தேர்தலுக்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி பராளுமன்றம் முதற் தடவையாக கூடியபோது பாராளுமன்றத்தின் மொத்த 225 உறுப்பினர்களில் 222 பேர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். மூவரில் “அபே ஜாதிக பெரமுன” என்கிற கட்சியின் உறுப்பினர் (ஞானசார தேரர் தரப்பு) ஒருவர், அடுத்த இருவர் சிறைச்சாலையில் கைதிகளாக இருப்பவர்கள். ஒருவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்று தெரிவான மரண தண்டனைக் கைதி “சொக்கா மல்லி” என்று அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர. அடுத்தவர் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் ஐந்து வருடங்களாக சிறையில் இருந்தபடி இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகப்படியான விருப்புவாக்குகளைப் பெற்ற பிள்ளையான்.
இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக ஆகியிருப்பது உள்ளூர் செய்தியோடு மட்டுப்படவில்லை. அது சர்வதேச செய்தியாக இந்த நாட்களில் வளம் வந்துகொண்டிருக்கிறது. ஜனநாயக கட்டமைப்பொன்றில் இது ஒரு பிழையான முன்மாதிரி என பல முனைகளிலும் இருந்தும் கருத்துக்கள் வெளிவந்தமுள்ளன. அப்படியென்றால் 1982இல் குட்டிமணிக்கு மட்டும் ஏன் அந்த சந்தர்ப்பம் வழங்கவில்லை என்கிற விவாதங்களும் இப்போது எழுப்பப்படுகின்றன. இதை சற்று விரிவாகவே பார்ப்போம்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சார கூட்டம் கஹாவத்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மைத்திரிபாலாவின் ஆதரவாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர். இதன் சூத்திரதாரியான பிரேமலால் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ் வழக்கு விசாரணை, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள உட்பட 59 பேரின் சாட்சியங்களும், 16 தடயப் பொருட்களும் அவர்களுக்கு எதிரான வழக்கில் சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டன.
இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் தான் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த விசாரணையின் போது பிணை கோரியிருந்த பிரேமலால் ஜயசேகர சந்தேக நபராக கருதப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இப்படியான நிலையில் தான் தேர்தலுக்கான வேட்பு மனுவை பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்து, நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுவில் இடம்பிடித்தார்.
ஆனால் அவ்வழக்கில் பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் கடந்த ஜுலை மாதம் 31ஆம் தேதி பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க முடியுமா என்று தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரத்னஜீவன் ஹூல்லிடம் வினவியிருந்தபோது அதற்கு அவர்
“இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ள 6 பிரதான விடயங்களில் வேட்பாளரொருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன என்பது உள்ளடக்கப்படவில்லை. எனவே பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதற்கான தீர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே இதற்கான தீர்வு கிடைக்கும்”
என்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது இரட்டை பிரஜாவுரிமையுடையவர் என்பதற்காக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இரு வருடங்களின் பின்னர் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்ற தீர்ப்பினால் அவர் பதவி விலகினார். வழக்கு தொடர்ந்து இரண்டு வருடங்களின் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே அது வரையில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்தார். பாராளுமன்ற உறுப்பினராக அக முடியாத ஒருவர் வேட்பாளராக ஆக முடியும் என்கிற ஒரு விதி சட்டத்தில் உள்ள குறைபாடே. தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் மீது வழக்கு தொடர்ந்து தான் அவ்விதிக்கு சட்ட வலுவை உருவாக்க வேண்டுமா? ஒரு வகையில் அது ஒரு வேட்பாளருக்கு இழைக்கப்படும் அநீதி. அதுபோல அவரை தெரிவு செய்கிற மக்களுக்கும் ஏற்படும் அநீதி. இது சட்டத்தின் முக்கிய குறைபாடு.
பிரேமலால் ஜயசேகர 1997 ஆம் ஆண்டு பிரேதச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டவர். 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகி மகாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சாராக பதவி வகித்தவர். அதன் பின்னர் அவர் கிராமிய தொழிற்துறை, சுய தொழில் பிரதி அமைச்சராகவும் இருந்தவர். மகிந்த ராஜபக்ச அணியினரின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர்.
கடந்த 2015ஆம் ஆண்டு அரசாங்கத்தின் போது பாராளுமன்றம் கூடிய 213 நாட்களில் 39 நாட்கள் மட்டுமே கலந்துகொண்டவர். பாராளுமன்றத்தில் எழுத்துமூலமான கேள்விகளை இரண்டு தடவைகள் தான் சமர்பித்திருக்கிறார். பொது முறைப்பாடுகள் மூன்றை மட்டுமே முன்வைத்துள்ளார். பாரளுமன்ற உறுப்பினராக உருப்படியான எந்த வினைத்திறனையும் காட்டிய ஒருவராக அவர் இருக்கவில்லை. ஆனால் பெரும் வர்த்தக செல்வந்தரான பிரேமலால் ஜயசேகர நடந்து முடிந்த 2020 பொதுத் தேர்த்தலில் 104,237 விருப்பு வாக்குகளைப் பெற்று அம்மாவட்டத்தில் இரண்டாவது பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
அதே வேளை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிற பிரேமலால் ஜயசேகர; பாராளுமன்றத்தில் அமர்வதற்கோ, வாக்களிப்பில் பங்குபெறுவதற்கோ உரிமையற்றவர் என்று பாராளுமன்ற செயலாளருக்கும், நீதி அமைச்சுக்கும், சிறைச்சாலை ஆணையாளருக்கும் சட்ட மா அதிபரால் 19.08.2020 அன்று அறிவிக்கப்பட்டிருப்பதாக சட்ட மா அதிபர் காரியாலயத்தின் பேச்சாளரான நிஷார ஜயரத்ன தெரிவித்திருந்தார். இந்தச் செய்திகள் அடுத்த நாள் ஊடகங்களிலும் வெளியாகிருந்தன.
பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு சமூகமளிக்காதுவிட்டால் அவர் தனது ஆசனத்தை இழப்பார் என்பது அரசியலமைப்பு விதி. இதற்கு வரலாற்றில் பல உதாரணங்களும் உள்ளன.
83இல் தமிழர் இழந்த உறுப்புரிமை
1983 இனப்படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்து இரு மாதங்களில் ஓகஸ்ட் 5ஆம் திகதி அரசியலமைப்புக்கு 6வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியிலோ உள்ள எந்தவொரு நபரும் நாடு பிளவுபடுவதற்கு ஆதரவளிப்பது அல்லது ஊக்குவிப்பது அல்லது அத்தகைய முயற்சிகளுக்கு நிதி சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றமென்கிற விதி அந்த திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமன்றி சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விதிகளை மீண்டும் ஒரு சத்தியப்பிரமாணமாக செய்துகொள்ள நேரிட்டது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த எவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் பகிஷ்கரித்து வந்தார்கள். மூன்று மாதங்களாக பாராளுமன்றத்துக்கு உரிய அறிவித்தலை செய்யாது சமூகமளிக்காததால் அவர்கள் அனைவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர்.
எனவே இதே நிலை பிரேமலால் ஜயசேகரவுக்கும் நேரிடாதபடி அவசர அவசரமாக சிறைச்சாலை ஆணையகம், திணைக்களம், நீதிமன்றம், சட்ட மா அதிபர், சபாநாயகர் என்கிற சம்பந்தப்பட்ட தரப்புடன் ஆளுங்கட்சி அணுகியது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் மேன்முறையீடு செய்திருப்பதால் மாத்திரம் அவரை எந்தவிதத்திலும் பிணையில் விடுவிக்கும் சட்ட வாய்ப்புகள் இல்லை. அது மட்டுமன்றி குற்றவியல் சட்டத்தின் 333.4 விதிகளின்படி மேன்முறையீடு செய்துவிட்டதால் அந்த இடைக்காலத்தில் அவர் நிரபராதியாக கருதப்படமாட்டாது.
மேலும் அரசியலமைப்பின் 89 (ஈ) பிரிவின் படி பின்வரும் காரணிகளுக்கு உட்பட்டவர் எவரும் உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று தெளிவாக சுட்டுகிறது.
(ஈ) இரண்டாண்டுகளுக்குக் குறையாதவொரு காலத்திற்கான மறியற்றண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய தவறொன்றுக்காக ஏதேனும் நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அதனால் விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலத்திற்கான மறியற்றண்டனையை (அது எப்பெயரினால் அழைக்கப்படினுஞ் சரி) இப்போது அனுபவித்து வருபவராயிருந்தால், அல்லது நேர் முற்போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின்போது அத்தகைய தண்டனை அனுபவித்து முடித்தவராயிருந்தால், அல்லது மரண தண்டனைத் தீர்ப்பளிக் கப்பட்டவராயிருந்தால், அல்லது அத்தகைய மரண தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அளிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கு குறையாதவொரு காலத்துக்கான மறியற் றண்டனையை அனுபவிப்பராயிருந்தால், அல்லது நேர்முற் போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின்போது அத்தகைய தண்டனையை அனுபவித்து முடித்தவராயிருந்தால்;
சட்ட மா அதிபரின் கருத்து வெளியானதும் மகிந்த ராஜபக்சவின் விசுவாசியும், புதிதாக நீர் வள அமைச்சராக பதவி எற்றுக்கொண்டவருமான வாசுதேவ நாணயக்கார; ஊடக மாநாட்டில் கருத்து கூறும்போது “பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்துக்கு முடியுமா, இல்லையா என்பதை சட்ட மா அதிபர் தீர்மானிக்க முடியாது” என்று வாதிட்டதையும் கவனித்திருப்பீர்கள்.
அதுபோல பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்துக்கு செல்வதற்கான வசதிகளை செய்துகொடுக்கும்படி சிறைச்சாலை திணைக்களத்துக்கு ஆணையிட்டதாக சபாநாயகராக ஆக்கப்பட்ட மகிந்த அணியைச் சேர்ந்த மகிந்த யாபா அபேவர்தன; பாராளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்வரும் காலங்களில் இந்த வழிமுறை பிழையான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்று பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
ஓகஸ்ட் 20 ஆம் திகதி முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளில் பிரேமலால் அங்கு கலந்து கொள்வதற்கு சிறைச்சாலை அதிகாரசபை அனுமதிக்கவில்லை. பிரேமலால் தரப்பில் நீதிமன்றத்துக்கு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அத் தீர்ப்பு குறித்து பல ஊடகங்களில் “பிரேமலால் ஜயசேகரவை சபை அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு நீதிமன்று உத்தரவு” என்றே செய்தி வெளியிட்டன. ஆனால் அத்தீர்ப்பில் அப்படி நேரடியாக எதுவும் கூறப்படவில்லை. பிரேமலால் பாராளுமன்ற உறுப்பினராக கருமமாற்றுவது குறித்து சபாநாயகர் முடிவெடுக்கலாம் என்றே தீர்ப்பில் உள்ளது. இந்தக் குறிப்பை ஆளுங்கட்சியினர் வசதியாக மறைக்க முற்பட்டபோதும், எதிர்க்கட்சியினர் அத்தீர்ப்பை பாராளுமன்றத்தில் வாசித்து காட்டி சபாநாயகருக்கு சுட்டிக்காட்டினர். அதாவது நீதிமன்றம் அனுமதித்துவிட்டதாக ஆளும் ராஜபக்ச தரப்பு கூறுவது சுத்தப்பொய்.
இறுதியில் பிரேமலால் ஜயசேகர செப்டம்பர் 8 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
இது ஒரு சட்ட விரோதமான செயல் என்று எதிர்க்கட்சிகள் அன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்தே வந்திருந்தனர். சத்தியப்பிரமாணம் செய்த போது அவர்கள் கறுப்பு பட்டிகளை சபைக்குள் வீசி எறிந்தவாறு சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சரத் பொன்சேகாவுக்கு நேர்ந்தது.
அதுமட்டுமன்றி மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் சரத் பொன்சேகாவை குற்றவாளியாக அறிவித்து சிறைக்கு அனுப்பியிருந்தது. சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்றத்திற்கு வருகை தர அப்போதைய அரசாங்கம் இடமளிக்காததை சபையில் எதிர்க்கட்சிகளும், சரத் பொன்சேகாவும் கூட நினைவு கூர்ந்தனர்.
சரத் பொன்சேகா இது குறித்து பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போது
‘60 மாதங்கள் சிறைத்தண்டனை வகித்த காலப்பகுதியில் தன்னை பாராளுமன்றக் கூட்டங்களில் பங்குபற்ற அன்றைய சபாநாயகர் சமல் ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரர்) தனக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.”
என்பதை நினைவுறுத்தினார்.
பின்னர் சரத் பொன்சேகாவை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளவும் விடவில்லை, அதன் பின்னர் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையையும் இழந்தார்.
2009இல் யுத்தம் நிறைவடைந்ததும் ஓய்வுபெற்ற பொன்சேகா 2010 ஜனவரி 26 ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு எதிராக பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். 18 லட்ச வாக்கு வித்தியாசத்தில் மகிந்த வென்றார். இரண்டே வாரத்தில் மகிந்த அரசு பொன்சேகாவை கைது செய்து சிறையில் அடைத்தது. ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு கொழும்பு மாவட்டத்தில் 98,456 விருப்பு வாக்குகளைப் பெற்று வென்றார். ஆனால் இரு நீதிமன்றங்களில் அவருக்கு எதிரான வழக்குகள் இருந்தன. கூடவே இராணுவ நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு 30 மாதகால சிறைத்தண்டனை கிடைத்தது. அவரிடம் இருந்து சகல பதவிகளும், பட்டங்களும், சலுகைகளும் பறிக்கப்பட்டன. வெள்ளைக்கொடி விவகார வழக்கில் அவருக்கு மூன்றாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனைகளின் காரணமாக அவர் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டது. இறுதியில் அரசியலமைப்பின் 89 (அ), 91 ஆகிய பிரிவிகளின் படி பொன்சேகா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பதாக பாராளுமன்ற செயலாளரால் தேர்தல் ஆணையாளருக்கு ஒக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.
சரத் போன்செகாவுக்குப் பதிலாக பட்டியலில் அடுத்ததாக இருந்த லக்ஷ்மன் நிபுன ஆராச்சி பதவியேற்க மறுத்துவிட்டதால் ஜயந்த கெட்டகொட தெரிவானார்.
2012 இல் சரத் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப்பட்டு வெளியே வந்தார். 2015 தேர்தலில் ஜனாதிபதியாக தெரிவான மைத்திரிபால சிறிசேன சரத் பொன்சேகாவின் மீதான சகல வளகுகளில் இருந்தும் விடுவித்தார். தான் இழந்த எம்.பி பதவியை திருப்பித் தரும்படி கேட்டு மேன்முறையீடு செய்தார். அக்கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அதாவது அரசியலமைப்பின் 89 (அ), 91 பிரிவுகளின் படி ஒருவருக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டால் அத்தினத்திலிருந்து அவர் மீதான தகுதிநீக்கமும் இல்லாமல் ஆக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் நீதிமன்றம் பொன்சேகாவின் கோரிக்கையை நிராகரித்தது.
மரண தண்டனைக் கைதியின் எல்லை
பிரேமலால் இப்போது சாதாரண கைதி அல்ல, ஒரு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட ஒருவருக்கு எம்.பி பதவியேற்கும் வாய்ப்பை வழங்கியதானது, அரசியலமைப்புக்கு முரணானது என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல.
ஆளுங்கட்சி தரப்பில் வாதிட்டபோது “மேன்முறையீடு செய்யப்பட்டுவிட்டதால் அதற்கு கீழ் உள்ள நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியற்றதாகிவிடுகிறது” என்று வாதிட்டனர். சட்டமியற்றும் பாராளுமன்றத்தில் இத்தகைய பிழையான அர்த்தப்படுத்தல்களை பாராளுமன்ற உறுப்பினர்களே முன்வைத்ததானது சட்டத்தை கேலி செய்யும் நிலைக்கு அவர்கள் ஆளாகியிருப்பதையே வெளிப்படுத்தியது.
இதில் இன்னொரு தகவலையும் இங்கு கூறியாகவேண்டும். சிலவேளை பிரேமலாலுக்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியாது போயிருந்தால் அடுத்த சிக்கல் ஒன்று இருக்கிறது. இரத்தினபுரி மாவட்டத்தில், அதே கட்சியில் போட்டியிட்டவர்களில் பிரேமலுலுக்கு அடுத்தபடியாக விருப்பு வாக்குகளைப் பெற்றவர் உறுப்பினராக ஆவார். ஆனால் பிரேமலுலுக்கு அடுத்தபடியாக விருப்புவாக்குகளைப் பெற்றவர்கள் இருவர் இருக்கிறார்கள். ரஞ்சித் பண்டார, ரோஹன கொடிதுவக்கு ஆகிய இருவருமே 53,260 வாக்குகளை இருவருமே பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பில் தேர்தல் ஆணையகத்தின் நிர்வாக இயக்குனர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க கூறும்போது, நாணயத்தை சுண்டி எறிந்து தான் தீர்ப்பை வழங்க நேரிடும் என்கிற விசித்திர பதிலை தருகிறார். இப்படி ஒரு வழிமுறை இருக்கிற போதும் இதுவரை வரலாற்றில் இதற்கான சந்தர்ப்பம் நேர்ந்ததில்லை.
எப்படியோ 1976 க்குப் பின்னர் இலங்கையில் எவரும் மரணதண்டனைக்கு உள்ளாகவில்லை. மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோர் இன்னமும் அப்படியே தான் இருக்கிறார்கள். ஆனால் மரண தண்டனையை இனி நிறைவேற்றப் போவதாக கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்ததுடன் அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தார். தூக்குத் தண்டனைக்கான கயிறும் கூட வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
பிள்ளையானும்....
கொலைக்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட பிரேமலால் மட்டுமல்ல பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கூடவே முன்னாள் எம்.பி ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பிள்ளையான் என்று அழைக்கப்படுகிற சிவநேசத்துரை சந்திரகாந்தனும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார். அது மட்டுமன்றி பிள்ளையான் மட்டக்களப்பில் 54,198 விருப்பு வாக்குகளைப் பெற்றது மாத்திரமன்றி அம்மாவட்டத்திலேயே அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் பிள்ளையான் தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டாலும் பிள்ளையானும் மகிந்த ராஜபக்ச தரப்பின் செல்லப்பிள்ளை என்பதும் இத் தேர்தலில் TMVP சார்பாக போட்டியிட்டாலும் அது மகிந்த தரப்புக்கு நேரடியாக போகப்போகும் ஒரு ஆசனம் தான் என்பது வெளிப்படையான ஒன்று. ஆக இந்த இரு கொலைக்குற்றச்சாட்டு உள்ள கைதிகளும் ராஜபக்ச தரப்பினருக்காக சேவகம் செய்யப் போய் சிறையில் இருப்பவர்கள். ராஜபக்சவினரின் அவர்களை சட்ட இடையூறின்றி பாராளுமன்றத்தில் அமர வைக்கமாட்டார்களா என்ன?
சிறையிலிருந்து சந்திரசேகரன்
இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் உதாரணத்துக்கு கொண்டு வர வேண்டும். 06.04.1991 இல் கொழும்பு ஜே.ஒ.சி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட வரதன் மலையகத்தில் தலைமறைவாக இருந்தபோது வரதனின் நடமாட்டத்தை அறிந்திருந்தும் தகவல் கொடுக்க தவறினார் என்று குற்றம் சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் மலையாக மக்கள் முன்னணியின் தலைமையைச் சேர்ந்த சந்திரசேகரன், காதற், வி.ரி தர்மலிங்கம் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரன் 1994ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சிறையிலிருந்தே போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1994 தேர்தலில் சந்திரிகா ஆட்சியமைக்க ஒரே ஒரு ஆசனம் போதாமல் இருந்த நிலையில் சந்திரசேகரனின் அந்த ஒரு ஆசனம் இணைந்ததில் தான் ஆட்சியமைக்க முடிந்தது. சந்திரிகா அவர்களை சட்ட விரோதமாக சிறையிலிருந்து மீட்கவில்லை. ஏனென்றால் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்களே ஒழிய அவர்கள் மீது நீதிமன்றில் வழக்குகள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. ஆக அவர்கள் குற்றவாளிகளாக இருந்ததில்லை. அவர்கள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படாத நிலையில் அவர் மீதான குற்றத்தை விலக்கி சட்டமா அதிபர் திணைக்களம் அவரை விடுதலை செய்தது.
குட்டிமணிக்கு மறுக்கப்பட்ட நீதி
செப்டம்பர் 11 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முக்கிய கேள்வி ஒன்றை முன்வைத்தார்.
“சபாநாயகர் அவர்களே! அன்று ரெலோ இயக்கத்தின் தலைவராக இருந்த குட்டிமணியை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியால் 1982 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டார். அப்போது தேர்தல் ஆணையாளர் அதை சட்ட ரீதியில் வர்த்தமானிப் பத்திரிகையில் அறிவிப்பையும் செய்தார். அதை பாராளுமன்ற செயலாளருக்கும் சட்டப்படி அறிவித்தார். குட்டிமணி அப்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர். குட்டிமணி அப்போது தன மீதி விதிக்கப்பட்ட மரணதண்டையை எதிர்த்து மேன்முறையீடு செய்திருந்தார். ஆனால் அன்றைய பாராளுமன்ற சபாநாயகர் பாக்கீர் மாக்கார்; குட்டிமணியை சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு கூட அனுமதிக்கவில்லை. அதற்கு அவர் அரசியலமைப்பின் 89, 91 ஆகிய விதிகளை சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பை பாதுகாப்பது சபாநாயகரான உங்கள் தலையாயக் கடமை. சபாநாயகர் பாக்கீர் மாக்கார் ஒரு முன்மாதிரியான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். ஆனால் நீங்கள் அரசியலமைப்பின் அந்த விதிகளை மீறி இந்த முடிவை எடுத்திருப்பதா மூலம் அரசியலமைப்புக்கு முரணாக நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகிறேன்.”
சஜித் பிரேமதாசவின் இந்த உரைக்கு பதிலளித்த சபாநாயகர்
இந்த வாதத்தை இங்கல்ல நீங்கள் நீதிமன்றத்தில் முன்வைத்திருக்கவேண்டும். ஏனென்றால் நீதிமன்றம் இப்போது அனுமதியளித்திருக்கிறது.” என்றார்.
சபாநாயகரின் இந்தக் கூற்றுக்கு மீண்டும் பதிலளித்த சஜித்,
“நீதிமன்றத்தினதோ, நீதிபதிகளினதோ தீர்ப்பையிட்டு நான் கருத்துச் சொல்வது அறமல்ல. சபாநாயகர் என்றவகையில் பாராளுமன்றத்தின் கெளரவம், சுயாதீனத்தை பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கின்றதே தவிர ஜனநாயகத்தின் பிரதான தூண்களாக கருதப்படும் நீதிமன்றம் நிறைவேற்றுத்துறை, பாராளுமன்றம் என்ற மூன்று துறைகளில் ஏனைய இரண்டுக்கும் பொறுப்புக்கூற நீங்கள் கடமைப்பட்டில்லை. யாருக்கும் அடிமைப்படாமல், சுந்திரமாக தீர்மானம் எடுக்கலாம். சபாநாயகர் என்கிற வகையில் நீங்கள் முன்னாள் சபாநாயகர் அனுரா பண்டாரநாயக்கவின் தீர்ப்பை நீங்கள் முன்னுதாரணமாக கையாண்டிருக்கவேண்டும். அனுரா பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்து காட்டிய முன்மாதிரியை பார்க்கவேண்டும்.”
இவ்வாறு சுட்டிக்காட்டிய சஜித் அரசியலமைப்பின் 89, 91 ஆகிய பகுதிகளையும் வாசித்துக் காட்டினார். “இந்த அரசியலமைப்பு விதிகளை விட இது தொடர்பில் வேறேதும் உயர்ந்தபட்ச விதிகள் உண்டா என்று உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்” என்று சபாநாயகரிடம் கேட்டார்.
ஆனால் இந்த கேள்விகளுக்கு சபாநாயகரால் ஒழுங்கான பதிலை சபையில் அளிக்க இயலாது போனது. அங்கு சபைத் தலைவராக இருந்த தினேஷ் குணவர்தன வழமைபோல ஆவேசமாக கத்தியபடி இந்த உரையை ஹன்சாட்டில் பதிவு செய்யக் கூடாது என்றார். “இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயத்தை உங்கள் விருப்பங்களின் பேரில் ஹன்சாட்டிலிருந்து நீக்குவதற்கு முடியாது” என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்துக்குள் இடம்பெற்ற விசாரணையை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவொன்றை வழங்கியிருந்தது. அப்போது அந்த உத்தரவை சபாநாயகராக இருந்த சமல் ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை என்றார்.
செப்டம்பர் 08 அன்று ஜேவிபி தலைவர் அனுரா குமார திசாநாயக்க ஆளுங்கட்சியினரின் கடும் இடையூறுகளின் மத்தியில் இது குறித்து நீண்ட உரையை நிகழ்த்தினார். மிகவும் முக்கியமான பேச்சு அது.
“நமது சிறை விதிகளின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை எல்லா சிறையிலும் வைத்திருப்பதில்லை. அதற்கென்று போகம்பர, வெலிகட, அகுனகொலபெலஸ்ஸ என தனித்துவமான சிறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. அதுபோல அவர்களை மற்ற கைதிகளில் இருந்து வேருபிரித்தறிவதற்கு என்று தனியான சீருடை வழங்கபடுகிறது. ஏனைய சிறைக் கைதிகளுடன் அவரை கலந்து வைப்பதில்லை. ஏன்? ஏனென்றால் அவருக்கு தண்டனையிலேயே உச்ச தண்டனை வழங்கப்பட்டிருகிறது. எனவே அக்கைதி தப்பிவிட வாய்ப்பிருக்கிறது என்கிற சந்தேகத்தால் பாதுகாப்பு குறைந்த இடத்தில் அவரை வைப்பதில்லை. ஒரு மரண தண்டனைக் கைதி அந்த மரணத்தை முன் கூட்டியே தனக்கு வரவழைத்துக்கொள்ளக் கூடிய வகையில் தற்கொலைக்கு கூட முயற்சிக்கலாம். அவர் தப்பிப்போக முயற்சித்தாலோ, அல்லது மேலும் ஏதேனும் குற்றங்களை இழைத்தாலோ, அது மட்டுமன்றி இன்னும் கொலைகளைச் செய்தாலோ கூட அக்கைதி பெறப்போவது அதே மரண தண்டனையைத் தான். அதற்கு மேல் ஒரு தண்டனை கிடையாது. எனவே தான் இவற்றுக்கு வாய்ப்பற்ற வகையில் அவரை கடும் பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள். பொது இடங்களில் அக்கைதியின் நடமாட்டத்தை தடுத்திருப்பார்கள். இப்படிப்பட்ட காரணங்களால் மேன்முறையீடு செய்த கைதிகளுக்கு சில நேரங்களில் பிணை வழங்கப்படும், ஆனால் மரண தண்டனைக் கைதிகளுக்கு ஒருபோதும் பிணை வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமன்றி மேன்முறையீட்டு காலப்பகுதியில் அவரை வேறு சாதாரண சிறைகளுக்கு மாற்றப்படுவதுமில்லை. அதே சிறைக்குள் தான் மீண்டும் தள்ளப்படுவார். சீருடை மட்டும் சற்று மாற்றப்படும்.”
குட்டிமணிக்கு மறுக்கப்பட்ட நீதி
டெலோ இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான குட்டிமணி என்று பலராலும் அறியப்பட்ட செல்வராஜா யோகசந்திரன் பொலிசார் மீதான தாக்குதல், வங்கிக் கொள்ளை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தேடப்பட்டு வந்த நிலையில் 01.04.1981அன்று படகொன்றில் தமிழகத்துக்கு செல்ல முயற்சிக்கும் போது தங்கத்துரை, தேவன் ஆகியோருடன் சேர்த்து கைது செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பல குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கு நடந்து கொண்டிருந்தது. பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளாகியிருந்தார்கள் அவர்கள். குட்டிமணி ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்ற 13.08.1982 அன்று தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்புக்கு முன்னரே 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் குட்டிமணியை கூட்டணியின் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்கிற அழுத்தம் கூட்டணிக்குள் எழுந்திருந்தது. 78 அரசியல் யாப்பை புறக்கணித்த கூட்டணி ஜனாதிபதித் தேர்தலையும் நிராகரித்துத் தான் ஆக வேண்டும் என்று அமிர்தலிங்கம் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நேரத்தில் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு இறந்துபோனார். வட்டுக்கோட்டை தொகுதியின் அவரது வெற்றிடத்தை நிரப்புவதற்கு குட்டிமணியை தெரிவு செய்யும் முடிவை கூட்டணி 14.10.1982 அன்று எடுத்தத்துடன் அதை தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்தது.
குடிமணியை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தோம் என்பது தொடர்பில் கூட்டணி வெளியிட்ட நீண்ட அறிக்கையில்..
“...குட்டிமணியின் நியமனமானது நாடெங்கிலும் அவ்வப்போது அரசாங்க முகவர்களான பொலிஸாரினாலும் அரசாங்கப் படைகளினாலும் தமிழ் மக்கள் மீது, குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அரச பயங்கரவாதத்துக்கு எதிரான எதிர்ப்புக்குரலாக தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.
மேலும், எல்லா நியாயங்களுக்கும் முரணாக ஜூரி முறை வழக்காடலை நிராகரிக்கும், நீண்ட தடுத்துவைப்பை ஏற்படுத்தும், ஒப்புதல் வாக்குமூலங்கள் ஏற்றுக்கொள்ளும், அதற்காக தமிழ் இளைஞர்களைப் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கும் கொடூரச் சட்டமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிரானதொரு அடையாள நடவடிக்கையாக இந்நியமனத்தை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி பார்க்கிறது.
அத்தோடு, குட்டிமணி மற்றும் ஜெகன் மீது விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிரான குரலாகவும் இந்நியமனத்தைப் பார்க்கிறோம். மேலும், ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதற்காக பனாகொடை இராணுவ முகாம், ஆனையிறவு இராணுவ முகாம் மற்றும் குருநகர் இராணுவ முகாம் ஆகியவற்றில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு ஆதரவாகவும் சித்திரவதைக்குள்ளாக்குபவர்களுக்கு எதிரான குரலாகவும் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி, இந்த நியமனத்தைக் காண்கிறது.
மேலும், தமிழ் இளைஞர்கள் அனைவரையும் அரசியல் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்கை எதிர்த்து அரசாங்கத்துக்கு நாம் வழங்கும் அழுத்தமாகத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இந்நியமனத்தைக் காண்கிறது”
என்று அந்த அறிக்கையில் தெரிவித்தது.
ஆனால் மரண தண்டனைக் விதிக்கப்பட்ட கைதி நாடாளுமன்றம் சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு சிறைச்சாலை ஆணையாளர் அனுமது கொடுக்க மறுத்தார். மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தான் வர்த்தமானிப் பத்திரிகையில் குட்டிமணியின் நியமனம் வெளியிடப்பட்டிருந்தது என்றும், அது சட்ட ரீதியில் செல்லுபடியற்றது என்றும் சிறைச்சாலை ஆணையாளர் பிரியா தெல்கொட அறிவித்தார்.
குட்டிமணி நாடாளுமன்ற உறுப்பினராக தான் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு அனுமதி கோரி மேன்முறையீடு செய்தார். மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அது தொடர்பில் உத்தரவிடும் அதிகாரம் இல்லையென்று சிறைச்சாலை தரப்பில் வாதிடப்பட்டது. இறுதியில் குட்டிமணியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
நியமனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவேண்டும். அந்த மூன்று மாதங்கள் நிறைவடைவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் 24 ஜனவரி 1983 அன்று அந்த நியமனத்திலிருந்து விலகிக்கொள்வதாக குட்டிமணி அறிவித்தார். 1983 பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ஜே.ஆரால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் மூலம் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டது. ஆனால் அவரின் ஆயுள் ஐந்தே மாதங்களில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் இனவெறியர்களால் குரூரமாக பறிக்கப்பட்ட கதையை நாம் அறிவோம்.
அன்று குட்டிமணி பாராளுமன்றத்துக்கு நுழைய தடுத்த அதே அரசியல் சட்டம் இன்று சொக்கா மல்லிக்கு அனுமதித்திருக்கிறதென்றால் அதன் பின்னணியில் இனவாதமும், அதிகாரத்துவ நலன்களுமே காரணமாக இருக்க முடியும். “ஒரே நாடு ஒரே நீதி” என்கிற ராஜபக்சவாத கோசம் வெறும் அரசியல் பம்மாத்து என்பதை நாமறிவோம். அது வெறும் ஆதிக்க அதிகார சக்திகளுக்கும், அதை வழிநடத்தும் சித்தாந்தங்களுக்கு மட்டுமே சலுகை செய்யும் என்பதையும் அறிய பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் நமக்கு தேவையில்லை.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...