Headlines News :
முகப்பு » , , » சுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு! தேரர் புறக்கணிப்பு! - என்.சரவணன்

சுமணரதன தேரருக்கு தமிழில் நீதிமன்ற உத்தரவு! தேரர் புறக்கணிப்பு! - என்.சரவணன்

மட்டக்களப்பில் ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு இன்று தமிழில் நீதிமன்ற உத்தரவு அனுப்பப்பட்டுவிட்டதாம். அதனால் அவர் அந்த உத்தரவை புறக்கணிக்கிறாராம். நீதிமன்றத்துக்கும் போகப்போவதில்லையாம்.

அவருக்கு அவரின் மொழியில் தான் அனுப்பியிருக்க வேண்டும். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அதனால் நீதிமன்றத்துக்கு போகப்போவதில்லை உத்தரவை புறக்கணிக்கிறேன் என்று பொலிஸாரிடம் திருப்பிக்கொடுத்து அனுப்பும் உரிமையை இலங்கையில் ஏனைய பிரஜைகளுக்கும் உண்டா?

குறிப்பாக இத்தனை காலம் அரச நிறுவனங்களிலும் இருந்தும் தமிழர்களுக்கு கிடைக்கின்ற அறிவித்தல்கள், அரச கடிதங்கள் அனைத்தும் தமிழில் தான் கிடைக்கின்றனவா?

ஆம்பிடியே சுமணரதன தேரருக்கு எதிராக 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக அவரே சமீபத்தில் கூறியிருந்தார். நிச்சயம் அதற்கான கடிதங்கள் எதுவும் அவருக்கு தமிழில் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அப்படி கிடைத்திருந்தால் அவர் அப்போதே பொங்கி எழுந்திருப்பார். இப்போது இந்த விடயம் தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவின் கீழ் பல சிங்களவர்கள் கடுமையாக கொதித்தெழுந்து தமிழர்களை தூசனத்தால் திட்டித் தீர்ப்பதை அவதானிக்க முடிந்தது. சிங்கள பௌத்த நாடு இது என்பதை இவர்கள் அறிய மாட்டார்களா என்று ஆவேசமாக கருத்திட்டு வருகிறார்கள். இரண்டே மணித்தியாலத்துக்குள் ஆயிரக்கணக்கானோர் இதை பகிர்ந்துவிட்டார்கள்.

பௌத்தர்களே... சிங்கள பௌத்த மரபுகளை தேரர்கள் மட்டும்தான் காக்க வேண்டுமா...?

கிழக்கில் அழிக்கப்பட்டுவரும் பௌத்த மரபுகளை காக்க பாடுபடும் நமது ஆம்பிடியே தேரரை பலப்படுத்த 30 அன்று மட்டக்களப்பு ஸ்ரீ மங்கலாராமயவில் திறந்து தேரரைக் காத்திடுவோம்!

செப்டம்பர் 30ஆம் திகதி அவருக்கு ஆதரவாக மட்டக்களப்பில் சிங்கள பௌத்தர்களை அணிதிரளுமாறு போஸ்டர்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதை வைத்து சிங்கள ஊடகங்களும்ம் பேரினவாதத் தரப்பும் அடுத்த இரு வாரங்களுக்கு அரசியல் செய்யத் தான் போகின்றன. தற்போதைய பேரினவாத அரசுக்கு பெருந்தீனியாகத் தான் போகின்றன. தமிழர்களை நசுக்க இதையும் ஒரு காரணமாக கையிலெடுக்கத்தான் போகின்றன.

ஆம்பிடியே சுமணரதன தேரர் இலங்கையின் சண்டித்தனமான பிரபல தேரராக அறியப்படுபவர். கடந்த வாரம் கிழக்கில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்க முயற்சித்ததுயும் அவர்களை ஒரு கொட்டிலுக்குள் தடுத்து வைத்திருந்ததும் காணொளி செய்தியாக வெளி வந்திருந்ததை கவனித்திருப்போம். அரச அதிகாரிகள், போலீசார் என பலரை இவ்வாறு இதற்கு முன் தாக்க முனைந்தையும் அறிந்திருக்கிறோம். ஆனால் அவருக்கு எதிராக நீதித்துறை முறையாக செயற்பட்டதில்லை என்பதையே அவர் இன்னமும் சுதந்திரமாகவும், அதை அடாவடித்தனத்துடனும் நடந்துகொள்வதை வைத்து கணிக்க முடிகிறது.

கடந்த 22ஆம் திகதியன்று ஆம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்க பீடாதிபதிகள் உடனடியாகப் புனர்வாழ்வளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தார். 

அவரின் பௌத்த காவி உடை அவரின் அடாவடித்தனத்துக்கு வழங்கியிருக்கிற லைசன்ஸ் ஆக அவர் கருத்திக்கொண்டு இயங்கிக்கொண்டிருப்பதையே இவை காட்டுகிறது.

“ஒரு நாடு ஒரு சட்டம்” என்கிற ராஜபக்ஷ சித்தாந்தம்; சிங்களத்தையும், பௌத்தத்தையும், அராஜகத்தையும் அமுல்படுத்துவதை அல்லவா குறிக்கிறது.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates