Headlines News :
முகப்பு » , , , , , » 1956: (2) - "மத மறுமலர்ச்சிகளின் வகிபாகம்" - என்.சரவணன்

1956: (2) - "மத மறுமலர்ச்சிகளின் வகிபாகம்" - என்.சரவணன்


1956 நிலைமைகளை விளங்கிக் கொள்வதாயின் சில வரலாற்றின் பக்கங்களை மீளப் புரட்டிப் பார்த்தால் இலகுவாகிவிடும் என்பதால் சற்று சுருக்கமாக காலனித்துவக் காலத்திள் இருந்து வந்த வளர்ச்சியை வகமாக பார்த்து விடுவோம்.

இலங்கைக்கான தேசியவாதம் இன்று தனித்த இனத் தேசியவாதமாகவோ அல்லது தனித்த மதத் தேசியவாதமாகவோ வளர்ந்து நிற்கவில்லை. மாறாக அது சிங்கள இன + பௌத்த மத + சிங்கள மொழி ஆகியவை கூட்டாக இணைக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்துகிற தேசியவாதமாக வளர்ந்து நிற்கிறது.

ஆக, இனமும், மொழியும் தேசிய இனத்தின் அடையாளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்பதை புரிந்துகொள்ள கடினம் இருக்கமுடியாது. ஆனால் மதம் இதில் சேர்த்துக் கொண்டதற்குப் பின்னால்; மகாவம்ச கால நீட்சியுடைய வரலாறொன்று இருக்கிறது. அதுவும் இலங்கைத் தீவின் ராஜ்ஜியங்கள் ஆங்கிலேயர்களால் இணைக்கப்பட்டு இலங்கை என்கிற வடிவம் கொடுக்கப்பட்டு பிற் காலத்தில் ஆங்கிலேயர்களால் கைவிடப்பட்டபோது அது “சிங்கள - பௌத்த” தேசியமாக பெரும்பான்மை மக்களால் புனையப்பட்டு அதே ஐதீகம் வளர்த்தெடுக்கப்பட்டு விட்டது.

5000 ஆண்டுகளுக்கு இலங்கைத் தீவு தான் பௌத்தத்தை காக்கப் போகிறது என்று புத்தர் கூறி விட்டு இறந்ததாக புனையப்பட்ட மகாவம்சக் கட்டுக்கதையின் வகிபாகம் குறைத்து மதிக்கத்தக்கதல்ல. 

“சிங்கபாகுவின் மகன் விஜயன் 700 பேர்களுடன் வந்திருக்கிறார், தேவர்களின் தலைவனே! இலங்கையில் என்னுடைய மதம் நிலைநிறுத்துவதற்காக அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இலங்கையையும் கவனமாகப் பாதுகாத்து வருவாயாக” என்று புத்தர் இந்திரனிடம்வேண்டுகிறார்.

அதாவது புத்தரால் தெரிவு செய்யப்பட்ட நாடு இலங்கை, பௌத்தத்தைக் காக்க தெரிவு செய்யப்பட்ட இனம் சிங்களவர் என்கிற  (Choosen country, Choosen Nation) ஐதீகமே பிறர் மீதான வெறுப்பையும், எதிர்ப்பையும் ஆழமாக விதைத்து வைத்திருக்கிறது.

காலனித்துவத்தின் மதம்
இலங்கையின் சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட இரண்டு தற்செயல் கரையொதுங்கள் நிகழ்ந்துள்ளன.
  • கி.மு 543 இல் தம்பபன்னியில் கரையொதுங்கிய கப்பலில் வந்த விஜயன் (மகாவம்சத்தின் படி)
  • இந்து சமுத்திரப் புயலால் 1505 ஆம் ஆண்டு காலியில் கரையொதுங்கிய கப்பலில் வந்திறங்கிய போர்த்துகேய கப்டன் லோரன்ஸ் அல்மேதா.
இருவருமே 2000 ஆண்டுகள் இடைவெளியில் தற்செயலாக கரையொதுங்கியவர்கள்.

1505 ஆம் ஆண்டு காலி கரையோரத்தில் ஒதுங்கிய கப்பலின் கப்டன் லோரன்ஸ் அல்மேதாவின் வரவே இலங்கையை அடுத்த நான்கரை நூற்றாண்டுகளுக்கு காலனித்துவத்தின் பிடிக்குள் சிக்குற வைத்தது.

இந்தக் காலப்பகுதியில் முதலில் போர்த்துக்கேயர் 1505-1640 வரையும் ஒல்லாந்தர் 1640-1796 வரையும்  ஆங்கிலேயர்கள் 1796–1948 வரையும் ஆண்டார்கள் என்பதை நாமறிவோம். போர்த்துகேயர் இலங்கையில் மத மாற்றத்தில் காட்டிய அக்கறை அளவுக்கு ஒல்லாந்தர் காட்டவில்லை. கத்தோலிக்க மதத்துக்குப் பதிலாக ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்துக்கு இலங்கையின் பௌத்தர்ர்களையும், இந்துக்களையும் மட்டுமன்றி கத்தோலிக்கர்களையும் மாற்றுவதில் அக்கறை காட்டிய போதும் முன்னர் இருந்த இறுக்கம் இருக்கவில்லை. ஆனால் இலங்கை ஆங்கிலயர்களின் பிடிக்குள் போனதும் மீண்டும் கத்தோலிக்க மதம் செல்வாக்கு பெறத் தொடங்கியது.

1815 இல் செய்து கொள்ளப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் ஐந்தாவது பிரிவின்படி பௌத்தத்தை பேணிப் பாதுகாப்பதாக ஆங்கிலேயர்கள் உத்தரவாதமளித்தாலும் 1818 கிளர்ச்சியை அடக்கிய பின்னர் இலங்கை தரப்பினருக்கு வழங்கிய உடன்பாடுகளை இலகுவாக மீறினார்கள். 

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் நேரடி மதத் தலையீடாக கிறிஸ்தவ மிஷனரிகளின் வருகை இருக்கவில்லை. ஆனால் கிறிஸ்தவ மிஷனரி சபைகளின் வருகைக்கு ஆங்கிலேய அரசு அனுசரணை வழங்கவே செய்தது. சுதேசிய மக்களிடம் மதத்தை மட்டும் பரப்பாது கல்வியையும் சமூக சீர்திருத்தப் பணிகளையும் முன்னெடுத்ததானது ஆங்கிலேயர்களுக்கு சாதகமாகவே இருந்தது. அதற்கு முன்னர் போர்த்துகேயரும், ஒல்லாந்தரும் தமது நேரடி மத போதகர்களைக் கொண்டே தேவாலயங்களை உருவாக்கி இயக்கியது.

அந்த வகையில் ஆங்கிலேயர்கள் இலங்கையை பூரண கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே மிஷனரி அமைப்புகள் உள்நுழையத் தொடங்கி விட்டன. 1804-1818 வரையான 13 ஆண்டுகளுக்குள் அப்படி வந்த ஐந்து கிறிஸ்தவ மிஷனரி சபைகள் முக்கியமானவை.
இந்த சபைகளின் செயற்பாடுகளால் இலங்கையில் நாடாளாவிய ரீதியில் கிறிஸ்தவ மதப் பரப்பல் தீவிரம் பெற்றது. கிறிஸ்தவ பிரச்சாரம் அதன் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. மாறாக ஒரு கட்டத்தில் சுதேசிய மதங்களின் மீதான புனைவுகளைப் பரப்பி, வெறுப்புணர்வையும் ஆங்காங்கு பரப்பத் தவறவில்லை.

தமது பிரசங்கங்களிலும், மதப்பரப்பு கூட்டங்களிலும், தமது பிரச்சார பிரசுரங்களிலும் பௌத்தத்துக்கும், இந்து மதத்துக்கும் எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்தார்கள். 

இதன் விளைவே சுதேசிய மதங்களின் மீளெழுச்சி. பௌத்த மறுமலர்ச்சியும், சைவ மறுமலர்ச்சியும் இதன் விளைவே.

மிஷனரிகள் ஆங்கிலப் பாடசாலையை நடத்திய அதே வேளை, தங்களது நோக்கத்தையடைய சிங்களத்தையும், தமிழையும் போதனா மொழியாக்கினர் என்பார் பேராசிரியர் சிவத்தம்பி. அதாவது ஆங்கில மொழியை நிர்ப்பந்திக்கும் பணியை அவர்கள் முன்னெடுக்கவில்லை. அறிவுக்காக ஆங்கில மொழியை கற்பிக்கத் தொடங்கிய அதே வேளை சுதேசிய மொழியை வளப்படுத்துவதிலும், பலப்படுத்துவதிலும் அவர்கள் காட்டிய அக்கறை சந்தேகமற்றது.  ஆங்கிலேயர்கள் சுதேசிய பாடசாலைகளை உருவாக்கும் திட்டத்தை கோல்புறூக் அரசியல் திட்டக் காலத்தில் கொண்டுவர எத்தனித்த காலத்தில் மிஷனரி பாடசாலைகள் பலமாக இருந்தன. அவற்றுடன் போட்டி போடுவதற்குப் பதிலாக அச்சபைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு அரசாங்கமே மானியம் வழங்கத் தொடங்கியது. 

இலங்கையில் ஆங்கில மொழி, கத்தோலிக்க மதம், ஆங்கிலேய பண்பாட்டு முறைகள் என்பவற்றால் சுதேசிய பாரம்பரிய பண்பாடு நலிந்து ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவந்த காலத்தில் தான் அவற்றுக்கு எதிரான கலகக் குரல்கள் எழத் தொடங்கின.
பௌத்த மறுமலர்ச்சி
1800 களின் நடுப்பகுதிக்குப் பின்னர் கிறிஸ்தவர்களின் பிரச்சாரங்களை எதிர்த்து எதிர்வினையாற்றும் போக்கு தெற்கிலும், வடக்கிலும் எழுச்சியுற்றது. தெற்கில் மிகெட்டுவே குணானந்த தேரர், ஹிக்கடுவே சுமங்கள தேரர், வெலிகம சுமங்கள தேரர் போன்றோர் பௌத்த மறுமலர்ச்சிக்கு தலை கொடுத்தார்கள்.

பௌத்த மத மறுமலர்ச்சியின் போது நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளை குறிப்பிடலாம்
  • புதிய பௌத்த விகாரைகளை அமைத்து விஸ்தரித்தல்.
  • மிஷனரி கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு மாற்றாக பௌத்த பாடசாலைகளை நிறுவியது
  • தமது பௌத்த மத பிரச்சாரத்துக்கும், மிஷனரி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் அச்சகங்களை உருவாக்கி பல நூல்களையும், பத்திரிகைகளையும் துண்டுபிரசுரங்கள் போன்ற வெளியீடுகளை தொடர்ச்சியாக வெளியிட தொடங்கியமை.
இலங்கையில் 1862இல் வெளியான முதலாவது சிங்கள பத்திரிகை "லங்காலோக". கிறிஸ்தவ பிரச்சாரங்களை எதிர்கொள்வதற்கு அந்த பத்திரிகையை பயன்படுத்தினார்கள். அந்த அச்சு இயந்திரத்தை  ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்ய பண உதவி செய்தவர் அன்றைய சீயம் நாட்டு (தாய்லாந்து) மன்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொவிகம சாதியல்லாதோருக்காக சீயம் நிக்காயவை தோற்றுவிப்பதற்கு மூல காரணமாக இருந்தவர் அவர்.

இதன் பின்னர் திகதியையும், இடத்தையும் குறித்து போது மக்கள் மத்தியில் பகிரங்கமாக கிறிஸ்தவ பாதிரியார்களுடன் விவாதங்களை நடத்தினார்கள். இலங்கையின் வரலாற்றில் “பஞ்சமகா விவாதம்” என்கிற பெயர் கொண்டு அழைக்கப்படும் பிரபலமான விவாதம் அது.

சைவ மறுமலர்ச்சி
வடக்கில் சைவத்துக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்த கிறிஸ்தவ சக்திகளுக்கு எதிர்வினையற்றும் பணிகளும் தொடங்கப்பட்டன. மேற்படி பணிகளைப் போலவே அச்சு இயந்திரம் கொண்டுவருதல், பிரசுரங்களை வெளியிடுதல், சைவ பாடசாலைகளை நிறுவுதல், சைவக் கோவில்களை நிறுவுதல், புனரமைத்தல் போன்றன நிகழ்ந்தன.

ஆறுமுகநாவலர் இந்தப் பணிகளுக்கு தலைமை கொடுத்தார். 1849 இலேயே அவர் அச்சு இயந்தரத்தை வாங்குவதற்காக  சதாசிவம்பிள்ளையுடன் சென்னைக்கு சென்றார். அந்த பயணத்தில் தான் அவருக்கு “நாவலர்” என்கிற பட்டமும் சூட்டப்பட்டது. அவர் சென்னையிலேயே தங்கியிருந்து சூடாமணி நிகண்டுரை, சௌந்தரியலங்கரி போன்ற நூல்களை அச்சிற் பதிப்பித்தார். அதன் பின்னர் தான் இலங்கைக்கு அச்சு இயந்திரத்தைக் கொண்டு வந்து சேர்த்தார்.

ஆனால் நாவலரின் ஆரம்பகால பதிப்புகள் தமிழ், சைவ சமயம் என்கிற வரையறைக்குள் தான் இருந்தது. அச்சகம் தொடங்கப்பட்டதன் இலக்கும் ஆங்கிலேயே எதிர்ப்பைக் கொண்டதல்ல. ஆனால் பிற்காலத்தில் தான் அவர் சைவ சமயத்துக்கு எதிரான கிறிஸ்தவ போதகர்களின் பிரச்சாரத்தை எதிர்த்து எழுதிய பலரின் எழுத்துக்களை பதிப்பிக்கத் தொடங்கினார்.

அவற்றில் ஞானக்கும்மி, யேசுமத பரிகாரம், (முத்துக்குமாரகவிராசர்), அஞ்ஞானக் கும்மி (சிலம்புநாதபிள்ளை), வச்சிரதண்டம், சைவ தூஷண பரிகாரம், மித்தியாவாத நிதர்சனம், சுப்பிர போதம் போன்றவை முக்கியமானவை. 

இதில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் வடக்கிலும், தெற்கிலும் நிகழ்ந்த இந்த கிறிஸ்தவ எதிர்வினைப் பணிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததாகவும், சம்பந்தப்படாததாகவும், ஒன்றையொன்று அதிகம் அறியாததாகவும் ஏக காலத்தில் நிகழ்ந்தது தான்.

தெற்கில் பஞ்ச மகா விவாதத்தைத் தொடர்ந்து பௌத்த எழுச்சியொன்று உருவானது. அந்த வழியில் உருவானவர்கள் தான் அநகாரிக்க தர்மபால போன்றோர். இந்த விவாதத்தால் கவரப்பட்டு அமெரிக்காவிலிருந்து வந்து கேர்னல் ஒல்கொட் பௌத்த மறுமலர்ச்சி நடவடிக்கைகளுக்கு பெரும் உந்துதலைக் கொடுத்தார். அவரும் பிளாவுட்ஸ்கியும் சேர்ந்து பிரம்மஞான சங்கத்தை ஆரம்பித்து பௌத்த மிஷனரி பாடசாலைகளுக்கு மாற்றாக பௌத்த பாடசாலைகளை நிறுவினார்கள். அடிமட்டத்திலிருந்து, வசதி படைத்த மேட்டுக்குடியினர் வரை இந்த பௌத்த மறுமலர்ச்சிப் பணிகளில் தம்மை இணைத்துக் கொள்ள ஏதுவானது. அப்படி இணைத்துக் கொண்டவர்கள் தான் இலங்கைக்கு சுதந்திரம் கோரும் சக்திகளாகவும் நாளடைவில் ஆனார்கள்.

1883 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தனத்தன்று கொட்டாஞ்சேனையில் கத்தோலிக்கர்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் ஒரு கலவரம் நிகழ்ந்தது. ஒரு உயிரும் பலியானது. நாடளாவிய ரீதியில் ஆங்காங்கு அந்த கலவரம் பரவியிருந்தது. சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதுடன், பலர் காயப்பட்டனர். இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக் கொள்ளப்படுவது அது. "Kotahena Riots" என்கிற ஒரு விசாரணை அறிக்கையையும் ஆங்கிலேய அரசு பின்னர் வெளியிட்டது.

இந்தக் கலவரத்தைப் பற்றி முறைப்பாடு செய்வதற்காகவும் ஒல்கொட் இங்கிலாந்து சென்று பல முக்கிய வெற்றிகளை பௌத்த தரப்புக்கு ஏற்படுத்திக் கொண்டு வந்தார்.

அதன்படி வெசாக் தினத்தை விடுமுறை நாட்களாக 27.03.1887 அன்று அறிவித்தது அரசு. 1770 இல் இருந்து வெசாக் விடுமுறை காலனித்துவ ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டிருந்தது. முதலாவது தடவையாக தீபதுத்தாமாறாம  விகாரையில் குணானந்த தேரர் தலைமையில் பௌத்த கொடி உருவாக்கப்பட்டு 1885 ஏப்ரல் 28 அன்று கொட்டாஞ்சேனை தீபதுத்தமாறாமவில் முதல் தடவை ஏற்றப்பட்டது. இந்தக் கொடியே 1956ஆண்டிலிருந்து சர்வதேச பௌத்த கொடியானது. 1956 பண்டாரநாயக்க ஆட்சியில் இலங்கையில் நடந்த உலக பௌத்த மாநாட்டின் போது உலக பௌத்த கொடியாக ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது.

நன்றி - தினக்குரல்

Share this post :

+ comments + 1 comments

4:09 AM

மீண்டும்,பின்நோக்கிய கால - கணிசமான சரித்திர,குடியியல்,சமய விபரங்களை அறியத்தந்நமைக்கு மிக்க நன்றி.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates