்கள் எல்லாம் இங்கு வந்து குவிந்தன. எங்கு பார்த்தாலும் இந்த அழுகல் நாற்றமடிக்கும் கோப்பித் தோட்டத் துரைமாரின் மத்தியில்தான் நாங்களும் காலந்தள்ள வேண்டியதாயிற்று' என்று ஒரு ஆரம்பக் காலக் கோப்பித் தோட்டத் துரை ஒருவரே இவர்களைச் சகிக்க முடியாமல் இப்படி எழுதியிருக்கிறார்.

ஒரு கொலைகாரன்

ஒரு தோட்டத் தொழிலாளியை உதைத்துக் கொலைசெய்துவிட்ட தோட்டத் துரையாயிருந்த ஒரு கொலைகாரனைப் பற்றி டொனோவொன் மொல்ட்ரிச் தனது Bitter Berry Bondage என்ற நூலில் விபரிக்கிறார். (5)

மாத்தளை யட்டவத்தை தோட்டத் துரையான பில்கிங்டன் என்பவன் தான் காலையில் மலையைச் சுற்றிப்பார்க்கப் போவதற்கு முன், தனது பங்களாத் தரையைத் துப்புரவுசெய்து வைக்குமாறு கறுப்பண்ணன் என்ற தொழிலாளிக் கும், இன்னொரு தொழிலாளிக்கும் வேலை சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். பத்து மணிக்கு பங்களாவிற்குத் திரும்பிய பில்கிங்டன் வேலை இன்னும் முடியவில்லை என்று கண்டு, வேலையை நேரத்திற்கு முடிக்காவிட்டால் வேலை முடிந்த பிறகும் அங்கேயே அவர்களை நிறுத்திவைக்கப்போவதாகச் சொல்லி யிருக்கிறான். 'எங்களாலே முடிஞ்ச வேலையைச் செய்வோம். தொரையை ஏமாத்தணுமுன்னு நாங்க நினைக்கல” என்று கறுப்பண்ணன் பில்கிங்டனுக்குப் பதில் சொல்லியிருக்கிறான். ஒரு கூலி தனக்குத் திருப்பிப் பதில் சொல்லுவதைச் சகிக்க முடியாத பில்கிங்டன், ஒரு போத்தலைத் தூக்கிக் கறுப்பண்ணன்மீது எறிந்திருக்கிறான். பின் கறுப்பண்ணனைத் தலைமயிரில் பிடித்து, இழுத்துவந்து உதைத்து, சவுக்கால் விளாசியிருக்கிறான். அவன் தரையில் விழுந்துகிடக்க விலாவில் நன்கு உதைத்திருக்கிறான். பின் கறுப்பண்ணனுடைய உடுப்பைக் கழற்றிவிட்டு அவனுடைய மர்ம ஸ்தானத்தில் உதைத்திருக்கிறான். மலமும் சிறுநீரும் கழிந்தவாறு கறுப்பண்ணன் மரணமுற்றுவிட்டான். பில்கிங்டனுக்கு ஒன்றரை வருடக் கடூழியச் சிறைத் தண்டனைதீர்க்கப்பட்டது; அவ்வளவுதான்!

துரை பங்களாவிலிருந்த கொய்யா மரத்தில் பழங்களைப் பிடுங்கியதற்காகத் தோட்டத் துரைமார் சிறுபிள்ளைகளை இரத்தம் சொரிய அடித்திருக்கிறார்கள். அடி, உதைகள் என்பது மிகமிகச் சாதாரணமாக இடம்பெற்றன.

அதே நிலை!

அருட்திரு. போல் கெஸ்பர்ஸ் (6) (Rev. Fr. Paul Caspersz) அண்மையில் எடுத்துக் கூறியுள்ள, அவரே சாட்சியாக அமைந்த ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்.

இருபத்திரண்டு வயதான, வாட்டசாட்டமான தொழிலாளி ஒருவன் துரை பங்களாவின் வாசலுக்கு வெளியில் தோட்டத் துரையைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கிறான். மார்புக்கு மேல் கைகளைக் குறுக்காகப் போட்டபடி பவ்வியமாக நிற்கிறான். என்னவோ தெரியவில்லை. அவன் அப்படி நின்று கொண்டிருந்தது துரைக்கு எரிச்சலை ஏற்படுத்திவிட்டது போலும்.

"பெரிய தொரையிடம் இப்படியா நின்று பேசறது ? கையைக் கீழே போடுடா, Gaig LD6)/Gaotl You son of a bitch' என்று துரை கத்தினார்.

அந்த இளைஞன் வெலவெலத்துப்போய்க் கைகளைக் கீழே போட்டான். "ஏன் தொரை என்னைப் பேசlங்க? சாகக் கெடக்கிற எங்க அப்பாவுட்டு ரேசன் கார்டை வாங்கத்தான் நான் வந்தேன்’ என்று அவன் தளதளத்த குரலில் சொன்னான்.

அன்றிலிருந்து இன்றுவரை தொழிலாளர்களை மனிதராகவே கருதாமல் இழி வாக நடத்தும் போக்கு துரைத்தனத்தின் ரத்தத்தில் ஊறிப்போயிருந்திருக்கிறது. இத்துணை வளர்ச்சி கண்ட இன்றே இம்மாதிரி நிலைமைகள், யதார்த்தமாய் நடைபெறுமெனின் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நிலைமை எவ்வளவு குரூரமாக இருந்திருக்கும் என்பதை நாம் அனுமானித்துக்கொள்ள முடியும்.

கோப்பி யுகத்தில் 1841 இலிருந்து 1862ஆம் ஆண்டுவரையிலான 21 ஆண்டு காலப் பகுதியில் தொழிலாளர்களின் நலன் கருதி 12 சட்டங்கள் அமுலாக்கப்பட் டன என்று கூறப்பட்டாலும், தோட்டங்களின் கஷ்டம் தாங்காது, தோட்டங் களை விட்டு ஓடும் தொழிலாளர் தொகை அதிகரித்துக்கொண்டேவந்திருக்கிறது. "துரைமாரிடம் வேலைக்கு வராமல் ஒளிந்து தோட்டங்களை விட்டு ஓடி விடும் கூலிகளின் பிரச்சினை எல்லோரையும் பாதிக்கின்ற, பாரதூரமான பிரச் சினையாகும். இது ஒவ்வொருநாளும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. என் னவோ பண்ணி, இதற்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும்” என்று கூலிகளும் வாரண்டுகளும்’ (Coolies and Warants) என்ற தலைப்பில் Examiner பத்திரிகையில் வெளியான கடிதம் வேண்டுகிறது. (7)

பெரி. சுந்தரத்தின் உரை

அப்போது நடைமுறையிலிருந்த இந்தத் தொழிற் சட்டம்’ எத்தகையது என்பது பற்றி பெரி. சுந்தரம் (8) பின்வருமாறு கூறுகிறார்:

"சிலோன் வேலையாட் சட்டம் என்பது 1865ஆம் வருஷத்தில் பிறந்த சட்ட மாகும். இதில் சிவில் ஒப்பந்த நிபந்தனைகளெல்லாம் கிரிமினல் குற்றமாகப் பாவிக்கப்பட்டு அபராதம், காவல், கூலியிழத்தல் போன்ற தண்டனைகளை விதிக்கக்கூடியதாக இருக்கிறது. வேலையில் சற்றுக் கவனக் குறைவு, சோம்பல், வேலைக்கு அரைநாள், கால்நாள் வராமலிருப்பது, கையசைப்பது, தலை யசைப்பது போன்ற அறிவின்றிச் செய்யும் பாவனைகள் போன்ற சிற்சிறிய செய்கைகளும் கிரிமினல் குற்றமாகப் பாவிக்கப்பட்டு வேலையாட்களைத் தண்டனைக்குள்ளாக்குகிறது.
"இங்கு தோட்டக்காரர்களுக்கும் வேலையாட்களுக்குமுள்ள சம்பந்தம் ஆதி காலத்தில் ரோம், கிறீஸ் நாடுகளில் எஜமானனுக்கும் அடிமைக்கும் உள்ள சம்பந்தத்திற்கு ஒப்பாகியிருக்கிறது. அல்லாமலும் ரோமர்கள் இங்கிலாந்தின் பேரில் படையெடுத்து அங்குள்ள பிரிட்டிஷார்களைக் காப்புச் சுரங்கங்களைக் கட்டவும் ரஸ்தாக்களைப் போடவும் காலில் தாளிட்டு நிர்ப்பந்தப்படுத்தியதை நமது ஞாபகத்திற்குக் கொண்டுவருகிறது. இது போலவே இங்கிலாந்தில் முத லாவது எட்வர்டு அரசர் காலத்திலும் பெரிய பூஸ்திக்காரர்கள் நாட்டில் பிச்சைக் காரர்களைக் குறுக்குகிறோம் என்பதாகப் பாவனை காட்டி வறுமையால் வருந்தும் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி வேலைவாங்கி வந்தார்கள். சிலோனிலிருக்கும் கூலியாட்கள் சம்பந்தமான சட்ட நிபந்தனைகள் 4ஆவது ஜோர்ஜ் மன்னர் காலத்தில் 1823இல் வரையப்பட்டு, 1875இல் ரத்துசெய்யப் பட்ட ஸ்டாட்டியூட்டில் கண்டிருக்கும் நிபந்தனைகளாகும்.
"இந்த 1823ஆம் வருஷத்திய நிபந்தனைகள் இங்கிலாந்து குடியேறினதும் வெற்றி கொண்டதுமான நியூசௌத் வேல்ஸ், விக்டோரியா, பீஜி, ஜமைக்கா, பிரிட்டிஷ் கினியா, மலேயா, இலங்கை முதலிய இடங்களில் ஏற்படுத்திய தொழிற் சட்டங்களில் புகுத்தப்பட்டுள்ளன. இந்த நிர்ப்பந்தங்கள் சில வரு ஷங்களாக மற்ற இடங்களில் எடுக்கப்பட்டுவந்தபோதிலும், இலங்கை மாத் திரம் இந்த நிர்ப்பந்தங்களை நீக்கப் பயமின்றி ஒப்பற்று நிற்கிறது. நமது சட்டம் போலவே இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கூலியாள் சட்டத் திலும்கூட மஜிஸ்ட்ரேட் ஓர்டரை நிராகரிப்பதற்குத்தான் தண்டனையே யொழிய ஒப்பந்த நிபந்தனைகளுக்கு மீறி நடக்கிறவர்களுக்குத் தண்டனை கிடையாது. இந்தச் சட்டத்திலும் அறியாக் கூலிகள் செய்யக்கூடிய சிறு பிழை களுக்குத் தண்டனை விதிக்கக்கூடியதான நியாயங்களையும் எடுத்துவிட வேண்டுமென்று சென்னை கவர்ன்மெண்டும் இந்திய கவர்ன்மெண்டும் முயன்று வருகிறார்கள். (9)
சில உதாரணங்கள்

இலங்கை தேசிய காங்கிரஸில் பெரி. சுந்தரம் ஆற்றிய உரையில் கூலிகள் இழைக்கும் சிறு தவறுகளுக்கும் சரீர தண்டனை விதிக்கப்படுவதற்குச் சில உதாரணங்கள் எடுத்துக்காட்டுகிறார்:

1. பதுளையில் ஒரு கூலி, தோட்டக்காரனிடம் பற்றுச்சீட்டுக் கேட்க, கூலி மரியாதையின்றியும் உத்தரவுக்கு மீறியும் நடந்துகொண்டதாகக் கூலியைக் குற்றஞ் சாட்டினார். கூலிக்கு 3 மாதம் காவல் தண்டனை கிடைத்தது. நோட்டீஸ் காலம் முடிந்த பிறகு கூலி தன் பெண்டு, பிள்ளைகளுடன் தோட்டத்தை விட்டுப் புறப்பட, தோட்டக்காரன் காவலாளிகளை ஏவி விட்டுக் கூலியைக் குடும்பசகிதமாக இரண்டு பகலும் இரண்டு இரவும் பட்டினிபோட்டுவிட்டான். இதற்காகத் தோட்டக்காரன் மீது கூலி தாவா செய்ய, தோட்டத்துரைக்கு ரூபா 15 அபராதம் விதிக்கப்பட்டது.

2. மாத்தளையில் ஒரு கூலி பற்றுச்சீட்டுக் கேட்க, தோட்டக்காரன் மறுத்து விட்டதனால், அந்தக் கூலி ஒரு நாள் வேலையை விட்டுப் புரொக்டரிடம் நோட்டீஸ் கொடுக்கச் செல்ல வேண்டியதாயிற்று. ஒரு நாள் வேலைக்கு விலகி நின்றதற்காகத் தோட்டக்காரன் அந்தக் கூலியைக் கட்டிவைத்து 12 பிரம்படி அடித்தான். தோட்டத்துரையின் பேரில் கூலி துன்பத்திற்குத் தாவா கொண்டுவர, போலிஸ் மஜிஸ்ரேட் எதிரியை விடுதலைசெய்து, பொய்ப் பிராது கொண்டுவந்ததற்காகக் கூலிக்கு அபராதம் விதித்தார்.

3. ஒரு தோட்டத் துரைக்கு நல்ல கெளரவமுள்ள ஒரு தலைமைக் கங்காணியின் பேரில் அதிருப்தி வர, கூலிகளுக்கெதிரே அத்தலைமைக் கங்காணியை மண்டி யிட்டு மாடுபோல நடக்கும்படி கட்டாயப்படுத்தினான். 

4. பதினான்கு வயதுள்ள ஒரு கூலிப் பெண் பாத்திரம் கழுவாததனால், தோட் டத் துரை அப்பெண்ணை நிர்வாணமாக்கி முதுகில் பிரம்படி அடித்தான். இந்த மானக்குறைவான தண்டனைக்குப் பதிலாக அப்பெண் உயிர்விடச் சம்மதிக்க மாட்டாளா? (10)

முனியம்மாவின் சாட்சியம்

கூலிகள் வேலைசெய்யப் போகாவிட்டாலோ அல்லது தோட்டத் துரை மாரின் அனுமதியின்றித் தோட்டத்தை விட்டு வெளியில் போனாலோ பிரஸ் தாப சட்டமானது கடுந்தண்டனைகளை விதிக்கிறது.

கருணையினால் கூலிகளுக்குத் தங்கள் வீட்டில் இடங்கொடுப்பவர்களுக்குக் கூடத் தண்டனை வழங்கப்படுவது ஏன்? என்று கருமுத்து தியாகராச செட்டியார் கேட்கிறார்.

இலங்கைத் தோட்டங்களில் இந்தியத் தொழிலாளர் என்ற தலைப்பில் மேஜோரி பேங்ஸ் அறிக்கையைக் கடுமையாக விமர்சிக்கும் தனது பிரசுரத்தில் கருமுத்து தியாகராச செட்டியார் Ceylonese பத்திரிகையில் (30.01.1917) வெளியான ஒரு சம்பவத்தை உதாரணம் காட்டுகிறார்.

முனியம்மா என்பவரின் நேர் சாட்சியத்தின்படி ஒரு பெண் தொழிலாளி ஒருநாள் வேலைக்குப் போகாததற்காக, லயத்துக்கு வந்த ஆப்கான் காவற்காரன் அவளிடம் சென்று, ஏன் வேலைக்குப் போகவில்லை என்று கேட்டான். அதற்கு அப்பெண் தான் மறுநாள் வேலைக்குப் போவதாகத் தெரிவித்திருக்கிறாள். அதற்கு அந்தக் காவற்காரன் துப்பாக்கியை எடுத்து அப்பெண்ணைச் சுட்டுக் கொன்றுவிட்டு ஓடிவிட்டான். ஏனைய தொழிலாளர்கள் அந்தக் காவற்கார னைப் பிடித்து நிர்வாகத்திடம் கையளித்தார்கள். கறுப்பாயி, மாரியம்மா ஆகிய நேர் சாட்சியங்களும் இதே கதையைத்தான் தெரிவித்தார்கள். வழக்கில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஆப்கான் காவற்காரனை துரைமார்களாலான ஜூரிகள் கொலைக்குற்றத்திலிருந்து நீக்க, அஜாக்கிரதையாக நடந்துகொண்டதற்காக நீதி மன்றம் அவனுக்கு நூறு ரூபா அபராதம் விதித்தது.

கேவலமல்லவா?

அடிமைத்தனத்தைவிடக் கேவலமல்லவா?’ என்ற தலைப்பில் "வர்த்தக மித்திரன்’ பத்திரிகையில் (11) நடேசய்யர் பின்வரும் உதாரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்:

"கம்பளையைச் சேர்ந்த கட்டபூலா எஸ்டேட்டில் வேலைசெய்துவந்த பழனி என்பவன் தன் வேலையைச் செய்ய மறுத்ததாக, தோட்டத்து சூப்பிரண்டெண் டால் குற்றம் சாட்டப்பெற்று கம்பளை பொலிஸ் கோர்ட்டார் முன்பாக விசா ரணை செய்யப்பட்டான். தான் வேலைசெய்யவில்லையென்று அந்தக் கூலி ஒப்புக்கொண்டதன் பேரில் ஒரு மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட் டான். தான் கூடிவரத் தொழில் செய்வதற்கென கங்காணியால் அழைக்கப்பட்டு வந்தவனென்றும், கூலி வேலை செய்ய முடியாதென்று வாதித்தும் பிரயோஜனப் படவில்லை. இதைவிடக் கேவலமான சட்டம் வேறுண்டோ? ஒருவருக்கொருவர் வேலைசெய்ய மறுப்பதைத் திருட்டு முதலிய ஈனக் குற்றங்களைப் போல் தண்டிப்பது சரியல்லவே? என்று நடேசய்யர் குறிப்பிடுகிறார்.

நேரம்

கிராமிய விவசாயப் பின்னணியிலிருந்து கோப்பி, தேயிலைத் தோட்டங் களுக்குத் தொழில்புரிய வந்த தொழிலாளர்களின் கண்முன்னே விரிந்த உலகம் குரூரமாயிருந்தது. கட்டுப்பாடுகளும் கண்டிப்புகளும் தண்டனைகளும் வித்தியாச மானவையாயிருந்தன. தொழில்முறையே அவர்களுக்கு மிகப் புதியதாயிருந்தது.

இந்தியாவில் கிராமத்து வாழ்க்கையில் விவசாய நடவடிக்கைகளாக இருந் தாலென்ன, வேறு கிராமத்துக் கட்டுமான வேலைகள் போன்ற உற்பத்தி நட வடிக்கைகளாக இருந்தாலென்ன, இவை அனைத்துமே சமூகத்திற்குரிய ஒரு பிரஜையின் கடமைப்பாடுகள் என்ற வகையில் சமூகத்தின் ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஒரு கூறாகவே நோக்கப்பட்டன. இந்தக் கூட்டுச் சமூக வாழ்வில் உற்பத்தித் துறைக்குள்ள கடுமையான வேலை, நேரக் கட்டுப்பாடு என்று எதுவும் இருப்பதில்லை. ஒரு நாளில் எவ்வளவு வேலை செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது பற்றிய கறாரான வரையறைகள் எதுவுமில்லை. கிராமத்தில் கைவினைத்திறன் கொண்டவர்களுக்கும் அல்லாதாருக்குமிடையிலான சமூக அந்தஸ்து வேறுபாடுகள் எதுவுமில்லை. வேலை நேரம்,தனது சொந்த நேரம்பற்றிய பேதம் கிராமிய மக்கள் அறியாதது. மிஷேல் ஃபூக்கோ கூறும் ஒழுங்கு நேரம்’ என்பது தோட்டத் தொழிலாளர்களின் இதுகாலவரையிலான வாழ்க்கையில் மிகமிக அந்நியத்தன்மை கொண்டது. இந்த நேரம் குறித்த கருத்து அவர்களின் மனதிலே எப்படித் தேங்கிநின்றது என்பதை மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் எடுத்து விளக்குகின்றன.

பத்து மணி நேரத்திலே
பழம் எடுக்கும் வேளையிலே
பாவி கணக்கப் புள்ளே
பத்து ராத்த போடுறானே
எண்ணிக் குழி வெட்டி
இடுப்பொடிஞ்சி நிக்கயிலே
அஞ்சு மணியாச்சு
ஐயா வர நேரமாச்சு
முந்நூறு ஆளுக்குள்ளே
முள்ளுக்குத்தும் என் சாமி
நானூறு ஆளுக்குள்ளே
நடுவே நிற்கும் துலுக்கக் குட்டி
மலைநாட்டு மக்கள் பாடல்கள் (12)
பாலு மரம் வெட்டலான்னு
பழைய கப்பல் ஏறி வந்தேன்
நாப்பத்தைஞ்சி காசைப்போட்டு
நட்டெலும்பை முறிக்கிறானே
முப்பத்தைஞ்சி காசைப்போட்டு
முட்டெலும்பை முறிக்கிறானே

மலையக வாய்மொழி இலக்கியம் (13)

நேரம், நிறை, எண்ணிக்கை என்ற அளவுகளின் ஆட்சியில் குமைந்துபோன தொழிலாளர்களின் மனநிலையை இவை பிரதிபலிக்கின்றன.

தோட்டத் துரை, நிர்வாகம், கண்டிப்புத் தோரணைகள், கஷ்டமான தொழில் நிலை அனைத்தும் அவர்கள் சற்றும் விரும்பாத விரோதச் சூழ்நிலைகளாக இருந்தன.
கொங்காணி போட்டு பழக்கமில்லை
கொழுந்தெடுத்தும் பழக்கமில்லை
சில்லறை கங்காணி சேவுகமே எங்கள
சீமைக்கு அனுப்புங்க சாமி சாமி
என்று தோட்டங்களில் அவர்கள் இறைஞ்சிநிற்கும் கோலம் நம் நெஞ்சைத் தொடுகிறது.

"கூலிகள் தங்களின் எஜமானர்களுக்காக உலகத்தின் கடைக்கோடிவரைகூடப் போய்வரத் தயாராயிருக்குமளவுக்குத் தங்களின் எசமானர்கள்மீது அன்பு கொண் டிருக்கிறார்கள் என்று நான் சொன்னால், அது ஒன்றும் மிகையாகச் சொன்ன தாகாது’ என்று பிரெடரிக் லூயிஸ் எழுதிச்செல்லுகிறாரெனின், காட்டில் தன்னிச் சையாகத் திரிந்த விலங்குகளைப் பிடித்துக் கூண்டிலிட்டு அடைத்து, வதைத்துப் பின் எசமான் சொல்வதற்கெல்லாம் ஓடிவந்து பணிவுடன் செயற்படப் பழக்கப் படுத்தும் பாங்கிணைத்தான் அது பிரதிபலிக்கிறது என்றே கூற முடியும்.
கூடை எடுத்ததில்ல நாங்க
கொல்லிமல பார்த்ததில்ல
கூடை எடுக்கலாச்சு நாங்க
கொழுந்து மல பார்க்கலாச்சு
என்று ஏங்கிய எம் பெண்கள்,
அடி அளந்து வீடு கட்டும் நம்ம
ஆண்ட மனை அங்கிருக்க
பஞ்சம் பொழைப்பதற்கு
பாற்கடலை தாண்டி வந்தோம்
பஞ்சம் பொழைச்சு நம்ம
பட்டணம் போய் சேரலியே
கப்பல் கடந்து
கடல் தாண்டி இங்க வந்தோம்
காலம் செழிச்சு நம்ம
காணி போய் சேரலியே  (14)
என்று விட்டு வந்த மண்ணை நினைத்து விம்மியழுவதை நினைக்கையில் எந்த நெஞ்சுதான் பதறாது?


உசாத்துணை:
 1. B.C. Roberts. 1964. Labour in the Tropical Territories of the Commonwealth, London: G. Bell.
 2. K. M. de Silva. 1965. Social Policy and Missionary Organizations in Ceylon 1840-1855. London: Longmans, Green and Co.
 3. Ceylon's Service Contracts Ordinance No. 5 of 1841, better known as the Master and Servants Law. மேலும் விபரங்களுக்கு பார்க்க: Michael Roberts. 1965. The Master - Servant Laws of 1841 and the 1860's and Immigrant Labour in Ceylon. The Ceylon Journal of Historical and Social Studies, January - December 1965. Vol 8, Nos 1 & 2.
 4. K.M. de Silva, 1965. Social Policy and Missionary Organizations in Ceylon. 1840-1855. London: Longmans, Green and Co. Page 251.
 5. Donovan Moldrich. 1988. Bitter Berry Bondage, Srilanka, Kandy: Co-ordinating Secretariat for Plantation Areas, Page 89.
 6. " அருட்திரு. போல் கெஸ்பர்ஸ் இனங்களுக்கிடையிலான நீதிக்கும் சமத்துவத்திற்குமான guidish Graip Movement for Inter Racial Justice and Equality (MIRJE) -அமைப்பை நிறுவியவர். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக Voice of the Voiceless என்ற ஆங்கில சஞ்சிகையை வெளியிட்டவர். A New Culture for New Society:Selected Writings 1945-2005 என்ற தலைப்பில் இவரது கட்டுரைகளின் தொகுப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
 7. Examiner, 30 December 1862.
 8. பெரி. சுந்தரம் (1890 - 1957) மலையகத்தில் பிறந்து, இங்கிலாந்தில் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் பயின்று, சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டமும் பெற்று இலங்கை வாழ் இந்தியர்களின்மூத்த கல்விமானாகத் திகழ்ந்தவர். இலங்கையின்முதல் அரசாங்க கவுன்சிலில் தொழிலாளர், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராகச் சேவையாற்றியவர். இலங்கை இந்திய காங்கிரஸின் முதல் தலைவராகத் திகழ்ந்து, மலையக மக்களின் பிரச்சினைகளை பிரதமர் நேருவிடம் எடுத்துரைத்து, தீர்வுகாண முயன்றவர். இலங்கைத் தொழிலாளர்களின் சேமநல லீக்கின் ஸ்தாபகர்களில் ஒருவராவார்.
 9. வர்த்தக மித்திரன், 11 ஜனவரி 1920.
 10. வர்த்தகமித்திரன், 18 ஜனவரி 1920.
 11. வர்த்தகமித்திரன், 8 பிப்ரவரி 1920.
 12. ஸி.வி. வேலுப்பிள்ளை. 1983. மலைநாட்டு மக்கள் பாடல்கள். சென்னை கலைஞன் பதிப்பகம்.
 13. சாரல்நாடன். 1993. மலையக வாய்மொழி இலக்கியம். சென்னை சவுத் ஏசியன் புக்ஸ்.
 14. சி.வே. ராமையா, வீரகேசரி (ND)1963
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates