“எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு”
என்று ஒரு பலமொழியை தமிழ் பேச்சுவழக்கில் பல இடங்களில் உபயோகிப்பதைக் கண்டிருப்போம். அது தமிழில் மட்டுமல்ல ஆய்வுத்துறையில் இந்த பழமொழியின் உள்ளடக்கத்தை சகலரும் இதனை மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்துவார்கள். குறிப்பாக வர்த்தகம், வியாபாரம், முகாமைத்துவம் சார் கற்கைகளில் இதனை அதிகம் அறிந்துவைத்திருப்பார்கள்.
எதுவுமே நிலையில்லை. சகலதும் ஒரே சீராக இயங்குவதில்லை. மேலும் கீழுமாக “zigzag pattern” இல் ஏறி இறங்கி, இன்னும் ஏறி, இன்னும் இறங்கி என்று ஒரு அலையாகவே அனைத்தின் வளர்ச்சியும் பண்பாக இருக்கும். இவற்றை இன்னும் சொல்லபோனால் “peak” என்கிற உச்சத்தைக் கூட எதுவும் அடையும். ஆனால் அந்த “உச்சமும்” நிலையாக அங்கே தங்கி விடுவதில்லை. அது மீண்டும் இறங்கும். ஏறும் போது எப்படி uptrend / downtrend ஆக அது அலையாக உயர்ந்ததோ, அதுபோல இறங்கும் போது செங்குத்தாகவும் இறங்கக்கூடும் அல்லது மெதுவாக பள்ளத்தை நோக்கியும் இறங்கக் கூடும்.
சரி ஏன் இதை இங்கு குறிப்பிடுகிறோம். 2020 தேர்தலுக்கு பின்பான இலங்கைத் தேசத்தின் மையப் பிரச்சினைகள் என்ன? மைய அரசியலின் போக்கென்ன? அவற்றின் வெற்றியும், உச்சமும், நீட்சியும், வீழ்ச்சியும் பற்றி நாம் அலசும் போதும் இந்த “Peak” சூத்திரம் நமக்குத் தேவைப்படுகிறது.
இலங்கை என்கிற ஒரு தேசத்தை “இலங்கை” என்றோ அல்லது வேறு பெயர்களிலோ அடையாளம் காட்டியவர்கள் இலங்கையர்கள் அல்லர். அந்நியரே. குறிப்பாக மேற்கத்தேயவர்கள். அதுபோல இலங்கையில் உள்ள குழுமங்களை தேசிய இனங்களாக அடையாளம் காட்டியவர்களும் மேற்கத்தேயவர்கள் தான்.
இலங்கை காலனித்துவ செல்வாக்குக்குள் ஆட்படும் போது இலங்கை வெவ்வேறு ஆட்சிப் பரப்புகளைக் கொண்டிருந்தது. தமிழ் பேசும் மக்களைக் கொண்ட ஆட்சிப் பரப்புகளையும், சிங்களம் பேசும் மக்களை பெருவாரியாகக் கொண்ட ஆட்சிப் பிரதேசங்களையும் கொண்டிருந்தது. காலனித்துவம் காலப்போக்கில் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அனைத்து ஆட்சிப்பரப்புகளையும் ஒன்றிணைத்து “இலங்கை அரசை” நிறுவியது. ஆங்கிலேய காலனித்துவ அரசை எதிர்த்துக் கிளம்பிய “சுதேசியத் தனம்” நாளடைவில் “சிங்கள – பௌத்த தேசியத் தனமாக” பரிமாணமுற்றது. அதன் பரிணாமம் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதமாகவும், நீட்சியில் பேரினவாதமாகவும் ஈற்றில் பாசிசமாகவும் உருவெடுத்தது.
இந்த தொடர் வடிவ மாற்றத்தை படிப்படியாக எட்டிய சிங்கள பௌத்த குறுந்தேசியத்துக்கு அரசும், அதிகாரமும் கைவரப்பெற்றிருந்தது. அதன் ஒடுக்குமுகளுக்கு தொடர்ச்சியாக ஆளான தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம், மலையக சமூகங்களின் சாத்வீக வழியிலான போராட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஈற்றில் பல நாடுகளின் ஆதரவுடன் இரும்புக்கரம் கொண்டு அது மோசமான அழிவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
வர்த்தகத்துறையில் “அச்சம் அதிகரிக்கும்போது, அதிகமாக பேராசைப்படுங்கள்” என்கிற ஒரு கூற்று பயன்படுத்தப்படுவதுண்டு. அரசியலில் உச்ச அச்சத்துக்கு (Peak fear) ஆதிக்க சக்திகள் ஆட்படும்போது, அதன் விளைவுகளை அடக்கப்படும் சக்திகளும் எதிர்கொள்கின்ற நிலையை எட்டுகிறது. இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால் பாசிசம் பிறருக்கான குழியைத் தோண்டும் அதே வேளை தனக்கான குழியையும் அருகிலேயே வெட்டிவிடுகிறது.
நாட்டின் பிரதான தேசிய இனத்தால் ஏனைய தேசிய இனங்கள் எப்போதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருப்பதும், ஏனைய தேசிய இனங்களை அச்சத்துடனேயே வாழப் பழக்குவதும் ஒரு போக்காக வளர்ந்து நிலைபெற்றிருக்கிறது. தமது பிறப்புரிமையையும், வாழ்வுரிமையையும் வேண்டி போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன தமிழ், முஸ்லிம், மலையகத் தேசிய இனங்கள்.
உச்சத்துக்கு அடுத்து...?
கடந்த ஓராண்டுக்குள் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சிநிரலின் பட்டியல் உள்ள அனைத்தும் ஒவ்வொன்றாக எட்டப்பட்டு வந்திருக்கிறது.
சிங்கள மொழி அரச கரும மொழி, அரச மதமாக பௌத்தம், என்பவற்றை கச்சிதமாக முடித்தன.
வடக்கு கிழக்கு சிங்களக் குடியேற்றம், அதன் மூலம் எல்லைகளை மறுசீரமைத்தல், அதன் வழியாக செயற்கையாக சிங்கள பெரும்பான்மை தொகுதிகளாக ஆக்குதல், அதன் நீட்சியாக தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்தல் / அதற்குப் பதிலாக சிங்களப் பிரதிநிதிகளை பிரதியீடு செய்தல். சிங்கள அரச அதிகாரமானது தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கு அதிகாரத்தையும், அபிவிருத்தியையும், அனுசரனையையும் வழங்குவதில் பாரபட்சம் காட்டி வந்ததன் விளைவாக இன்று சிங்கள சமூகம் வளமான சமூகமாகவும், பிற சமூககங்கள் வளம் குன்றிய சமூகமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போர் நிகழ்ந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களும், மலோகப் பிரதேசங்களும் அபிவிருத்தியில் பல மூன்று தசாப்தங்கள் பின்தங்கிப் போயுள்ளன.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகக் கோட்பாட்டை உடைப்பதற்காக வடக்கு கிழக்கை துண்டாடினர். “புலிகளுக்கு போர் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு” என்கிற சுலோகத்தை முன்வைத்தார்கள். யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் தோற்கடித்தார்கள். யுத்தத்தை வென்றதும் “அரசியல் தீர்வு வாக்குறுதியை” நயவஞ்சகமாக கைவிட்டனர். இனி அரசியல் தீர்வே தேவை இல்லை என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தும் அளவுக்கு துணிவைப் பெற்றுள்ளனர்.
இப்படி சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சிநிரலை பூர்த்திசெய்யும் வகையில் அது கேட்டத்தை எல்லாம் சிங்கள அதிகார வர்க்கம் கொடுத்துக்கொண்டே இருந்தது. இந்த “Uptrend” மேலும் சில அம்சங்களை பூர்த்திசெய்தால் தான் பூரணப்படும் என்று வேட்கையுடன் இருந்தது.
அதாவது
- தமிழ் பேசும் அரசியல் சக்திகளில் தங்கியிராத சிங்கள அரசாங்கத்தை அமைத்தல்.
- அரசியலமைப்பை மாற்றக்கூடிய அளவுக்கு மூன்றில் பெரும்பான்மையைப் பெறுதல்.
- சிங்கள பௌத்தர்களின் பெரும்பான்மை கொண்ட சிங்கள பௌத்த அரசாங்கத்தை உருவாக்குதல்
- தமிழ் மக்களுக்கு இறுதியாக எஞ்சியுள்ள குறைந்த பட்ச அதிகார அலகான மாகாண சபைகளை (13 வது திருத்தச்சட்டத்தை) இல்லாமலாக்குதல் அல்லது மேலும் பலவீனப்படுத்துதல்.
- பௌத்தமத பீடங்களின் ஆலோசனையுடன் ஆட்சியை முன்னெடுத்தல் (கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவானதும் முதலில் செய்தது மாதாந்தம் கூடக்கூடிய பௌத்த ஆலோசனைச் சபையை அமைத்தது தான்)
2020 தேர்தலின் மூலம் இவற்றையும் பூர்த்தி செய்தாகிவிட்டது.
இப்போதுள்ள சிக்கல் அடுத்தது என்ன என்பது தான். பேரினவாதத்தை திருப்திபடுத்த இதற்கு மேல் வேறென்ன அபிலாசைகள் உண்டு என்பது தான்.
ஆக இனவாதம் அதன் உச்சவெற்றியை அடைந்திருக்கிறது. இனவாதம் கேட்டதையெல்லாம் அவ்வினவாதத் தரப்பால் ஆட்சியிலேற்றப்பட்ட அரசாங்கம் கொடுத்திருக்கிறது. இனி என்ன? அந்த உச்ச Peak நிலையை எட்டியதன் பின்னர் இதனை எட்டுவதற்காக இதுவரை காலம் விட்டுக்கொடுத்த ஏனைய சமூகப் பிரச்சினைகளின் நிலை என்ன என்பது தான் இன்றைய கேள்வி.
போர் நிகழ்ந்துகொண்டிருந்த போது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை பொறுத்துகொள்ளும்படி போரின் பேரால் கேட்கப்பட்டது. போர் முடிந்ததன் பின்னர் தமிழ்த் தேசியவாதத்தின் எச்சசொச்சங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், டயஸ்போராவை தோற்கடிக்கவேண்டும் என்றும் அதற்கும் அதிகாரத்தைத் தரும் படியும் இன்னும் பொறுத்துக்கொள்ளும் கேட்கப்பட்டது.
தேசியத்தின் பேரால், பாதுகாப்பின் பேரால், பயங்கரவாத ஒழிப்பின் பேரால், நாட்டை துண்டாடுவதை தவிர்ப்பது என்கிற பேரால் அனைத்து அராஜகங்களும், அநீதிகளும் நியாயப்படுத்தப்படுகின்றன. அதற்கான அங்கீகாரம் கோரப்படுகின்றன.
“உன்னிடம் உள்ள குச்சியை பெரிதாகக் காட்ட அருகில் ஒரு சிறிய குச்சியை வை” என்பார்கள். அல்லது “உன்னிடம் உள்ள குச்சியை சிறிதாகக் காட்ட அருகிலொரு பெரியதொரு குச்சியை வை” என்பார்கள்.
இதை சுலபமாக அரசியல் தளத்தில் எப்படி விளங்கிக்கொள்ள முடியும் என்றால். பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம், இன்னோரன்ன பிரச்சினைகளால் ஆட்பட்டிருக்கிற மக்களிடம் தேசபக்தி, இனவாதம், மதவாதம் போன்றவற்றின் பக்கம் எண்ணங்களை திசைதிருப்பி அதில் கருத்தூன்ற வைக்கும் அரசியல் கைங்கரியக் கலையை புரிந்துகொண்டால் போதும். “மக்கள் அதை விட்டுவிட்டு இதைப் பார்ப்பார்கள்.”
2020 தேர்தல் இத்தகைய சித்தாந்தத்தின் மீது தான் நடந்து முடிந்தது. பேரினவாதம் வெற்றியீட்டியது இந்த கைங்கரியக் கலையின் வழிமூலம் தான்.
90களின் இறுதியில் ஜே.வி.பியின் பத்திரிகையொன்றில் வெளியான ஒரு கட்டுரையில் ஒரு அட்டவணையை காட்டியிருந்தார்கள். அதில் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டுப போட்டிகள் நடந்த அதே நாட்களில் பாமர மக்களின் அன்றாட உணவான பாணின் விலை ஏற்றப்பட்ட்டிருப்பது பட்டியலிடப்பட்டிருந்தது. ஒரு பிரச்சினை தலை தூக்கியதென்றால் அதை சரிசெய்ய இயலாத போது வேறு ஒரு பிரச்சினையை கிளப்பி மக்களின் பார்வையை வேறு பக்கம் ஊன்றச் செய்வது ஆட்சியாளர்களின் நயவஞ்சகத் தந்திரோபாயமாக ஆகியிருப்பதை நாம் அறிவோம்.
போர் வெற்றி போதையிலேயே கடந்த ஒரு தசாப்தமாக சிங்கள பௌத்தர்களை தக்கவைத்திருந்த அரசாங்கம் இனி அம்மக்களின் பட்டினிப் பிரச்சினை, வேலையில்லாத் திண்டாட்டம், கடன் சுமை, வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு, தொழிலாளர்கள், விவசாயிகளின் பிரச்சினைகள் என்பவற்றுக்கு பதில் தட்டிக் கழிக்க முடியாத ஒரு இடத்தை இப்போது வந்தடைந்திருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் வரலாற்றிலேயே மோசமான இடத்தைத் தொட்டிருகிறது. வெளிநாட்டுக் கடன் கடந்த யூன் மாதம் 6521 பில்லியன்களை எட்டியிருப்பதாக மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. தவணைக் கடன்களைக் கட்ட முடியாமல் வட்டி செலுத்துவதை காலத்தள்ளுபடியையாவது செய்யும்படி முக்கிய கடன்வழங்கும் நாடுகளிடம் அரசு கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்படிருக்கிறது.
இந்த 2/3 ஐப் பெற்றுவிடலாம். சிங்கள பௌத்த அரசையும் நிறுவிவிடலாம். ஆனால் அவற்றைக் கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தையோ, ஜனநாயகத்தையோ, நிமிர்த்திவிட முடியாது. இலங்கையின் இறைமையையும், வளங்களையும் விற்றுத் தான் முயற்சிக்க வேண்டிவரும். பொருளாதார நெருக்கடி நாட்டில் குற்றச்செயல்களை அதிகரிக்க வைக்கும். எரியுர வீட்டில் பிடுங்குறது லாபம் என்பார்கள். கடனாளியாக்கி பின் அரசியல் தலையீடு செய்யும் நவகாலனித்துவ பிடியில் இலங்கை இலகுவாக சிக்கவைக்கப்படுகிறது. அப்போது சிங்கள பௌத்த தேசியவாதத்தையும் சேர்த்துத் தான் அடகுவைக்கவேண்டும்.
ராவய பத்திரிகை ஆசிரியரும் அரசியல் நிபுணருமான விக்ரர் ஐவன் சமீபத்தில் ஒரு கட்டுரையில்
“ஒரு தவணைக் கடனைக் கட்ட முடியாது போனாலும் நாடு கடன் தீர்க்க முடியாத “திவாலான” (bankrupt) நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுவிடும். அப்படி ஒரு நிலை நேர்ந்தால் இலங்கை மக்கள் கடும் நெருக்கடிகளை சுமக்க நேரிடும். கிரீஸ் நாட்டுக்கு 2008ஆம் ஆண்டு இப்படி ஒரு நேர்ந்தபோது அதை தூக்கிவிட உலகின் செல்வந்த நாடுகளைக் கொண்ட செல்வந்த அமைப்பான ஐரோப்பிய ஒன்றியம் இருந்தது. ஆனால் இலங்கை போன்ற நாட்டுக்கு அப்படி எந்தவித சக்தியும் கிடையாது.”
என்கிறார்
சில நாடுகள் இக்கடன்களுக்கு கைகொடுக்கும் என்கிற குறைந்தபட்ச நப்பாசை கூட யதார்த்தமற்றது. ஏனென்றால் அப்படியொரு நிலையை எந்தவொரு தனி நாட்டு உதவிகளாலும் சரிசெய்துவிடமுடியாது. மேலும் கடன்வழங்கும் சர்வதேச சட்டங்களின் படி அதற்கு பல தடைகள் உள்ளன. அப்படியும் ஒருவேளை உதவிகள் சாத்தியப்பட்டாலும் இலங்கையின் இறைமையையும், வளங்களையும் விற்றும் விட்டுக்கொடுத்தும் தான் மேற்கொள்ளவேண்டும். அது இலங்கையின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கும் ஒன்றாக நிச்சயம் அமையும்.
உள்நாட்டுக்கு வருமானம் ஈட்டித்தந்த பல துறைகள் மோசமாக கீழே விழுந்திருக்கிறது. மத்திய கிழக்கு வேலைவாய்ப்புக்கு செல்வோர் நின்றிருக்கிறது. ஏற்கெனவே அங்கிருப்போர் வேலையின்றி திரும்புகின்றனர். பலர் வரமுடியாமல் அங்கேயே சிக்கியுள்ளனர். தேயிலை ஏற்றுமதியும் மோசமாக வீழ்ச்சியடைந்துந்துள்ளது. விவசாய உற்பத்திகள் வெளிநாட்டு இறக்குமதிகளால் உள்நாட்டில் சந்தைபடுத்தமுடியாமல் விவசாயிகள் விவசாயத்தையே கைவிட்டு வருவதை நாளாந்த செய்திகளின் மூலம் அறிய முடிகிறது. சமீப காலத்தில் புடவைக் கைத்தொழில் துறை பாதிக்கப்பட்டு பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
பிரதான வருமான மூலங்கள் தகர்ந்து வருகின்ற அதே நேரம் அதன் விளைவாக உருவான வேலையில்லாத் திண்டாட்டத்தை சரி செய்ய அரசுக்கு உரிய மாற்று வழிகள் கிடையாது.
விக்ரர் ஐவன் கூறுவது போல
“முதலில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் இல்லாத நாட்டின் மீது வெளிநாடுகள் அக்கறை கொள்ளப்போவதில்லை. முதலீடுகளும் செய்யப்போவதில்லை. எனவே முதலில் இலங்கையின் மையப் பிரச்சினையான இனப்பிரச்சினையை நீதியாக தீர்ப்பதற்கு அரசு முன்வரவேண்டும். அதை செய்யாது கொஞ்சமும் நாட்டை முன்னேற்ற முடியாது” என்கிறார்.
இனவாத சித்தாந்தம் தமது பல சிவில் உரிமைகளை சில காலம் விட்டுக்கொடுக்கக் கூடும் எல்லா காலத்திலும் அப்படி இருக்கவே முடியாது. யுத்தத்தின் பேரால், சிங்கள பௌத்த தேசிய உயர்ச்சியின் பேரால் இத்தனை காலம் விட்டுக்கொடுத்த உரிமைகளை இனி வரும் காலங்களில் தொடர்ந்தும் விட்டுக்கொடுக்க யதார்த்தம் இடம் அளிக்கப்போவதில்லை.
ஆகவே தான் அந்த இனவாத peak இனி சரிந்து வீழ்வதற்கான வாய்ப்புகள் இலங்கையில் இருக்கிறது. இந்த அப்படி அதை சரியாய் வைப்பதில் ஏனைய தேசிய இனங்களின் வகிபாகம் என்ன? மீண்டும் இந்த இடைவெளியை சரியான அரைசியல் தந்திரோபாயத்துடன் கையாண்டு நீதியான அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பது எப்படி என்கிற திசைவழியில் தான் தமிழ் பேசும் மக்கள் செல்ல வேண்டிய பாதை.
சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தம், அதைக் கொண்டு நடத்தும் அரச அதிகார இயந்திரம். அதை வெகுஜனமயப்படுத்தும் சக்திகளையும் தோற்கடிக்கும் வாய்ப்பை இந்த வழியில் தான் இனி கண்டு பிடிக்கமுடியும்.
-தமிழ் முரசு (அவுஸ்திரேலியா) செப்டம்பர் 2020
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...