பெண்களை இரவு பகலாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துகொண்டு, அவர்களை அடிமைகளாக நடத்தும் சமூகத்தில் பெண்களே தங்களது கைகளில் தடிகளை எடுத்துக் கொண்டு, பெண்களை துஷ்பிரயோகம் செய்தவர்களை ஓட ஓட விரட்டினால்....?
நிச்சயமாக துஷ்பிரயோகம் குறைந்து விடும்.
ஆம் இதை நாங்கள் சொல்லவில்லை. இந்தியாவின் “குலாபி கேங்” அல்லது “ரோஸ் இயக்கம்” என்று கூறப்படுகிற அமைப்பின் உறுப்பினர்கள்.
“ஆமாம் நாங்கள் துஷ்பிரயோகம் செய்தவர்களை அடிக்கிறோம், நாங்கள் அவர்களை கண்டுபிடித்து, நீலம் பூக்குமளவுக்கு தடியால் அடிப்போம். அதன் பின் வேறு பெண்களிடம் அவர்கள் பிரச்சினை செய்வதற்கு சிந்தித்து கூட பார்க்க மாட்டார்கள்.”
இப்படி ரோஸ் இயக்க தலைவி குறிப்பிடுகிறார்.
குக்கிராமத்துப் புரட்சி
2006 ஆம் ஆண்டு இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புந்தல்கண்ட் என்னும் பிரதேசத்தில் பதவுசா என்கிற கிராமத்தில் குலாபி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு நான்கு தசாப்தங்களாக வாழ்ந்து கொண்டிருந்த, பால்தேவி என்கிற பெண் தான் கிராமவாசிகளையும் சேர்த்துக்கொண்டு ஒரு சிறிய அமைப்பாக இதனை ஆரம்பித்தார்கள். சித்திரவதை, பால்ய விவாகம், பெண்களின் கருக்கலைப்பு, வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பெண்களுக்கு தினமும் நிகழ்கின்ற சித்திரவதைகளுக்கெதிராக குரல்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாக அமைந்தது. வறுமையான, கல்வியறிவற்ற ஏராளமான பெண்கள் வசித்துவந்த அக்கிராமத்தில் இத்தகைய சித்திரவதைகள் பெறுகின.
தங்களது பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக எங்கேயாவது அநீதி இழைக்கப்பட்டதாக அறிந்தால், அங்கு சென்று அப்பிரச்சினையில் தலையிட்டு அமைதியாக பேச்சுவார்த்தை நடாத்தி நியாயம் கிடைக்கசெய்ய முயற்சிப்பார்கள். அது சாத்தியப்படாத பட்சத்தில் அச்சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு தடியால் அடித்து தண்டனை வழங்கும் ஒரு வழக்கத்தை உருவாக்கிக்கொண்டார்கள்.
ரோஸ் புடவையும், தடியும்
அந்த இயக்கத்தின் அங்கத்தவர்கள் ரோஸ் நிறத்திலான புடைவைகளை அணிந்தாந்தால் அவர்கள் “குலாபி” என்றோ அல்லது “ரோஸ் இயக்கம்” என்றோ அழைக்கப்பட்டார்கள். அதுதவிர தங்களை பாதுகாத்துக்கொள்வதற்கும், துஷ்பிரயோகம் செய்யும் நபர்களை தாக்குவதற்கும் தாம் எங்கு சென்றாலும் நீண்ட பலமான தடியை உடன் கொண்டு செல்வது ஒரு வழக்கமாக அமைந்தது.
ஆரம்பத்தில் ஒரு சில பெண்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தில் இன்று 400,000 க்கும் அதிகமான இயக்க உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். இந்த இயக்கம் அந்த மாநிலம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்திய பணமதிப்பில் 500 ரூபாயை வருடாந்த சந்தாவாக செலுத்தி உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள முடியும். உறுப்பினருக்கு அடையாள அட்டை வழங்கும்போது மூங்கிளால் ஆன ஒரு தடியும் வழங்கப்படுகிறது.
இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இணையும் பெரும்பாலான பெண்கள்; மிகுந்த வறுமையினால் துன்பப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பது மாத்திரமல்ல; அவர்கள் இந்தியாவின் அடிமட்ட விளிம்புநிலை சாதியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
அநீதிக்கு எதிராக...
2006 ஆம் ஆண்டு; உத்திர பிரதேசத்தில் உள்ள துஷ்கர என்கிற கிராமத்தில் வசித்து வந்த இளம்பெண்ணான ஜானகி தேவியும், அவரது காதலன் ஆன்ந்தகுமாரும் இருவீட்டாரின் எதிர்ப்புக்கு மத்தியில் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும் காதல் வாழ்க்கையை தொடங்கிய வேளை ஜானகிதேவி 15 வயதையும், ஆனந்தகுமார் இருபது வயதையும் தாண்டியுமிருந்தார். ஆனந்தகுமார் உயர்சாதியை சேர்ந்தவர் என்பதாலும், ஜானகி தேவியை விட வசதிபடைத்தவர் என்பதாலும் இக்காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
திருமணம் செய்துகொண்டு ஆனந்தகுமாரின் வீட்டில் வாழத் தொடங்கிய ஜானகிதேவி அங்கிருந்த உறவினர்களால் அதிகளவிலான சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்தபடி வாழவேண்டியேற்பட்டது. இந்த சூழலில் அவள் கர்ப்பமடைந்ததால் நிலமை இன்னும் மோசமடைந்தது. இதன் உச்ச கட்டமாக ஆனந்த குமாரின் பெற்றோர்கள் அவள்மீது பெற்றோலை ஊற்றி உயிரோடு தீ வைத்து கொன்றனர். அயலவர்கள் தீயை அணைத்து அவளை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றாலும் உயிர்தப்ப இயலவில்லை.
மிகுந்த வேதனையுடன் இருந்த ஜனாகிதேவியின் தந்தை காவல் நிலையத்திற்கு சென்று, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது புகார் அளித்திருந்தாலும், அவரின் புகாரை காவல் துறையினர் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். ஆனந்தகுமாரின் குடும்பம் வசதிபடைத்த உயர்சாதி பின்னணியைக் கொண்டிருந்ததே அதற்குக் காரணம். இறுதியில் ஜானகிதேவியின் தந்தையான தினேஷ் பிரசாத் பாண்டே அடுத்ததாக குலாபி இயக்கத்திடம் சென்றார்.
சந்தேகமின்றி பிரச்சினையை உறுதிசெய்துகொண்ட பின்; பொலிஸ் நிலையத்துடன் தொடர்புகொண்ட குலாபி இயக்கத்தின் தலைவி; தினேஷ் பாண்டேயின் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பெண்கள் பலருடன் வந்து போலீசை சுற்றிவளைப்பதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை எச்சரித்தார்.
“நாங்கள் வன்முறைக்கு ஆதரவு தருபவர்கள் அல்லர். ஆனாலும் சொல்லி விளக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். என்று குலாபி இயக்கத்தவர்கள் கூறுகிறார்கள்.
குலாபி இயக்கம் ஏன் அவசியம்?2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய குற்றபதிவுகள் திணைக்கள பதிவுகளின் படி 2013 ஆம் ஆண்டு மட்டும் 24,923 பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் பதிவு செய்யபட்டுள்ளன. பதிவு செய்யப்படாத சம்பவங்களின் எண்ணிக்கை இதை விட அதிகமானதாக இருக்குமென அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதை விட தினசரி நடக்கின்ற ஆட்கடத்தல், அசீட் வீசுதல், தாக்குதல்கள், படுகொலைகள் என்பனவும் அதிகம்.
இந்தியாவில் மத, கலாச்சார வழக்கத்தில் ஆண்களை விட பெண்கள் கீழான இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாலும், இந்தியாவில் தொலைதூர பின்தங்கிய கிராமங்களில் அறியாமையும், வறுமையும் அதிகமாக இருப்பதனாலும், பெண்கள் மீதான தாக்குதல்களும், துன்புறுத்தல்களும் அத்தனை கவனத்தில் எடுக்கப்படுவதில்லை.
இதன் காரணமாக பெருமளவு பெண்கள் இந்த இயக்கத்திடம் உதவிகோரி வருகின்றனர். இத்தகைய பெண்களின் துயர்துடைக்க உருவான அமைப்புக்களில் ஒன்று தான் குலாபி இயக்கம்.
குற்றவாளிகளைத் தாக்கி வன்முறை ரீதியில் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதையும், அதற்கென்று நீதித்துறை இருக்கிறது என்றும் குலாபி இயக்கத்துக்கு எதிராக கருத்து தெரிவிக்கிற பலர் கூறுவதுண்டு.
ஆனாலும் சட்டத்திற்கும் பணியாமல், பெண்களை சித்திரவதைகளுக்குட்படுத்துவதற்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் அச்சட்டத்தை சரியாக நிறைவேற்றாத நிலையில், பெண்களே தமது சுயபாதுகாப்புக்காக தடிகளையும், பொல்லுகளையும் கையில் எடுப்பதை எதிர்க்க எவருக்கும் தார்மீக உரிமை இல்லை.
2012ஆம் ஆண்டு நிஷ்தா ஜைன் என்கிற நோர்வேஜியரும், டேனிஸ் நாட்டு படைப்பாளி ஒருவரும் சேர்ந்து “குலாபி கேங்” (Gulabi Gang) என்கிற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை உருவாக்கினார்கள். 2014இல் இந்தியா முழுதும் இந்த ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பல பல விருதுகளை வென்றது.
நன்றி - தினகரன் 27.09.2020
https://roar.media இணையத்தளத்துக்காக Amanda Abeysooriya எழுதிய இக்கட்டுரையை தமிழாக்கம் செய்தவர் பவித்திரா
+ comments + 1 comments
Super pavi akka. Keep it up.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...