தேர்தலுக்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி பராளுமன்றம் முதற் தடவையாக கூடியபோது பாராளுமன்றத்தின் மொத்த 225 உறுப்பினர்களில் 222 பேர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். மூவரில் “அபே ஜாதிக பெரமுன” என்கிற கட்சியின் உறுப்பினர் (ஞானசார தேரர் தரப்பு) ஒருவர், அடுத்த இருவர் சிறைச்சாலையில் கைதிகளாக இருப்பவர்கள். ஒருவர் இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டாவது அதிகப்படியான வாக்குகளைப் பெற்று தெரிவான மரண தண்டனைக் கைதி “சொக்கா மல்லி” என்று அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர. அடுத்தவர் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் ஐந்து வருடங்களாக சிறையில் இருந்தபடி இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகப்படியான விருப்புவாக்குகளைப் பெற்ற பிள்ளையான்.
இலங்கையின் வரலாற்றில் முதற் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக ஆகியிருப்பது உள்ளூர் செய்தியோடு மட்டுப்படவில்லை. அது சர்வதேச செய்தியாக இந்த நாட்களில் வளம் வந்துகொண்டிருக்கிறது. ஜனநாயக கட்டமைப்பொன்றில் இது ஒரு பிழையான முன்மாதிரி என பல முனைகளிலும் இருந்தும் கருத்துக்கள் வெளிவந்தமுள்ளன. அப்படியென்றால் 1982இல் குட்டிமணிக்கு மட்டும் ஏன் அந்த சந்தர்ப்பம் வழங்கவில்லை என்கிற விவாதங்களும் இப்போது எழுப்பப்படுகின்றன. இதை சற்று விரிவாகவே பார்ப்போம்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சார கூட்டம் கஹாவத்த பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது அக்கூட்டத்தில் கலந்துகொண்ட மைத்திரிபாலாவின் ஆதரவாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டு இருவர் படுகாயமடைந்தனர். இதன் சூத்திரதாரியான பிரேமலால் மற்றும் அவருடன் இருந்த மூன்று பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ் வழக்கு விசாரணை, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. முன்னாள் அமைச்சர் தலதா அத்துகோரள உட்பட 59 பேரின் சாட்சியங்களும், 16 தடயப் பொருட்களும் அவர்களுக்கு எதிரான வழக்கில் சட்ட மா அதிபரால் முன்வைக்கப்பட்டன.
இந்த விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில் தான் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த விசாரணையின் போது பிணை கோரியிருந்த பிரேமலால் ஜயசேகர சந்தேக நபராக கருதப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இப்படியான நிலையில் தான் தேர்தலுக்கான வேட்பு மனுவை பிரேமலால் ஜயசேகர தாக்கல் செய்து, நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனுவில் இடம்பிடித்தார்.
ஆனால் அவ்வழக்கில் பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் கடந்த ஜுலை மாதம் 31ஆம் தேதி பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க முடியுமா என்று தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரத்னஜீவன் ஹூல்லிடம் வினவியிருந்தபோது அதற்கு அவர்
“இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ள 6 பிரதான விடயங்களில் வேட்பாளரொருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை என்ன என்பது உள்ளடக்கப்படவில்லை. எனவே பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்று அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதற்கான தீர்வு வழங்கப்பட்டால் மாத்திரமே இதற்கான தீர்வு கிடைக்கும்” என்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க 2015 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட போது இரட்டை பிரஜாவுரிமையுடையவர் என்பதற்காக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இரு வருடங்களின் பின்னர் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்ற தீர்ப்பினால் அவர் பதவி விலகினார். வழக்கு தொடர்ந்து இரண்டு வருடங்களின் பின்னரே தீர்ப்பு வழங்கப்பட்டது. எனவே அது வரையில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்தார். பாராளுமன்ற உறுப்பினராக அக முடியாத ஒருவர் வேட்பாளராக ஆக முடியும் என்கிற ஒரு விதி சட்டத்தில் உள்ள குறைபாடே. தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் மீது வழக்கு தொடர்ந்து தான் அவ்விதிக்கு சட்ட வலுவை உருவாக்க வேண்டுமா? ஒரு வகையில் அது ஒரு வேட்பாளருக்கு இழைக்கப்படும் அநீதி. அதுபோல அவரை தெரிவு செய்கிற மக்களுக்கும் ஏற்படும் அநீதி. இது சட்டத்தின் முக்கிய குறைபாடு.
பிரேமலால் ஜயசேகர 1997 ஆம் ஆண்டு பிரேதச சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டவர். 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகி மகாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சாராக பதவி வகித்தவர். அதன் பின்னர் அவர் கிராமிய தொழிற்துறை, சுய தொழில் பிரதி அமைச்சராகவும் இருந்தவர். மகிந்த ராஜபக்ச அணியினரின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்தவர்.
கடந்த 2015ஆம் ஆண்டு அரசாங்கத்தின் போது பாராளுமன்றம் கூடிய 213 நாட்களில் 39 நாட்கள் மட்டுமே கலந்துகொண்டவர். பாராளுமன்றத்தில் எழுத்துமூலமான கேள்விகளை இரண்டு தடவைகள் தான் சமர்பித்திருக்கிறார். பொது முறைப்பாடுகள் மூன்றை மட்டுமே முன்வைத்துள்ளார். பாரளுமன்ற உறுப்பினராக உருப்படியான எந்த வினைத்திறனையும் காட்டிய ஒருவராக அவர் இருக்கவில்லை. ஆனால் பெரும் வர்த்தக செல்வந்தரான பிரேமலால் ஜயசேகர நடந்து முடிந்த 2020 பொதுத் தேர்த்தலில் 104,237 விருப்பு வாக்குகளைப் பெற்று அம்மாவட்டத்தில் இரண்டாவது பெரும்பான்மை விருப்பு வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
அதே வேளை மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிற பிரேமலால் ஜயசேகர; பாராளுமன்றத்தில் அமர்வதற்கோ, வாக்களிப்பில் பங்குபெறுவதற்கோ உரிமையற்றவர் என்று பாராளுமன்ற செயலாளருக்கும், நீதி அமைச்சுக்கும், சிறைச்சாலை ஆணையாளருக்கும் சட்ட மா அதிபரால் 19.08.2020 அன்று அறிவிக்கப்பட்டிருப்பதாக சட்ட மா அதிபர் காரியாலயத்தின் பேச்சாளரான நிஷார ஜயரத்ன தெரிவித்திருந்தார். இந்தச் செய்திகள் அடுத்த நாள் ஊடகங்களிலும் வெளியாகிருந்தன.
பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட ஒருவர் பாராளுமன்றத்துக்கு அறிவிக்காமல் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு சமூகமளிக்காதுவிட்டால் அவர் தனது ஆசனத்தை இழப்பார் என்பது அரசியலமைப்பு விதி. இதற்கு வரலாற்றில் பல உதாரணங்களும் உள்ளன.
83இல் தமிழர் இழந்த உறுப்புரிமை
1983 இனப்படுகொலை சம்பவங்கள் நிகழ்ந்து இரு மாதங்களில் ஓகஸ்ட் 5ஆம் திகதி அரசியலமைப்புக்கு 6வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இலங்கையிலோ அல்லது நாட்டிற்கு வெளியிலோ உள்ள எந்தவொரு நபரும் நாடு பிளவுபடுவதற்கு ஆதரவளிப்பது அல்லது ஊக்குவிப்பது அல்லது அத்தகைய முயற்சிகளுக்கு நிதி சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றமென்கிற விதி அந்த திருத்தச்சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. அதுமட்டுமன்றி சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விதிகளை மீண்டும் ஒரு சத்தியப்பிரமாணமாக செய்துகொள்ள நேரிட்டது. சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். ஆனால் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த எவரும் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் பகிஷ்கரித்து வந்தார்கள். மூன்று மாதங்களாக பாராளுமன்றத்துக்கு உரிய அறிவித்தலை செய்யாது சமூகமளிக்காததால் அவர்கள் அனைவரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தனர்.
எனவே இதே நிலை பிரேமலால் ஜயசேகரவுக்கும் நேரிடாதபடி அவசர அவசரமாக சிறைச்சாலை ஆணையகம், திணைக்களம், நீதிமன்றம், சட்ட மா அதிபர், சபாநாயகர் என்கிற சம்பந்தப்பட்ட தரப்புடன் ஆளுங்கட்சி அணுகியது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் மேன்முறையீடு செய்திருப்பதால் மாத்திரம் அவரை எந்தவிதத்திலும் பிணையில் விடுவிக்கும் சட்ட வாய்ப்புகள் இல்லை. அது மட்டுமன்றி குற்றவியல் சட்டத்தின் 333.4 விதிகளின்படி மேன்முறையீடு செய்துவிட்டதால் அந்த இடைக்காலத்தில் அவர் நிரபராதியாக கருதப்படமாட்டாது.
மேலும் அரசியலமைப்பின் 89 (ஈ) பிரிவின் படி பின்வரும் காரணிகளுக்கு உட்பட்டவர் எவரும் உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று தெளிவாக சுட்டுகிறது.
(ஈ) இரண்டாண்டுகளுக்குக் குறையாதவொரு காலத்திற்கான மறியற்றண்டனையால் தண்டிக்கப்படக்கூடிய தவறொன்றுக்காக ஏதேனும் நீதிமன்றத்தினால் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன் பின்னர் அதனால் விதிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குக் குறையாத ஒரு காலத்திற்கான மறியற்றண்டனையை (அது எப்பெயரினால் அழைக்கப்படினுஞ் சரி) இப்போது அனுபவித்து வருப வராயிருந்தால், அல்லது நேர் முற்போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின்போது அத்தகைய தண்டனை அனுபவித்து முடித்தவராயிருந்தால், அல்லது மரண தண்டனைத் தீர்ப்பளிக் கப்பட்டவராயிருந்தால், அல்லது அத்தகைய மரண தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்குப் பதிலாக அளிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கு குறையாதவொரு காலத்துக்கான மறியற் றண்டனையை அனுபவிப்பராயிருந்தால், அல்லது நேர்முற் போந்த ஏழு ஆண்டுக் காலப்பகுதியின்போது அத்தகைய தண்டனையை அனுபவித்து முடித்தவராயிருந்தால்;
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...