இலங்கையின் இனத்துவ அரசியலின் திசைவழியைத் தீர்மானித்ததில் பெரும்பங்கு“1956” அரசியல் மாற்றத்துக்கு உரியது. சிங்கள பௌத்த தேசிய வாதம் பேரினவாதமாக உருவெடுத்து பாசிச வடிவத்துக்கு அண்மித்த நிலையை எட்ட அந்த மாற்றமே அத்திவாரத்தை ஸ்தூலமாக இட்டது.
சிங்களத் தேசியவாதிகள் இன்று வரை “1956 புரட்சி” என்றும், “1956 தர்ம யுத்தம்” என்றும் அந்த மாற்றத்தை இன்றும் அழைத்து வருகிறார்கள். 1956 அரசியல் மாற்றத்தை ஆட்சி மாற்றமாகவும், பண்டா செல்வா ஒப்பந்தம், சத்தியாக்கிரப் போராட்டம், ஸ்ரீ எதிர்ப்பு, தனிச்சிங்களச் சட்டம் என்பனவற்றோடு மட்டுமே தகவல் ரீதியில் அறிந்து வைத்திருக்கிறோம்.
ஆனால் 1956 அரசியல் மாற்றத்துக்கான தயாரிப்புகள் எப்படி நிகழ்ந்தன? அதற்கு பின்னால் இருந்த சக்திகள், கட்சிகள், தனி நபர்கள் யார்? அவற்றின் மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் எவை? அவற்றின் தந்திரோபாய செயற்திட்டங்கள் எவை? பேரினவாதம் எப்படி அவற்றை வெற்றி கொண்டது? அதனால் விளைந்த பின்விளைவுகள் எவை? பின்வந்த தமிழ்த் தேசிய போராட்டத்துக்கான நியாயங்களை 56 அரசியல் மாற்றம் எவ்வாறு உருவாக்கியது? என்பவற்றை மேலும் சற்று துல்லியமான தகவல்களுடன் ஆராயும் தொடர் இது.
அம்மாற்றத்தைப் பற்றி தமிழில் இதுவரை அறியப்படாத பல விபரங்களை, விளக்கங்களையும் வெளிக்கொணரும் தொடர்.
பிரபல வரலாற்றாசிரியர் கே.எம்.டீ.சில்வா அந்த ஆட்சி மாற்றத்தை “மொழித் தேசியவாதத்தின் விளைவு” என்று அழைப்பார். மைக்கல் ரொபர்ட்ஸ் அதையே “கலாச்சார தேசியவாதம்” என்றே அழைக்கிறார்.
சுதந்திரம் என்கிற பெயரால் காலனித்துவத்திடமிருந்து அதிகாரம் சிங்கள பௌத்தர்களிடம் கைமாறியது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. அதற்கென்று ஒரு படிநிலை வளர்ச்சியுண்டு. இலங்கையை சிங்கள பௌத்த நாடாக ஆக்குவதற்கான சகல அத்திவாரங்களும் இடப்பட்ட காலக்கட்டம் இது தான்.
அதுவரை இலக்கு வைக்கப்பட்டவர்கள் சிங்களவர்கள் அல்லாதவர்கள் தான். ஆனால் 56 சிங்கள பௌத்தர்கள் அல்லாதர்வகளையே ஓரங்கட்டும் அளவுக்கு பாசிச வடிவத்துக்காண தளத்தை இட்டுக்கொடுத்தது.
ஆங்கிலேய பண்பாட்டு வழிமுறையையும், ஆங்கில மொழி, கிறிஸ்தவ செல்வாக்கு என்பவற்றை ஓரந்தள்ளிவிட்டு தேசிய பண்பாட்டு மூலங்களை அதற்குப் பதிலாக பிரதியீடு செய்வது என்கிற திட்டத்துடன் இறங்கியவர்கள் இலங்கையின் தேசியத்தை சிங்கள – பௌத்த தேசியமாக குறுக்கிவிட்டதற்குப் பின்னால் சிங்கள பௌத்த கூட்டு வேலைத்திட்டமே பெரும் பாத்திரம் வகித்தது. இவை அனைத்துக்கும் அவர்களுக்கு குறுகிய காலம் போதுமானதாக இருந்தது. சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தத்துக்கு அரச அனுசரணையும், சிங்கள சிவில் சமூகத்தின் பெரும் வரவேற்பும், மேட்டுக்குடி வர்க்கத்திலிருந்து சாதாரண சிங்கள தொழிலாளர் வர்க்கம் வரை ஆதரவு கொடுத்து அவற்றை நிறைவேற்றினார்கள்.
சிங்களவர்களாக இருந்து அவர்கள் பௌத்தர்களாகவும் இல்லாவிட்டால் அவர்களும் அந்நியப்படுத்தலுக்கு இலக்கானார்கள். குறிப்பாக சிங்கள கிறிஸ்தவர்கள் கூட தேசத்தின் “தூய” மண்ணின் மைந்தர்களாக பார்க்கப்படவில்லை. கிறிஸ்தவர்கள் அந்நியர்கள் என்றால் பௌத்தம் மட்டும் அந்நியம் இல்லையா என்கிற தர்க்கம் கொஞ்சம் கூட எட்டியும் பார்ப்பதில்லை. சிங்கள இனமும், சிங்கள மொழியும் கூட அந்நியமே, அந்நியக் கலவையே என்கிற வாதத்துக்கும் சற்றும் இடமிருப்பதில்லை.
சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் தம்மை இலங்கையர்களாக உணரமுடியாத நிலைக்கு தள்ளிச் செல்லுகின்ற செயற்திட்டங்கள் இங்கு தான் ஸ்தூலமாக வகுக்கப்பட்டது.
பௌத்தத்தின் காப்பாளராக இலங்கையை புத்தர் தெரிவு செய்ததாகவும் அப்பேர்பட்ட இலங்கைக்கு வந்தடைத்திருக்கும் விஜயனையும், அவனின் தோழர்களையும் காக்கும்படி புத்தர் தேவர்களிடம் வேண்டிக்கொண்டதாகவும் விஜயனின் வம்சாவழியே விருத்தியடைந்து சிங்கள இனமாக ஆனதாகவும் . விஜயனே முதல் சிங்களவன் என்றும் புனையப்பட்டிருக்கிறது மகாவம்சத்தில். அக்கதைக்கு இலக்கிய, வரலாற்று, புனித செல்வாக்குக்கு உட்படுத்திய சிங்கள பௌத்தத் தரப்பு அதற்கு மேலும் வலு சேர்த்து அரசின் உத்தியோகபூர்வ வரலாற்று ஆவணமாக ஆக்கியதும் இந்த காலத்தில் தான். பிக்குமாரின் கைகளிலும், ஆய்வாளர்களின் கைகளிலும் இருந்த மகாவம்சத்தை மக்களிடம் பல்வேறு வடிவத்தில் கொண்டு சேர்த்ததும் இந்தக் காலப் பகுதியில் தான்.
பிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபதத் தொடங்கியது இந்தக் காலத்தில் தான். இந்தத் தொடக்கமே இன்று காவியுடை பாசிசம் வரையான நீட்சிக்கு அடிகோலியது.
அரச / அரசாங்க / அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களை கட்டுப்படுத்தும் வலிமையை இங்கிருந்து தான் பௌத்த மகாசங்கத்தினர் ஆக்கிக்கொண்டார்கள்.
சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலை பண்டாரநாயக்க தெரிவு செய்யவில்லை. அப்பேர்பட்ட நிகழ்ச்சிநிரலே ஒரு பண்டாரநாயக்கவை தெரிவு செய்தது.
மொழித் தேசியவாதமானது தமிழர்களை மட்டுமல்ல இலங்கையில் அதுவரை அமைதியாக வாழ்ந்துவந்த பறங்கி இனத்தையே கூண்டோடு நாடுகடக்கச் செய்தது.
சிங்கள இனம் – பௌத்த மதம், சிங்கள மொழி ஆகியவையே இலங்கைத் தேசியத்தின் அடையாளங்கள் என்கிற கருத்துநிலைக்கு உயிர் கொடுக்கத் தொடங்கிய காலம். “இன + மத + மொழி”ச் சுத்திகரிப்பு என்பது அடுத்து வந்த அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட இன அமைதியின்மையை நாட்டில் ஏற்படுத்தியது.
சிங்கள பௌத்த பண்பாட்டின் பேரால் இலங்கையின் ஏனைய சுதேசிய இனங்களின் பண்பாடுகளை ஓரங்கட்டி, அந்நியப்படுத்தி இன, மத, மொழிச் சுத்திகரிப்பை அரசே முன்னின்று செய்யத் தொடங்கியது இந்தக் காலப் பகுதியில் தான்.
பண்டாரநாயக்கவை “பஞ்சமகா சக்திகள்” ஒன்று சேர்ந்து பதவியிலமர்த்தினர் என்பார்கள். அதாவது “சங்க, வெத, குரு, கொவி, கம்கரு” – (மதகுருமார்கள், ஆயுர்வேத வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்) என்கிற ஐந்து சக்திகள். இந்த “பஞ்சமகா சக்திகள்” என்கிற கருத்தாக்கம் சிங்கள பௌத்தர்கள் தவிர்ந்தவர்களை உள்ளடக்கியிருக்கவில்லை.
பண்டாரநாயக்க ஆட்சி என்பது நிச்சயமாக நிறைகளையும் கொண்டிருந்தது. அதில் எந்தவித சந்தேகமுமில்லை. அதையும் பேசுவோம். ஆனால் இனத்துவ அரசியலை இனவாத வடிவத்துக்கு தள்ளி இலங்கையின் வளர்ச்சியை பல ஆண்டுகளுக்கு பின் தள்ளியதற்கான விதை அந்த ஆட்சியில் எப்படி இடப்பட்டது என்பதை மேலும் விரிவாகவும், விபரமாகவும், தெளிவாகவும் நாம் இந்தத் தொடரில் அலசுவோம்.
இலங்கையின் வரலாற்றில் இடதுசாரி இயக்கங்களின் சரிவு தொடங்கிய காலகட்டம். சிங்களத் தேசியவாத சக்திகளின் வலையில் விழுந்து நாளடைவில் சிங்கள பௌத்த பேரினவாத போக்கின் அங்கமாக மாறத் தொடங்கிய காலகட்டம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியென்றால் அது “இடது சாரி சார்பு கட்சியே” என்கிற மாயைக்குள் மக்களை பல தசாப்தங்களுக்கு தள்ளவைத்ததுக்கு அத்திவாரம் இங்கு இருந்து தான் இடப்பட்டது.
1956 ஆம் ஆண்டின் பௌத்தம் புத்துணர்ச்சியையும், எழுச்சியுனர்வையும் பெறுவதற்கு இன்னொரு முக்கிய காரணம் அந்த வருடம் புத்தரின் 2500 புத்த ஜயந்தி வருடம். அப்படி புத்த ஜயந்தி வருடம் என்று அதனை அழைத்தாலும் கூட அது புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2500 வருடமாகவே கொள்ளப்படுகிறது. அதாவது புத்தர் மரணித்த அந்த வருடம் கி.மு.544. அதே நாளில் தான் விஜயன் இலங்கை வந்தடைந்ததும், சிங்கள இனத்தின் உருவாக்கமும், இலங்கை ராஜ்ஜியமும் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கொள்ளப்படுகிறது. இந்த சிறப்புகளும் பௌத்த உணர்வைத் தூண்டி பலன்களை அடைய வாய்ப்பு விரிந்தது என்றே கூறலாம்.
புத்த ஜயந்தியின் பாத்திரம், பஞ்சமகா சக்தி கருத்தாக்கம், பண்டாரநாயக்கவின் அரசியல் பரிமாண மாற்றம், சிங்கள மகா சபை, ஐ.தேகவில் இருந்து பிரிந்து சுதந்திரக் கட்சி உருவானதன் பின்னணி, பௌத்த தேசிய படை, பிக்கு பெரமுன, கண்டி சோஷலிச கட்சி, திரி சிங்களே பெரமுன, விப்லவகாரி சமசமாஜக் கட்சி , எக்சத் பிக்கு பெரமுன போன்ற இயக்கங்களின் தோற்றம் அவற்றின் கூட்டு வகிபாகம், பௌத்த ஆணைக்குழுவின் திட்டங்களை சுவீகரித்துக் கொண்ட விதம், “தச பனத” என்கிற “பத்துக் கட்டளைகள்” பண்டாரநாயக்கவை கட்டுப்படுத்திய விதம் என பல்வேறு அம்சங்களை விரிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்.
அடுத்த வாரம் பண்டாரநாயக்கவின் அரசியல் நுழைவின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...