19ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய சுதேசிய குட்டிமுதலாளித்துவ வர்க்கம் அதுவரை உள்நாட்டில் காலனித்துவ சீர்த்திருத்தமே போதும் சுதந்திரம் தேவையற்றது என்று எண்ணிக்கொண்டிருந்தது. தமது வர்க்க நலன்களை சமரசத்துடன் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் பேணிக்கொள்ள முடியும் என்று நம்பியிருந்தார்கள். அந்த நம்பிக்கையை எல்லாம் தவிடுபொடியாக்கியது 1915 கலவர நிகழ்வுகள்.
1915 கலவரமும் அதன் பின் விளைவுகளும் உள்ளூர் அரசியல் தலைவர்களின் அரசியல் அசட்டைத்தனத்துக்கு கிடைத்த பெருத்த அடி. இந்த படித்த மேற்தட்டு பூர்ஷுவா வர்க்கம் இன, மத, அரசியல், சாதி பேதமின்றி ஆங்கிலேயர்களின் இராணுவச் சட்ட நடவடிக்கைகளையும், அதன் தண்டனைகளையும் எதிர்த்து நின்றதுடன் பரஸ்பரம் ஆதரவையும், உதவிகளையும் செய்து உணர்வுபூர்வமாக கைகோர்த்துக்கொண்டார்கள். இந்த கலவரம் அனைவரையும் இலங்கையர்களாக ஒன்றிணைவதன் அவசியத்தை உண்டுபண்ணியது.
இதுபோலவே 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் அமிர்தரஸில் ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் ஆங்கில அரசால் மிலேச்சத்தனமாக மேற்கொண்டதில் சுதந்திரப் போராட்டத்திற்கான அணிதிரள்வு நாடளாவியரீதியில் நிகழ்ந்தது. இந்திய தேசிய இயக்கத்துக்கு அது எப்படி உந்துதலைக் கொடுத்ததோ இலங்கையில் 1915 பெரும் உந்துதலைக் கொடுத்திருந்தது.
மேலும் இலங்கைத் தீவு முழுமையாக காலனித்துவத்தின் கட்டுப்பாட்டில் 1815 ஆம் ஆண்டு போனதன் நூற்றாண்டும் 1915 இல் நினைவு கூற உந்தப்பட்டனர்.
முதற் தடவையாக இனத்தலைமைகள் ஐக்கியப்பட்டன. இலங்கையின் அரசியல் எதிர்காலத்துக்காக ஒன்றுபட்ட தேசிய அரசியல் இயக்கத்தின் தேவையை வலுவாக உணர்த்தியது.
சேர் பொன் அருணாச்சலம் சட்ட நிரூபண சபையில் சேர் பொன் இராமநாதனுக்குப் பின் அங்கத்துவம் வகித்தார். அரசாங்க சேவையில் பணியாற்றும் காலத்திலேயே சுயராஜ்ய உணர்வால் உந்தப்பெற்றார். சிவில் சேவையிலிருந்து அவர் 1913 ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்ற பின் அரசியல், சமூக, கல்விப் பண்பாட்டுத் துறைகளிலே ஈடுபட்டார். 1915 ஆம் ஆண்டு அவர் இலங்கை சமூக சேவை கழகம் (Ceylon Social Service League) என்கிற அமைப்பை நிறுவினார்.
இலங்கை தேசிய காங்கிரஸ்
1917 ஆம் ஆண்டு அவர் இலங்கை சீர்திருத்தக் கழகத்தை (Ceylon Reform League) ஆரம்பித்தார். இலங்கை சட்ட நூல் நிலையத்தில் நிகழ்ந்த அதற்கான கூட்டத்தில் 19 உறுப்பினர்களால் (அதாவது 19 வழக்கறிஞர்களைக் கொண்ட) சீர்திருத்தக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. “எமது அரசியல் தேவை” என்கிற தலைப்பில் அருணாசலம் ஆற்றிய உரையில்..
“இலங்கை பிச்சை கேட்கும் வரிய நாடல்ல எமது பாரம்பரிய சொத்தைத் தான் கேட்கிறோம்” என்றார் (02.04.1917)
1919 ஆம் ஆண்டு இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress - CNC) எனும் இயக்கத்தை அமைத்துக் கொள்வதற்காக பின்வரும் முக்கிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்தன
- இலங்கை தேசிய சங்கம் (Ceylon National Association).
- இலங்கை சீர்திருத்தச் சங்கம் (Ceylon Reform League)
- யாழ்ப்பாண சங்கம் (Jaffna Association)
இதில் இலங்கை தேசிய சங்கம் 1880 இல் சேர். பொன் இராமநாதன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் அதன் முதலாவது தலைவராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். இலங்கைக்கான அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. அரசியல் சீர்திருத்த கோரிக்கைகளுக்காக அவர் லண்டனுக்கும் இந்த அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி பயணம் செய்திருக்கிறார். இடையில் நீண்ட காலம் செயலற்று இருந்தது பின்னர் 1915 கலவரத்தைத் தொடர்ந்து அது மீண்டும் களத்தில் இறங்கி அரசியல் பணிகளை முன்னெடுக்கத் தொடங்கியது.
இலங்கை தேசிய காங்கிரசை ஆரம்பிப்பதில் முன்னின்ற எப்,ஆர்,சேனநாயக்க, ஜேம்ஸ் பீரிஸ் போன்றோர் இனரீதியிலான பிரதிநிதித்துவத்தை நீக்குவதையும் தமது நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். தம்முடன் இணைந்த யாழ்ப்பாண சங்கம் மாத்திரம் இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண சங்கம் அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் குடியேற்ற நாடுகளின் மந்திரிக்கு “எந்த சந்தர்ப்பத்திலும் இன ரீதியிலான பிரதிநிதித்துவம் நீக்கப்படலாகாது” என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
1905ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண சங்கம் வடக்கு பகுதிகளில் ஆங்கிலம் கற்ற யாழ்ப்பாணத் தமிழர்களைக் கொண்டு இயங்கி வந்தது.
15.12.1917 இல் தேசிய காங்கிரசை உருவாக்குவதற்காக கூடிய முதாலவது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 144 பேரில் 17 பேர் மட்டுமே தமிழர்கள். அதுவும் யாழ்ப்பாண சங்கத்தின் பிரதிநிதிகள் இருவர் மாத்திரமே. இன ரீதியான பிரதிநிதித்துவம் நீக்கப்படக்கூடாது என்கிற அவர்களின் கோரிக்கையை பெரும்பாலான பெரும்பான்மை சிங்களவர்கள் எதிர்த்தனர். இந்த நிலைமையை சரி கட்டுவதற்கு அருணாசலத்தை அணுகினார்கள்.
தமிழர்களுக்கு செய்த துரோகம்
இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் பீரிஸ், இலங்கை சீர்திருத்தக் கழகத் தலைவர் ஈ.ஜே.சமரவிக்கிரம, யாழ்பாண சங்கத் தலைவர் ஏ.சபாபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றை ஏற்படுத்தினார் அருணாசலம். அந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத நிலையில் அருணாசலம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைக்குள் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பேணுவது எப்படி என்று ஆராய்ந்தார். அதன் விளைவாக மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்க சிங்களத் தலைவர்கள் ஒப்புக் கொண்டார்கள். இதன் அடிப்படையில் தான் இலங்கை தேசிய காங்கிரஸ் உதயம் பெற்றது. அந்த வகையில் இலங்கை சீர்திருத்தக் கழகத்தின் ஆயுள் இரண்டே வருடங்கள் தான்.
07.12.1918 அருணாசலத்துக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ஜேம்ஸ் பீரிசும், சமரவிக்கிரமவும் அந்த வாக்குறுதியை அளித்தார்கள். இக்கடிதம் சேர் பொன் இராமநாதனின் சரிதத்தை எழுதிய எம்.வைத்திலங்கத்தின் நூலில் “சேர் பொன் அருணாச்சலம்” பற்றிய தனியான அத்தியாயத்தில் முழுமையாக இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. அருணாச்சலத்துக்கு எழுதிய கடிதத்தின் முடிவு இப்படி இருக்கிறது.
“...இலங்கை தேசிய சங்கம் மற்றும் இலங்கை சீர்திருத்த கழகம் என்பவற்றின் தலைவர்கள் என்ற வகையில், யாழ்ப்பாணச் சங்கம் முன்வைக்கும் திட்டத்தையும் நாங்கள் அறிவோம், அந்த யோசனைகளை எந்தவகையிலும் எமது கொள்கைகளுக்கு முரணாக இல்லை. யாழ்ப்பாண சங்கத்தின் யோசனைகளை எதுவும் நியாயமற்றது என்று நாங்கள் கருதவில்லை. மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதியாக ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மேல் மாகாணத்தில் தமிழர்கள் நீண்டகாலமாகவே குறிப்பிடத்தக்களவு வாக்காளர்களாக இருந்து வருகிறார்கள்.
யாழ்ப்பாணச் சங்கத்தின் இந்த தீர்மானத்தை எந்த மாற்றமும் இன்றி நாங்கள் ஏற்றுக்கொள்வதோடு இது தொடர்பாக மேலதிகமாக இந்திய, பறங்கி, ஐரோப்பிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பை எங்களிடம் விட்டுவிடும்படியும் பரிந்துரைக்கிறோம்.”
இங்ஙனம்
கையெழுத்து – ஜேம்ஸ் பீரிஸ் (தலைவர் – இலங்கை தேசிய சங்கம்)
கையெழுத்து- ஈ.ஜே.சமரவிக்கிரம (தலைவர் – இலங்கை சீர்திருத்தக் கழகம்)
அதே டிசம்பர் ஏழாம் திகதி அருணாசலம் அச்செய்தியை சபாபதிக்கு வேகமாக அறிவித்தார்.
“...ஜேம்ஸ் பீரிசும், ஈ.ஜே.சமவிக்கிரவும் உத்தரவாதம் அளித்திருக்கிறார்கள்... வடக்குக்கு மூன்று, கிழக்குக்கு இரண்டு, மேல் மாகாணத்துக்கு ஒன்று என்கிற வகையில் அவர்கள் அந்த உத்தரவாதத்தை அளித்திருகிறார்கள்... மேல் மாகாணத்தில் இந்தியத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த அரசாங்கம் நிச்சயம் வழிகளை ஏற்படுத்தும்... நமது சிங்கள நண்பர்கள் மேல்மாகாணத்தில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவக் கோரிக்கைக்கும் நிச்சயம் ஆதரவு வழங்குவார்கள்... முஸ்லிம்கள் அந்தக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்...
யாழ்ப்பாணத்திலிருந்து போதுமானளவு பிரதிநிதிகளுடன் நீங்களும் (சபாபதி), ஏ.கனகசபையும் இந்தத் தீவின் முக்கிய பொதுப் பிரச்சினையை தீர்ப்பதற்கான இந்த மாநாட்டில் கலந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 15ஆம் திகதி ஆளுநர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார் என்பதை நான் அறிவேன். நீங்களும் கனகசபையும் 14 பின்னேரமோ அல்லது 13ஆம் திகதி கூட்டத் தீர்மானங்களை நிறைவேற்றியதும் இரயில் ஏறி சென்றுவிடலாம்...”
இப்படிக்கு அருணாச்சலம்
ஜேம்ஸ் பீரிஸ், சமரவிக்கிரம ஆகியோர் கொடுத்த உத்தரவாதத்தை நம்பி அந்த உத்தரவாதத்தை அருணாச்சலம் யாழ்ப்பாணச் சங்கத்துக்கு வழங்குகிறார். இந்த உத்தரவாதங்களை நம்பி யாழ்ப்பாணச் சங்கம் தேசிய காங்கிரஸ் உருவாவதற்காக கைகோர்த்தது.
அந்த உறுதிமொழியின் பேரில் யாழ்ப்பாண சங்கமும் இன ரீதியிலான பிரதிநிதித்துவத்தைக் கைவிட்டு 13.12.1919 இல் நடந்த இலங்கை தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டது. அதன் தலைவராக அருணாசலம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையேற்றதும் ஆற்றிய முதலாவது உரையில் இப்படிக் குறிப்பிட்டார்.
“சிறுபான்மையினருக்கான சிறப்பு பிரதிநிதித்துவம் ஒரு தற்காலிக பயனை மட்டுமே வழங்கும் நான் நம்புகிறேன், இறுதியில் புதிய முறையின் நடைமுறையானது சிறுபான்மையினரையும் இந்த முழுத் தீவையும் ஒரே தேர்தல் தொகுதியாகக் கருதி தீவினதும் பொது நலனுக்காக உழைப்பாளர்கள் என்று நம்புகிறேன்....”
துரதிர்டவசமாக குறுகிய காலத்தில் யாழ்ப்பாணச் சங்கம் மட்டுமல்ல அருணாச்சலமும் சேர்த்து ஏமாற்றப்பட்டார்கள். தமிழர்களை சமரசத்துக்கு அழைத்து தமது தேவை கைகூடியபின், கைவிடுவது என்பது இங்கிருந்து தான் தொடங்குகிறது.
மனிங் சீர்திருத்தத்திற்கான முயற்சிகளை ஆங்கிலேய அரசு மேற்கொண்டிருந்தபோது தமிழ் பிரதிதிநிதித்துவம் குறைக்கப்படுவது குறித்து இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்த தலைவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதைக் கண்ட அருணாசலம் முரண்படத்தொடங்கினார். தேர்தல் கிட்டிய நேரத்தில் கொழும்பு தொகுதிக்கான வேட்பு மனுவை அருணாசலம் அவர்கள் தயார் செய்துகொண்டிருந்தபோது அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு ஜேம்ஸ் பீரிசை அப்பதவிக்கு நியமித்தார்கள். இந்த சதியின் சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் எப்.ஆர்.சேனநாயக்கா, டீ.எஸ்.சேனநாயக்கா ஆகிய இரு சகோதரர்களுமே. இவர்கள் இருவரும் அப்போது அநகாரிக தர்மபாலாவின் சிங்கள பௌத்த செயற்பாடுகளுடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்திருந்தார்கள்.
1921சட்டசபைத் தேர்தல் நெருங்கிய வேளை கொழும்பு நகர் ஆசனம் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமக்கு வழங்கப்படவேண்டும் என்பதை நினைவுருத்திய வேளை
“இலங்கை சீர்திருத்த சங்கத்தின் தலைவராக இருந்த போது நான் கொடுத்த வாக்குறுதி இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவராக உள்ள என்னைக் கட்டுப்படுத்தாது” என்று ஜேம்ஸ் பீரிஸ் அறிவித்தார்.
மேல் மாகாணத் தேர்தலில் அவர் போட்டியிட இருந்த அருணாச்சலத்துக்கு தேசிய காங்கிரஸ் ஆதரவு வழங்குமென நம்பியிருந்தார். ஆனால் தனக்கு உருதிமொழியளித்த அதே ஜேம்ஸ் பீரிஸ் வாக்குறுதியை மேரி அத் தேர்தலில் தன்னை விலத்திவிட்டு தானே போட்டியில் இறங்கியதும் அருணாச்சலம் வாபஸ் வாங்கினார்.
எப்.ஆர்.சேனநாயக்கா இந்த சதியின் பின்னணியில் இருந்தார். இந்த ஆசனம் ஒரு தூய சிங்களவருக்கே வழங்கப்படவேண்டும் என்று தனது சகாக்களுக்கு கூறினார். இறுதியில் அந்த தொகுதிக்கு ஜேம்ஸ் பீரிசை தெரிவு செய்தார்கள். அதுவே சிங்களத் தரப்பினரால் நம்பி மோசம் போன முதலாவது நிகழ்வாக பதியப்படுகிறது.
இந்த துரோகத்தை எதிர்கொண்ட வேளை அருணாசலம் 70 வயதை எட்டிக்கொண்டிருந்தார். ஏமாற்றத்தால் துவண்டு போன அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகி யாழ்ப்பாணத்துக்கு சென்றுவிட்டார். கனகசபை, சபாபதி உள்ளிட்ட சகல தமிழ் உறுப்பினர்களும் காங்கிரசிலிருந்து விலகினர். இலங்கை தேசிய காங்கிரஸ் அதன் பின்னர் ஒரு தூய சிங்கள அமைப்பாகவே மிஞ்சியது.
தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் அதாவது அடுத்த வருடமே அவர்கள் ஆங்கிலேய அரசுக்கு கொடுத்த அழுத்தம் வெற்றிபெற்றது.
இலங்கை தேசிய காங்கிரசின் தலைமைப் பொறுப்பிலிருந்தவேளை சேர் பொன் அருணாச்சலம் தலைமையிலான குழு இங்கிலாந்துக்கு சென்று காலனித்துவ செயலாளரைச் சந்தித்து அரசியல் சீர்திருத்த யோசனைகளை முன்வைத்திருந்தனர். இதன் முதலாவது வெற்றியாகத் தான் மனிங் சீர்திருத்தம் உருவானது. அச்சீர்த்திருத்ததின் மூலம் சுதேசிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. அதுவே படிப்படியாக அடுத்தடுத்த சீர்த்திருத்தங்களையும் நோக்கி நகர்த்தியது. சுதேசிகளின் பேரம் பேசும் ஆற்றலை வளர்த்தெடுத்தது. ஈற்றில் காலனித்துவத்திலிருந்து இலங்கையின் விடுதலையை இலகுபடுத்தியது.
இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரசை முன்மாதிரியாகக் கொண்டு தான் இலங்கையிலும் “இலங்கை தேசிய காங்கிரஸ்” என்கிற அதற்கு நிகரான பெயரை சூட்டிக்கொண்டனர். ஆனால் இந்த இரண்டு இயக்கங்களுக்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸ் சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடவில்லை. மாறாக பூரண சுதந்திரத்துக்காகப் போராடியது. ஆனால் இலங்கையின் தேசியத் தலைவர்களாக இன்றும் கொண்டாடப்படும் இந்தத் தலைவர்கள் சீர்திருத்ததுக்காகவே இயக்கம் கட்டினர்.
தேசிய காங்கிரசின் தலைவர்களாக ஆண்டுதோறும் புதியவரை தெரிவு செய்தார்கள். 1919-1920 சேர் பொன் அருணாச்சலம், இரண்டாவது தலைவராக 1921இல் ஜேம்ஸ் பீரிஸ் தெரிவு செய்யப்பட்டார் (ஜேம்ஸ் பீரிஸ் தலைவராக இருந்தபோது தேசிய காங்கிரசின் செயலாளராக இருந்தவர் அருணாச்சலத்தின் மகன் ஏ.மகாதேவா). 1922 ஆம் ஆண்டு மூன்றாவது தலைவராக தெரிவு செய்யப்பட்டவர் எச்.ஜே.சீ.பெரைரா.
எச்.ஜே.சீ.பெரேரா தலைவராக இருந்தபடி இப்படி ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
“இந்தச் சங்கத்தின் இறுதி இலக்கு பிரித்தானிய கொடியின் கீழ் சுயாட்சியை அமைப்பதே. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அதற்கு நாங்கள் சுதந்திரமடைதல் என்று கூறப்போவதில்லை. நாங்கள் ஒரு போதும் அதைக் கோரியதுமில்லை. சுதந்திரத்தைக் கேட்குமளவுக்கு நாங்கள் முட்டாள்களுமில்லை.”
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...