- மத்திய மாகாணத்தில் 240
- சப்ரகமுவ மாகாணத்தில் 230
- ஊவா மாகாணத்தில் 158
நாடுமுழுவதும் தற்போது 13 வருட கட்டாயக் கல்வியானது நடைமுறையில் இருந்துவருவதால் சகலருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் நாடுமுவதுமுள்ள பாடசாலைகளுக்கு வளங்களை பகிர்ந்தளிப்பதில் சமமான முறை பின்பற்றப்படவில்லையென்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் 50 மாணவர்களுக்குக் குறைந்த 1486 பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக 2017 ஆம் ஆண்டின் கல்வியமைச்சின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மூடப்பட்டுள்ள பாடசாலை விபரங்களை கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினை பயன்படுத்தி கல்வி அமைச்சிடம் கோரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் (ED/RTI/1907/316) நாடளாவிய ரீதியில் 50 மாணவர்களுக்கும் குறைந்த 1444 பாடசாலைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளில் 275 பாடசாலைகள் வட மாகாணத்திலும் 240 பாடசாலைகள் மத்திய மாகாணத்திலும் 230 பாடசாலைகள் சப்ரகமுவ மாகாணத்திலும் 158 பாடசாலைகள் ஊவா மாகாணத்திலும் மாவட்ட அடிப்படையில் ஆகக்கூடுதலாக கேகாலை மாவட்டத்தில் 119 பாடசாலைகள் மூடப்படவேண்டிய நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
அவ்வாறு அதிகமாக மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள பாடசாலைகள் பெருந்தோட்ட மாணவர்களை அதிகமாக கொண்ட பாடசாலைகளாகும். அதனால் புதிய பாடசாலைகள் அவர்களுக்கு பொருத்தமான சூழலில் காணப்படுமா என்பதும் ஆராயப்படவேண்டிய விடயமாகும். தற்போது நாடளாவிய ரீதியில் 10,194 பாடசாலைகள் காணப்படுவதுடன், இவற்றில் மத்திய மாகாணத்தில் 1519 பாடசாலைகளும் சப்ரகமுவ மாகாணத்தில் 1129 பாடசாலைகளும் ஊவா மாகாணத்தில் 900 பாடசாலைகளும் காணப்படுகின்றன. 2018 ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியில் 101 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் 50 மாணவர்களுக்கும் குறைவான 1458 பாடசாலைகள் காணப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இலங்கையில் நிரந்தரமாக மூடப்பட்ட பாடசாலைகள் தொடர்பான விபரங்கள் கல்வி அமைச்சிடம் இல்லையென தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமான கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டிருந்தன. ஆனால் பாடசாலைகள் நிரந்தரமாக மூடப்படுவதற்கு மாணவர்களின் வீழ்ச்சி, நாட்டில் ஏற்படுகின்ற குழப்ப நிலைகள், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள், நகர்புற பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்லுதல், தரம் ஒன்று அனுமதிக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறாமை, பாடசாலைகளை ஒருங்கிணைத்தல் என்பனவே காரணமாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல 50 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட 1444 பாடசாலைகள் காணப்படுவதாகவும் அப்பாடசாலைகளில் 9171 பேர் அதிபர் மற்றும் ஆசிரியர்களாக கடமையாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மூடப்படுகின்ற பாடசாலைகளிலுள்ள மாணவர்கள் கல்விக்கற்கக்கூடிய புதிய பாடசாலைகளை வலயக்கல்விப்பணிப்பாளர் பெற்றுக்கொடுக்கவேண்டுமெனவும் மூடப்படும் பாடசாலைக்கட்டிடங்களை மூன்று மாதங்களுக்குள் வலயக் கல்விப்பணிமனையானது இன்னுமொரு வலய கல்வி அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது 353 தேசிய பாடசாலைகளும் 9841 மாகாண பாடசாலைகளும் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளுக்கிடையில் வளங்கள் சமமாக பகிரப்படாமையும் தூர கடப்பிரதேசங்களாகவும் காணப்படுகின்றமை, கட்டாய கல்வி தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாமை, வறுமை, மாணவர்களை பரீட்சைகளுக்குத் தோற்றவிடாமல் தடுத்தல் போன்ற பல காரணிகள் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வதில் தடையை ஏற்படுத்துகின்றன. அதேவேளை ஒரு ஆசிரியருடன் இயங்குகின்ற 54 பாடசாலைகளும் இரண்டு ஆசிரியர்களை கொண்ட 97 பாடசாலைகளும் 3 5 ஆசிரியர்களை கொண்ட 723 பாடசாலைகளும் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
வரவு செலவுத்திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் கல்விக்கு 6 வீதம் நிதி ஒதுக்கிடப்படுவதாக கூறப்பட்டாலும் 1.7 வீதமே ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. அதேவேளை ஒதுக்கப்படும் நிதியும் பாடசாலைகளுக்கு சென்றடையாத நிலை மற்றும் செலவளிக்கப்படாத நிதி என்பவையும் மற்றுமொரு பிரச்சினையாக இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 75 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில் அவற்றில் 36 பில்லியனே செலவழிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 83 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில் அவற்றில் 40 பில்லியனே செலவழிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி 103 பில்லியன்களாக இருக்கின்ற நிலையில் அவற்றில் 76 பில்லியனே செலவழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்தினால்கூட பாடசாலைகளின் வளங்களை சீராக்கி தரமுயர்த்த முடிவதுடன் மாணவர்களின் தேவைகளையும் நிறைவேற்றமுடியும் இதனால் பாடசாலைகளை அநாவசியமாக மூட வேண்டிய தேவை ஏற்படாது.
அதேவேளை இலங்கையில் விஞ்ஞான பாடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களில் 45 வீதமானவர்களே அதற்கான தகுதியை பெற்றவர்களெனவும் கணித ஆசிரியர்களில் 15 வீதமானோரே அதற்கான தகுதியை பெற்றவர்களாகவும் புள்ளிவிபரங்களில் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஒருவேளை இதனால்கூட மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியிருக்கலாம் அல்லது வேறு பாடசாலைகளை தெரிவு செய்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகின்றது.
இலங்கையில் அடிமட்ட மக்களில் 10 வீதமானவர்கள் மட்டுமே உயர்கல்வியை தொடர்வதாகவும் உயரிய சமூகத்தில் 73 வீதமானோர் உயர் கல்வியை பெறுவதாகவும் தெரிவிக்கப்படுவதுடன் உயர் கல்வி கற்கும் ஒரு மாணவருக்கு ஒரு வருடத்துக்கு 12,500 ரூபா பிரத்தியேக வகுப்பிற்காக ஒதுக்கப்பட வேண்டிய தேவை இலங்கையில் இருக்கின்றது. கல்விக்காக சாதாரண மாணவர்கள் கடுமையாக போராட வேண்டிய தேவை இருக்கின்றது. அதனால் பாடசாலைக்கான மாணவர்களின் வருகை குறைவதும் பாடசாலைகளை மூடவேண்டியதும் தேவையாக மாறிவிடுகின்றது. எனவே இவ்வாறான அசாதாரண சூழ்நிலைகளிலிருந்து மாணவர்களையும் கல்வியையும் விடுவிக்கவேண்டிய தேவை இருக்கின்றது.
ஒருசில பாடசாலைகள் நிரந்தரமாக மூடப்படுவதனால் வேறு தரமான பாடசாலைகள் கிடைக்குமென பலரும் கருத முடியும். ஆனால் தற்போது மூடப்படும் அபாயத்தில் இருக்கும் பாடசாலைகள் தூர பிரதேசங்களிலோ அல்லது கஷ்டப் பிரதேசங்களிலோ இருந்தால் புதிதாக கிடைக்கும் பாடசாலைகள் இன்னும் தூரமாகவே இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. எனவே அவை இன்னும் மாணவர்களை சிக்கலுக்குள் கொண்டுசெல்ல வாய்ப்பிருக்கின்றது. எனவே இவை தொடர்பாக கல்வி அமைச்சும் மாகாண கல்வி அமைச்சும் நடவடிக்கையெடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதுடன் பாடசாலைகளையும் அவற்றின் வளங்களையும் பாதுகாப்பதற்கு கல்விச் சமூகமும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...