Headlines News :
முகப்பு » , , , , , » "கள்ளத்தோணி" : வரலாற்றை கற்க முனைபவர்களுக்கு ஓர் சிறந்த உசாத்துணைகளில் ஒன்று - பிரகாஷ் சின்னராஜா

"கள்ளத்தோணி" : வரலாற்றை கற்க முனைபவர்களுக்கு ஓர் சிறந்த உசாத்துணைகளில் ஒன்று - பிரகாஷ் சின்னராஜா

ஓர் எழுத்தாளர் ஓர் விடயத்தை தகுந்த மூல ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்பொழுதே அது வலிமையான ஆவணமாக உருமாற்றம் பெறும். சமூக, அரசியல், வரலாற்று விடயங்களை எழுதுபவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டிய மிகமுக்கியமான விடயமாக இது உள்ளது.

அவ்வகையில் இலங்கையின் சமூக, அரசியல், வரலாற்றுத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு பேசாப் பொருளை பேசுபொருளாக்கிப் பல விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிக்கொணரும் சரவணன் அவ்வாறான வலுவான நூல்களை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றார் என்றால் மிகையல்ல.

இவரது படைப்புகளில் "கண்டிக் கலவரம் 1915", "தலித்தின் குறிப்புகள்" வரிசையில் இந்த "கள்ளத்தோணி" நான் வாசித்த மூன்றாவது நூலாக இணைகின்றது.

மலையகத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழர்கள் என்று இலங்கைக் கரையை அடைந்தனரோ அன்று தொடக்கம் இன்று வரை அவர்களிற்கு இழைக்கப்பட்டுவரும் சமூக அநீதிகளை இந்நூலில் பிரதானமாக கோடிட்டுக் காட்டியுள்ள நூலாசிரியர் அவற்றிற்கான நீதியையும் வேண்டி வலியுறுத்தி நிற்கின்றார். இதற்குப் பக்கபலமாக இறுதி அத்தியாயங்களில் தான் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் எழுதத் துணிந்தமை "எண்ணித் துணிக கருமம்....." எனும் குறள் வரிகளிற்கேற்ப ஆசிரியர் தனது கருத்தில் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துரைக்கின்றது.

வலிமை மிக்கவன் தனது எதிரி தன்னைப் பற்றி ஏதாவது உரைக்கும்பொழுது தனது எதிரியை பழிவாங்குவதாக எண்ணி அவனது வலிமை குறைந்த அயலவனை பழிவாங்குவது போல் இலங்கையில் மலையகத் தமிழர்களிற்கெதிராக 1939ல் நாவலப்பிட்டியில் ஏற்பட்ட முதலாவது இனக்கலவரத்தையும் அதன்நீட்சியாக தொடர்ந்து வந்த அரசுகள் ஏற்படுத்திய சட்டங்கள், ஒப்பந்தங்கள், நடவடிக்கைகள் வரை பல விடயங்களை சுட்டிக்காட்டி அவற்றால் ஏதுமறியா அப்பாவி மக்கள் வஞ்சிக்கப்பட்ட விதத்தையும் வலியுடன் வெளிக்காட்டியுள்ளார்.


தேசங்கள் என்றும் தமது நலன்களுக்கே முன்னுரிமை வழங்கும் எனும் உண்மையை 'கச்சத்தீவு' இலங்கைக்கு வழங்கப்பட்ட வரலாற்றினூடாக இந்நூல் அழகாக வெளிக்காட்டியுள்ளது, வடக்கு கிழக்கை ஆதாரமாகக் கொண்ட மக்களும் வரலாற்றிலிருந்து எதிர்கால நகர்வு தொடர்பான பாடங்களைக் கற்க வேண்டுமென்பதனை இது வலியுறுத்துகின்றது.

இதற்கப்பால், தலைமுறை தலைமுறையாக உரிமைகள் மறுக்கப்பட்டு, இழக்கப்பட்டு,வாய்ப்புகளின்றி, தேசங்களாலும் தேசிய இனங்களாலும் பந்தாடப்பட்ட மக்கள் தங்களை ஏன் மலையகத் தமிழர் என ஓர் தனித்தன்மையுள்ள இனமாகக் காட்ட வேண்டிய அவசியமேற்பட்டதையும் அதற்கான காரணங்களையும் வெளிக்கொணரும் இந்நூல் வரலாற்றை கற்கத் தூண்டுபவர்களிற்கும் வரலாற்றினூடே பாடங்களை கற்க வேண்டிய அவசியமுள்ளவர்களிற்கும் ஓர் பிரதான உசாத்துணையாகவே உள்ளது என்றால் மிகையல்ல.

வரலாற்றில் மலையகத்தை தளமாகக் கொண்ட தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் மறைக்கப்படக்கூடாதவை மட்டுமல்ல அது மன்னிக்கப்பட முடியாதவையுமாகும்.

குறிப்பு :- அனைவருக்கும் பயனுள்ள இந்நூலை இலங்கையிலுள்ள பல புத்தக நிலையங்களில் வாங்குவதற்குரிய வசதிகள் உள்ளன. அனைத்து விடயங்களையும் ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியுள்ள இந்நூலின் ஓர் பிரதியை தனிப்பட்ட வகையில் கொள்வனவு செய்வதன் மூலம் எம்மவரை நாமே ஊக்குவிக்க முதற்காரணியாக அமைவோம்.
Share this post :

+ comments + 1 comments

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates