99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 37
83 கலவரம் பற்றியெறிந்து உலகக் கண்டனங்களிலிருந்து தப்புவதற்கு ஜே.ஆருக்கு ஒரே வழி வேறு சக்திகளிடம் பழியைப் போட்டுவிடுவதே. இதன் மூலம் அரசாங்கம் தமது அரசியல் எதிரிகளை நசுக்கி ஓரங்கட்டி, அரசியல் எதிரிகளை அரசியல் அரங்கிலிருந்து துடைத்தெறிய முயற்சித்தார்.
77க்குப் பின் அப்போது தான் மீளவும் ஜனநாயக அரசியலுக்கு பிரவேசித்து மக்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கிய ஜே.வி.பி, பலவீனமுற்றுகொண்டிருந்த பாரம்பரிய இடதுசாரிக் கட்சியான இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் வெறும் சின்னக் கட்சியாக இருந்த ந.ச.ச.கவையும் சேர்த்து தடை செய்தது அரசாங்கம்.
83 காலப்பகுதியை எடுத்துக் கொண்டால் இடதுசாரிக் கட்சிகளின் பொதுப் போக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானதாகவும், தமிழ் மக்களின் உரிமைகளைப் புரிந்துகொள்ளாத போக்கும் தலை தூக்கியிருந்த போதும் நேரடியாக தமிழர் எதிர்ப்பு போக்கை அவர்கள் கைகொள்ளவில்லை. அப்படியிருக்க இந்தக் கலவரத்திற்கு அக்கட்சிகள் தான் காரணமென பழிபோடுமளவுக்கு சான்றுகள் இல்லாதபோதும் ஜே.ஆர் அதைச் செய்யத் துணிந்தார் என்றால் 83 கலவரம் அவரை எந்தளவு அரசியல் குருட்டுத் தனத்துக்கு இட்டுச் சென்றிருந்தது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அரசாங்கத்தால் எந்த சாட்சியத்தையும் முன்வைக்க முடியவில்லை. எழுந்தமானமான குற்றச்சாட்டை சுமத்தி ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளின் மீது இன அழிப்புப் பழியைப் போட்டு தாம் தப்புவிக்கும் முடிவுக்கு வந்தது ஜூலை 29ஆம் திகதி தான்.
அதே ஜூலை 29 அன்றே இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அன்றைய வெளியுறவு அமைச்சரான நரசிம்ம ராவை நிலைமை குறித்து ஆராய்ந்து வரும் படி பணித்தார். 83 கலவரத்தின் போது தமக்கு நீதி வழங்க ஆதரவு தரும்படி தமிழ் அரசியல் கட்சிகள் இந்திய மத்திய அரசையும், தமிழ் நாடு மாநில அரசையும், அரசியல் கட்சிகளையும் அணுகிக் கொண்டிருந்தபோது, மறுபுறம் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவிடமும், பிரித்தானியாவிடமும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசிடமும் உதவி கோரியது தான் வேடிக்கை.
கல்கத்தாவிலிருந்து வெளிவரும் The Telegraph:” என்கிற பத்திரிகை “வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு எதிரான வன்செயல்களிலேயே மோசமானது இது தான்” என்றது.
தடை அறிவிப்பு
1983 யூலை 30 அன்று வெளியான வரத்தமானியின் மூலம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), நவ சம சமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளுமே, நடைபெற்ற கலவரங்களுக்குக் காரணமென்றும், அவற்றை அவசரகாலம் நிறைவடையும் வரை, தடை செய்வதாகவும், குறித்த கட்சிகளோடு எவ்வகையான தொடர்பையேனும் பேணுவோர் அல்லது குறித்த கட்சியினர் பற்றித் தகவல் வழங்காது மறைப்போர், மரண தண்டனை, ஆயுள் தண்டனை, சிவில் உரிமைகளைப் பறித்தல் உள்ளிட்ட கடுந்தண்டனைகளுக்கு ஆளாவார்கள் என்று அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்தது.
இந்தத் தடை வெளியானதோடு அன்றைய அமைச்சரவை பேச்சாளரான ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ் தொலைக்காட்சியிலும், வானொலியிலும் அறிவித்தலை விடுத்தார். அதன் படி
யூலை கலவரத்திற்கு சிங்கள தமிழ் கலவரத்தை விட பாரதூரமான சதித்திட்டம் பின்னணியில் இருந்தது என்றும் நான்கு கட்டங்களாக அவை நிறைவேற்றப்பட திட்டமிடப்பட்டிருந்தது என்றும் அறிவித்தார். முதலாவது கட்டம்; தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் இனக்கலவரத்தை உண்டுபண்ணி பரஸ்பர ஆத்திர உணர்ச்சியை ஏற்படுத்துவது. இரண்டாவது கட்டமாக சிங்கள-முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ணுவது, மொன்றாவது கட்டம் பௌத்த – கிறிஸ்தவ முரண்பாடுகளை விளைவித்து சிங்கள மக்களுக்குள்ளேயே சிக்கலை ஏற்படுத்துவது, நான்காவது கட்டம் பாதுகாப்புத் துறைக்குள் பிளவுகளை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றுவது. இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் அந்நிய நாட்டுச் சதியும் உண்டு என்றும், அவர்கள் வடக்கிலுள்ள தமிழ் பயங்கரவாதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்றும் அவரது ஊடகப் பேச்சில் வெளிப்படுத்தினார். வதந்திகளை நம்பாமல், பரப்பாமல், இந்த நேரத்தில் அரசாங்கத்தை ஆதரித்து நிற்குமாறு நாட்டு மக்களை கேட்டுக் கொள்வதாக இறுதியில் வேண்டுகோள் விடுத்தார் ஆனந்த திஸ்ஸ டி அல்விஸ்.
அரச பயங்கரவாத வன்செயலை மூடி மறைத்து கற்பனா பூர்வமான குற்றச்சாட்டுக்களையும், வதந்திகளையும் பரப்பிய அரசு வதந்திகளை பரப்புவதையும், அட்டூழியங்களையும் புறச்சக்திகள் மீது சுமத்திவிட்டு பொறுப்புள்ள அரசாங்கமாக காட்ட பிரயத்தனப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான எதிரியான சுதந்திரக் கட்சியை 77இல் படுதோல்வி அடையச் செய்து எதிர்க் கட்சித் தலைமை வகிக்கக் கூட தகுதியில்லாத ஒரு சின்னக் கட்சியாக ஆக்கியாயிற்று. கூடவே; சுருங்கிப் போயிருந்த சுதந்திரக் கட்சிக்குள் உருவாகியிருந்த உட் கட்சிப் பிரச்சினைகளைப் பயன்படுத்தி அவர்களுக்குள் சதி வேலைகளையும் செய்யத் தொடங்கியிருந்தது ஐ.தே.க.
மறுபுறம் அதுவரை சுதந்திரக் கட்சிக்கு ஆரம்பத்திலிருந்தே பக்க துணையாக இருந்து வந்த இடதுசாரிக் கட்சிகளையும் அதே போல ஏதாவது வழியைக் கையாண்டு அழிக்க சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருந்தது அரசாங்கம். 83 கலவரத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொண்டது. அந்த வகையில் கொம்யூனிஸ்ட் கட்சியையும் ஒரு வழி பண்ணியது.
அன்றைய கெடுபிடிப்போரில் அமெரிக்க மற்றும் மேற்குல முதலாளித்துவ சார்பை வெளிக்காட்டுவதற்காகவும், சர்வதேச ரீதியில் தம்மை ரஷ்ய சார்பு சக்தியில்லை என்பதைக் காண்பிப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். இடது சாரிக் கட்சிகளின் மீதான தடை மற்றும் தமக்கு ஆதரவு வேண்டி, அமேரிக்கா, பிரித்தானியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற ஏகாதிபத்திய முகாமிடம் உதவி கோரியதும் இந்த வகைப்பட்டது தான். இடதுசாரிகள் மீது நெடுங்காலமாக ஜே.ஆருக்கு இருந்து வந்த ஒவ்வாமைக்கு (அலர்ஜி) உடனடி-தற்காலிக மருந்தாக இந்தத் தடையைப் பயன்படுத்திக் கொண்டார் என்றே இன்னொருவகையில் கூறவேண்டும்.
இந்த கொடுமைகளை வெளித்தெரியாதபடி செய்வதற்காக ஜே.ஆர் அரசாங்கம் அமுல்படுத்தியிருந்த ஊடகத் தணிக்கை, உள்நாட்டு ஊடகங்களைக் கட்டுப்படுத்தினாலும், வெளிநாட்டு ஊடகங்களின் வாயை அடக்க முடியவில்லை’ என்று இயன் குணதிலக, (Ian Gunatilake) 1983 ‘கறுப்பு ஜூலை’ எழுதிய கட்டுரையொன்றில்ல் குறிப்பிடுகிறார். சர்வதேச ஊடகங்கள் போதிய அளவு செய்திகளையும், விபரங்களையும் வெளிக்கொணர்ந்தன. 83 கலவரம் பற்றி இன்றும் உள்ள ஆதாரங்களும், ஆய்வுகளும் அதற்குப் பின் வெளிக்கொணரப்பட்டவை தான். சம்பவம் நிகழ்ந்த நாட்களில் வெளியான ஊடகங்களில் இருந்து போதிய விபரங்களை நிச்சயம் அறிந்துகொள்ள முடியாது.
இந்த பாரிய விளைவுகள் குறித்து அரசாங்கமானது சுயாதீன விசாரணையொன்றை செய்திருக்க வேண்டும் ஆனால், அதை ஜே.ஆர் அரசாங்கம் செய்யவில்லை.
இந்த கலவரத்தில் ஜே.ஆர் மேற்கொண்ட ஒரே ஒரு நடவடிக்கை இந்த கலவரத்துடன் சிறில் மெத்தியுவுக்கு தொடர்புண்டு என்று கூறி அரசாங்கத்தின் மீதான் குற்றச்சாட்டுக்களை தனிநபரிடம் சுமத்தி சிறில் மெத்தியூவை நீக்கியமை தான்.
ஜே.வி.பி நிரபராதி!?
குறைந்தபட்சம் இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து பழி சுமத்தப்பட்டிருந்த அந்த மூன்று இடது சாரிக் கட்சிகளின் மீதாவது முறைப்படி விசாரணை செய்து சாட்சியங்களுடன் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும் ஆனால் அதெப்படி செய்ய முடியும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் வேடிக்கை நிறைந்தது என்பதை முழு உலகமே அறிந்த போதும் அப்பேர்பட்ட வேடிக்கைக்கு துணிந்தது ஜே.ஆர். அரசாங்கம்.
இடதுசாரிக் கட்சிகளை தடை செய்ததோடு கலவரத்துடன் தொடர்புடையவர்கள் என்று 31 பேரின் பெயர்ப்பட்டியலை வெளியிட்டதுடன், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியது அரசாங்கம். ஜே.வி.பி.யின் அன்றைய பொதுச் செயலாளர் லயனல் போபகே, உட்பட 30 பேர் கைதானார்கள். கொம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் கைதானார்கள். ரோகண விஜேவீர, கமநாயக்க போன்றரின் தலைகளுக்கு வெகுமதி அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்ற இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் பலர் சரணடைந்தனர். இந்த நடவடிக்கை இந்த மூன்று கட்சிகளும் தலைமறைவு அரசியலுக்குத் தள்ளப்பட்டது. 6 மாதங்களின் பின்னர் ந.ச.ச.க., கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சரணடைந்தார்கள். வாசுதேவ நாணயக்கார, விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் தலைமறைவாக மறைந்து வாழ்ந்து பின்னர் விஜய குமாரதுங்கவுடன் சென்று பொலிசில் சரணடைந்தார்கள்.
இந்தத் தடை பற்றிய அரசின் நியாயங்கள் வெற்றியளிக்காது போகவே ந.ச.ச.க. மற்றும் கொம்யூனிஸ்ட் கட்சி ஆகியன மீதான தடைகள் நீக்கப்பட்டன. அப்படி நீக்கப்பட்டமைக்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது அக் அக்கட்சிகளுக்கு கலவரத்துடன் தொடர்பில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது போலவும் ஜே.வி.பிக்கு நிரூபிக்கப்படவில்லை என்பது போலவும் அரசாங்கம் காட்டிக்கொண்டது. ஆகவே ஜே.வி.பி. மீதான தடையை மட்டும் அரசாங்கம் நீக்கவில்லை.
தமது கட்சியின் மீதான தடையை நீக்கக் கோரி விஜேவீர பல முறை ஜே.ஆருக்கு கடிதம் எழுதியிருந்த போதும் அது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது.
தடைசெய்யப்பட மூன்று மாதங்களின் பின்னர் ஜே.வி.பியின் தலைவர் விஜேவீர ஜே.ஆருக்கு எழுதிய கடிதத்தில்
“ஜே.வி.பி.யின் மீதான தடை நீதியற்றது. இக் குற்றச்சாட்டுக்கலில் எந்த அடிப்படையும் கிடையாது. ஜேவி.பி. யூலை கலவரத்துடன் தொடர்பு உள்ளது, ஜே.வி.பி.யின் இராணுவப் பிரிவின் ஒரு பகுதியினர் அரசாங்கத்துக்கு எதிராக களமிறங்கியிருக்கிறார்கள், ஜே.வி.பி மோசமான இனவாத வதந்தியைப் பரப்பியது, ஜே.வி.பி அரசாங்கத்தைக் கவிழ்க்க சதி செய்தது, ஜே.வி.பி நாட்டை பிளவுபடுத்த முயற்சித்தது, ஜே.வி.பிக்கு வடகிழக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கிறது ஜே.வி.பி 1982 ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் தமது கொள்கைகளை மாற்றிக் கொண்டுள்ளது, போன்ற குற்றச்சாட்டுக்கள் அபத்தமானது அவற்றை வன்மையாக நிராகரிக்கிறோம்....
ஜனநாயக ரீதியில் இயங்கும் ஒரு எதிர்க்கட்சியாகவே ஜே.வி.பி இயங்கி வருகிறது. இது ஒரு சதிகார கட்சி கிடையாது. பெரும்பாலான மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கமோ, ஆற்றலோ ஜே.வி.பிக்கு கிடையாது. ஜனாதிபதி அவர்கள் பதவியில் இருக்கும் இந்த 6 வருடங்களுக்குள் நிகழ்ந்த அத்தனை தேர்தலிலும் அர்ப்பணிப்புடன் ஜே.வி.பி பங்கு பற்றியிருகிறது. அந்த தேர்தல்களின் போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் எமது ஜனநாயக வழிமுறைகளையும், திட்டங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறோம்”
என்று குறிப்பிட்டு தம் மீதான தடையை நீக்கும்படி கோரினார்.
ஜனாதிபதிக்கு அனுப்பிய அக்கடிதத்தின் பிரதியை பிரதமர், நீதியரசர், பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலளார், ஐ.நா சபையின் செயலாளர், சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பலருக்கும் அனுப்பி வைத்தார்.
இதன் காரணமாக ஜே.வி.பி தலைமறைவு அரசியலுக்கு தள்ளப்பட்டது. காலப் போக்கில் ஜே.வி.பியினர் மீதான அடக்குமுறையும் கட்டவிழ்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜே.வி.பி.யினர் தமது தற்காப்புக்காக ஆயுதபாணிகளாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர்.
ஜே.வி.பியை ஏன் இந்தளவு எதிரியாக ஜே.ஆர். அரசாங்கம் பார்த்தது என்பதை இங்கு கூறியாக வேண்டும். 77 தேர்தல் மேடைகளில் சுதந்திரக் கட்சிக்கு எதிரான பிரச்சாரத்தின் போது ஜே.வி.பி யினர் மீதான அனுதாபியாக ஐ.தே.க. காட்டிக் கொண்டது. 71 கிளர்ச்சியில் கைது செய்யப்பட்டவர்களை தாம் ஆட்சிக்கு வந்ததும் விடுவிப்பதாகவும் வாக்குறுதியளித்தது. அவர்கள் வெளியில் வந்தால் சுதந்திரக் கட்சிக்குத் தான் பெரிய தலையிடியாக இருப்பார்கள் என்றும் நம்பியிருக்கலாம். 77இல் ஆட்சிக்கு வந்தவுடன் சிறையிலிருந்த பல ஜே.வி,பியினரை விடுவிக்கவும் செய்தது. ஆனால் வெகு விரைவில் ஜே.ஆர். ஆரசாங்கத்துக்கு அரசியல் தலையிடியாக ஆனார்கள் ஜே.வி.பியினர். குறுகிய காலத்தில் அவர்களின் செல்வாக்கு அரசியல் அரங்கில் உயர்ந்து வந்தது. மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின் மூலம் முதற் தடவையாக அவர்கள் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து 15 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டார்கள். தேர்தல் மேடைகளில் அரசாங்கத்தை அம்பலப்படுத்துவதில் முக்கிய பாத்திரத்தை ஆற்றினார்கள்.
கூடவே அடுத்தடுத்து வந்த 82 ஜனாதிபதித் தேர்தலையும் அவர்கள் அரசுக்கு எதிரான அரசியல் களமாகப் பயன்படுத்தினார்கள். சர்வஜன வாக்கெடுப்புத் தேர்தலில் ஆட்சி நீடிப்புக்கு எதிராக பெரும் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். அது ஜனநாயக விரோதமானது என்றார்கள். தேர்தல் முடிந்ததும் அத் தேர்தல் கூட மோசமான முறைகேடுகளைக் கொண்டிருந்தது என்று வழக்கு தொடுத்தார்கள்.
ஜே.வி.பி. தடையின் உள் நோக்கம்
அத்தேர்தலை செல்லுபடியற்றதாக ஆக்கவேண்டும் என்று ஜே.வி.பி தலைவர் விஜேவீர வழக்கு தொடுத்தார். அவரின் வழக்கறிஞராக பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க செயற்பட்டார். இந்த வழக்கில் அவர்கள் வென்றால் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க நேரிடும். ஆனால் பின்னர் இந்த வழக்கில் ஆதாரங்கள் இல்லையென்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜேவீர போதிய ஆதரங்களுடன் மேன்முறையீடு செய்தார். அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது தான் யூலை கலவரம் நிகழ்ந்தது. இந்த வழக்கில் அரசாங்கம் தோற்றால், அது மிகப் பெரும் அவமானமாகவும், தோல்வியாகவும் முடியும். அரசாங்கம் கலைக்கப்பட்டு மீண்டும் பொதுத்தேர்தலுக்குப் போக நேரிடும். ஆக, ஜே.வி.பி தடை செய்யப்பட்டதன் மூலம் அவர்களை தலைமறைவுக்கு அனுப்பி வழக்கிலிருந்து தப்பியது அரசாங்கம். இந்த வழக்கின் வழக்கறிஞராக கடமையாற்றிய பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க தற்காலிகமாக நாட்டைவிட்டு வெளியேறி வாழ நேரிட்டது. இதனால் அந்த வழக்கின் முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. அது தான் அரசாங்கத்துக்கு தேவைப்பட்டதும்.
ஆனால் ஒரு வருடத்துக்குப் பின்னர் அத்தேர்தல் பற்றி தேர்தல் ஆணையாளரால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையில் விஜேவீர முன்வைத்திருந்த பல குற்றச்சாட்டுக்கள் உறுதிசெய்யப்பட்டிருந்தன என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
தெற்கின் அரசியல் எதிரிகளை காயடித்து வந்த அரசாங்கத்துக்கு இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி வடக்கிலுள்ள அரசியல் எதிரிகளையும் ஒரு வழி பண்ண திட்டமிட்டது.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...