மு.நித்தியானந்தன் எழுதிய "கூலித் தமிழ்" நூலில் வெளிவந்த கட்டுரைகளில் பிரதான கட்டுரையாகக் கொள்ளப்படும் "கூலித் தமிழ்" பற்றிய கட்டுரையை மூன்று பாகங்களாக பிரித்து உங்கள் வாசிப்புக்கு முன் வைக்கப்படுகின்றன. இது மூன்றாவது பாகம்.கூலித் தமிழ்
- முதலாவது பாகம்
- இரண்டாவது பாகம். இந்த இணைப்பில்
டபிள்யு.ஜி.பி. வெல்ஸ் (இரத்தினபுரி) ஆக்கிய கூலித் தமிழ்’ (Cooly Tamil) தேயிலை, றப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பேசுவதை, துரைமாரும் துரை மாராகப் பழகுபவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் விசேஷமாக அமைக்கப் பட்டது' என்ற துணைத் தலையங்கத்துடன், இந்நூலின் முதற் பதிப்பு 1915இல் கொழும்பில் வெளியாகியுள்ளது. (22)
"தமிழில் வார்த்தைகள் எவ்வாறு அமைகின்றன, எவ்வாறு காலங்காட்டுதல் உணர்த்தப்படுகிறது, எவ்வாறு வாக்கியங்கள் அமைகின்றன என்பதைப் பற்றிய சிறிதளவு தெளிவான அறிவு இருந்தாற்கூட, கூலித்தமிழைப் பேச்சுவாயிலாகக் கற்றுக்கொள்ளும்போது ஏற்படும் பல கஷ்டங்களைச் சுலபமாக்கிக்கொண்டு விடலாம் என்று எனது சொந்த அனுபவத்திலிருந்து அறிந்திருக்கிறேன்” என்று தனது முன்னுரையில் கூறும் வெல்ஸ், "கூலிகளின் இலக்கணமில்லாத மொழி யைக் கற்றுக்கொள்ளவும், கூலி சொல்வதைப் புரிந்துகொள்ளவும், தான் சொல் வதைக் கூலி புரிந்துகொள்ளவும் உதவக்கூடிய ஒரு நூலை சின்னத் துரைமாரின் கரங்களுக்கு வழங்குவதே எனது ஒரே நோக்கம்” என்று கூறுகிறார்.
ஆசிரியர் பிரகடனப்படுத்தும் நூலின் நோக்கத்தைவிட, நூலில் உறைந்திருக் கும் துரைத்தன ஒடுக்குமுறையின் சொல்லாடல் பற்றியே இங்கு நாம் எமது ஆய்வைக் குவிக்கிறோம். தோட்டங்களில் துரைமார் தொழிலாளர்களோடு உரையாடுவதில்லை. ஒருவழிப் பேச்சுவார்த்தைதான் இது. துரைமார்கள் கட் டளை பிறப்பிப்பார்கள். அதனைத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண் டும். இதுவே, துரைமார் தயாரித்த தமிழ்ப் போதினிகளின் அடிநாதமாக இருந் தது. இந்நூலின் ஆரம்ப வாக்கிய அமைப்புகள் இதனையே புலப்படுத்துகின்றன.
கவாத்து
"வேலெ பத்தாது”
ஒம்பதரை மணி ஆச்சு, இவ்வளோ மாத்திரம் முடிந்திருக்கிருது'
அவ்வளவு வேகமா போக வாணாம், நீ செய்றது படி பார்
ஒவ்வோராள் இருநூத்திஅம்பது மரம் செய்யோனும்
அதி தேவலை, இப்போ சுருக்கா வெட்டி போ'
இயந்திரமாகத் தொழிலாளர்களிடம் வேலைவாங்கும் துரைத்தன மனோ பாவத்தை இவை படம்பிடித்துக் காட்டுகின்றன.
நான் சொல்ற மாதிரி செய், கரச்சல் பண்ணாமே"
இது "கூலித் தமிழ்’துரைமாருக்குப் படிப்பிக்கும் பாலபாடம்.
அப்படி இல்லே தொரை, அப்படி இல்லே. பதினஞ்சு இஞ்சி எப்பிடி யிருக்குமுன்னு நான் காமிக்கிறேன்" என்று கவாத்து வெட்டு சரியில்லை என்று குற்றங்கண்டுபிடித்த சின்னத் துரையின் கையை வகுந்துவிட்ட "பெருமாள் வெட்டை வலன்டைன் டேனியல் விபரித்துச் செல்வதையும் இவ்விடத்தில் ஒப்பிட்டு நோக்குவது பொருந்தும்.
பழைய மலை என்றால் 150இலிருந்து 200வரை தேயிலைச் செடிகள் ஒரு நாளில் ஒரு தொழிலாளி கவாத்து பண்ண வேண்டும் என்பது திட்ட வேலை. பெரிய தோட்டங்களில் ஒரு ஆள் 160 செடிகள் வெட்டுவதுதான் கணக்கு. "ஒன் னாம் நம்பர் கவாத்துக்காரனின் கணக்கு இது. ஒன்னாம் நம்பர் கவாத்துக் காரனுடன் ஒன்றாய்த் தானும் நிரை பிடித்து கவாத்து வெட்டிய தோட்டத் துரை ஒருவர் அத்தொழிலாளியின் வேலையினுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், தன்னால் ஆக 130 செடிகள்தான் வெட்டிக்கொள்ள முடிந்தது என்று தனது அனுபவத்தைக் குறிக்கிறார். ஆனால், கூலித் தமிழ்ப் போதினியின்படி
ஒவ்வோராள் இருநூத்திஅம்பது மரம் செய்யோனும்!
வேலை பத்தாது!
வேலையை வேகமாகச் செய்யாமல் மெதுவாகச் செய்வது தொழிலாளியின் ஒருவித எதிர்ப்பு யுக்தி. ஒன்பதரை மணிக்கு கவாத்து மலைக்கு வந்த தோட்டத் துரை வேலை அவ்வளவாய் ஆகவில்லை என்பதை அவதானிக்கிறான்.
வேலை பத்தாது. ஒம்பதரை மணி ஆச்சு, இவ்வளவோ மாத்திரம் முடிந் திருக்கிறது' என்று துரை கத்த வேண்டும் என்று கூலித் தமிழ் போதிக்கிறது.
துரை மலைக்கு வந்ததும் "கூலிகள் வேகமாக வேலை செய்துகொண்டிருப்பது போல் பாவனை காட்டுவார்கள். மரக்கணக்கிற்கு வேகமாக வெட்டிக்கொண்டு போகும்போது கவாத்து அவ்வளவு சுத்தமாக இராது என்றும் துரைமார்கள் அனுமானிக்கிறார்கள்:
அவ்வளவு வேகமா போக வாணாம், நீ செய்றது படி பார்’
கத்தி வெயிலிலே வைக்க வாண்டா. கைப்புடி கெட்டுப்போவும். நெழலிலே வை’ என்று ஒரு வாக்கியம் வருகிறது.
காலையிலிருந்து மாலைவரை கொளுத்தும் வெய்யிலில், வியர்வை உடம்பில் தெப்பமாய் வழிய, உடலம் ஒய உழைப்பவனைப் பற்றியல்ல, வெயிலில் கிடந்தால் கத்தியின் கைப்பிடி பழுதாகிவிடும் என்று கவலையுறும் துரைத்தனத் தின் மனிதாபிமானம் இன்மையையும் லாப மோகத்தையும் இது வெளிப்படுத்துகிறது.
நூல் நன்கு உணர்த்துகிறது. சில மாதிரி வாக்கியங்கள்:
அதெ சுருக்கா கொண்டு போ'
அங்கே மேலே ஆள் ஒன்னும் செய்றதில்லே?
இது யாருட்டு கொந்தரப்பு?
"காத்தான் கொந்தரப்பு'
அப்போ அவன் அரிசி நிப்பாட்டு, அவன் பில்லு வெட்டுறதில்லே.
இந்த பொம்புளை நல்லா வேலை செய்யமாட்டுது. அவளே லயத்துக்கு அனுப்பு'
அந்த குழிமூடல் ரெம்ப செய்றதில்லே’
தேயிலைத் தோட்டங்களில் ஒவ்வொரு கட்ட நடவடிக்கையிலும் துரைமார் சொல்வதைக் கேட்காமல் தங்கள் பாட்டில் வேலைசெய்துகொண்டிருக்கும் தொழிலாளர்களின் சூக்குமமான எதிர்ப்புணர்வு இந்நூலில் பரவலாகப் பதிவாகி யிருக்கிறது.
அம்பது தரம் மண்ர குமித்து வைக்கச் சொன்னேன்"
'பால் வெட்ட" என்ற தலைப்பில் சில மாதிரி வாக்கியங்கள்:
'பால் ஆள் அஞ்சு மணிக்கி காலம்பர வாளி எடுக்க வரோணும்'
அதுக்கு பிற்பாடு வந்தால் வேல இல்லாமே போவனும்
ஆறு மணிக்கல்ல, காலை 5 மணிக்கே றப்பர் தோட்டங்களில் பால்வெட்டு ஆரம்பமாகிவிடுவதை இது உணர்த்துகிறது.
ஆள் சேர்த்தல்
ஆள் சேர்த்தல்" என்ற தலைப்பில் "கூலித் தமிழ் நூலில் இடம்பெறும் உரை யாடலை அதன் முழு வடிவில் நோக்குவது அக்காலகட்டத்தில் தோட்டங்களில் எவ்வாறு தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதையும், ஆள் சேர்த்தலில் கங்காணிகள் எம்மாதிரி நடந்துகொண்டிருந்தனர் என்பதையும் அறிந்துகொள்ள நமக்குப் பெருந்துணை புரியும்.
"என்னத்துக்கு எனக்கிட்டே ஓடி வர்றது? இதென்ன?
இது இருபது ஆளுக்கு ஒரு துண்டு, தொரே தயவுசெய்து எடுக்க வேணும்."
நான் இந்தாள் எப்படி எடுக்ரன், இதி செகப்பு துண்டு தோட்டம்"
ஒவ்வோராளுக்கு தொரே எவ்வளவு கடன் குடுக்கிறார்?
இந்த மாதிரி செகப்பு துண்டு இருந்தால் ஒவ்வோராளுக்கு நாப்பது ரூபாய்க்கு மேலே குடுக்கமாட்டேன்."
நான் வெள்ளை துண்டு கொண்டு வந்தால் தொரே நூறு ரூபா ஒராளுக்கு குடுப்பாரா?
இல்லே, இப்போ உனக்கு ரெம்ப கடன் இருக்கிறது." அப்போ தொரே என் கணக்கைத் தீர்த்து, துண்டு குடுத்தா நான் இந்த புது ஆளுகளை வேறே தோட்டத்துலே எடுத்து வைக்கிறேன்."
"சீமையிலிருந்து ஆள் ஏன் தெண்டித்து எடுக்கிறதில்லே? வழிச்செலவை தோட்டம் கணக்கிலே போட்டிருக்கும்."
"தொரே எனக்கு அம்பது ரூபா கொடுத்தால் நான் போய்ட்டு ஆள் கொண்டு வருவேன்.”
நான் அவ்வளவு குடுக்கிறதில்லே. இங்கே பத்து ரூபா தாரேன். அப்போ நீ டிப்போவுக்கு (திருச்சி) கொண்டு வந்து பதிந்தால் ஒவ்வோராளுக்கு நீபத்து ரூபா வாங்கலாம்”
நல்லதுங்க."
இந்தா, இந்த ஆர்டரை திருச்சினாப்பள்ளி டிப்போவுக்கு கொண்டுபோய் காம்பிக்கணும்."
இந்தா பார், பத்து தகரம் இருக்குறது. நம்பர் எழுதி வைத்திருக்கிறேன்."
நீ போய்ட்டு எவ்வளவோ காலம் நிப்பது?
நான் ஒரு மாசம் போயிட்டு வரேனுங்க."
நீ எத்தனை ஆள் கொண்டு வருவுது? நீ போறது முந்தி எனுக்கு சொல் லத்தான் வேணும்."
நான் எட்டாளு டிப்போவுலே பதிஞ்சு கொண்டு வருவேன்."
'உன் தாய் புள்ளே ஆள் எப்போதும் பாத்து எடுக்கோணும். வேறே ஆள் சில வேளை ஓடி போவுது.
'சீமையிலே உனக்கு என்னா மேல் விலாசம் இருக்கும்?
"ஏன் பேர் பழனியாண்டிப்பிள்ளை, சீனிவாசகம் மகன்."
சரி, இப்போ இந்தக் காய்தத்துக்கு உன் கை ஒப்பம் வை."
'உனக்கு எழுத தெரியாதா? தெரியும்."
நீ சொன்னபடி செய்யாதே போனால் உன்னெ மறியலுக்கு அனுப்புவேன்."
நல்லதுங்க, நான் வரேன் செலாங்க."
இன்னுமொரு மாதிரி உரையாடல்:
"பெரிய கங்காணி கூப்பிடு. இந்தா கங்காணி, ராமலிங்கம் கங்காணி ஊரி லிருந்து ஒரு காயிதம் அனுப்பியிருக்கிறான்."
அதெ வாசித்து அவன் என்னா எழுதி சொல்ரான் எனக்குச் சொல்லு.
அதிலே எழுதியிருக்கிரான். ஊருலே ஆறாளு சேத்துக்கிட்டு அவுங்க டிப் போவுக்கு வரமாட்டோம் எண்டு நிக்கிறது."
ராமலிங்கம் கங்காணி அவுங்களோட ஊருக்கடன் கட்டும் வரைக்கும் வர மாட்டுது."
"கடன் எவ்வளோ இருக்கிறது. அவென் எழுதியிருக்கிறானா?
ஆமாங்க, அவனுக்கு அறுவது ரூவா அனுப்ப வேணும் எண்டு சொல்ரான்."
"என்னா, நீ சொல்லிரபடிநான் கேட்கயில்லை."
அறுவது ரூவா அனுப்ப வேண்டியது என்கிறான்."
'கங்காணிக்கு நான் காசி அனுப்ப ஏலாது. ஏனெண்டால் அவனெ நம்பே லாது."
ராமலிங்கம் கங்காணி தேடிப் புடிக்க அவனோட ஊருக்கு ஒரு பியூன் அனுப் பலாமா? டிப்போ ஏஜண்ட் தொரைக்கி ஒரு காயிதம் எழுதிக் கேக்கிரன். கங் காணி புது ஆள் காம்பிச்சவுடனே பியூன் காசு குடுத்து, எல்லாருக்கும் டிப்போ வுக்கு சேர்ந்து வருவுது."
தகர வில்லை
1902இல் மேற்கு மாகாணத்தின் கவர்ன்மெண்டு ஏஜண்டாக இருந்த எப்.ஆர். எல்லீஸ் அறிமுகப்படுத்திய தகர வில்லைத்திட்டம்" (Tin Ticket System) அமுலில் இருந்த காலத்தில் ஆட்சேர்க்கப்பட்ட முறையை இது விபரிக்கிறது. இந்தச் சிறிய தகர வில்லையில் தோட்டத்துப் பதிவு இலக்கமும், தொழிலாளியின் பதிவு இலக் கமும் என்று இரண்டு இலக்கங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இந்தத் தகர வில்லையைக் கையில் கட்டிக்கொண்டு வரும் தொழிலாளர்கள் இந்தியக் கரை யிலிருந்து இலங்கைத் தோட்டம்வரை ஒரு சதப் பயணச் செலவும் காசாகச் செலுத்த வேண்டியதில்லை. தோட்டம் வந்துசேர்ந்த பின்னர் தொழிலாளியிட மிருந்து வசூலித்துக்கொள்ளக்கூடிய முறையில் தொழிலாளி தோட்டம் வந்துசேர வழிவகுத்தது. இது வி.பி.பி. முறையில் பார்சல் அனுப்புவதைப் போன்ற முறை என்று வர்ணிக்கப்பட்டது.
தோட்டத்திற்குத் தொழிலாளர்களை ஆடுமாடுகள் போலக் கொண்டுசென்று, அவர்களை ஏலம்போடுவதுபோல் விற்று, அவர்கள் நிரந்தரமான கடனாளிகளாக ஆக்கும் நிலைமையை மேற்கூறிய உரையாடல்கள் புலப்படுத்துகின்றன.
தோட்டத் தொழிலாளர்கள் தோட்டங்களை விட்டு இந்தியக் கரைக்குத் தப்பி ஓடினாலும், அவர்களைப் பிடித்துக்கொண்டுவரத் தோட்ட நிர்வாகம் வாரண்டுகள் பிறப்பிக்க முடிந்தது. "கூலித் தமிழ் நூலில் இடம்பெறும் பின்வரும் மாதிரி வாக்கியத்தை நோக்கலாம்:
நான்புடிக்க வேண்டியது ஓடிப் போனாள் ஒராள் ஊரிலே நிக்ரான்."
அவனெ புடிக்கலாம் நீ நினைத்தால், உனக்கு ஒரு வாரண்டு வாங்கப் பாக்ரன்."
இந்தா இந்த கடதாசி பத்திரம் வைத்து, சீமைக்கு போய்ட்டு காம்பி; அந்த மாதிரி இன்னொரு கடதாசி காட்பாடி டிப்போவுக்கு அனுப்புரன்."
தோட்ட அடக்குமுறையும் கஷ்டமும் தாங்காமல் தோட்டங்களை விட் டோடிய தொழிலாளர்களைப் பிடிக்க கங்காணிமாரே துரைத்தனத்திற்குச் சேவ கம் புரிபவர்களாக இருந்தனர். கங்காணிகளின் உதவியில்லாமல் தோட்டங் களை விட்டு ஓடிய தொழிலாளர்களை இந்தியாவில் பிடிப்பது சாத்தியமற்றது.
துரைசாணி
தகவல் கொண்டுசெல்பவர்களாகவும், ஆட்களைத் தூக்கிக்கொண்டு செல் பவர்களாகவும் தொழிலாளர்களே அமைந்திருந்தமையையும் இந்நூலில் அறிய லாம்.
ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்திற்கு துரைசாணி போவ தானால், அவளைத் தூக்குநாற்காலியில் வைத்துத் தொழிலாளர்கள் தூக்கிக் கொண்டு சென்றிருப்பதைப் பின்வரும் வாக்கியம் உணர்த்துகிறது:
"தொரைச்சானியை நாக்காலியிலே...................... தோட்டத்துக்குத் தூக்க நாலு ஆள் வேணும். அந்த வேலைக்குப் பழக்கமான ஆள் இருக்க வேணும்."
Mail Coach என்பதை அக்காலத்தில் தொழிலாளர்கள் குதிரைக் கோச்சி என்று அழைத்திருக்கிறார்கள்.
இங்கே வா!', 'கூலித் தமிழ் போன்ற தோட்டத் துரைமாருக்கான தமிழ்ப் போதினிகளில் தொழிலாளர் ஒடுக்குமுறையையும், அவற்றில் மறைமுகமாகப் புதைந்துகிடக்கும் தொழிலாளர் எதிர்ப்புணர்வையும் பக்கத்திற்குப் பக்கம் நாம் பார்க்க முடிகிறது.
யுகமாற்றம்
தொழிலாளர்களிடம் வேலை வாங்க என்னென்ன மாதிரிக் கட்டளைகள் பிறப்பிக்க வேண்டும் என்றுதுரைமாருக்குஅறிவுறுத்தக்கூலித்தமிழ்ப்போதினிகள் ஈடுபட்டிருந்த காலத்தில், தோட்டத் தொழிலாளர்கள் துரைமாருக்கு என்ன சொல்ல வேண்டும் என்று தொழிலாளருக்குப் பால பாடம் நடத்தவந்த நடேசய்யரின் "தொழிலாளர் சட்ட புஸ்தகம்', (23) தொழிலாளர் சமூக வரலாற்றில் ஒரு யுகமாற்றத்தைக் குறித்து நிற்கிறதெனலாம்.
"(முதலாளிகளுடைய ஏஜண்டுகளின்) உதவிபெற்று இலங்கைக்கு வரும் தொழிலாளர்கள், சுமார் ஆறேமுக்கால் லட்சம் பேருக்கு மேலிருக்கிறார்கள். இவர்களுடைய நலவுரிமைக்காகப் பாடுபடுகிறவர்கள் மிகவும் சொற்பம். தங்களுக்கு எவ்விதமான சுதந்திரங்கள் உண்டு என்பதை இவர்கள் அறிய முடியா திருக்கிறார்கள். ஏதாவது கஷ்டம் வந்தால், எழுத்துக் கூலிக்காரர்களிடமும், சில ஏமாற்றுக்காரர்களிடமும் அகப்பட்டுக்கொண்டு உள்ளவற்றையும் தொலைத்து அவதிக்குள்ளாகிறார்கள். தொழிலாளர்களின் இவ்வித நிலைமையைத் தொலைக் கவே, இச்சிறு புத்தகத்தை அச்சிடத் துணிந்தேன்’ என்ற முன்னுரையுடன் நடேசய்யர் தொழிலாளர்களுக்காக எழுதிய 'தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ துரைத்தனத்திற்கு எதிர்முனையில் போராட்டம் நடத்தத் தொழிலாளர்களைப் பட்டைதீட்ட முயன்றது.
"முறையீட்டு விண்ணப்பங்கள் ஆங்கிலத்திலேயே இருக்க வேண்டியதில்லை; தமிழிலேயே எழுதலாம்" என்று அறிவுறுத்தி, தோட்ட நிர்வாகத்திற்கு நீங் கள் வேலையிலிருந்து விலகிக்கொள்வதானால் எப்பொழுதும் நோட்டீஸ் கொடுக் கலாம் என்றும், அந்த நோட்டீஸை எவ்வாறு கொடுப்பது என்றும் விளக்குகிறார்.
"நோட்டீஸ் கொடுப்பதைக் கீழ்க்கண்ட முறையில் கொடுங்கள்:
.............................................. தோட்டம்
தேதி ................................... 19
.............................. டிஸ்திரிக்ட் ................................ தோட்டம் துரையவர்களுக்கு, கீழே கையொப்பமிட்டிருக்கும் மேல்படி தோட்டத் தொழிலாளர்களாகிய நாங்கள் உங்கள் தோட்டத்தினின்றும் ........................ மாதம் ..................... தேதி விலகிக்கொள்ளப்போவதற்கு இதுவே நோட்டீஸ். எங்கள் பற்றுச்சீட்டும் சம்பளமும் மேல்படி திகதியில் எங்கள் கையில் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறோம்.
இப்படிக்கு
ஒப்பம் அல்லது ரேகை
எந்தப் பெரிய உத்தியோகஸ்தரையும், ஐயா என்று எழுதினால் போதும். வீணாக இரண்டு பாதங்களுக்கும் முல்லை, மல்லிகை, விருபாட்சி முதலிய புஷ்பங்கள் கொண்டு அர்ச்சித்து சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து செய்து கொள்ளும் விண்ணப்பம் என்று எழுத வேண்டாம். நீ ஒருவரையும் அர்ச்சிக்க வேண்டாம்" என்றும் தொழிலாளருக்கு இடித்து அறிவுரை கூறி, நடேசய்யர் எழுதக் கற்றுக்கொடுக்க முன்வந்தபோது, "தொழிலாளர் சட்ட புஸ்தகம்’ என்ற நூலை வாசித்து விளங்கத் தோட்டத்துரைமார் மேலும் தமிழ் கற்க விரும்பியிருப்பார்கள் என்று ஊகித்தால், அது, அவ்வளவு தவறான ஊகமாக மாட்டாது.
முற்றும்...
அடிக்குறிப்புகள்:
22. W.G.B. Wells. 1915. Cooly Tamil. Colombo: Ceylon Observer Press.
23. கோ. நடேச ஐயர். 1939. தொழிலாளர் சட்ட புஸ்தகம். கொழும்பு: இந்தியன் பிரஸ்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...