தமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் 10
ஸ்ரீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியா சென்றோர் 'தாயகம் திரும்பியோர்' என தம்மை இப்போதும் அழைத்து வருகின்றனர். இவர்கள் இலங்கையில் இருந்து மீளவும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டபோது இந்திய அரசாங்கத்தால் மறுவாழ்வுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அத்தகைய மறுவாழ்வுத்திட்டங்கள் பற்றியும் அவற்றின் வெற்றித்தோல்விகள் பற்றியுமாக ஆய்வரங்கில் கட்டுரையை சமர்ப்பித்தவர் வழக்கறிஞர் தமிழகன்.
வழக்கறிஞர் தமிழகனின் இயற்பெயர் ராமச்சந்திரன். இரத்தினபுரி லெல்லோபிட்டிய தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வரை படித்தவர். வி.எல். பேரைராவின் தலைமையில் இயங்கிய மலையக இளைஞர் பேரவை எனும் அமைப்பின் இரத்தினபுரி அமைப்பாளராக செயற்பட்டவர்.
1981 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு விண்ணப்பித்து திருச்சி சென்றவர் அங்கு உளவியல் (இளங்கலை), அரசறிவியல் (முதுகலை), இதழியல் மக்கள் தொடர்பு ஆகிய பட்டங்களுடன் திருச்சி அரச சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று இப்போது வழக்கறிஞராக பணியாற்றுகின்றார். 'தமிழ்க்காவிரி' எனும் சமூக கலை, இலக்கிய இதழின் ஆசிரியராகவும் நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தாயகம் திரும்பிய மக்கள் பேரவை போன்ற அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றார். 'முட்செடிகள் பூக்கும்' எனும் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ள இவர் 'தமிழ்நாட்டு நதிகள்', 'தனியார் மயமாகும் தண்ணீர்' முதலிய கட்டுரைத் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.
எழுத்தாளர், ஆய்வாளர், களச்செயற்பாட்டாளர், விமர்சகர், பேச்சாளர் ஊடகவியலாளர், உளவியல் ஆலோசகர் என பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் இவர் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மலையக மக்களுக்கு இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மறுவாழ்வுத்திட்டங்கள் குறித்து அனுபவபூர்வமாக எடுத்துரைத்தார். இலங்கையில் உயர்தரம் முடித்துவிட்டுச் சென்றவர் என்கின்றதன் அடிப்படையில் ஆய்வுநோக்கில் தனது அனுபவங்களுடன் கள ஆய்வு அறிக்கைகள் அரசாங்க அறிக்கைகள் என்பவற்றையும் ஆதாரமாகக் கொண்டு தனது கட்டுரையை வழங்கியிருந்தார்.
அவரது கட்டுரை பின்வருமாறு அமைந்திருந்தது.
இலங்கை கண்டியில் அமைந்துள்ள இந்திய உதவி துணைத்தூதுவர் காரியாலயத்தில் மறுவாழ்வுத்திட்டங்களுக்குப் பரிந்துரை செய்து அனுப்பவதற்காக மறுவாழ்வு பிரிவு (Rehabilitation Cell) ஒன்று இயங்கிவந்தது. இப்பிரிவில் தாயகம் திரும்பிய ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு குடும்ப அட்டை (Family Card) வழங்கப்பட்டது. இந்த குடும்ப அட்டையிலேயே தாயகம் திரும்பியவுடன் அவர்களுக்கு வழங்கவேண்டிய மறுவாழ்வு திட்டத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 18 வயதுக்கு குறைவானர்கள் பெயர் தாயின் அல்லது தந்தையின் அல்லது பாதுகாவலரின் கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டது. இலங்கையில் இருந்து தாயகம் திரும்புவதற்கு முன்பதாகவே மறுவாழ்வுத்திட்டங்களில் இணைத்துக்கொள்ளும் வாய்ப்புகளும் இருந்தன.
i. இந்திய ரயில்வே , வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல் , தேர்வு எழுதுதல்ii. அவரவர் சொந்த மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளல்.iii கும்மிடிப்பூண்டியில் இயங்கிய ஓட்டுனர் பயற்சிபள்ளி உள்ளிட்ட தொழிற் பயிற்சிகளில் சேர்ந்து பயிற்சி பெறல்.கீழ்க்கண்டவற்றைக் கருத்தில் கொண்டு மறுவாழ்வு உதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன.i. தாயகத்துக்கு கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் சொத்துக்கள்.ii. குடும்ப உறுப்பினரட்களின் மொத்த எண்ணிக்கை ஆண்,பெண் விகிதம், குழந்தைகளின் எண்ணிக்கை.iii. குடும்பத் தலைவரின் ஆர்வம், விருப்பம்.iv. வழங்கப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்கள்v. ஒரு குடும்பத்துக்கு மொத்தம் இந்திய ரூபா 5000 வங்கிக்கடன்vi. சுய வேலைவாய்ப்புvii. தொழில்வாய்ப்பு – தேயிலை, ரப்பர் தோட்டங்கள், நூற்ப ஆலைகள், அரசு பண்ணை கூட்டுறவு சங்கங்கள், ரெப்கோ வங்கி மூலமான வேலை வாய்ப்புகள்.viii. வேளான் திட்டங்கள்ix. அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளில் அனுமதிx. இலங்கையில் இருந்தவாறே இந்தியாவின் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு.xi. வீட்டுக்கடன்.
ஆனால், உண்மை நிலையே வேறானது. மேற்படி மறு வாழ்வுத்திட்டங்கள் பலனாளிக்காமல் போனதால் பிழைப்புத் தேடி பல்வேறு பகுதிகளுக்கும் மக்கள் குடி பெயர்ந்தனர். தற்போதைய நிலையில் இவ்வாறு தாயகம் திரும்பியோர் தமிழ்நாடு, ஆந்திரமாநிலம் (சித்தூர், பிரகாசம், நெல்லூர் மாவட்டஙகள்) கரநாடக மாநிலம் (குடகு, கோலார், ஹாசன், மைசூர் மாவட்டங்கள), கேரள மாநிலம் (இடுக்கி, கொல்லம் மாவட்டங்கள்), புதுச்சேரி, தெலுங்கானா, அந்தமான், நிக்கோபர் தீவுகள் என பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.
இதில் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் செறிவாகவும் ஏனைய பகுதிகளில் பரவலாகவும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வாழும் குடியிருப்பு பகுதிகள் இன்றும் 'சிலோன் காலனிகள்' என அழைக்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக இந்த மக்கள் தொகையின் எண்ணிக்கை இருபது லட்சமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும் இன்றைய நிலையில் சரியான தகவல்கள் இல்லை.
இவர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபா வங்கிக்கடனில் 3000 ரூபா மண்டபம் முகாமில் வழங்கப்பட்டதோடு எஞ்சிய தொகை உரிய முறையில் அவர்களை சென்று சேரவில்லை. வீட்டுக்கடன் அடிப்படையில் 25 ஆண்டுகள் காலக்கெடு அடிப்படையில் வழங்கப்பட்ட கடன்கள் 64 வீதமான குடும்பங்கள் இந்தக்கடனைப் பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகள் அமைந்துள்ள பகுதிகளே சிலோன் காலனிகளாக அழைக்கப்படுகின்றன. எனினும் காலப்போக்கில் கைமாறிய வீடுகளில் தற்போது பத்து சதவீதமனோரே தாயகம் திரும்பியோர் உடமைகளாக உள்ளன.
இரண்டு மூன்று தலைமுறைகளான பிறகும் கூட இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களும் அவர்களது வாரிசுகளில் பெரும்பாலானவர்களும் அடிப்படை வாழ்வாதாரங்களை பெற முடியாத நிலையிலேயே உள்ளனர். அவர்களிடம் இருந்து பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக வழக்கறிஞர் தமிழகன் சுட்டிக்காட்டுகின்றார்.
**தாயகம் திரும்பியோரிடம் தமிழ் நாடு வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடவுச்சீட்டு, குடும்ப அட்டை உரியவர்களிடம் திருப்பி அளிக்கப்படல் வேண்டும்.**தாயகம் திரும்பியோருக்கும் அவர்களது வாரிசுகளுக்கும் தாயகம் திரும்பியோர் சான்றிதழ்**தமிழ் நாட்டுக்கு வெளியே வேறு மாநிலங்களில் வாழும் தாயகம் திரும்பியோருக்கு தமிழ்ப்பள்ளிகள் அமைக்கப்டல் வேண்டும்.**தேயிலை ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சொந்தக் குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும்.**தாயகம் திரும்பியவர்களுக்காக அமைக்கப்பட்ட (Repatriate Copoperative Finanace and Development Bank ) ரேப்கோ (REPCO)** தாயகம் திருமபியோருக்கும் அவர் தலைமுறையினருக்கும் தமிழ் நாட்டில் அகதி முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலங்கை - இந்திய இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படுதல் வேண்டும்.
இம்மக்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு திட்டங்களின் விளைவுகளையும் விரிவான ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இதன் மூலம் இம்மக்களின் அவல வாழ்வை உலகுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும். இதன் எதிரொலியாக புதிய மறுவாழ்வுத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளிவீசும் ஒரு நல்ல நாளை நோக்கி நம்பிக்கையுடன் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களை அழைத்துச்செல்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
பாதிக்கப்படுகின்ற எந்தவொரு சமூகத்தின் சார்பிலும் அச்சமூகத்தை ஆதரித்து பிற அமைப்புகளும் ஆதரவாளர்களும் ஊடகங்களும் குரல் எழுப்பவது வழக்கம். இத்தகைய குரல்களின் விளைவாகவே அச்சமூகம் கவனிக்கப்பட்டு அதன் குறைகள் நீக்கப்படும் சூழல் உருவாகும். ஆனால், இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்களுக்கு ஆதரவாக எங்கிருந்தும் குரல் எழுப்பப்படவில்லை. மொத்த சமூகமும் மௌனம் சாதித்து விட்டது.
இலங்கையில் "இந்திய காரர்கள்' என்றும் இந்தியாவில் 'சிலோன் காரர்கள்' என்றும் அந்நியர்களாக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்ட தாயகம் திரும்பியோரின் சார்பாக குரல் எழுப்பப்படல் வேண்டும். இவ்வாறு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பி தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் வாழும் மலையகத்தவரின் மறுவாழ்வுக்கான வேண்டுகோளை முன்வைத்தார் வழக்கறிஞர் தமிழகன்.
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...