Headlines News :
முகப்பு » , , , , » ராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்

ராஜீவ் 87இல் சிங்களவரால் கொல்லப்பட்டிருந்தால்... - என்.சரவணன்

(இந்தியாவுக்கு இன்றும் சவாலிடும் ராஜீவைத் தாக்கிய விஜேமுனி)
“ராஜீவ் காந்தியை அன்றே கொலை செய்யும் இலக்கில் தான் தாக்கினேன். தப்பிவிட்டார்” இப்படி சமீபத்தில் நேர்காணல் கொடுத்திருப்பவர் ரோஹன விஜித முனி.

யார் இந்த விஜிதமுனி. 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்வதற்காக ராஜீவ் காந்தி இலங்கை வந்திருந்த போது இராணுவ அணிவகுப்பில் வைத்து தாக்கிய கடற்படையினன் தான் இந்த விஜிதமுனி.

இன்று வரை இலங்கையில் பெரிய ஹீரோவாக சிங்கள மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படும் பிரமுகர். அதுமட்டுமன்றி இன்றுவரை ராஜீவ் காந்தியைத் தாக்கியதை பெருமையாக ஊடகங்களிடமும், கூட்டங்களிலும் பகிரங்கமாக பேசித் திரிபவர்.

அன்றைய தாக்குதல் வெறும் காயப்படுத்தும் நோக்கில் அல்ல என்றும் கொன்றுபோடுவதற்காகவே தாக்கினேன் ஆனால் தப்பிவிட்டான் என்பதை கடந்த மாதம் கொடுத்த பேட்டியில் நேர்காணலில் கூட உறுதியாக கூறியிருக்கிறார்.

அப்படி சிங்களவராலேயே கொலையாகும் நிலை அன்று ஏற்பட்டிருந்தால் இலங்கையில் தமிழர் பிரச்சினையின் திசைவழியே வேறாக ஆகியிருக்கும் என்பதை சொல்லித்தெரியத் தேவையில்லை. பிற்காலத்தில் ராஜீவ் கொலையானது அதன் பின் தமிழர் விடுதலைப் போராட்டம் சர்வதேச அளவில் தனிமைப்பட பிரதான காரணமாக ஆனதும் அதன் தொடக்கத்தை இந்தியா விடுதலைப் புலிகளைத் தடை செய்ததன் மூலம் ஏற்படுத்தியது என்பதை நாமெல்லோரும் அறிவோம்.

சரி விஜேமுனி இலங்கையின் கள அரசியலில் மீண்டும் பேசுபொருளானது ஏன்?

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மாகாணசபைகள் முறையை முற்றிலும் நீக்கப்போவதாக மகிந்த ராஜபக்ச அணியினர் தேர்தல் நடப்பதற்கு முன்னரும் நடந்தபின்னரும் தொடர்ந்தும் பேசி வருகின்றனர். தமிழர்களுக்கு இருந்த ஆக குறைந்த பட்ச நலன்களை இந்த மாகாணசபைகளுக்கு வழங்கிவந்திருக்கிறது. மாகாண சபையானது ஒரு அரசியல் தீர்வல்ல ஆனால் அது ஒரு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான ஒரு அதிகார அலகு. அதையும் பறித்தெடுப்பது தொடர்பாகவே தற்போது முடிவுக்கு வந்துள்ளது ராஜபக்ச தரப்பு.

நடந்துமுடிந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கையிலேயே அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றவர் மகிந்த ராஜபக்ச. மகிந்த பெற்ற வாக்குகள் 5,27,364. இதுவே இலங்கையின் பொதுத்தேர்தல் வரலாற்றில் தனியொருவர் பெற்ற அதிகப்படியான வாக்குகள். அவருக்கு அடுத்தபடியாக இமுறை இலங்கையிலேயே அதிக விருப்புவாக்குகளைப் பெற்றவர் சரத் வீரசேகர. இலங்கையின் முன்னணி இனவாதிகளில் ஒருவராக நாம் குறிப்பிடமுடியும். மாகாணசபை முறையை ஒழித்துக் கொட்டுவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தேர்தல் களத்தில் குதித்த சரத் வீரசேகரவை இம்முறை வெற்றிபெறச்செய்வதற்கு அருகிலிருந்து பிரச்சாரம செய்து சகல ஒத்தாசைகளையும் செய்தவர் விஜேமுனி.

சரத் வீரசேகர வெற்றி பெற்றதும் அவருக்கு மாகாணசபைகள் அமைச்சை ராஜபக்ச அரசு இப்போது கொடுத்துவிட்டது. எந்த மாகாண சபைகளை அழிப்பேன் என்று சத்தியம் செய்த அதே சரத் வீரசேகரவிடம் அந்த மாகாணசபைகளை ஒப்படைத்திருப்பதன் இனவாத கைங்கரியத்தை இங்கு கவனிக்கவேண்டும். சரத் வீரசேகர மாகாணசபை அமைச்சரானதும் எந்த அதிகாரங்களையும் இதற்கு வழங்கப்போவதில்லை என்று வெளிப்படையாகவே கூறி வருவதை ஊடகங்கள் அனைத்தும் பதிவு செய்து வருகின்றன. நாளாந்தம் மாகாணசபை முறையை அளித்தே தீருவேன் என்று அதற்கு பொறுப்பான ஒரு அமைச்சரே கூறுகிறார் என்றால் அந்த இனவாத தெனாவெட்டுக்கு உகந்த காலம் இனவாத தரப்புக்கு தற்போது எட்டியிருக்கிறது என்பதைத் தான் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

மாகாண சபைகள் விடயத்தில் விஜேமுனி பற்றி சற்று விரிவான பதிவை செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

“விஜேமுனி என்கிற இந்திய எதிர்ப்புக் குறியீடு”
வருடாந்தம் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்ட அந்த நாளின் நினைவாக ஊடகங்கள் வெளியிடும் செய்திகள், கட்டுரைகளின் போது விஜேமுனி பல ஊடகங்களில் முக்கிய இடத்தை பெற்றுவிடுவார். அல்லது இலங்கை இந்தியா பற்றி ஏதும் சர்ச்சைக்குரிய சலசலப்புகள் இலங்கையின் அரசியலில் தோன்றும் போதும், மோடி போன்றவர்கள் இந்தியாவிலிருந்து விஜயம் செய்யும் வேளைகளிலும் ஊடகங்களுக்கு விஜேமுனி தீனியாகிவிடுவார். விஜேமுனி மீண்டும் மீண்டும் ஒரு ஹீரோவாக நிறுவப்பட்டுக்கொண்டிருப்பார்.

இந்தியாவுக்கு அவமானத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்திய அந்த தீர்க்கப்படாத கலங்கம் ஏற்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தார் இந்தியப் பிரதமர் மோடி.

மோடியின் விஜயம் குறித்து விஜிதமுனி ஊடகங்களிடம் இப்படி குறிப்பட்டார்.
“மோடியின் வருகையை விரும்புகிறேன். அவர் ஒரு நல்ல மனிதர். விருச்சிக நட்சத்திரத்தை சேர்ந்தவர் அவர். அப்படியானவர்கள் நேர்பட பேசுபவர்கள். மோடி பதவிக்கு வருவார் என்பதை எனது சோதிட அறிவின் மூலம் எப்போதே கூறிவிட்டேன். ஆனால் எங்களது இறைமையைப் பாதிக்கும் எந்த ஒப்பந்தமும் செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். எங்கள் நாடு சுதந்திர நாடு. எமது நாட்டுக்கு நெருக்கடி கொடுக்கும் அதிகாரம் எந்த நாட்டுத் தலைவருக்கும் கிடையாது.” என்றார்.
இந்திய எதிர்ப்புணர்வின் நீட்சி
தமிழ் மக்களின் மீதான இனவாத உணர்வின் ஒரு அங்கமாக இந்திய எதிர்ப்புணர்வு நெடுங்காலமாக நிலவி வருகிறது.

வரலாற்றில் பல தடவைகள் நிகழ்ந்த தென்னிந்திய படையெடுப்புகள், ஆக்கிரமிப்புகள், ஆட்சிகள் அனைத்தும் சிங்களவர்கள் மத்தியில் இன்னமும் ஆழ்ந்த பகையுணர்வை விதைத்துள்ளது. தென்னாசியப் பிராந்தியத்தின் வல்லரசாகவும், தென்னாசியாவின் சண்டியனாகவும் இந்திய வளர்ந்து நிற்பதானது அவர்கள் மத்தியில் சதா பீதியை விதைத்து வந்துள்ளது. இந்திய ஆக்கிரமிப்புகள் பற்றிய கதைகளை பாடப்புத்தகங்களின் மூலம் தலைமுறை தலைமுறையாக கடத்தி வந்திருக்கிறது. பௌத்த அறநெறிப் பாடங்களிலும், இலங்கையின் புனித வரலாற்று நூலான மகாவம்சத்தின் வாயிலாகவும் அந்த ஆக்கிரமிப்புக் கருத்துக்கு வலு சேர்க்கப்பட்டிருக்கிறது. 

இத்தகைய சூழலில் தமிழகத்தையும் ஈழத்தையும் இணைத்த அகண்ட தமிழ்நாடு கருத்தாக்கம், தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு இந்தியாவில் அளிக்கப்பட்டு வந்த பயிற்சிகள், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அவ்வப்போது இந்தியாவின் தலையீடுகள் என்பன எப்போதும் ஆத்திரத்தையும் அரசியல் கையாலாகாத்தனத்தின் வெறுமையையும் இந்தியாவின் மீதான பகைமையுணர்வை ஆழப்படுத்தி வந்தன. இத்தகைய சூழலில் தான் சோவியத் – அமெரிக்க முகாம்களின் பனிப்போர் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. அமெரிக்காவின் தென்னாசியாவில் செல்வாக்கு செலுத்த திருகோணமலையில் நிலைகொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து இலங்கையுடன் உறவாடி வந்தது. சோவியத் யூனியன் சார்பு நாடாக இருந்த இந்தியாவுக்கு அமெரிக்காவின் இந்த நகர்வு எதிர்கால அச்சத்தை ஏற்படுத்தியது. இலங்கையை தமக்கு கீழ் அடிபணிய வைப்பதற்கு அன்று ஈழப்பிரச்சினையை பயன்படுத்திக்கொண்டது. இதன் விளைவாக 1987 யூன் 4ஆம் திகதி இந்திய விமானைபடையின் விமானங்களின் மூலம் யாழ்ப்பாண நகரங்களில் உணவுப் போட்டலங்களைப் போட்டு தமிழ் மக்களின் மீது கரிசனைகொண்ட ஆபத்பாந்தவனாக காட்டிக்கொண்டது. இலங்கையின் வான் பரப்பில் எல்லை அத்துமீறி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு “ஒப்பரேசன் பூமாலை” (Operation Poomalai) என்று இந்தியா பெயரிட்டிருந்தது. இந்த அத்துமீறல் நடவடிக்கையின் மூலம் இந்தியா ஒரு வன்மமான ராஜதந்திர எச்சரிக்கையை இலங்கைக்கு விடுத்திருந்தது.

இதே காலப்பகுதியில் இலங்கையின் தென் பகுதிகளில் ஜே.வி.பியும் வட கிழக்குப் பகுதிகளில் தமிழ் இயக்கங்களும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் இந்தியாவின் பலத்த எச்சரிக்கை இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்குத் தள்ளியது.

நேருக்குப் பின்னர் இலங்கை மீதான இந்தியாவின் தலையீடுகள் இந்திய நலனுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுக்கும் வெளிவிவகாரக் கொள்கையாக மாறிய கதையை தனியாக கவனியுங்கள். 

1971 ஜேவிபி கிளர்ச்சியின் போது கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்கப்பட ஐந்து வகுப்புகளில் ஒன்று “இந்திய விஸ்தரிப்புவாதம்” என்கிற தலைப்பு. இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரைக் கூட இந்தியாவின் ஐந்தாம் படையாக சித்திரித்தது ஜேவிபி. இந்தியா மீது அதே வெறுப்புணர்வை தொடர்ந்து வந்த ஜே.வி.பி இயக்கம் இந்தியாவின் மீது மேலும் ஆத்திரமுற்றது. இலங்கை முழுவதும் இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களை தீவிரப்படுத்தியது. ஜே.வி.பி தலைமறைவாக ஆயுதக் கிளர்ச்சியை முன்னெடுத்துவந்திருந்த அதேவேளை அன்றைய எதிர்க்கட்சியான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும், இன்னும் பல சிங்களப் பேரினவாத இயக்கங்களையும் சேர்த்து “தாய் நாட்டை மீட்பதற்கான இயக்கம்” என்கிற இயக்கத்தை ஜே.வி.பி கட்டியெழுப்பியது. இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்த முன்னணி இயக்கத்தை தனது வெகுஜன அமைப்பாக இயக்கி வந்தது ஜே.வி.பி.

இந்திய விஸ்தரிப்பு வாத பிரச்சாரத்துடன், “நாட்டைப் பிளவுபடுத்த இதோ இந்தியா வருகிறது..., தமிழீழத்தை தமிழ்ப் போராளிகளுக்கு கொடுக்கப்போகிறது இந்தியா..., இந்தியா எமது இறைமையில் அடாவடித்தனமாக தலையிட்டுவிட்டது” என்கின்ற பிரச்சாரங்களால் உந்தப்பட்ட பல இளைஞர்கள் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக மட்டுமன்றி, தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு எதிராக இருந்தார்கள். சிங்கள இனவாத சக்திகளுக்கு ஜே.வி.பி தலைமை கொடுத்த காலகட்டம் அது.

இப்பேர்பட்ட சூழலில் இந்தியாவுக்கு எதிரான மனநிலைக்கு ஆட்பட்டிருந்தவர் தான் ரோஹன விஜேமுனி. 

ராஜீவை தாக்குவதற்கான தயாரிப்பு
ராஜீவ் – ஜே ஆர் ஆகியோருக்கு இடையில் 1987 யூலை 29ஆம் திகதி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஜே.ஆர். அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தித் தான் மேற்கொண்டிருந்தது. நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாதபடி தொலைக்காட்சிகளில் தான் இவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அடுத்த நாள் 30ஆம் திகதியன்று ராஜீவ் காந்தி இந்தியா திரும்புமுன்னர் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் (இராணி மாளிகை) முப்படைகளின் அணிவகுப்பு (The Guard of Honour) மரியாதையில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் ரோஹன விஜேமுனிக்கு கிட்டியது. அணிவகுப்பில் உயரமானவர்கள் இரு வரிசையின் ஆம்பத்திலும், இறுதியிலும் நிறுத்தப்பட்டார்கள். நடுவில் கட்டையானவர்கள் நிறுத்தபட்டார்கள். அதன்படி முதலாவது வரிசையின் இறுதியிலிருந்து நான்காவது நபராக விஜேமுனி நிறுத்தப்பட்டு  ஒத்திகை பார்க்கப்பட்டிருந்தது. விஜேமுனிக்கு தனது இடம் எது ராஜீவை தாக்குவதற்கான சந்தர்ப்பம் எது என்பது தொடர்பில் திட்டமிட்டு அச்சந்தர்ப்பத்துக்காக காத்திருக்க முடிந்தது.

அந்த அணிவகுப்பின் போது படையணிக்கும் ராஜீவுக்கும் இடையில் 2 அடி தூரமே இருந்தது. இலங்கைப் படையைச் சேர்ந்த அட்மிரல் சில்வா அருகில் செல்ல பின்னால் ராஜீவின் மெய்ப்பாதுகாவலர்களுடன் ராஜீவ் காந்தி மெதுவாக இரானுவமரியாதையை ஏற்று பார்வையைட்டுகொண்டே சென்றார். சரியாக விஜேமுனியைத் தாண்டி இரு அடி வைக்கும்போது தூரத்தைக் கணித்து தன் வசம் இருந்த பிடித்திருந்த சீன ரக (Chinese SLR) துப்பாக்கியை மேலே எடுத்து கனமான அதன் பின்பகுதியால் ஓங்கித் தாக்கினார் விஜேமுனி. 

ராஜீவோ தற்செயலாக குனிந்துகொள்ள - ராஜீவின் தோள்பட்டையில் பலத்த அடி விழுந்தது. ராஜீவின் மெய்ப்பாதுகாவலர்களை விட அதிகமாக சுதாரித்துக்கொண்டவர் அட்மிரல் சில்வா. ராஜீவ் காந்தி தாக்கப்படும் காட்சியை அப்படத்தில் உற்று நோக்கினால் பின்னால் வரும் இந்திய மெய்ப்பாதுகாவலர்கள் அதுவரை அந்தளவு சுதாகரிப்பைக் கொண்டிராததையும் காணலாம். ராஜீவ் காந்தி சற்று முன்னே ஓடி தப்பினார்.அவரை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கவனமாக அழைத்துச் சென்றனர். உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப இந்த சம்பவம் காண்பிக்கப்பட்டது.

இந்தியாவைக் கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது மட்டுமன்றி இந்திய மக்களின் கடும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணியது இந்த நிகழ்வு.
வாக்குமூலம்
தென்னிலங்கையில் சிங்களத் தேசியவாத உணர்வு முனைப்பாக இருக்கின்றன காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது 20 வது வயதில் 1985 இல் படையில் இணைந்துகொண்ட விஜேமுனி வடமராட்சி போரில் கலந்து கொண்ட நபர். குடும்பத்தில் இரு சகோதரர்களும் இராணுவத்தை சேர்ந்தவர்கள். ஒரு சகோதரன் யுத்தத்தில் கையை இழந்தவர். சமீபத்தில் விஜேமுனி லக்பிம (23.07.2006) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படி குறிப்பிடுகிறார்.
 “இந்தியாவின் 26 ஆவது மாநிலமாக சிறிலங்காவை இணைத்துவிட்டார்கள் என்று நினைத்தேன். எமது போரை நிர்மூலமாக்கி எங்களை எளிதில் வெற்றி கொண்டுவிட்டார் ராஜீவ். அவருக்கு வரவேற்பளிக்கப்பட்ட சம்பவத்தை தொலைக்காட்சிகளில் பார்த்து இரத்தம் கொதித்தது. என்னால் அந்த தொலைக்காட்சிப் பதிவுகளை தொடர்ச்சியாகப் பார்க்க சகிக்கமுடியவில்லை.

யூலை 30 அன்று நான் விரைவாக தயாராகி பேரூந்தில் ஏறி அரச தலைவர் மாளிகைக்குச் சென்றேன்.

அணிவகுப்பு மரியாதைக் குழுவில் இணைந்து கொண்டேன்.

நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அப்போது ராஜீவ் மட்டும் அந்த ஒப்பந்தத்தை செய்யாது இருந்திருந்தால் இந்தத் தீவிலிருந்து பயங்கரவாதத்தை அப்போதே நாம் அழித்திருப்போம்.

ராஜீவ் காந்திக்கு வணக்கம் செலுத்தி அந்தப் பாவச் செயலில் என்னையும் இணைத்துக் கொள்ள வேண்டுமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

கடற்படை தளபதி ஆனந்த டி சில்வா ராஜீவுக்கு பின்னால் இருந்தார்.

நான் இடதுபுறத்திலிருந்து 4 ஆம் நபராக நின்றிருந்தேன்.
என்னால் நீண்ட நேரம் பொறுமை காத்திருக்க முடியவில்லை.

ராஜீவ் காந்தியை கொன்றுவிட்டால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும்.

நான் முன்நகர்ந்து ராஜீவை கடுமையாகத் தாக்கினேன். அது பலமான தாக்குதல். ஆனால் அத்தாக்குதல் விலகிச் சென்றுவிட்டது.

நான் ராஜீவ் காந்தியின் தலைக்குத்தான் இலக்கு வைத்தேன். ராஜீவை கொல்வதே எனது இலக்கு.

ஆனால் அவர் மற்றொரு பக்கம் திரும்பியதால் மயிரிழையில் உயிர்தப்பிவிட்டார்.

ராஜீவின் பாதுகாவலர்கள் என்னை அங்கேயே தாக்கினர். மைதானத்தில் விழுந்துவிட்டேன். அதன் பின்னர் என்னை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். தாக்கினார்கள்.

அதேபோல் இந்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த என்னை சந்தித்து கேள்வி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது என்று மறுத்துவிட்டேன். அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.

நீதிமன்றில் நிறுத்தப்பட்டேன். 1987 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் நாள் இராணுவச் சட்டத்தின்படி 6 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. வெலிக்கடை சிறையில் எனக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது. அந்த காலப்பகுதியில் இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரி போராட்டம் நடத்தினோம். எம்மீது துப்பாக்கி சூட்டும் நடத்தப்பட்டு காயப்பட்டேன்.”

சிங்கள தேசத்தின் கதாநாயகன்
இன்றும் விஜேமுனி சிங்கள பௌத்தர்களின் கதாநாயகன். ஒரு முன்னுதாரணத்துக்காக ராஜீவை தாக்கிய அந்த துப்பாக்கி எதிர்காலத்தில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும் என்று கூட கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. மாகாண சபைக்கு எதிரான முதலாவது கலகம் ரோஹன விஜேமுனியின் துப்பாக்கியிலிருந்து தொடங்குகிறது என்று சிங்கள தரப்பில் கூறப்படுவதுண்டு. ரோஹன விஜேமுனியின் மீதான முதற்கட்ட விசாரணையை ஜே.வி.பி.யின் சதி என்கிற கோணத்திலேயே மேற்கொண்டிருந்தது அரசாங்கம்.

6 ஆண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டபோதும் இரண்டரை வருடங்களில் அதாவது 04.04.1990 அன்று ஜனாதிபதி பிரேமதாசவினால் “ஜனாதிபதி மன்னிப்பின்”பேரில் விடுவிக்கப்பட்டார் விஜேமுனி. “நான் பதவிக்கு வந்ததும் விஜிதவுக்கு மன்னிப்பு வழங்குவேன் என்று கூறியிருந்தார் ஜனாதிபதி பிரேமதாச. அதன்படி அவர் செய்தார்” என்று ரிவிர (05.12.2011) பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விஜேமுனி தெரவித்திருந்தார். 



இந்தியாவுக்கு விஜேமுனியால் மட்டும் அவமானம் ஏற்படவில்லை அதன் பின்னர் பிரேமதாசவாலும் மேற்கொள்ளப்பட்ட மோசமாக அவமானம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அந்த வகையில் பிறேமதாசவால் விஜேமுனிக்கு அளிக்கப்பட ஜனாதிபதி மன்னிப்பு இந்தியாவுக்கு மேலும் ஆத்திரத்தையே ஊட்டியிருந்தது.

சிறைமீண்ட விஜேமுனிக்கு சிங்கள பௌத்த இனவாத சக்திகள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். 1994இல் அப்போதைய பேரினவாத கட்சியான “சிங்களயே மகா சமமத்த பூமி புத்திர பக்ஷய” எனப்படும் சிங்கள மண்ணின் மைந்தர்களின் கட்சியின் சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட விஜேமுனி அதன் பின்னர் சிஹல உறுமய கட்சியில் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். அதன் பின்னர் ஐ.தே.க கட்சியில் இணைந்தார். மீண்டும் இனவாத சக்திகளின் பெரும் கூடாரமான ராஜபக்ச அணிக்குத் தாவினார். 2020 தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்துவதாக பசில் ராஜபக்ச (மகிந்த ராஜபக்சவின் சகோதரன், ராஜபக்சவினரின் தேர்ந்த திட்டமிடல் நிபுணராக இருப்பவர்) ஒப்புக்கொண்டதாகவும். ஆனால் இறுதியில் தனக்கு தரவில்லை என்றும், தான் களுத்துறை மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேல் வாக்குகளை எடுப்பேன் என்று இவர்களுக்கு தகவல்கள் கிடைத்ததாலேயே தன்னை போட்டியிடவில்லை என்று ஆத்திரத்துடன் ஒரு Youtube சேனல் ஒன்றுக்கு ஆத்திரத்துடன் பேட்டியளித்திருந்தார்.  அதே நேர்காணலில் தற்போதைய அரசாங்கம் ஒரு வருடத்துக்குள் பிளவுபட்டு பலர் எதிர்க்கட்சியில் வந்து சேருவார்கள் என்று தனது சோதிட ஆரூடத்தையும் கூறத் தவறவில்லை

இன்றுவரை 13வது திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருபவர்களில் விஜேமுனி முக்கியமானவர் என்பதால் மாகாணசபை முறையை இல்லாதொழிக்க வேண்டும் என்று அணிதிரளும் இனவாத சக்திகள் விஜேமுனியை தமது மேடைகளில் இணைத்துகொள்கின்றனர். 2013ஆம் ஆண்டு வடக்கு கிழக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் மாகாண சபை முறையை நீக்குமாறு கோரியும் பல சிங்கள பேரினவாத இயக்கங்கள் சேர்ந்து “தேசிய இயக்கங்களின் ஒன்றிணைவு” என்கிற அமைப்பு போராட்டங்களை நடத்தின. அந்த மேடைகளில் விஜேமுனி முக்கிய பேச்சாளர். 

“நான் அன்று ராஜீவைத் தாக்கவில்லை அந்த ஒப்பந்தத்தையே தாக்கினேன்” என்று பிறிதொருமுறை விஜேமுனியால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிறையிலிருந்து விஜேமுனி தனது தாய்க்கு எழுதிய ஒரு கடிதத்தில் இப்படி இருக்கிறது..
“இந்த நாசகர ஒப்பந்தத்தில் நானும் ஒரு பங்காளியாக இருக்க விரும்பவில்லை அம்மா. நாளை பிரபாகரன் வடக்கு கிழக்கின் முதலமைச்சரானால்’; எங்கள் பொடியன்களைக் கொன்ற பிரபாகரனுக்கு இது போலவே இராணுவ மரியாதையை அளிக்க நேரிடும் என்று பயந்தேன். இலங்கை இந்தியாவின் 26 வது மாநிலமாக ஆகிவிடும் என்று சிலர் எச்சரித்தார்கள். நான் சிறைச்சாலை சாப்பாட்டை உண்ணுவதற்காக கவலைப்படவில்லை. எனது இலக்கு தவறி விட்டதற்காவே வருந்துகிறேன்.”
(லங்காதீப பத்திரிகையில் ராஜீவ் தாக்கப்பட்ட 25 வருட நினைவு சிறப்பிதழில் வெளியான நேர்காணல் 30.07.2012)

ராஜீவ் காந்தி தாக்கப்பட்டு 25வருட நினைவை சிங்கள ஊடகங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து பல ஆக்கங்களை 2012 இல் வெளியிட்டிருந்தன. அந்த ஆக்கங்களையும் முன்னர் வெளியிடப்பட்ட பல செய்திக்கட்டுரைகளையும் தொகுத்து அதே 2012 ஆண்டு விஜேமுனியால் “தாய்மண்ணே வணக்கம்” என்கிற நூல் வெளியிடப்பட்டது. அந்த நூலில் விஜேமுனியின் மீதான வழக்கு விசாரணை குறித்த வாதங்களும் அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும் உள்ளன. அவற்றில் சில குறிப்புகள்
  • “ஜோர்ஜ் புஷ்ஷுக்கு சப்பாத்தினால் தாக்கியவர்கள் என்னிடம் இருந்துதான் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்” (சியத்த – 28.12.2008)
  • “நான் அரசுக்கு துரோகமிழைத்திருக்கலாம். ஆனால் என் இனத்துக்கு துரோகமிழைக்கவில்லை.” (ரன்திவ – 01.04.2012)
விஜேமுனி தற்போது புறக்கோட்டையில் ஒரு கடையை நடத்தி வருகிறார். சிறையில் கற்றுக்கொண்ட சோதிடமே விஜேமுனியின் தற்போதைய தொழில். இலங்கையில் பிரபல சோதிடராக ஆகியிருக்கும் விஜேமுனியின் சோதிட நிகழ்ச்சிகளை பிரபல தொலைக்காட்சிகள் காண்பித்து வருகின்றன. சோதிடத்தின் மூலம் விஜேமுனி கூறும் அரசியல் எதிர்வுகூறலுக்கு ஒரு கிராக்கி ஏற்பட்டுள்ளது. மகிந்தவின் தோல்வி, மைதிரிபாலாவின் வெற்றி குறித்து தொலைக்காட்சியில் வெளியான விரிவான சோதிட விளக்கங்கள் யூடியூப் எங்கிலும் காணக்கிடைக்கின்றன. தனது புறக்கோட்டையில் உள்ள கடையில் நீண்ட காலமாக பாட்டு கசட், சீடிக்களை விற்பனை செய்துவருகிறார் விஜேமுனி. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் கடும் இந்திய எதிர்ப்பாளரான விஜேமுனியின் சீடி கடையில் அதிகம் விற்பனையாவது இந்திய இந்திப் பாடல்களே.

ராஜீவ் காந்திகொலைக்கு தமிழர்களுடன் கணக்கு தீர்த்துக்கொண்ட இந்தியா, ராஜீவ் மீதான தாக்குதல் அவமானத்தை இன்னமும் சுமந்தபடி தான் பேரினவாத முகாமுடன் கைகோர்த்து வருகிறது. அந்த அவமானக் கறையை துடைக்காமல் தான் மோடியும் வந்து போகிறார். ராஜதந்திர உறவுகளும் நீளுகின்றன. 

ராஜீவை தாக்கிய நபர் மிகவும் சுதந்திரமாகவும் இறுமாப்போடும் திரிகிறார். சிங்கள பௌத்தர்களின் வீரனாக கொண்டாடப்படுகிறார். இலங்கை அரசோ குறுகிய காலத்தில் மன்னிப்பு வழங்கி விடுவித்ததுவிட்டதுடன் ஆசியையும் வழங்கியிருக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு மாகாண சபை கூட கொடுக்கக்கூடாது என்பதில் விஜேமுனி உறுதியாக இருப்பதுடன் அதற்காக தன்னை முழு அளவில் ஈடுபடுத்தியும் வருகிறார்.

இணையத்தளமொன்றில் வெளியான விஜேமுனியின் நேர்காணல் ஒன்றுக்கு சிங்கள வாசகர் ஒருவர் இப்படி பின்னூட்டமொன்றை இட்டிருந்தார் 
“நல்லவேளை ராஜீவ் விஜேமுனி கையால் சாகவில்லை. அப்படி செய்திருந்தால் இன்றைய வரலாறு தலைகீழாக மாறியிருக்கும். தமிழ்நாட்டில் வைத்து தமிழரால் கொல்லப்பட்டதால் தான் இந்தியா தமிழருக்கு எதிராகவும் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் இருந்து யுத்தம் நமக்கு சாதகமாக முடிக்கப்பட்டிருக்கிறது.”
விடுதலைப் புலிகளால் கொலைசெய்யப்படதாக கூறப்படும் இரு நாட்டுத் தலைவர்களின் பிள்ளைகளும் இப்போது அந்த நாடுகளில் ஒரே காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களாக ஆகியிருக்கிறார்கள். இந்தியாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தியும், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாசவுமே அவர்கள். இவர்கள் இருவரும் வடக்கு கிழக்கு தமிழர் நலன்களில் எப்படியும் அக்கறையற்றவர்கள். இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டபோது அன்றைய பிரதமராக இருந்த பிரேமதாச அன்றைய ஜனாதிபதி ஜே.ஆருடன் இது விடயத்தில் கடும் ஆட்சேபனை செய்தவராகவும், அதிருப்தியுற்றவராகவும் இருந்தார். ஒரு பிரதமராகக் கூட அன்றைய பிரதான அரச நிகழ்வுகளில் பிரேமதாச கலந்துகொள்ளவில்லை.

அவ்வொப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு இரண்டு வருடங்களில் 1989இல் ஜனாதிபதியாக தெரிவான பிரேமதாச இந்தியாவை அவமானப்படுத்தும் வகையில் இந்திய அமைதிகாக்கும் படையை வெளியேறுமாறு கால அவகாச எச்சரிக்கை விடுத்தார். இந்தியப் படையை “ஆக்கிரமிப்புப் படை” என்று அறிவித்ததுடன், இந்திய அமைதி காக்கும் படையோடு போரிடத் தொடங்கிய விடுதலைப் புலிகளுடன் நேச உறவை ஏற்படுத்திக்கொண்டார். இந்திய இராணுவத்துடன் சண்டை பிடிப்பதற்காக விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும், பண உதவிகளையும் வழங்கினார். தனது நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் தயவில் உருவாக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண சபையையும் கலைத்தார். ராஜீவ் கொல்லப்பட்டு (21.05.1991) இரண்டு ஆண்டுகளில் பிரேமதாச கொல்லப்பட்டார் (01.05.1993). இந்த இரு வருட இடைக்காலத்தில் ராஜீவ் கொலை தொடர்பில் பிரபாகரனை இந்தியா கேட்டபோது, இது அண்ணன் தம்பிகளுக்கு இடையில் உள்ள பிரச்சினை அப்படியெல்லாம் தர முடியாது என்று கூறிக்கொண்டே விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். 2020 தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தரப்புக்கு வடக்கு கிழக்கில் இருந்து ஒரு தமிழர் கூட தெரிவாகவில்லை என்பதையும் இங்கு பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும்.

இப்பேர்பட்ட நிலையில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு அழுத்தக்குழுவாக இந்த இரு சக்திகளும் இருக்கப் போவதில்லை. இதன் அர்த்தம் தமது தகப்பன்மாரின் கொலைகளுக்கு பழிவாங்குவதாக அர்த்தம் இல்லை. ஆனால் இந்த இரு தரப்புமே ஈழத்தமிழர் விடயத்தில் எந்தவித அக்கறையுமற்றவர்கள். அதற்கு அவர்களின் தந்தையரின் கொலைகளுக்கும் வகிபாகம் உண்டு என்பதை எளிமையாக மறுத்துவிடமுடியாது.
1987 யூலை 29 அன்று ராஜீவ் ஜே.ஆர் ஆகியோருக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட “இந்திய – இலங்கை உடன்படிக்கை”யின் விளைவாக இலங்கையின் அரசியலமைப்புக்கு 13வது திருத்தச்சட்டத்தைக்  கொண்டு வந்து அதன் மூலம் மாகாண சபைகள் அமைக்கப்பட்டன. அவ்வாறு இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட மாகாணசபை தமிழீழ பிரதேசமாக கொள்ளப்பட்ட வடக்கு கிழக்குக்கு மாத்திரம் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்த மாகாண சபைகள் இலங்கை முழுவதும் 9 மாகாணங்களுக்கும் சபைகள் உருவாக்கப்பட்டதன் மூலம் அது ஒரு கேலிப்பொருளானது. வடக்கு - கிழக்கு என்பன ஒரே மாகாணமாக கொள்ளப்பட்டபோதும் பின்னர் அதை பிரிக்கவேண்டும் என்று அன்று இனவாத கட்சியாக இருந்த ஜே.வி.பி உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் மூலம் 2007 ஆம் ஆண்டு அந்த இரு மாகாணங்களையும் தனித்தனியாக பிரித்தார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் 1987 இல் செய்துகொள்ளப்பட்டபோதும் மாகாண சபைகள் 1988 இல் தான் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் பகைவராக ஆகியிருந்த பிரேமதாச இந்தியப்படைகளை 29.07.1989 க்குள் வெளியேறவேண்டும் என்று காலம் கொடுத்தார். ஆனால் இந்தியப் படைகள் பகுதிபகுதியாக வெளியேறி முற்றாக வெளியேறும் போது ஏழு மாதங்கள் கடந்தது. 24.03.1990 அன்று இறுதி இந்தியப் படை வெளியேறியது. இந்தியப் படை வெளியேறுமுன் பிரேமதாசவை பதிலுக்கு பழிவாங்க வடக்கு கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக இருந்த ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கத்தின் தலைவர் வரதராஜப் பெருமாளை மார்ச் 1ஆம் திகதி “தமிழீழ பிரகடனத்தை” செய்யவைத்து இந்தியப் படை தம்முடனேயே வரதராஜப் பெருமாளை அழைத்துச் சென்றது. அத்தோடு பதிலுக்கு பிரேமதாச வடக்கு கிழக்கு மாகாண சபைகளைக் அன்றே கலைத்தார்.

ஆக எந்த வடக்கு – கிழக்குக்காக மாகாணசபைகள் கொண்டுவரப்பட்டதோ அங்கு அந்த மாகாணசபை வெறும் இரு ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. ஆனால் எங்கு இந்த மாகாணசபைகள் அவசியப்படவில்லையோ அந்த வடக்கு கிழக்கு தவிர்ந்த எஞ்சிய ஏழு மாகாணங்களிலும் மாகாணசபைகள் இயங்கியது. 2007இல் அந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னர் தான் 2008 ஆம் ஆண்டு அதாவது 8 வருடங்களின் பின்னர் மீண்டும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டு இயங்கத் தொடங்கியது. அதுவும் கிழக்குக்கு மட்டும் தான். வடக்குக்கான மாகாண சபைத் தேர்தல் 2013 ஆம் ஆண்டு தான் நடத்தப்பட்டது. அதாவது மாகாணசபைகள் கலைக்கப்பட்டு 13 ஆண்டுகளின் பின்னர்.

தமிழர்களைப் பொறுத்தவரை மாகாணசபைகள் வெறும் கண்துடைப்பு அம்சமாக மட்டுமே இருந்தது. விடுதலைப் புலிகள் பிரேமாதசாவுடனும், சந்திரிகாவுடனும், ரணிலுடனும், மகிந்தவுடனும் பேச்சுவார்த்தை நடத்திய போதெல்லாம் மாகாண சபை முறையை முற்றிலும் நிராகரித்திருந்தார்கள். அதற்கான காரணம் அதில் அதில் இருந்த இந்த கண்துடைப்பு அதிகாரங்கள் தான். இலங்கை அரசு விட்டுக்கொடுப்புக்கு வராது என்கிற முடிவில் தான் ஆயுதப்போராட்ட வழியில் தமிழீழத்தை அடையும் போராட்டம் தொடர்ந்தது. இந்த இடைக்காலத்தில் தமிழீழத்துக்கும் மாகாண சபைக்கும் இடைப்பட்ட ஒரு தீர்வை எட்டும் நோக்கில் தான் பேச்சுவார்த்தைகளும் மேற்படி தலைவர்களுடன் நடந்தன. ஆனால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பெரும் மக்கள் அழிவின் மூலம் நசுக்கப்பட்டது.

"விடுதலைப் புலிகளுக்கு போர், தமிழர்களுக்கு நிரந்த தீர்வு" என்கிற சுலோகத்தைத் தான் போரை நியாயப்படுத்தப் பயன்படுத்தினார்கள். ஆனால் போர் முடிந்ததும் போரே முடிந்தது;  இனி எதையும் தரத் தேவையில்லை என்று பகிரங்கமாகவே கர்ஜித்தார்கள். போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகளில் இருந்தும், நிபந்தனைகளில் இருந்தும் தப்புவதற்காக 13 ப்ளஸ் தருவதாக ராஜபக்ச அரசு ஆரம்பத்தில் கூறி வந்தது. ஆனால் சர்வதேசத்தை இழுத்தடித்து, கலைப்படையைச் செய்து, சர்வதேசத்தின் நிகழ்ச்சிநிரலில் இருந்து மெதுவாக இலங்கை பிரச்சினை அகலத் தொடங்கியதும் 13ஐயும் தரமாட்டோம் என்று நிறைவில் வந்தடைந்து விட்டார்கள்.

மாகாண சபைகளை இல்லாமல் செய்வது தென்னிலங்கை சிங்கள – பௌத்த நிகழ்ச்சி நிரலில் உள்ள அம்சம் தான். அதை செய்வதற்கு மூன்று விடயங்கள் தேவைப்பட்டது.
  1. தமிழர்களில் தங்கியிராத பாராளுமன்ற பெரும்பான்மை பலம்
  2. அரசியலமைப்பைத் திருத்துவதற்கான மூன்றில் இரண்டு பெரும்பான்மை
  3. இலக்கை நிறைவேற்றுவதற்கு தடையில்லாத சிங்கள பௌத்த சக்திகளின் பெரும்பான்மை அரசாங்கம்
வரலாற்றில் அது முதற்தடவையாக கைகூடியிருக்கிறது. எனவே இனி தாராளமாக மாகாணசபை முறையை முற்றாக களைவதற்கான இடத்தை எட்டிவிட்டார்கள்.

13வது திருத்தச் சட்டம் சம்பந்தமாக தம்முடம் ஏற்படுத்திக் கொண்ட உடன்பாட்டை பேண வேண்டும் என்று இனி இந்திய அரசியல் அழுத்தத்தைக் கொடுக்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது. அப்படி செய்தாலும் அது ஒரு கண்துடைப்பு அளவில் மாத்திரம் நின்றுவிடும். தமிழர்களை வேண்டுமென்றால் தமது நலன்களை அடைய பேரம்பேசுவதற்கு பயன்படுத்திவிட்டு தேவையை அடைந்தவுடன் கைவிட்டிவிடும். தமிழர் நிலை அந்த பகடைக்காய் அளவுக்கு மட்டும் தான் பெறுமதி.

கடந்த ஓகஸ்ட் 21 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இந்தியத் தூதுவராலயத்தில் இடம்பெற்றபோது 13வது திருத்தச் சட்டத்தை நீக்க இடமளிக்கமாட்டோம் என்று இந்தியத் தூதுவர்கள் கூறியது பற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன. ஆனால் அதேவேளை அதற்கு பதிலளித்த சரத் வீரசேகர...

நாட்டின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக அரச தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் தூதரக அதிகாரிகளுக்கு அது தொடர்பாக அழுத்தங்களை கொடுக்க முடியாது என்றும் இலங்கை இறையாண்மையுள்ள நாடு. மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாட்டின் அரச தலைவர்களே வழங்கினார்களே வெளியில் உள்ள தரப்பினருக்கு வழங்கவில்லை என்றும் மாகாண சபைகள் அமைச்சர் சரத் வீரசேகர இந்தியாவுக்கு பதிலடி கொடுத்திருப்பதையும் கவனிக்கவேண்டும்

தமிழ்நாடு நிர்ப்பந்திக்கும், மத்திக்கு அழுத்தம் கொடுக்கும் என்கிற கதையெல்லாம் செல்லுபடியற்றவை என்பது ஈழத் தமிழர்களுக்கும் தெரியும். தமிழ் நாட்டு மக்களின் நேர்மையும், அக்கறையுமான நிர்ப்பந்தத்தில் ஈழத்தமிழர்கள் மரியாதை வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நிர்ப்பந்தத்தால் மத்தியில் எந்த வித மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்கிற தெளிவையும் கொண்டிருக்கிறார்கள். 2009 இனப்படுகொலைகளின் போது ஏற்படுத்தாத நிர்ப்பந்ததையா இந்தியா மாகாண சபைகள் விடயத்தில் மேற்கொள்ளப்போகிறது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஈழக் கோரிக்கையிலிருந்து வெற்று சில்லறை நிவாரணங்களைக் கூட போராடிப் பெரும் இடத்துக்கு ஈழத் தமிழர் வாழ்வு வந்தடைந்திருக்கிறது என்பதை தமிழகத் தமிழ் நேசங்களுக்கு சொல்லியாக வேண்டும்.

மொத்தத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தம் தமிழர்களை திருப்திபடுத்தவில்லை, சிங்களவர்களையும் திருப்திபடுத்தவில்லை. ஆனால் தமிழர்களுக்கு இறுதியில் மிஞ்சியிருக்கும் சொற்ப அபிவிருத்திக்கான அலகு அது தான்.

விஜேமுனி போன்றோர் இலங்கை முழுவதும் உருவாக்கட்டுவிட்டார்கள். இந்தியாவும் செல்லாக்காசாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் மட்டும் நாளாந்தம் கேள்விக்குறியாக ஆகிக்கொண்டிருக்கிறது.

17.08.2020 சமுதித்த என்பவருக்கு வழங்கிய youtube நேர்காணல் இது
ராஜீவ் காந்தி மீது நீங்கள் தாக்குதலை நடத்திய போது உங்கள் வயதென்ன?
எனக்கு அப்போது 21 வயது?கடற்படையில் அப்போது தொலைதொடர்பு தொழிநுட்பத்துறையில் தான் பணியாற்றினேன்.
ஒரு வாரத்துக்கு முன்னரே எங்களுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நாள் வரை இந்த அணிவகுப்பு சந்தர்ப்பம் இராணுவத்துக்கு கிடைக்குமா கடற்படைக்கு கிடைக்குமா என்பதை அறிந்திருக்கவில்லை. ஒப்பந்த நடத்தது யூலை 29. யூலை 30 அன்று தான் இந்த அணிவகுப்பு நிகழ்ந்தது.
எப்போது கடற்படையில் இணைந்தீர்கள்?
1985 ஏப்ரல் மாதம்.
ராஜீவைத் தாக்குவதற்கான எண்ணம் எப்போது உங்களுக்குத் தோன்றியது.
இராணுவ மரியாதைக்கான ஒத்திகை தொடங்கியவுடனேயே அந்த எண்ணம் உதித்துவிட்டது. இராணுவ மரியாதை ஒப்பந்தத்துக்கு முதலும் பின்னரும் நிகழ்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ராஜீவைக் கொன்றாவது ஒப்பந்தத்தைத் தடுத்து நிறுத்துவேன் என்று முடிவெடுத்துவிட்டேன். ஆனால் ஒப்பந்தம் செய்ததன் பின்னர் தான் எனக்கு அதில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
ராஜீவை காயப்படுத்த்தினால் போதும் என்று நீங்கள் இருக்கவில்லை? கொள்வது தான் உங்கள் திட்டமாக இருந்திருக்கிறது. சரியா?
கொன்றாவது இதனை நிறுத்தலாம் என்பது தான் எனது முடிவாக இருந்தது. நான் மிகுந்த ஆத்திரம் அடைந்திருந்தேன். வடமாராச்சி நடவடிக்கையின் போது இராணுவத்தை பிடிக்கப்பட்ட புலிகளை காலியில் உள்ள முகாமுக்கு கடற்படைக் கப்பலில் கொண்டு நானும் சேர்ந்து தான் கொண்டு போய் சேர்த்தோம். ஆனால் அப்படிப்பட்டவர்களை விடுதலை செய்யும்படி ஒப்பந்தமாகிவிட்டது. இவையெல்லாம் எனக்குள் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இப்படியொரு காரியத்தை செய்யப்போகிறீர்கள் என்பதை உங்களுக்கு நெருக்கமான எவரும் அறிந்திருக்கவில்லையா?
இல்லை. அப்படிப்பட்ட ஒரு இரகசியத்தை ஒருவர் அறிந்திருந்தாலும் அந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது. எனவே என்னைத் தவிர வேறெவருக்கும் தெரியாது.
உங்களுக்கு அன்றைய தினம் இறுதிநிமிடம் வரை இந்தத் திட்டத்தைக் கைவிடலாம் என்று சற்றும் தோணவில்லையா?
இல்லை நாட்டின் இறைமைக்காகவும், சுயாதீனத்துக்காகவும் எனது உயிரே போனாலும் இதை செய்தே ஆவேன் என்று உறுதியாகவே இருந்தேன்.
தாக்குதலில் ராஜீவ் காயப்பட்டாரா?
அந்த வீடியோ காட்சியில் நீங்களே பார்க்கலாம். நான் தலையில் தாக்குவது பின் மண்டையில் படுகிறது. ஏழடி உயரமுள்ள மனிதர். அவர் குனிந்து விடுகிறார். மூன்றடையாவது குனிந்து தான் அவர் தப்புகிறார். இல்லையென்றால் அன்றே அவர் அதே இடத்தில் செய்திருப்பார். அவரின் பிணத்தைத் தான் அங்கிருந்து தூக்கிச் சென்றிருப்பார்கள்.... ஜே.வி.பி இயக்கம் போல பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வேலையை நான் மேற்கொள்ளவில்லை. நேரடியாக சம்பந்தப்பட்டவனுடன் கணக்குத் தீர்க்கத்தான் சென்றேன்.
நன்றி - காக்கைச் சிறகினிலே...

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates