1960 ஜீலை மாதம் நடந்த பொதுதேர்தலின் பின்னர் சிறிமா பண்டாரநாயக்காவின் அரசு ஆட்சிக்கு வந்தநேரத்தில் 75 பாராளுமன்ற ஆசனங்களை வென்றது. அப்போது பாராளுமன்றில் பெரும்பான்மை 151 ஆசனங்கள் பெறுவதற்கு 76 ஆசனங்கள் தேவைப்பட்டது. சுதந்திர கட்சியிடம் அப்போது 75 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்ததால், ஏதேனும் நிலைமையில் அரசு கவிழ்க்கக்கூடிய வாய்ப்பு எதிர்கட்சிக்கு இருந்தது. ஆனால் 1964 ஆண்டில் சிறிமா பண்டாரநாயக்க அரசை அப்போதைய முக்கியமான அமைச்சர் ஒருவரின் உதவியுடன் கவிழ்த்தனர்.
1963ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் அந்த நேரத்தில் அரசியல் அரங்கில் வலிமையானவர்களாக இருந்த மூன்று பெரும் இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முண்ணனி ஆகியன இணைந்து ஒரு ஒப்பந்ததை செய்துகொண்டன. அதன் பின்னர் வரவிருக்கும் பொதுதேர்தலை முகம்கொடுப்பதற்காக இந்த கட்சிகள் இணைந்து இடதுசாரி ஐக்கிய முண்ணனி என்கிற புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கினர். 1963 ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 திகதி கொழும்பு நகரத்தில் இடதுசாரி ஐக்கிய முன்னணி ஒன்றிணைந்து நாலா திசைகளிலிருந்தும் பெருமளவு மக்கள் கூடி பெரும் பேரணியுடன் ஆரம்பிக்கப்பட்டது. அன்று சுதந்திர சதுக்கத்தில் பெருமளவு மக்கள் கூடி இலங்கையின் இடதுசாரி அரசியலின் புதிய எழுச்சியை தோற்றுவித்தனர்.
கூட்டரசாங்கத்துக்கு வழிசெய்த பொரல்ல இடைத்தேர்தல்
1960 ஜீலையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரகட்சி உறுப்பினர் டொக்டர் டெனிஸ்டர் டி சில்வா பொரல்ல தொகுதியில் வெற்றிப்பெற்றார். 1963 நடுப்பகுதியில் அவரின் திடீர் இறப்பைத் தொடர்ந்து அவரின் ஆசனத்தை நிரப்புவதற்காக, 1964 ஆண்டு ஜனவரி 18 ம் திகதி மீண்டுமொரு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் எழுதியுற்றுக்கொண்டிருந்தது. ஐ.தே.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட ஆர்.பீ. லேநோரா இவ்இடைத்தேர்தலில் வெற்றிபெறுவார் என்கிற ஒரு பொது அப்பிராயம் நிலவியது. ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் பொரல்ல இடைத்தேர்தலில் இடதுசாரி ஐக்கிய முண்ணனியின் சார்பில் போட்டியிட்ட விவிலியன் குணவர்த்தன 423 மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். அப்போது ஆட்சியில் இருந்த சிறிலங்கா சுதந்திர கட்சி எந்த போட்டியாளரையும் இவ்இடைத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தவில்லை. ஆனால் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டெனிஸ்டர் டி சில்வாவின் மனைவி கமலா டி சில்வாவிற்கு சிறிலங்கா சுதந்திர கட்சி ஆதரவு வழங்கியது. தேர்தல் முடிவில் கமலா டி சில்வா 1356 வாக்குகளைப் பெற்று படுதோல்வியடைந்தார். அப்போது பிரதமராக இருந்த சிறிமா பண்டாரநாயக்கவும் இத்தோல்வியால் அதிர்ச்சியடைந்தார்.
அரசாங்கமும் இடதுசாரி கட்சிகளும் இணைந்த கூட்டரசாங்கம்.
1964 ஆண்டு மார்ச் 21 ஆம் திகதி பலம்வாய்ந்த 14 தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைந்து என்.எம்.பெரேரா தலைமையின் கீழ் காலி முகத்திடலில் பாரிய பொது பேரணியை நடத்தியது. அன்றைய இடதுசாரி ஐக்கிய முன்னணி உள்ளிட்ட முக்கிய தரப்பினர் அரசாங்கத்திடம் 21 அம்ச கோரிக்கையை சமர்ப்பித்தது.
இவ்வாறு இடதுசாரி ஐக்கிய முன்னணி பாரிய மக்கள் பலத்துடன் அரசியலில் முன்னிலைக்கு வருவது அத்தனை நல்ல சகுனமல்ல என்பதால் லங்கா சமசமாஜ கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிமா பண்டாரநாயக்க திட்டமிட்டார்.
அந்த நேரத்தில் அரசாங்கத்தின் அமைச்சராக இருந்த டி.பி. இலங்காரத்ன சமசமாஜ கட்சி தலைவர்களுடன் கலந்துரையாட நியமிக்கப்பட்டார்.
இறுதியில் சமசமாஜக் கட்சி அரசாங்கத்தில் இணைய முன்வந்த போதும் அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் அதை எதிர்த்தனர். அதனால் 1964 ஆண்டு மே 9ஆம் திகதி சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அந்த திட்டத்திற்கு ஆதரவாக 212 வாக்குகள் கிடைத்ததுடன் எதிராக 4 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதேவேளை லங்கா சமசமாஜ கட்சியில் எட்மண்ட் சமரகொடி தலைமையிலான தரப்பு அரசாங்கத்துடன் இணைவதை முற்றிலும் எதிர்த்தனர். அரசாங்கத்துடன் இணைவது தொடர்பாக லங்கா சமசமாஜ கட்சியின் மத்தியக்குழுவில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மேலதிகமான ஒரு வாக்கால் தோற்றடிக்கப்பட்டது.
ஆனாலும் சற்றும் தளராத கட்சித் தலைவர் என்.என்.எம் பெரேரா 1964 ஆம் ஆண்டு ஜீன் 07ஆம் திகதி கட்சியின் பொதுச்சபையைக் கூட்டி இந்த யோசனையை வாக்கெடுப்புக்கு விட்டார். அந்தத் திட்டத்துக்கு ஆதரவாக 507 வாக்குகள் கிடைத்ததுடன், எதிராக 176 வாக்குகள் அளிக்கப்பட்டன. அவ்வாறு அந்த யோசனை நிறைவேற்றப்பட்டதோடு, ஜீன் 11ம் திகதி சமசமாஜ கட்சி அரசாங்கத்துடன் சேர்ந்து கூட்டரசாங்கத்தை அமைத்தது. இதன் மூலம் சமசமாஜ கட்சிக்கு பின்வரும் வகையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன.
என்.எம், பெரேரா _ நிதி அமைச்சர்
அனில் முணசிங்க – போக்குவரத்து அமைச்சர்
ஜமில் குணவர்த்தன – அரச தொழில் அமைச்சர்
விவிலியன் குணவர்த்தன- வீடு மற்றும் உள்ளுராட்சி பிரதி அமைச்சர்
சந்திரா குணசேகர – கலாச்சார மற்றும் சமூக சேவை பிரதி அமைச்சர்.
புதிய கூட்டரசாங்கத்தால் நாட்டின் அரசியல் களம் சூடுபிடித்தது.
லங்கா சமசமாஜ கட்சி; அரசாங்கத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டாலும் மக்கள் ஐக்கிய முண்ணனியும், கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்துடன் ஒன்றிணையவில்லை. அன்று சமசமாஜ கட்சி வெளியேறியதோடு இடதுசாரி ஐக்கிய முன்னணி என்கிற சக்திவாய்ந்த கூட்டணியின் பலம் சரிந்தது. அது சிறிமா பண்டாரநாயக்க அரசாங்கம் எதிர்பார்த்த ஒன்றாகவே இருந்தது. இடதுசாரி ஐக்கிய முன்னணி வீழ்ந்த அதே வேளை கூட்டரசாங்கத்துக்குள்ளும் குழப்பங்கள் எழுந்தன. இதன் விளைவாக கூட்டரசாங்கத்தில் தபால் அமைச்சரசாக இருந்த மஹாநாம சமரவீர அந்த பதவியில் இருந்து இராஜனாமா செய்தார். அதுபோல ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரபலமான முன்னணித் தலைவராக இருந்த சீ.பீ.த. சில்வா தலைமையிலான அணியும் கூட்டரசாங்கம் பற்றி திருப்தியுடன் இருக்கவில்லை. இதன் விளைவாக அரசாங்கத்துக்குள்ளும் உட்கட்சி மோதல் உருவானதை உணர முடிந்தது.
சிம்மாசன உரைக்கு எதிராக 14 அரசாங்க உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
1964 ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கான வாக்களிப்பு இடம்பெற்றது. வாக்கெடுப்பு தொடங்கும்போதே சபைத் தலைவரான சீ.பீ.த.சில்வா எதிர்கட்சியின் இருக்ககைகளுக்கு சென்று அமர்ந்த போது எதிர்க்கட்சியினர் ஆரவாரமாக கரகோஷம் எழுப்பினர். அந்த சிம்மாசன உரை நடைபெற்ற போது அவ்வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்த அரசாங்க உறுப்பினர்களின் பட்டியல் பின்வருமாறு :
1. சீ.பீ.த சில்வா – சபைத்தலைவர், நீர்ப்பாசன, நிலங்கள், விவசாய வேளாண்மை, மற்றும் மின்சார அமைச்சர்.
2. மஹாநாம சமரவீர- மாத்தறை உறுப்பினர்
3. விஜேபாக்கு விபேசிங்க – மீரிகம உறுப்பினர்
4. இந்திர சேன டி சொய்சா – அம்பாறை உறுப்பினர்
5. எஸ்.பீ. லேனவ- கெகிராவ உறுப்பினர்
6. பீ.பீ. விக்ரமசூரிய – தெவிநுவர
7. சேர் ராசிக் பரீத் – மத்திய கொழும்பு உறுப்பினர்
8. ஏ.எச் .டீ .சில்வா- பொலநறுவை உறுப்பினர்
9. என்டன் விபேசிங்க – மஸ்கெலிய உறுப்பினர்
10. சந்திரசேன முணசிங்க – ரத்தொட்ட உறுப்பினர்
11. டீ.ஈ.திலகரத்ன- ரத்கம உறுப்பினர்
12. லக்மன் டி சில்வா- பலபிட்டிய உறுப்பினர்
13. அல்பிரட் சில்வா – மொனராகல உறுப்பினர்
14. சிங்கல்டன் செமன் – நியமிக்கப்பட்ட உறுப்பினர்
ஒரு வாக்கினால் தோல்வியடைந்த அரசாங்கத்தின் சிம்மாசன உரை
அன்றைய வாக்கெடுப்பின் இறுதியில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 73 வாக்குகள் கிடைத்தபோதும் எதிராக 74 வாக்குகள் அளிக்கப்பட்டன. அங்கே சௌரியமூர்த்தி தொண்டமான் வாக்களிக்காதது முக்கிய ஒரு அம்சமாக காணப்பட்டது. அத்துடன் அந்த வாக்கெடுப்பில் அரசாங்க உறுப்பினர்கள் மூவருக்கு வாக்களிக்க இயலாமல் போன நிலை ஏற்பட்டிருந்தது. அந்த நேரத்தில் லண்டன் நகர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த என்.எம்.பெரேராவும், கனடாவில் சுற்றுப்பயணத்தில் ஈடுப்பட்டிருந்த பெர்னாட் சொய்சாவுக்கும் வாக்களிப்பில் கலந்துக்கொள்ள முடியவில்லை. அத்துடன் அன்று பஸ்ஸர உறுப்பினராக இருந்த அமரானந்த ரத்னாயக பாராளுமன்றிற்கு வரும்போது அவரது காரின் சக்கரத்தில் காற்று போனதால் சரியான நேரத்திற்கு அங்கே வந்து சேர முடியவில்லை. அன்று சிலவேளை அமரானந்த ரத்னாயக்கவின் வாக்கு அரசாங்கத்துக்கு கிடைத்திருந்தால் இரு தரப்பும் 74 என்கிற விகிதத்தில் வாக்குகளைப் பெற்றிருப்பார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக அந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் காரின் சக்கரத்தில் காற்று போனதால் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது; விசித்திரமான நிகழ்வாக கருத முடியும்.
+ comments + 4 comments
Congratulations &continue to your work.
K T.sir
Superb...keep it up pavi.
From:luxy
Superb akka. 👍
Super pavi வாழ்த்துக்கள் 👍
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...