Headlines News :
முகப்பு » , , , , » அடெலின் மொலமூரே (1890 – 1977): - முதல் பெண் MP உருவான கதை | என்.சரவணன்

அடெலின் மொலமூரே (1890 – 1977): - முதல் பெண் MP உருவான கதை | என்.சரவணன்

முதன் முறையாக இலங்கையின் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பெண்; லேடி அடெலின் மொலமூரே (Adeline Molamure), இவரது தந்தையான 'ஜோன் ஹென்றி மீதெனிய அதிகாரம் என்பாரின் மரணத்தைத் தொடர்ந்து அவரது தொகுதியான 'ருவன்வெல்ல'வில் 1931 நவம்பரில் நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் அவரது மகளான மொல மூரே அம்மணி போட்டியிட்டு அரச சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர். 

1931 டொனமூர் திட்டத்தின் மூலம் சர்வஜன வாக்குரிமை கிடைப்பதற்கு முன்னரும் பெண்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான தடை சட்ட ரீதியில் இருக்கவில்லை. அதேவேளை கல்வியறிவு, வசதியும், செல்வாக்கும் பெற்ற ஆண்களே அப்போது அரசியல் அதிகாரத்தில் இருந்தார்கள். பெண்களை அரசியல் அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்கு அந்த ஆணதிகார சக்திகள் நினைத்தும் பார்த்திருக்கவில்லை என்றே கூறவேண்டும்.

இலங்கையில் சாதாரண வெகுஜன மட்டத்தில் அரசியலைப் பற்றி பெண்களோ, பெண்களின் மீதோ அக்கறையற்ற அக்காலத்தில் அவர் தெரிவு செய்யப்பட்டமை பெண்கள் அரசியலில் பங்கு பற்றுவதற்கான துணிவையும், நல்லதொரு முன்னுதாரணத்தையும், சிறந்த தொடக்கத்தையும் கொடுத்தது.
டொனமூர்
டொனமூர் ஆணைக்குழு
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி காலத்தில், 1924 ஆம் ஆண்டின் மனிங் அரசியல் சீர்த்திருத்தத்தின் மூலம் அரசாங்க சபையின் உறுப்பினர்களை 49 ஆக உயர்த்தியது, உத்தியோகபற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை 12 ஆக அதிகரித்து உத்தியோகபற்றற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 37 ஆக உயர்த்தியது. உத்தியோகபற்றுள்ள 37 உறுப்பினர்களில், 23 பேரை பிராந்திய ரீதியிலான தேர்தலின் மூலமும் 8 பேரை இனவாரி ரீதியாகவும் 6 பேர் இன ரீதியிலும் தெரிவுசெய்யப்பட்டனர். 

அதன்படி, இலங்கை 23 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, சொத்துரிமை மற்றும் ஆங்கிலக் கல்வியின் அடிப்படையில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அப்போது பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. சுதேசிகளுக்கான பிரநிதிதித்துவ அதிகரிப்பைக் கொண்ட சீர்திருத்தக் கோரிக்கை நாட்டில் எழுந்தது. இதன் விளைவாக, நவம்பர் 13, 1927 அன்று, டொனமூர் பிரபு தலைமையிலான மூன்று பேர் கொண்ட ஆணைக்குழு; நாட்டிற்கு பொருத்தமான அரசாங்க முறையை பரிந்துரைக்க இலங்கை வந்தது. 

இலங்கையில் 1928 ஜனவரி 18 வரை தங்கியிருந்து 34 தடவைகள் கூடி 141பிரமுகர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு கலந்துரையாடி அரசியல் சிபாரிசை முன்வைத்தனர். அந்த டொனமூர் அறிக்கையே டொனமூர் அரசியல் திட்டமென்கிற பேரில் அமுலுக்கு வந்தது. 

டொனமூர் குழுவினர் இலங்கையை 09 மாகாணங்களாகப் பிரித்து 50 தேர்தல் தொகுதிகளை பரிந்துரைத்தனர். அந்த 50 தொகுதிகளுக்குமான உறுப்பினர்கள் சர்வஜன  வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. பாலினம், சொத்து அல்லது கல்வி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், 21 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் சர்வஜன வாக்குரிமையை வழங்கிய ஆசியாவின் முதல் நாடாக இலங்கை அமைந்தது. ஆளுநரால் நியமிக்கப்படும் 08 உறுப்பினர்களும், நாட்டின் மூன்று தலைமை அரச அதிகாரிகள் உட்பட 61 உறுப்பினர்களைக் கொண்டதாக அரசாங்க சபை அமைக்கப்பட்டது. சர்வஜன வாக்குரிமையின்படி முதல் பொதுத் தேர்தல் மே 1931 மாதம் நடைபெற்றது. இத் தேர்தலில் மொத்த 15,77,932 வாக்காளர்களில் 5,99,384 பெண்களாக இருந்தார்கள்.  ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வேட்பாளர்களுக்கு வெவ்வேறு வர்ணங்கள் வழங்கப்பட்டன. வேட்பாளர்களுக்கு உரிய அந்தந்த நிறங்களில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தாம் விரும்பிய வேட்பாளருக்கு உரிய நிறத்தைக் கொண்ட வாக்குப் பெட்டியில் வாக்கை அளிப்பர். அத தேர்தலில் ருவன்வெல்ல தொகுதியில் ஜே.எச். மீதெனிய அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மீதெனிய அதிகாரம் தனது வேட்பு மனுக்களை மே 4, 1931 அன்று சமர்ப்பித்து, ருவன்வெல்ல வாக்காளர்களால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றாலும், மீதெனியா அதிகாரம் அரசாங்க சபை உறுப்பினராக நான்கு மாதங்களும் ஒரு நாளும் தான் அங்கத்தவராக இருக்க முடிந்தது. அவர் செப்டம்பர் 5, 1931 அன்று திடீரென இறந்தார். இதன் விளைவாக இடைத்தேர்தல் நடத்தி அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டியேற்பட்டது. சர்வஜன வாக்குரிமை கிடைத்தபின் இது தான் முதலாவது இடைத்தேர்தல்.

இறந்த தந்தையின் இடத்துக்கு
மீதெனியா அதிகாரம் இறந்து ஏழு நாட்களுக்குப் பிறகு, அவரது ஈமச்சடங்குகள் முடிந்ததன் பின் அவரது நெருங்கிய நண்பர்கள் மீதெனிய அதிகாரத்தின் மகள் அடெலின் மொலமுரே குமாரி ஹாமியிடம் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதாவது தகப்பனின் மரணத்தைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள ருவன்வெல்ல ஆசனத்தை தொடர்ந்தும் மீதெனிய பரம்பரையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதே அது. 

சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டிருக்கின்ற போதும் அரசாங்க சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் மேற்படி வேண்டுகோளுக்கிணங்க அடெலின் மொலமூரேவுக்கு சாத்தியமானது.

இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுவை அடெலின் மொலமூரே 1931 ஒக்டோபர் 5ம் திகதி சமர்ப்பித்தார் எட்லினுக்கு வழங்கப்பட்ட நிறம் வெள்ளை. இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக பெண்ணொருவர் போட்டியிடுகின்றமையால் பெண்கள் வாக்குரிமை சங்கம் எட்லினுக்கு ஆதரவு வழங்கப் போவதாக ஒக்டோபர் 14ம் திகதியன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதற்கிணங்க எட்லினின் வெற்றிக்காக பெண்கள் வாக்குரிமைச் சங்கம் பெரும் பிரச்சார வேலைகளை மேற்கொண்டது.

இத்தேர்தலில் அடெலின் 9398 அதிகப்படியான வாக்குகளால் வென்றார். இலங்கை தேசிய காங்கிரஸின் முக்கிய அரசியல் பிரமுகரான ஆ.எஸ்.எஸ்.குணவர்த்தனவை இத்தேர்தலில் 9000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வென்றார் அடெலின். ஆர்.எஸ்.எஸ். குணவர்த்தனவின் மனைவியான சுமனா பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தில் மும்முரமாகச் செயற்பட்டவர். பெண்கள் வாக்குரிமைச் சங்கம் இடைத் தேர்தலில் அடெலின் மொலமுரேயை ஆதரிப்பதற்குத் தீர்மானித்த போது, சுமனா குணவர்த்தனா அடெலின் மொலமுரே பெண்கள் வாக்குரிமைச் சங்கத்தின் உறுப்பினர் அல்லவென்றும், அவரது கணவர் பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்படுவதற்கு எதிராக இயங்கியவர் என்றும், ஆனால் ஆர்.எஸ்.எஸ்.குணவர்த்தனவோ இதற்கு ஆதரவாக இருந்தவர் என்றும் வாதிட்டார். இப்பிரச்சினையும் பத்திரிகைகளிலும் விவாதிக்கப்பட்டன. 

இச்சந்தர்ப்பத்தில் இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அம்மணி டேஸி டயஸ் பண்டாரநாயக்கா; கணவனின் கருத்துக்களுக்காக அவரது மனைவி தண்டிக்கப்படக் கூடாதெனத் தெரிவித்தார். இத் தேர்தலில் டேஸி டயஸ் பண்டாரநாயக்கா தேர்தல் பிரச்சாரங்களுக்கு முன்நின்று உழைத்தார். டேஸி டயஸ் பண்டாரநாயக்கா; சொலமன் டயஸ் பண்டாரநாயக்காவின் மனைவியாவார். பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராகப் பதவி வகித்த S.W.R.D. பண்டாரநாயக்காவின் தாயார், அதுபோல உலகின் முதலாவது பெண் பிரதமர் சிறிமாவின் மாமியாரும், இலங்கையின் பிற்கால முதலாவது பெண் ஜனாதிபதி சந்திரிகாவின் பாட்டியார் தான்  டேஸி பண்டாரநாயக்கா என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். 

அடெலின் பெண்களின் வாக்குரிமை விஷயத்தில் பெரிதாகச் செயற்படாவிட்டாலும், அவர் தனது தந்தையின் தொகுதியில் போட்டியிட அனுமதி பெற்றார்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின் திருமதி. அடெலின் மொலமூரேவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வந்தவர்கள் மத்தியில் உறையாற்றிய அடெலின் பின்வருமாறு தெரிவித்தார். 
"அரசாங்க சபையில் பெண்ணொருவர் அங்கத்துவம் வகிக்கக் கிடைத்தது பெண் குலத்துக்கே பெருமையளிக்கிறது, நான் பழுத்த மூன்று சிங்கங்களுடன் போட்டியிட வேண்டியிருந்தது. எனவே எனது வெற்றி பெண்குலத்துக்கான பெரு வெற்றியாகக் கருதப்பட வேண்டும்." அடெலின் மொலமூரேவின் சத்தியப் பிரமாணம் 1931 நவம்பர் 29ம் திகதி அரசாங்க சபையில் நடைபெற்ற போது அரசாங்க சபை கலரியில் பெண்கள் நிரம்பிக் காணப்பட்டனர்.
தன்னோடு போட்டியிட்ட 3 ஆண் வேட்பாளர்களை இலகுவாக தோற்கடித்து வெற்றியீட்டிய அடெலின் இந்த வெற்றியைப் பெண்களின் உரிமைக் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகப் மட்டும் பார்ப்பது வெறும் மிகைப்படுத்தலே. அவருடைய வெற்றியானது அவருடைய தனிப்பட்ட கவர்ச்சிக்கும் மகளைத் தெரிவு செய்ததன் மூலம் காலஞ்சென்ற மீதெனிய அதிகாரியின் மேல் மக்கள் காட்டிய விசுவாசத்திற்கும் கிடைத்த வெற்றியாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது."

14.01.1931 இடைத்தேர்தல் முடிவுகள்

மேலும் அந்த ஆசிரிய தலையங்கம், "அடெலின் மொலமுரே பெண்கள் வாக்குரிமைப் போராளி அல்லவென்றும் அவர் பழமை பேண் பிரிவைச் சேர்ந்த மேல்வர்க்கத்துக்குரியவர் என்றும், எவ்வாறாயினும் அவர் சட்டசபைக்குத் தெரிவானது பெண்கள் இயக்கம் இலங்கையில் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் காட்டுகிறது" என்றும் எழுதியது Independent பத்திரிகை. அவர் அரசியல் அல்லது சமூக செயற்பாடுகளில் வெளிப்படையாக தெரியப்படாதவர் என்றும், பெண்கள் பொது வேலைகளில் தம்மை ஈடுபடுத்துவதை அவரது சமூகப்பிரிவைச் சேர்ந்தவர்கள் குறைவான ஒன்றாகவே பார்த்தனர் என்றும் கூறியதோடு, இன்னொரு சுவாரஸ்யமான எச்சரிக்கையை Independent பத்திரிகை "பழமை பேண்" முற்சாய்வு சம்பந்தமாகவும் பெண்களுக்கு முன்னிருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் எழுதிற்று:
பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டதன் பேறாக சட்டசபைக்கு ஒரு பிரதிநிதி வரப் பெற்றுள்ளார். அவர் மிக அண்மைக்காலம் வரை பழமை பேண் முற்சாய்வுகளால் கட்டப்பட்டவராய் இருந்த போதும், அவரது இவ்வருகை பெண்கள் வாக்குரிமையின் தாராளவாதத் தன்மையின் செல்வாக்கைக் காட்டுவதாய் இருக்கிறது. அவர் அரசியலுக்கு எவ்வளவு புதியவர் என்பதைப் பார்ப்பதிலிருந்து, இந்நாட்டுப் பெண்களின் நல்வாழ்வுக்கு உதவும் வகையில் நல்ல முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட திட்டங்களை அவர் கொண்டிருப்பார் என்று எதிர் பார்க்க முடியாது. ஆனால், டொனமூர் ஆணைக்குழுவினர் ஒரு பெண் சட்டசபையில் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என ஆவல் காட்டியதற்குரிய காரணம், தனியே ஆண்களால் மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ள சட்டசபையில் பெண்களதும் பிள்ளைகளதும் நலன்கள் சிறந்த முறையில் கவனிக்கப்படாது விடப்படுகின்றன என்பதன் புரிதலே. அப்படியானால் திருமதி மொலமுரே வேலையில் ஈடுபடப் பணிக்கப்படும் பட்சத்தில் அவரது கையில் ஏகப்பட்ட வேலைகள் தயார் நிலையில் இருக்கும்.

டொக்டர் மேரி றட்ணம், ஃபுளொறின்டா விஜயக்கோன், மர்ஜோறி டி மெல், கரோலின் டி சில்வா ஆகிய பிரபலமான பெண்கள், அடெலின் மொலமுரே தேர்தலில் தெரிவானதையிட்டு பெரும் மகிழ்ச்சியை வெளிக்காட்டினர். வெற்றி பெற்ற தொகுதியில் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. பல வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில் ஒன்றாகப் பிஷப் கல்லூரி மாணவிகளினதும் நிகழ்ச்சி இருந்தது. இந்நிகழ்ச்சியில், 'நான் எல்லோருக்குமாக கதவைத் திறந்து விட்டுள்ளேன். இங்கிருக்கும் மாணவர்கள் என் வழியைப் பின்பற்றுவர் என நான் எதிர் பார்க்கிறேன்" என்று அடெலின் சொன்னார். (Wijesekera 1995:28)
நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தும் "பெண்களின் பிரஜா உரிமை" என்ற தனது கட்டுரையில் லீலாவதி அசெரப்பா, பெண்களின் பிரதிநிதிகள் பெண்கள் பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு உதவுவர் என்று எதிர்பார்ப்பு குரல் கொடுத்தார். (Young Ceylon, May, 1932)

கடந்த சில மாதங்களில் பல பெரு மாற்றங்கள் இத் தீவில் நடந்தேறியுள்ளன. வரலாற்றில் முதல் முதலாக பெண்கள் தம் வாக்களிக்கும் உரிமையைப் பாவித்துள்ளனர். இன்னும் அண்மையில் தான் அவர்கள் தம்மைப் பிரதிநிதித்துவம் செய்ய ஒரு பெண்ணைச் சட்டசபைக்கு அனுப்பியுள்ளனர். இவ்வளவு வேகமாக முன்னேறியுள்ள நாம் எதிர்காலத்தில் பெண்களையும், பிள்ளைகளையும் பாதிக்கும் சகல விஷயங்களையும் புறந்தள்ளி முன்னேற்றமடைவதை எதிர்பார்க்கலாம். நாங்கள் விரும்பும் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கலாம். காரணம், எங்களுக்காக வேலை செய்யச் சட்டசபையில் எங்கள் பெண்பாலாரே உள்ளனர். நாங்கள் மட்டும் ஒன்றிணைந்து ஒரு கனதியான நடைமுறை ரீதியான வேலையில் ஈடுபடத் தீர்மானிப்போமானால் எமக்காக மாபெரும் எதிர்காலம் காத்திருக்கிறது.

அசெரப்பா, பெண்கள் வாக்குரிமை சம்பந்தமாக வெளிக்காட்டிய பல்வகை நிலைகளைப் பகுப்பாய்வு செய்து, அரசியலில் பங்கு பற்றுவதன் மூலம் தமக்குத் தரப்படும் புதிய பொறுப்புப் பற்றி விழிப்பாய் இருக்குமாறு பெண்களைக் கேட்டுக் கொண்டார்.

பரவலான நோக்கில் பார்க்கையில் இன்று வரை பெண்கள் இரு வர்க்கமாகப் பிரிந்துள்ளனர். அதாவது வாக்குரிமை வேண்டும் என்போரும், வாக்குரிமை வேண்டாமென்போருமான இரு வர்க்கம். மூன்றாவது பிரிவினர் வாக்குரிமையை விரும்பிய போதும் அதைப் பெறுவதற்கு முயலாதவர். ஆனால் இந்த எல்லாப் பிரிவினரும் ஒன்றிணைவதற்கான காலம் இப்போ வந்துள்ளது. "ஓ, நான் இதைப் பற்றிக் கவலைப்படப் போவதில்லை. நான் வாக்களிக்க மாட்டேன்" என்று சொல்வது எங்களுக்கு நாடு தந்துள்ள பொறுப்பை வேண்டுமென்றே உதாசீனம் செய்வதாகும். இப்புதிய பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு இது பற்றித் தேவையான விபரங்களோடு தம்மை பரிச்சயப்படுத்திக் கொள்வது ஒவ்வொரு பெண்ணினதும் கடமையாகும்.

வறுமை போன்ற சமூக விஷயங்களில் பிரக்ஞைபூர்வமாக விழிப்பு உடையவராக இருந்த, திருமதி அசெரப்பா, பெண்கள் பிரதிநிதித்துவத்தின் நடைமுறை விளைவு என்ன என்னும் பொருத்தமான கேள்வியையும் கேட்டார்.

யாராவது ஒருவர் இயல்பாகவே கேட்கக் கூடும் இவையெல்லாவற்றினதும் நடைமுறைப் பெறுபேறு என்னவென்று. நாங்கள் சட்டவாக்கத்தால் வறுமையை ஒழித்து விட முடியுமா? இல்லை அப்படி முடியாது, இதற்கான காரணம் பல்வகையானது. ஆனால் இதற்கான பொறுப்பு அரசின் செயற்பாட்டின் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டும். பெண் வாக்காளர்கள் இந்த அரசின் செயற்பாட்டைத் தாண்டுவதற்கான செல்வாக்கைச் செலுத்த வேண்டும். சமூக சீர்திருத்தம் சம்பந்தப்படுகின்ற விஷயத்தில் வதிவிடப் பிரச்சினை முதலில் வர வேண்டும். சேரிகள் அகற்றப்பட வேண்டும். சேரிகள் சாபக்கேடானவையாக இருப்பதோடு, நல்ல வாழ்க்கைக்கு வழி விடும் கிராமப்புற நிலவரமும் சாத்தியமற்றுப் போயிற்று.

சபாநாயகராக இருந்த தனது கணவர் முன் சத்தியப்பிரமாணம் எடுத்து, 1931 நவம்பர் 20ஆம் திகதி அடெலின் மொலமுரே தனது சட்டசபை ஆசனத்தைப் பெற்றுக் கொண்டார். பொது மக்களின் பார்வைக்காக ஒதுக்கப்பட்ட இடம் ஆவலோடு இந்நிகழ்ச்சியைப் பார்க்க வந்த ஆண்களாலும், பெண்களாலும் நிரம்பி வழிந்தது. (Wijesekera 1995:29) சட்டசபையில் அவர் விவசாய நிறைவேற்று குழுவில் அதன் அமைச்சரான டி.எஸ்.சேனநாயக்காவோடு இருந்தார். அவர் விவசாயத்தில் குடியேற்றத் திட்டங்கள், குளங்கள் புனரமைத்தல், பிள்ளைப்பேற்று மருத்துவ நிலையங்கள், பெண்கள் சிவில் சேவையில் புகுதல் ஆகியவை உள்ளடங்கிய பல பிரச்சினைகளைக் கவனத்திற்கெடுத்தார். இவ் விஷயத்தில் அவர் ஆற்றிய உரை மிக உணர்வு பூர்வமாகவும் பலரைக் கவர்கின்ற மாதிரி அது அமைந்திருந்தது. (ஹன்சார்ட் 14 பெப், 1934:140)

பெண்களின் சார்பாக நான் எனது எதிர்ப்பை முன் வைக்க வேண்டும். ஆண்களால் தங்கள் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட பழைய சம்பிரதாயங்களாலும் விதிகளாலும் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுவார்களானால் அத்தகைய பழைய விதிகளை மாற்றியமைக்க பெருந்தன்மை கொண்டு இச்சட்ட சபை முன்வர வேண்டும். பெண்கள் தாங்கள் ஆண்களோடு சமமாக வைத்துப் பார்க்கப்பட வல்லவர்கள் என்பதை நிரூபித்த இக்காலகட்டத்தில் பெண்கள் வெறும் சலுகைகளை கேட்கவில்லை. எங்களுக்கு தேவையானவை நீதியும், ஆண்கலோடான சம உரிமையுமே! 

இலங்கையின் வரலாற்றில் அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண்மணி எனும் ஸ்தானத்தை அடெலின் பெற்றுக் கொண்டார். மேற்சபைக்குத் தெரிவான முதற் பெண்ணும் இவர் தான். 

ருவன்வெல்ல தொகுதியில் நடந்த இடைத் தேர்தலின் மூலம் அடெலின் தனது தகப்பனின் அரசியல் செல்வாக்கு, தனது உயர்குடிச் செல்வாக்கு பெண்களின் பிரச்சாரம் காரணமாகவே அரசியலில் நுழைய முடிந்தது. 

இது பெண் பிரதிநிதித்துவத்தின் தொடக்கம் மட்டுமல்ல, ஆணுறவு முறைச் செல்வாக்குக்கு ஊடாக பெண்கள் நாடாளுமன்றத்துக்கு செல்லும் கலாசாரத்தின் தொடக்கமாகவும் இது முத்தாய்ப்பாக இருந்தது என்பதையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும்.

அடெலின்  மொலமூரே தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடத்துக்குள் தெரிவான நேசம் சரவணமுத்துவும் இதுபோல தகப்பனின் அரசியல் செல்வாக்குக்கு ஊடாக அரசிலில் பிரவேசித்தவர் தான்.

அடெலின் தனது பெற்றோர், சகோதரன் சகோதரியுடன் நடுவில்
பரம்பரைப் பின்னணி
அடெலின் மீதெனிய அதிகாரி மொலமுரே 1890ஆம் அண்டு செப்டம்பர் முதலாம் திகதி ருவன்வெல்ல மீதெனிய பரம்பரையில் பிறந்தவர். அதிகாரி மீதெனிய பழைய நிலமான்ய முறையில் வந்த நிலச்சுவாந்தராக இருந்ததோடு, சட்டசபையில் நியமன அங்கத்தவராக இருந்து வந்தார். 

மீதெனியாவினதும் (பௌத்தர்) எமிலி சேனநாயக்காவினதும் (மிகப்பற்றுடைய அங்கிலிக்கன் கிறிஸ்தவர்) மூத்த பிள்ளையாகிய அடெலின் பிஷப் கல்லூரியில் படித்ததோடு அவரும் அங்கிலிக்கன் கிறிஸ்தவராக இருந்தார். அடெலின் இளைய சகோதரி அலிஸ் (Alice) லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாவும், பத்திரிகை உலக ஜாம்பவனாகவும் கருத்தடுகிற டி.ஆர்.விஜேயவர்தனவை விவாகம் செய்து கொண்டார். இதன் மூலம் நிலவுடைமை முதலாளித்துவ நலன்களும் பௌத்த கிறிஸ்தவ குடும்பங்களுக்கிடையேயான தொடர்புகளும் நெருக்கமுற்றன என்கிறார் குமாரி ஜெயவர்தன.

அலிஸ், விஜேவர்தன ஆகியோருக்கு பிறந்த நளினி விஜேவர்தன தான்; பிற்காலத்தில் இலங்கையின் பிரதமராக ஆனா ரணில் விக்கிரமசிங்கவின் தாயார்.

1912இல் பிரபல வழக்கறிஞர் பிரான்சிஸ் மொலமுரே என்பவரை விவாகம் புரிந்தார். கண்டி ராஜ்ஜிய காலத்தில் ஒரு அரச பிரதிநிதியாக இருந்த மீதேனிய மொலமூரே பரம்பரையைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் மொலமூரே.  பிரிட்டிஷ் அரசால் சேர் பட்டம் பெற்றவர். இவ்விவாகம் அன்றைய தேசாதிபதியாகவிருந்த சேர் ஹென்றி எட்வர்ட் மெகலம் ஆகியோர் உட்பட பல உயர் மேட்டுக்குடி வர்க்கத்தைக் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட பெரும் ஆடம்பரத் திருமணமாக நடாத்தப்பட்டது.
பிரான்சிஸ் மொலமுரே ஒரு சட்டத்தரணியாக இருந்ததோடு, நிலமான்ய பூர்வீகமுடைய நிலச்சுவாந்தராக இருந்தார். மடுவன்வெல பரம்பரைச்சொத்து இறுதியில்  பிரான்சிஸ் மொலமுரேவுக்குத் தான் சொந்தமானது. இவர்களுக்கு சொந்தமான மடுவன்வெல “வலவ்வ” வுக்கு சொந்தமான காணிகள் 84,000 ஏக்கர்களைக் கொண்டது. அவர்களின் குடும்ப வைத்தியராக இங்கிலாந்திலிருந்து வைத்தியர் ஒருவரை வரவழைத்து சேவைக்கு வைத்திருந்தார்கள். அந்த வைத்தியரின் பெயர் ஸ்பிரிடல். அவர் ஒரு எழுத்தாளரும் கூட. அவர் இங்கிலாந்தின் பத்திரிகையொன்றுக்கு மடுவன்வெல பரம்பரையினர் பற்றி எழுதிய கட்டுரையைப் பார்த்துவிட்டு இங்கிலாந்து அரசு இலங்கையில் கருப்பு இளவரசர் என்று மடுவன்வெல “திசாவ”வவை அழைத்தார்கள்.

இவர் 1924இல் இருந்து 1931வரை கேகாலை மாவட்டத்தின் சட்டசபை அங்கத்தவராக இருந்ததோடு 1931இல் தெடிகம ஆசனத்திற்குப் போட்டியின்றித் தெரிவானவர், இலங்கை சட்டசபையின் முதல் சபாநாயகர் அவர் தான். இதன் பிரகாரம் சட்டசபையில் ஒரே நேரத்தில் இத்தம்பதியினர் அங்கம் வகித்தனர். பிரான்சிஸ் மொலமுரே அரசாங்க சபை அமர்வு நடந்துகொண்டிருக்கும் போதே 1951, சனவரி 24 அன்று சிம்மாசனத்தில் வைத்தே பக்கவாதம் வந்து சரிந்து விழுந்தார். அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் மரணமானார். அவர்  அன்றைய காலத்தில் பனாமுற என்கிற பகுதியில் ஒரு யானையை சுட்டுக்கொன்றதன் சாபத்தால் தான் அவர் மரணமானார் என்று பிரபலமாக பேசப்பட்டது.

அடெலின் மொலமுரே இரண்டாவது அரசாங்க சபை தேர்தலில் போட்டியிட்ட போதும் லங்கா சமசமாஜக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கலாநிதி என்.எம்.பெரேராவுடன் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். அத்தேர்தலில் கலாநிதி என்.எம்.பெரேரா 15,275 வாக்குகளையும், திருமதி அடெலின் மொலமுரே 12,300 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தார். இதன்பின்பு அடெலின் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடவில்லை. 
வெளிநாட்டுக்கு பெண்கள் பிரதிநிதியாக கலந்துகொள்ளச் சென்றிருந்த அடெலின்
ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதும் அதில் அங்கத்துவம் பெற்று சோல்பரி யாப்பு திட்டத்தின் கீழ் 1947இல் உருவாக்கப்பட்ட செனற்சபைக்கு நியமின உறுப்பினரானார். செனற் சபைக்கு தெரிவான முதற்பெண்ணும் அடெலின் மொலமுரே ஆவார். 1955இல் செனற்சபையின் உப தலைவராகவும் தெரிவானார். வரலாற்றில் அப்பதவி வகித்த ஒரே பெண்ணும் இவரேயாவார். 

1948 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் அணி உருவாக்கப்பட்ட போது அதன் முதல் தலைவியாக அடெலின் தெரிவானார். 1950 இல் சர்வதேச பெண்கள் அமைப்பின் இலங்கைக் கிளையின் தலைவியாகத் தெரிவாகி ஆறு வருடங்கள் அந்தப் பதவியில் வகித்தார்.

அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற்றதன் பின்னர் எஞ்சிய வாழ்காலத்தில் சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தினார். அவர் கிறிஸ்தவ பெண்கள் சங்கம், லங்கா மஹிலா சமித்தி. ஐக்கிய தேசியக் கட்சியில் பெண்கள் பிரிவு போன்ற அமைப்புகளில் இருந்து செயற்பட்டிருந்தார்.

மகளும் அரசியலில்
அடெலின் மொலமூரேவின் ஒரே மகள் சீதா மொலமூரே செனவிரத்னவும் (1914 – 1998) பிற்காலத்தில் அரசியலில் இறங்கினார். தனது பாட்டனார், தந்தை, தாய் அனைவருமே அரசாங்க சபையில் அங்கத்துவம் வகித்து ஆட்சியில் பங்கு கொண்டவர்கள். எனவே 1965 தேர்தலில் சீதா போட்டியிட்ட போதும் தோல்வியைத் தழுவினார். 1967 ஆம் ஆண்டு பெல்மடுவ தொகுதியின் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனால் அதே 1967 ஆம் ஆண்டு அவரை செனற் சபைக்கு நியமன உறுப்பினராக நியமித்தது அப்போதைய டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.க அரசாங்கம். சிறுவர்கள், இளைஞர்கள் துறைக்கான தேசிய சபையின் தலைவராக அவரை நியமித்தது அரசாங்கம். ஆனால் 1970 இல் செனற் சபை அங்கத்துவத்திலிருந்து இராஜினாமா செய்துவிட்டு அதே ஆண்டு நடத்தப்பட்ட பொதுத்தேர்தலில் பலங்கொட தொகுதியில் ஐ.தே.க கட்சியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார். அவரோடு போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஒரு பெண். திருமதி மல்லிகா ரத்வத்த அத் தேர்தலில் வெற்றியடைந்தார். இலங்கையின் அரச அதிகாரத்தில் தாயும் மகளும் பங்காற்றிய முதலாவதாக பதிவுபெறுபவர்கள் அடெலினும் சீதாவும் தான்.  1989 ஆண்டு இலங்கை அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான தேசபந்து விருது சீதாவுக்கு வழங்கப்பட்டது. அவர் 1998 ஆம் ஆண்டு இறந்தார்.  அவரின் மகளின் கணவர் தான் இலங்கை தேயிலைச் சபையின் தலைவராகவும், மெக்வூட் எஸ்டேட்டின் நிர்வாக இயக்குனருமான சேபால இலங்ககூன்.

இத்தகைய பின்புலத்தைக் கொண்ட அடெலின் மொலமூரே 1977 ஆம் ஆண்டு யூலை 27ஆம் திகதி தனது 87ஆவது வயதில் மரணமடைந்தார்.

பரம்பரை – வர்க்கம் – சாதி போன்ற செல்வாக்குடன் தந்தை, கணவர் ஆகியோரின் அரசியல் செல்வாக்கும் தான் அடெலிநின் அன்றைய அரசியல் நுழைவை சாத்தியப்படுத்தியிருந்தது. 1931 இல் நடத்தப்பட்ட முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு பெண்ணும் தெரிவு செய்யப்படாத நிலையில் ஒரு மரணமும், அதன் வழியாக விளைந்த இடைதேர்தலும் தான் அந்த நுழைவை சாத்தியப்படுத்தியிருந்தது. ஆனாலும் அந்த ஆரம்ப சூழலில் பெண்கள் ஆரசியல் அதிகாரத்துக்கு வருவதற்கு பெரும் இடையூறுகள் இருந்த சூழலில் அடெலினின் வருகை பலருக்கும் வியப்பை மட்டும் தரவில்லை. பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரண வழிகாட்டியாக ஆனார் அடெலின். இலங்கைப் பெண்களின் அரசியல் வரலாற்றில் அடெலின் தொடக்கி வைத்த புள்ளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இது வரை தெரிவான பெண்களின் எண்ணிக்கை

* அரசியலில் பெண்களின் நுழைவுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இலங்கை உலகிலேயே பெண்களின் பிரதிநிதித்துவத்தில் மோசமான முதல் பத்து நாடுகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது. இந்த அட்டவணையில் அதைப் பார்க்கலாம்

நன்றி - தினகரன்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates