Headlines News :

குடியுரிமை - என்.சரவணன்

புதிய இந்தியக் குடியுரிமைச் சட்டம் பற்றிய சர்ச்சைகள் பெரும் வெடிப்பாக ஆகியிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் பல்லாண்டுகளாக அகதிகளாக வாழும் ஈழத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என்று உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய்யின் அறிவித்தலும் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. இக்கட்டுரை அதைப் பற்றியதல்ல. குடியுரிமையின் வலியையும், வலிமையையும் நான் அறிவேன். இது அதைப் பற்றியது.  
2012ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஒரு நாள் நோர்வே அரசு எனக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது. நான் அன்று முதல் நோர்வேயின் குடியுரிமையைப் பெற்றுவிட்டதாகவும், இனி இதுநாள் வரை எனக்கு இருந்த குடியுரிமையை நான் இழப்பதாகவும் அந்த கடிதத்தில் இருந்தது. 

ஒரு விதத்தில் அந்த செய்தி மகிழ்ச்சியைத் தந்தது. இனிமேல் நான் இலங்கையின் பிரஜை என்பது மறுபுறத்தில் வலித்தது. சற்று நேரத்தில் இன்னொரு விடயமும் என்னை உறுத்தியது.

ஆம் நான் அதுவரை இலங்கையின் பிரஜையாக இருந்ததுமில்லை. எந்தவொரு நாட்டின் சட்டபூர்வமான குடியுரிமையும் எனக்கு இருந்ததுமில்லை. இன்னும் சொல்லப்போனால் நாடற்றவனாகவே இருந்திருக்கிறேன். இல்லாத குடியுரிமையை நான் இனி எவ்வாறு இழக்கப் போகிறேன்? எனக்குள் நகைத்துக்கொண்டேன். 

இந்த செய்தியையும், நகைப்பையும் ஒரு பதிவாக முகநூலில் இட்டிருந்தேன். சிறிது நேரத்தில் வாழ்த்துக்கள் பல குவிந்தன, அதேவேளை "அதெப்படி குடியுரிமை இல்லாமல் இதுவரை இருந்திருக்கிறீர்கள்? எப்படி கடவுச்சீட்டு எடுத்தீர்கள்? எப்படி நோர்வே வந்து சேர்ந்தீர்கள்? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளைப் பல நண்பர்கள் தொடுத்தார்கள். 

இந்த விவாதத்தைக் கண்ணுற்ற நண்பர் சீவகன் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர் அப்போது லண்டன் பிபிசியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவரும் அதே கேள்விகளைக் கேட்டார்.  

எனது பதில் தந்த ஆச்சரியத்தில் இந்த விவகாரத்தை நாம் ஒரு பேசுபொருளாக்குவோம். என்று கூறி விட்டு என்னிடமும் இது குறித்து ஒரு நேர்காணலைச் செய்துவிட்டு இலங்கையில் இருந்து மனோகணேசன், காமினி வியங்கொட போன்றோரிடமும் இது தொடர்பிலான உரையாடலைச் செய்து BBCயில் அன்று இரவு தமிழிலும் சிங்களத்திலும் பதிவு செய்தார். இந்த உரையாடலைத் தொடர்ந்து வேறு பத்திரிகைளும் நேர்காணல் செய்தன. "விகல்ப" (vikalpa - மாற்று) என்கிற இணையத்தளத்தில் இதை ஒரு கட்டுரையாகப் பதிவு செய்தார்கள். 

என்னைப் போலப் பலரும் அந்த நிலையில் இன்றும் இருக்கிறார்கள் என்கிற செய்தி மீண்டும் பேசுபொருளாக ஆனது. 

0-0-0

எனது அம்மாவின் பெற்றோரும், அப்பாவின் பெற்றோரும் இந்தியாவில் பிறந்தவர்கள். இரு தரப்புமே இலங்கைக்குத் திருநெல்வேலி கட்டாரங்குளத்திலிருந்து வந்தவர்கள். என் அப்பாவும், அம்மாவும் அதற்குப் பின் வந்த மூன்று சந்ததியினரும் இலங்கையில் தான் பிறந்தார்கள். இவர்கள் இலங்கைக்கு வந்து இன்னும் ஓரிரு வருடங்களில் நூறாண்டுகள் ஆகப் போகின்றன. 

அப்படி இருந்தும் எங்களுக்குக் குடியுரிமை இருக்கவில்லை. இலங்கையில் இரண்டு மூன்று சந்ததியினர் தோற்றம்பெற்றதன் பின்னர் தமிழ்நாட்டுடனான உறவே அற்றுப் போய்விட்டது. எப்போதாவது இந்தியாவில் இருந்துவரும் அந்தப் பச்சை நிற கடிதங்களை என் பாட்டிக்கு நான் படித்துக் காட்டியிருக்கிறேன். 92ஆம் ஆண்டு தான் என் தந்தை என்னை திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று அங்கு வாழும் உறவுகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதுதான் எனது முதலும் கடைசியுமான பயணமும். அவருக்கும் கூட அதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அந்தத் தொடர்புகளும் கிடைத்திருந்தன. 

இந்திய வம்சாவளியினரை விரட்டுவதற்காகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள், சட்டங்கள் அனைத்திலிருந்தும் தப்பி வாழ்ந்து வந்தது எங்கள் குடும்பம். 

என் அம்மாவுடன் கூடப் பிறந்தவர்கள் பத்து பேர். அப்பாவோடும் கூடப் பிறந்தவர்கள் பத்து பேர் தான். சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் பேரில் வலுக்கட்டாயமாக நாய்களைப் போலப் பிடித்துக் கொண்டு நாடுகடத்தப்பட்ட அவலத்தை பெரும்பாலான இந்திய வம்சாவளியினர் எதிர்கொள்ள நேரிட்டது. நீண்ட பெயர் பட்டியலை எடுத்துக்கொண்டு சுற்றிய பொலிசாரின்  கண்களில் படாமல் இருப்பதற்காகக் குறிப்பாக இரவு நேரங்களில் என் தாயாரின் மூத்த சகோதரனான எங்கள் அருச்சுனன் மாமா பல நாட்கள் மரங்களில் ஏறி இருந்து நித்திரை கொண்டதாக என் அம்மா கூறுவார். 

இந்தியா ஒரு புறம் "எங்களுக்கு இந்த மக்கள் வேண்டாம்!". "மீண்டும் வரத் தேவையில்லை!", "ஏற்கத் தயாரில்லை!" என்று கூறிக்கொண்டிருந்த காலத்தில் "எங்களுக்கும் இந்த மக்கள் வேண்டாம்! இவர்கள் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும். இல்லையேல் பலாத்காரமாக நாடு கடத்தப்படுவார்கள்" என்று இலங்கை எங்களைக் கைவிட்டிருந்த காலம் அது. எந்த நாட்டுக்கும் வேண்டப்படாதவர்களாக இந்திய வம்சாவளியினர் ஆக்கப்பட்டிருந்த காலம் அது. தெரியாத தமிழ் நாட்டுக்குப் போவதை விடப் பிறந்து வாழ்ந்து வளர்ந்து, வாழ்க்கையை அமைத்துக் கொண்ட இதே நாட்டில் இருப்பதே நடைமுறை சாத்தியமான தெரிவு என்பதே எமது முடிவாக இருந்தது. 

எங்கள் குடும்பங்களிடம் இருந்த "சிகப்பு பாஸ்போர்ட்"களை (இந்தியக் கடவுச்சீட்டுகளை) எப்போதோ அழித்தும் விட்டனர். கேள்வி எழுப்பப்படும் தருணங்களில்; நாங்கள் இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினர் தான் என்று கூறிக் கொள்வது வழக்கமாக இருந்தது. பிற் காலத்தில் அதிகக் கெடுபிடி இல்லாமல் இருந்தது. 

"எப்போதும் எந்த ஆவணங்களை நிரப்பும் போதும் இலங்கைத் தமிழர் என்றே நிரப்பு சரியா...?" என்று என் அப்பா என்னிடம் அடிக்கடி நினைவு படுத்திக்கொண்டே இருப்பார். நானும் அப்படித் தான் செய்து வந்திருக்கிறேன். 

இந்தச் சூழ்நிலையில் தான் இலங்கையில் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனவுக்கும் இடையில் 1987 யூலை 29 அன்று செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் இலங்கைக் குடியுரிமை இல்லாத இந்திய வம்சாவளியினர் இலங்கைக் குடிகள் அனுபவிப்பவற்றை அனுபவிக்கக்கூடிய வகையில் சில சட்ட ரீதியான ஏற்பாடுகள் அமுலுக்கு வந்தது. அதன் பிரகாரம் ஒரு பிரமாணப் பத்திரமொன்றை அந்தந்த மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் கையெழுத்துடன் பெற்று கடவுச் சீட்டையும் பெரும் வாய்ப்பு கைகூடியது. 

80களின் இறுதி என்று நினைக்கிறேன் அப்பா ஒரு நாள் என்னைக் கொழும்பு கொள்ளுபிட்டியிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான செல்லச்சாமியை சந்தித்து இந்த பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வந்தோம். அப்பா அப்போது எந்தளவு மகிழ்ச்சியுடன் அங்கிருந்து வெளியே வந்தார் என்பது எனக்கு இன்னமும் நினைவில் உண்டு. இந்த வழியில் தான் நானும் கடவுச் சீட்டையும் பெற்றுக்கொண்டேன். இதன் அர்த்தம் உத்தியோகப்பூர்வமாகப் பூரண பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்டேன் என்கிற அர்த்தமல்ல. ஆனால் 80 களுக்குப் பின் இந்திய வம்சாவளியினருக்குக் குடியுரிமை குறித்த கெடுபிடிகள் நிறையவே குறைந்திருந்தது. எனவே பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கப் போய் அடையாளம் காட்டிக்கொள்வதன் மூலம் புதிய சிக்கல்களில் மாட்டிக்கொள்வோமோ என்கிற அச்சத்தின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் அதற்கான முயற்சிகளைப் பலர் செய்துகொண்டதில்லை. நாங்களும் முயற்சிக்கவில்லை. 

என்னை முதன் முறையாக ஒரு நாடு; நீ இனி எங்கள் நாட்டுப் பிரஜை, இப்போதிலிருந்து உனக்கும் ஒரு நாடு இருக்கிறது, நீயும் இந்த நாட்டின் சகல பிரஜைகளைப் போலவே சமமான சக பிரஜை என்று எனக்கு அறிவிக்கும் போது எனக்கு வயது 39 ஆகியிருந்தது. அந்த உரிமையை எனக்கு நோர்வே என்கிற ஒரு வெள்ளைக்கார நாடு தரும் வரை நான் "நாடற்றவனே". எனக்கு அரசியல் தஞ்சம் கொடுத்து, என்னை ஆதரித்து, எனக்கு எனது நாட்டிலிருந்து எனது குடும்பத்தை அழைக்கவும், எனது அடுத்த சந்ததி நோர்வேஜியராக பிறக்கவும் அந்த நாடு வாய்ப்பைத் தந்தது. 

மூன்று தலைமுறையாக இலங்கையில் பிறந்து வாழ்ந்தும் தராத குடியுரிமையை; நாட்டுக்கு வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே குடியுரிமையைத் தந்துவிட்ட நோர்வே நாட்டின் பெருந்தன்மையையும், மனிதாபிமான உணர்வையும் - ஜனநாயக நடத்தையையும் நான் கொண்டாடவே செய்கிறேன். 
1952 இல் என் பூட்டியின் மரணத்தின் போது எடுக்கப்பட்டது. வலது புறம் என் அப்பாவை தூக்கி வைத்திருப்பவர் என் பெரியப்பா முத்துவீரன். எங்கள் குடும்பம் இன்னமும் இந்த குடியிருப்பில் தான் வாழ்கிறார்கள். கொழும்பு - ஸ்ரீ குணானந்த மாவத்தை. அப்போது அந்த ஒழுங்கையில் 12 அருந்ததியர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தார்கள் சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தினால் நாடு கடத்தப்பட்டதானாலும்   சாதிய தப்பி ஓடலின்  காரணமாகவும் இன்று 2 குடும்பங்கள் மட்டுமே எஞ்சிருக்கிறார்கள்.
0-0-0 

2011ஆம் ஆண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக நாட்டுக்குத் திரும்ப முடியாதவனாக நோர்வேயில் வாழ்ந்து வந்த காலம் அது. கொழும்பில் உள்ள எங்கள் வீட்டுக்கு ஒரு இளைஞன் கதவைத் தட்டினான். எனது அம்மா வெளியே வந்து  

"நீங்க யாரு தம்பி?" என்று கேட்டார். 

சித்தி தெரியலயா சித்தி... நான் முத்துகிருஷ்ணன் உங்க அக்கா மகன். என்று கதறிக்கொண்டே கிட்ட நெருங்க. அம்மாவும் அணைத்தபடி அழுதபடி அந்த அறிமுகம் நடந்தது. 

ஆம். எங்கள் சித்தி. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் காரணமாக யாருக்கும் தெரியாமல் காணாமலாக்கப்பட்டவர்களில் ஒருவர். அவரின் இளம் வயதில் அவர் இந்தியாவுக்கு பிடித்தனுப்பட்டபோது குடும்பத்தினர் எவருக்கும் தெரியப்படுத்தியிருக்கவில்லை. காணாமல் போன அவரைப் பற்றி தேடிக்கொண்டிருந்த போது ஒரு சில மாதங்களின் பின்னர் அவர் ஊர் வந்து சேர்ந்துவிட்டதாகத் தமிழகத்திலிருந்து உறவினர்கள் தகவல் அனுப்பியிருந்தார்கள். தமிழகத்தை அறியாத எங்கள் சித்தி இலங்கையில் இருந்த குடும்பத்துடனான உறவு அறுக்கப்பட்டு தனியாக அங்கே சிக்கிக்கொண்டார். அங்கேயே பின்னர் திருமணமாகி குடும்பமானார். அப்படி தொப்புள்கொடி உறவு அறுக்கப்பட்டு பிரித்தெடுக்கப்பட்ட என் சித்தியின் மகன் தான் முத்துக் கிருஷ்ணன். 

கொழும்பில் தொடங்கப்பட்டிருந்த தமிழக "சூரியா ஹோட்டல்"இல் பணி புரிவதற்காக முத்து கிருஷ்ணன் இலங்கை வந்திருந்தார். எங்கள் விலாசத்தைத் தேடி ஒரு வழியாக வீட்டைக் கண்டுபிடித்து வந்திருந்தார். 2012 ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்த வேளை முதற்தடவையாக என் தம்பி முத்துக் கிருஷ்ணனைச் சந்தித்து கண்ணீர் மல்க ஆரத்தழுவிக் கொண்டேன். 

ஒட்டுமொத்த இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்காக நான் என்னை இடதுசாரி செயற்பாட்டாளனாக 90களில் ஆக்கிக்கொண்டேன். அதுபோல இலங்கையில் தமிழீழ மக்களின் விடுதலை சாத்தியமில்லாமல் இலங்கையில் ஒரு புரட்சிகர மாற்றமும் சாத்தியமில்லை என்று நம்பினேன். அதனாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டு இரகசிய, தலைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போராட்டத்தில் பொறுப்புகளையும் வகித்திருக்கிறேன். 

எதிர்காலத் தமிழீழத்தில் குடியேற விரும்பும் மலையக மக்கள் அனைவரும் வரவேற்கப்படுவார்கள் என்று எனது இயக்கம் உள்ளிட்ட அனைத்து விடுதலை இயக்கங்களும் கூறின. தமிழீழ விடுதலை இயக்கத்தில் என்னை இணைத்துக் கொள்வதென்பது சக தேசமொன்று ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போது; சமத்துவத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கும் எவராலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது, எதிர்காலத் தமிழீழத்துக்காக என்னை இப்போது கொடுத்தாலும் அங்கே நான் வந்து குடியேறப்போவதில்லை. இலங்கையே எனது நாடு அடுத்த போராட்டத்தில் எனது பங்களிப்பு தொடரும் என்றே என் சக போராளிகளுக்குக் கூறிக்கொண்டேன். 

இப்படியெல்லாம் கூறிக்கொண்ட காலத்தில் நான் பூரண பிரஜை அல்லாத ஒரு நாடற்றவனாகவே இருந்திருக்கிறேன் என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

நோர்வே எனக்கு ஒரு கையால் குடியுரிமையைத் தந்துவிட்டு மறு கையால் உன்னிடம் வைத்திருந்த முன்னைய குடியுரிமைத் தா என்று என்று கேட்டபோது என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை என்கிற உண்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. என் முன்னைய குடியுரிமையை இயல்பாகவே நான் இழப்பதாக அவர்கள் கருதிக்கொண்டதால் அவர்களுக்கு அது அவசியப்படவுமில்லை. அக்கறைப்படவுமில்லை. 

ஆனால் என்னிடம் இருந்திராத ஒரு குடியுரிமையை இழக்கப்போவதைப் பற்றிய அந்த அறிவிப்பு என்னை உலுக்கவே செய்தது. என் நாட்டிலிருந்து வேரோடு பிடுங்குவதான ஒரு உணர்வு எனக்கு இருக்கவே செய்தது. 

இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த தருணம் வரை எனது உடல் இங்கேயும் உயிர் எனக்கு உரித்தில்லாத என் தேசத்திலும் தான் இருந்துகொண்டிருக்கிறது. என் சக ஒடுக்கப்படும் மக்களுக்காகவே நிதமும் நினைத்தபடி இந்த எழுத்தாயுதத்தை இங்கிருந்து தவமாகச் செய்து கொண்டிருக்கிறேன். 

பிற்குறிப்பு 
“2009 ஆம் ஆண்டின் 5ஆம் இழக்க நாடற்ற ஆட்களுக்குப் பிரசாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) திருத்தச் சட்டம்” என்கிற சட்டம் 2009 பெப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தை முன்மொழிவதில் பிரதான பாத்திரத்தை ஜே.வி.பி ஆற்றியிருந்தது. குறிப்பாக அப்போது ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மலையகத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சந்திரசேகர் இதனை நிறைவேற்றுவதில் முக்கிய வகிபாகத்தை ஆற்றியிருந்தார்.
1971 ஜே.வி.பி கிளர்ச்சி காலத்தில் போது இந்திய வம்சாவழியினரை இந்தியாவின் ஐந்தாம் படை என்று வர்ணித்து இந்திய வம்சாவளியினருக்கு எ
திரான ஒரு போக்கைக் கொண்டிருந்த ஜே.வி.பி 2009 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம் பிராயச்சித்தத்தைத் தேடிக்கொண்டது என்றே கூறவேண்டும். இந்தச் சட்டத்தின் படி அதுவரை நாடற்றவர்களாக இருந்த அனைத்து இந்திய வம்சாவளியினரும் இலங்கைப் பிரஜைகள் ஆக்கப்பட்டனர்.
மேலும் இந்தச் சட்டத்தின் மூலம் இந்திய அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியினர் பலரும் கூட இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெரும் வாய்ப்பைப் பெற்றார்கள். அவர்கள் இலங்கை திரும்பி இலங்கையர்களாக வாழ வழிவகுக்கப்பட்டது. தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வந்த 80,000 இந்திய வம்சாவளியினரில் 28,500 இலங்கை பிரஜாவுரிமை பெற விரும்பியோருக்கு விமோசனம் உண்டானது.
நன்றி - காக்கைச் சிறகினிலே
(இக்கட்டுரை என்.சரவணனின் "கள்ளத்தோணி" என்கிற நூலிலும் இடம்பெற்ற கட்டுரை)

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates