நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் வழங்கிய செவ்வி
நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியதா?
நிச்சயமாக. நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கை நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த விடயம். எனினும் அதனை பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் பேசி அரசியல் அணுகுமுறைகளின் ஊடாக சாத்தியமான தீர்வை நோக்கி வலியுறுத்தி ஒரு வரலாற்று வெற்றியினை பதிவு செய்துள்ளோம். உண்மையில் பிரதேச செயலகங்களின் அதிகரிப்பின் ஊடாக பிரதேச சபைகளின் அதிகரிப்பு இடம்பெறும் என்கின்ற எதிர்பார்ப்பே எல்லோரிடமும் இருந்தது. அது தான் பொது நியமும் கூட.
2016ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நான் முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையை 12ஆக உயர்த்த வேண்டும் என்பதுதான். அதே நேரம் புவியியல் காரணங்களின் அடிப்படையில் அது 15 ஆக உயர்த்தப்படுவதன் தேவையையும் நியாயப்பாடுகைகளையும் கூட சபையில் விளக்கியிருந்தேன். எனது பிரேரணைக்கு பதிலுரை ஆற்றிய அமைச்சர் வஜிர அபேவர்தன தனக்கு நுவரெலியா மாவட்ட செயலாளர் அனுப்பியிருக்கும் கோரிக்கையில் ஐந்தாக (5) இருக்கும் பிரதேச செயலகங்களை பத்தாக (10) அதிகரிக்குமாறு கோரியே முன்மொழிவுகளை தந்திருப்பதாகவும் அதனை நிறைவேற்றுவதற்கு உடன்படுவதாகவும் எனது முன்மொழிவான 12க்கான நியாயத்தை புரிந்துகொள்வதாகவும் அதனை அடுத்த எல்லை மீள்நிர்ணயத்தின் பின்னர் உறுதிசெய்யலாம். என்பதாகவுமே சொல்லியிருந்தார்.
இந்த நிலையிலேயே பிரதேச சபைத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறைமையின் ஊடாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது அதற்கு முன்பதாக பிரதேச சபைகளை அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை தமிழ் முற்போக்குக் கூட்டணியாக நாங்கள் அரசியல் மட்டத்தில் முன்வைத்தோம்.
புதிய தேர்தல் முறை தொடர்பாக 2012 ஆம் ஆண்டே சட்டம் கொண்டு வரப்பட்டிருந்தாலும் அதில் காணப்பட்ட எல்லை மீள்நிர்ணய குறைபாடுகளை சரி செய்யும் நோக்கோடு கலப்பு விகிதாசாரத்தை 70:30 இலிருந்து 60:40 ஆக மாற்றுவதற்கு அரசியல் மட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது நுவரெலியா மாவட்ட பிரதேச சபைகளின் அதிகரிப்பு தொடர்பான எமது கோரிக்கை நிறைவேற்றப்படல் வேண்டும் என்பதில் எமது கூட்டணி உறுதியாகவிருந்தது. அது தொடர்பான கூட்டங்களின்போதெல்லாம் நாம் இதனை அரசியல் ரீதியாக வலியுறுத்தினோம்.
ஒரு கட்டத்தில் ஆளும் கட்சி கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இந்த கோரிக்கையை தேர்தல்களுக்கு பின்னர் நடைமுறைப்படுத்தலாம் என முடிவெடுக்கப்பட்டபோது அதில் கலந்துகொண்ட எமது கூட்டணி தலைவர் மனோகணேசன் அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறி எதிர்ப்பைத் தெரிவித்ததுடன் பிரதித்தலைவர் திகாம்பரம் தொடர்ந்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு எமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தும் தந்திரோபாயமான அரசியல் அணுகுமுறைகளின் ஊடாக எமது ஆளுமைகளை கையாண்டு ஜனாதிபதி, பிரதமரை இது விடயத்தில் நேரடியாக தலையிடச் செய்தோம்.
அவர்களின் உத்தரவின்பேரில் அமைச்சர் பைசர் முஸ்தபா எமது கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பயனாகவே அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. நாங்கள் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருமே கூட்டாக அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டதுடன் எமது ஒருமித்த கோரிக்கையாக நுவரெலியா பிரதேச சபைகள் 12 ஆக உயர்த்தப்பட வேண்டும் எனும் கோரிக்கையை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் முன்வைத்தோம். இந்த கட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட எமது கூட்டணியின் அரசியல் வியூகமே வெற்றியை பெற்றுக்கொடுத்தது.
கோரிக்கை 12 ஆக இருக்கையில் 4 தானே புதிதாக கிடைக்கப் பெற்றிருக்கிறது இதனை முழுமையான வெற்றியாக கொள்ள முடியுமா?
நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் தற்போதைய எண்ணிக்கை ஐந்து(5). அதனை மேலும் 7 அதிகரித்து பன்னிரண்டு ஆக உயர்த்தப்படவேண்டும் என்பதுதான் எமது கோரிக்கை. இப்போது 7 மேலதிக கோரிக்கையில் 4 புதிதாக கிடைத்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இன்னும் கிடைக்கப்பெற வேண்டியது 3 மாத்திரமே. தவிரவும் ஏற்கனவே பிரதேச செயலக அதிரிப்பு முன்மொழிவாக மாவட்டச் செயலகம் அனுப்பியிருந்த கோரிக்கையில் ஐந்தினை பத்தாக உயர்த்தவே கோரப்பட்டிருந்தது. அதன்படி இப்போது இருக்கின்ற 5 னையும் இவ்விரண்டாகப் பிரித்து 10 ஆக உயர்த்துவதே அந்த யோசனையாகும். அதன்படி பார்த்தால் தலா இரண்டு லட்சத்துக்கு அதிகமான சனத்தொகையை கொண்ட அம்பகமுவை, நுவரெலியா ஆகிய இரண்டும் மேலதிக ஒன்றை மாத்திரமே பெற்றிருக்கும்.
அம்பகமுவை பிரதேசசபை - அம்பகமுவை, நோர்வூட் என இரண்டாகவும் நுவரெலியா பிரதேச சபை நுவரெலியா – தலவாக்கலை என இரண்டாகவும் மாத்திரமே பிரிக்கப்பட்டிருக்கும். ஆனால், நாங்கள் அம்பகமுவைக்குள் மூன்றும் (அம்பகமுவை, நோர்வூட், மஸ்கெலியா) நுவரெலியா பிரதேச சபைக்குள் மூன்றும் (நுவரெலியா, அக்கரப்பத்தனை, கொட்டகலை) அமையும் வண்ணம் ஆறாக அமையுமாறு பிரதேச சபைகளின் அதிகரிப்பை வெற்றிகரமாக சாத்தியப்படுத்தியுள்ளோம்.
எஞ்சியிருப்பது கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கத்தை ஆகிய மூன்றையும் இவ்விரண்டாகப் பிரித்து ஆறாக மாற்றுவதே. அதற்கு போதுமான அரசியல் கோரிக்கையும் தொழிநுட்ப அணுகுமுறைகளையும் கூட கண்டிருக்கின்றோம். தற்போதைய சூழ்நிலையில் அம்பகமுவை, நுவரெலியாவை பிரிப்பதிலும் சட்டச்சிக்கலை வேண்டுமென்றே உருவாக்க இனவாதிகளினால் நகர்வு மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே முதலில் அம்பகமுவை, நுவரெலியாவை ஆறாக உயர்த்துவதற்கு உடன்பட்டோம். இது இலங்கை நாட்டின் சூழல் என்பதை அரசியல் ரீதியாக புரிந்துகொண்டு இந்த முடிவுக்கு வந்தோம். எதிர்வரும் காலங்களில் மேலதிக ஆறினைப் பெற்றுக்கொள்ளும் எமது முயற்சியிலும் வெற்றிபெறுவோம்.
சிவனொளிபாதமலை விவகாரத்தால் இந்த அதிகரிப்பு விடயம் கேள்விக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகின்றதே...
இதைத்தான் நான் மேலே குறிப்பிட்டேன். இந்த விடயம் இன்று நேற்று உருவானதல்ல. எல்லை மீள்நிரண்யம் செய்யப்பட்ட 2012 ஆம் ஆண்டே எழுந்தது. அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நான் அரசியல் கட்சியின் செயலாளராக பங்குபற்றியிருந்தபோது அப்போது ஹெல உறுமய கட்சியில் இருந்த உதய கம்மன்பில இதனை எழுப்பினார். எனவே இது தொடர்பான அவதானம் எங்களுக்கு இருந்தது. உண்மையில் சிவனொளிபாதமலையின் அடிவாரம் அம்பகமுவை பிரதேச சபைக்கு உட்பட்ட சீத்த கங்குள எனும் வட்டாரத்திற்குள் வருகிறது. பாதம் அமைந்துள்ளதாக சொல்லப்படும் மலை உச்சி இரத்தினபுரி மாவட்டத்தின் ஒரு வட்டாரத்திற்குள் வருகிறது.
எல்லை மீள்நிர்ணய பிரமாணங்களின்படி சீத்தகங்குள கிரமசேவகர் பிரிவுக்குள் மலையடிவாரம் அமைவதை மாற்றம் செய்ய முடியாது என்பதை அந்த பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகளே உணர்ந்துள்ளார்கள். ஆனால், இனவாத நோக்கத்துடன் மதவாதத்தை தூக்கிப்பிடிக்கும் சிலர் அடிப்படை நாகரிகம் அற்ற நிலையில் இதனை தூக்கிப்பிடிக்க முயல்கின்றனர். இந்தப்பிரச்சினையினால் வரக்கூடிய சிக்கல் குறித்து மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் எங்களோடு குழுக்கூட்டத்தின்போது உரையாடியிருந்தார். அவருக்கு போதுமான விளக்கத்தை நான் கொடுத்ததும் அவர் நியாயங்களைப் புரிந்துகொண்டார்.
சிவனொளிபாதமலை தற்போது பிரிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பிரதேச சபைக்கு கீழ் வருவதனால் அது தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேச சபைக்கு செல்கிறது என்பதே இனவாதிகளின் கருத்தாகவுள்ளது. அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். தற்போது பிரிக்கப்படாத அம்பகமுவை பிரதேச சபை கூட தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேச சபைதான். கடந்த கால் நூற்றாண்டு காலமாக தமிழர்களே அம்பகமுவை பிரதேச சபையின் தலைவர்களாக இருந்து வந்துள்ளனர். இதன்போது சிவனொளிபாதைக்கு எதுவும் நடந்துவிடவில்லை. அதன் புனிதத்தை பௌத்தர்கள் மதிப்பதுபோல் இந்துக்களும் மதிக்கிறார்கள்.
ஏனைய மதத்தவர்களும் மதிக்கிறார்கள். எனவே மஸ்கெலியா பிரதேசசபைக்கு கீழாக அந்த வட்டாரம் அமைவது எந்த பாதிப்பையும் தரப்போவதில்லை. பிரதேச சபைகள் அதிகரிப்பு விடயம் முழு நுவரெலியா மாவட்ட மக்களுக்குமான கோரிக்கை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். வலப்பனை, ஹங்குராங்கத்தை, கொத்மலை பிரிக்கப்படுமிடத்து அதில் அதிக நன்மையை சிங்கள மக்களே அனுபவிப்பார்கள்.
ஒரு பக்கம் சிவனொளிபாத மலையை மையப்படுத்திய இனவாத முன்னெடுப்புகளும் மறுபக்கத்தில் சாய்ந்தமருது பிரதேசசபை கோரிக்கைக்காக அங்கு நடைபெறும் ஹர்த்தாலும் சகல பிரதேச சபை அதிகரிப்பு விடயத்தையும் தேர்தலுக்கு பின்னர் அமைப்பதற்கான தீர்மானத்தை அரச உயர்மட்டம் எடுத்து விடும் பட்சத்தில் எமது மூன்று தசாப்தகால கோரிக்கையின் முக்கியமான அடைவை நாங்கள் இழந்துவிட விரும்பவில்லை. எனவேதான் முதல் ஆறிற்கு முதலில் உடன்பட்டோம். இப்போது வர்த்தமானி அறிவித்தலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு வருட அரசியல் முன்னெடுப்பில் எமது இந்த வெற்றி பெரும் சாதனையே. தொடர்ந்து எமது பயணத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னெடுப்போம்.
ஹட்டனில் அமைந்துள்ள தொழிநுட்ப கல்லூரியில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளனவே..
தமது அரசியல் பலத்தையும் அமைச்சுப்பதவிகளையும் இழந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக தூக்கத்தில் இருந்து திடீரென விழித்தவர்களாக இப்போது இ.தொ.காவினர் இப்படியான குற்றச்சாட்டை முன்வைத்துவருகிறார்கள். பிரச்சினையை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு முன்னதான தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சாயினும் சரி, தற்போதைய மலை நாட்டு பதிய கிராமங்கள் அமைச்சாயினும் சரி இந்த அமைச்சின் கீழ் பணியாற்றுவதற்கு எந்த அரச நிறுவனமும் இல்லை.
இது மலையக மக்களின் அபிவிருத்திப் பின்னடைவுக்கு பிரதான காரணமாகும். அமைச்சுக்கு கீழாக வரும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் தனியார் கம்பனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தனியார் பெருந்தோட்ட கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற நிறுவனமாகும். அங்கு சேவையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு தனியார் கம்பனிகளே சம்பளம் வழங்குகின்றன. அந்த நிறுவனம் பாராளுமன்றத்துக்கு பொறுப்புகூறும் அவசியம் அற்றது.
அதேபோல அடுத்த நிறுவனமாக இந்த அமைச்சுக்கு கீழ் இணைக்கப்பட்டிருப்பது சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம். இது ஒரு அரசியல் தொழிற்சங்க கட்சியினதும் ஒரு குடும்பத்தினதும் கூட்டிணைவாக கொண்ட மன்றம். இது 2005 ஆம் ஆண்டு பாராளுமன்ற சட்டத்தால் கூட்டிணைக்கப்பட்டது. இது அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் பெயரில் சமூகப் பணிகளை ஆற்றுவதற்கு கூட்டிணைக்கப்பட்டது. இதுபோல பல மன்றங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயரில் கூட்டிணைக்கப்பட்டுள்ன.
ஏற்கனவே வெளிநாட்டு உதவிகளாலும் அரசாங்க நிதியினாலும் உருவாக்கப்பட்ட தொழில்நுட்ப கல்லூரி, ரம்பொடை கலாசார நிலையம், நோர்வூட் மைதானம் மற்றும் பிரஜாசக்தி திட்டம் ஆகியவை சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாகவே நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளன. இந்த நிறுவனங்களை இந்த மன்றத்தின் கீழ் இயக்கும் போது அரசியல் நோக்கத்துடன் செயற்படக்கூடாது என சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், ஒரு கட்சி செயலாளரினதும் ஒரு குடும்ப உறுப்பினரதும் கட்டுப்பாட்டில் தீர்மானம் எடுத்து செயற்படுகின்ற மன்றத்தினால் கட்சி சார்பாகவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்றத்தின் பணிப்பாளர்கள் குறிப்பிட்ட கட்சியினதும் ஒரு குடும்பத்தினதும் உறுப்பினர்கள். மன்றத்தினூடாக அரச சம்பளம் பெற்றுக்கொண்டுள்ள இவர்கள் கட்சியின் உயர்பீடத்தில் பணியாற்றியுள்ளனர். எனவே அவர்கள் எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த நான்கு நிறுவனங்களும் இயங்குதல் வேண்டும் என்கின்ற நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைச்சரும் மாறியபோது இந்த மன்றத்தின் ஊடாக குறிப்பிட்ட நிறுவனங்களை நிர்வகிப்பதில் சிக்கல் உருவானது.
இது தொடர்பாக நூறு நாள் ஆட்சி காலத்திலேயே கவனம் செலுத்தப்பட்டு அமைச்சு செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மத்தியில் இடம்பெற்ற கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டு மன்றம் சௌமியமூர்த்தி தொண்டமான் பெயரில் அப்படியே மன்றம் இருக்க வேண்டும் என்றும் அதன் கீழான நிறுவனங்கள் அமைச்சின் கீழ் நேரடியாக செயற்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைச்சுப்பெயர் மாற்றப்பட்டது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களும் அது ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்த பெயரில் அமைச்சின் நேரடியான செயற்பாட்டுக்கு கீழ் கொண்டுவரப்பட்டன. இது நடந்து ஒன்றரை வருடங்களாகின்றன. இப்போது தேர்தல் நெருங்குவதால் இந்த விடயத்தை தூக்கிப்பிடித்து அரசியல் செய்ய முற்படுகின்றனர்.
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் சட்டத்தில் கூட்டிணைக்கப்பட்டவாறு அவ்வாறே உள்ளது. அதில் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. அவரது பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படுத்தப்படவில்லை. அவரது பெயரில் மன்றம் அமைத்து அதனை முறையாக நிர்வகிக்காதவர்களே உண்மையில் அவருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.
அவரது பெயரில் மன்றம் அமைத்து அதற்கு பொறுப்பாளர்களான கட்சியும் குடும்ப அங்கத்தவர்களும் அந்த மன்றத்தின் ஊடாக அவர்களுக்கு விருப்பமான எந்த சமூக பணியையும் முன்னெடுக்கலாம். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இந்த நிலையில் அமைச்சரவை அனுமதியுடன் கடந்த இரண்டு வருடங்களாக இயங்கிவரும் நிறுவனத்தில் இப்போது பெயர் மாற்றப்பட்டுள்ளது என புரளியை கிளப்பி அரசியல் செய்ய முற்படுகின்றார்கள்.
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தினையும் அதன் கீழாக இருந்த நிறுவனங்களையும் ஒன்றாக காட்ட முயல்வது அந்த சட்டத்தின்படியே தவறான அணுகுமுறையாகும். இந்த மன்றத்தின் பெயரில் இடம்பெற்றதாக சொல்லப்படும் ஊழல் மேசடிகள் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்பே மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமையை இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.
அன்று அவரது குற்றச்சாட்டுக்கு எதிராக வாய் திறக்காதவர்கள் இன்று ஏன் இதனை தூக்கி பிடிக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இதன் அரசியல் நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும்.
நன்றி தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...