கள்ளத்தோணி என்கிற இந்த நூல், மலையக மக்களின் துயரம் தோய்ந்த வாழ்வியலைப் பதிவு செய்து வெளியாகியுள்ள நூல்களிலேயே தனிச்சிறப்பு வாய்ந்தது எனக் குறிப்பிட முடியும்.
நூலைப் பற்றிச் சொல்வதற்கு முன்னர் நூலாசிரியரைப் பற்றியும் கொஞ்சம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
நூலாசிரியர் சரவணன், ஆழ்ந்த படிப்பறியும் தோய்ந்த ஆய்வியல் சிந்தனையும் கொண்டவர். நூறாண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறுகளையும், சான்றாதாரங்களையும், கிடைத்தற்கரிய ஆவணங்களையும் தேடித்தேடிச் சேகரித்துத் தருவதில் சளைக்காத ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். மலையக மக்களின் வரலாற்றையும் அவர்கள் எதிர்கொண்ட வாழ்வியல் துயரங்களையும் குறித்து காக்கை இதழில் அவர் தொடர்ந்து எழுதிவரும் பதிவுகள் புதிய வெளிச்சம் பாய்ச்சக் கூடியவை. வாதப் பிரதிவாதங்களை முன்வைத்து அவர் சொல்லாடல் செய்யும் பாங்கு கிறுகிறுக்க வைக்கும். ஈழம் குறித்தும் ஈழப்போராட்டம் குறித்தும், போராட்ட வாழ்வியலில் மலையக மக்களின் வரலாறு குறித்தும் எழுதி வரும் இளம் எழுத்தாளர்களில் கிழக்கின் தொடுவானமாக உயர்ந்து நிற்பவர் மட்டுமல்ல. காக்கைக்குக் கிடைத்த அரிய செல்வம் சரவணன்.
இவர் எழுதியுள்ள கள்ளத்தோணி என்கிற இந்நூலில், "எந்த சிங்கள பௌத்தத்தின் பேரால் ஏனையோரை அந்நியர்கள் என்கிறார்களோ அந்த சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் இலங்கையுடன் எந்தவிதப் பூர்வீகத் தொடர்புமில்லை. பௌத்தமும் இந்தியாவில் இருந்துதான் வந்தது. சிங்கள மொழி உருவாக்கத்தின் உள்ளடக்கமாக இருக்கும் பாளியும், சமஸ்கிருதமும் இந்தியாவில் இருந்துதான் வந்தது. சிங்கள இனமும் இந்தியாவில் இருந்துதான் வந்தது என்பதை சிங்கள பௌத்த புனித வரலாற்று நூல்களில் இருந்தே முன்வைக்க முடியும்" என நெஞ்சை நிமிர்த்துகிற போது மலையக மக்களின் வாழ்வுரிமையையும் வரலாற்றுத் தொடர்ச்சியையும் சொடுக்கிக் காட்டுகிறார்.
மாதத்தில் 26 நாட்கள் பணி செய்யாவிட்டால் மொத்த மாதச் சம்பளமும் ரத்து செய்யப்படும் என்றிருந்த 1930 களில், சுதந்திரமும் நீதியும் நிறத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது’ என இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களிடையே முழங்கி அவர்களிடையே விழிப்புணர்ச்சி மிக்க கருத்துகளைப் பரப்பி வந்த இடதுசாரி இயக்கச் சிந்தனையாளரான ‘பிரஸ் கேர்டல்’ பற்றி விரிவான பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, நாட்டு மக்களிடையே ப்ரஸ்கேர்டல் குழப்பத்தை விளைவிப்பதாகக் கருதி நாடு கடத்த முடிவெடுத்து அரச சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 34 உறுப்பினர்களில் 27 பேர் எதிர்த்தும் 7 பேர் ஆதரித்தும் வாக்களித்த விவரத்தைச் சொல்லி அந்த ஏழுபேரில் ஒருவர் ஜி.ஜி. பொன்னம்பலம் என்பதை அம்பலப்படுத்தியுள்ளார்.
காலனித்துவத்தின் காலத்தில் இலங்கை வாழ் தமிழர்களை 1880 வரை மலபாரிகள் என்றே அழைத்து வந்ததாக The Blue book of Ceylon என்கிற இலங்கையின் ஆவணத்தை மேற்கோள்காட்டி இந்தியாவிலிருந்து தமிழர்கள் தோட்டத் தொழிலுக்காக இறக்குமதி செய்த காலத்தில் அவர்களை அடையாளப்படுத்த "மலபார் கூலிகள்" என்று அழைத்ததையும் சுட்டி, தோட்டத் தொழிலைத் தவிர துறைமுகம், ரயில் சேவை, சுத்திகரிப்புத் தொழில் போன்ற பணிகளுக்கும் இந்தியர்களே இறக்கப்பட்டதால் "இந்தியக் கூலிகள்" என்று பெயரிட்டு அழைத்ததையும் அவர்களுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள்கூட கூலிச் சட்டங்கள் என்றே அழைக்கப்பட்டதையும் மிக அழகாக விவரித்துள்ளார்.
1881 இல் வெளியான குடித்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில்தான் இறக்குமதி செய்யப்பட்ட தமிழர்களை "இந்தியத்தமிழர்" என்று அரசாங்கம் பதிவு செய்துள்ளது. "தோட்டகாட்டான்", "கள்ளத்தோணி" என்கிற இழிச்சொற்களால் அழைக்கப்பட்டு வந்த இந்திய வம்சாவளித் தமிழர்களின் சனத்தொகை இலங்கைவாழ் தமிழர்களின் சனத்தொகையைவிட அதிகரித்த காலத்தில் தான் அதாவது ஒரு நூற்றாண்டு கடந்த பின்னர்தான் இந்திய வம்சாவளியினர் என்கிற பெயர் பெற முடிந்தது என்றும் சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டை விட்டுத் துரத்தும் அவலம் நேரிட்ட போதுதான் இனி இந்தியாவுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையெனக்கூறி "மலையகத் தமிழர்" என்ற அடையாளத்தை நிறுவிக் கொண்டதாகவும் இந்த நிலையில்தான் இலங்கையில் சிங்களர்கள், தமிழர்கள், இசுலாமியர்கள் போல மலையக மக்களும் தனியான தேசிய இனம் என்கிற கருத்தாக்கம் கடந்த கால் நூற்றாண்டு காலமாக மலையக மக்களிடையே பேசுபொருளாகி இருப்பதாகவும் பதிவிட்டிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்குரியது.
1983 ஆம் ஆண்டு ஜுலை கலவரத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்கள் பலர் இலங்கையில் பல பகுதிகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள். 1983 கலவரத்திற்காக மலையகத்தை அச்சுறுத்தியதின் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து அந்த மக்களை விலகி இருக்கச் செய்துவிட முடியும் என சிங்களப் பேரினவாதம் கருதியது என்றும் ஆனாலும் கணிசமானோர் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈழப்போராட்டக்களத்தில் நின்றதைத் தடுக்க இயலவில்லை என்றும் செய்துள்ள பதிவு முக்கியத்துவம் வாய்ந்த பதிவு.
நாடற்றவர்களாகக் கணக்கிடப்பட்ட 9,75,000 பேரில் 5,25,000 மேல் இந்தியாவும் 3,00,000 பேருக்கு இலங்கையும் குடியுரிமை வழங்குவது மீதமுள்ள 1,50,000 லட்சம் பேருக்கு பிற்பாடு முடிவெடுப்பது என்பது தான் சிரிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் முக்கியச்சாரம். அதன் மூலம் உயிரும் உணர்வும் மிக்க மனிதர்கள் வெறும் எண்களாகப் பார்க்கப்பட்டதாகவும் 1967 முதல் அமலாகத் தொடர்ந்த இந்த ஒப்பந்தம் இந்தியக் குடியுரிமை பெறுவோர், இலங்கைக் குடியுரிமை பெறுவோர், நாடற்றவர்கள் என்று முக்கூறாகப் பிரித்து வீசியதாகவும் துயரம் தோய்ந்த பதிவு ஒன்றையும் இந்நூலில் தந்திருக்கிறார்.
1947 ஆம் ஆண்டின் குடியுரிமை பறிப்பு, 1948 ஆம் ஆண்டின் வாக்குரிமை பறிப்பு, 1964 ஆம் ஆண்டின் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், 1974 ஆம் ஆண்டின் சிரிமா - இந்திரா ஒப்பந்தம் எல்லாமே மலையக மக்களுக்கு தீராத் துயரத்தையும் ஆறாத வடுவையும் ஏற்படுத்தியது என்பதை கனத்த இதயத்தோடு சுட்டிக் காட்டுகிறார்.
1974 மே 18இல் தார் பாலைவனத்திலுள்ள பொக்ரைன் என்னுமிடத்தில் அணுகுண்டு பரிசோதனை செய்த இந்தியாவைத் தனிமைப்படுத்த பாகிஸ்தான் பல்வேறு ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்றாக, இந்தியாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானத்தை முறியடிக்க உதவிய இலங்கைக்கு பிரதி உபகாரமாகத்தான் கச்சத்தீவு இந்தியாவால் தாரை வார்க்கப்பட்டது என்பதையும் ஆவண ஆதாரங்களோடு உடைத்திருக்கிறார்.
சிங்களத்தவரின் கொடூரங்களையும் மலையகப் பெருவெளியின் புவியியலையும் தொட்டுக்காட்டி இந்நூலின் வழியே ஒரு புதிய சிந்தனையை விதைக்க முயன்றுள்ளார் நூலாசிரியர். வரலாற்றுத் தரவுகளை சிங்களர்கள் கட்டிக்காக்கும் ஆவணங்களிலிருந்தே வெளிப்படுத்த முயன்றுள்ளதன் மூலம் சிங்களர்களின் கட்டுக்கதைகளை சுக்குநூறாக உடைத்தெறிகிறார்.
காலத்தை நிறுத்திக் கேள்வி கேட்கும் வலிமையும் வல்லமையும் கொண்ட சரவணனின் எழுத்து வல்லூறுகளின் உறக்கத்தைத் தொலைக்கும்.
தோழமையுடன்,
வி. முத்தையா
(ஆசிரியர் - காக்கைச் சிறகினிலே)
14-12-2019
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...