Headlines News :
முகப்பு » , , , » கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சரவணன்

கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி - என்.சரவணன்

இலங்கைத் தமிழ் முஸ்லிம் மக்களின்
முதலாவது நாடாளுமன்றப் பிரதிநிதி

இலங்கையை ஆங்கிலேயர்கள் 1815 இல் முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இலங்கையை ஆள்வதற்கென்று ஆங்கிலேயர்களுக்கு ஒரு அரசியல் அமைப்புமுறையும் நாடாளுமன்ற நிர்வாக முறையும் தேவைப்பட்டது. இதற்காக ஒழுங்குகளை ஆராய்வதற்காக 1829 ஆம் ஆண்டு வில்லியம் கோல்புறூக், சார்ல்ஸ் கமரூன் ஆகியோரின் தலைமையில் ஒரு ஆணைக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பிரேரித்த அமைப்புமுறையைத் தான் கோல்புறூக் - கமரூன் சீர்திருத்தம் என்கிறோம்.

முதலாவது சுதேசிய பிரதிநிதிகள்
கோல்புறூக் சீர்திருத்தத்தின்படி அமைக்கப்பட்ட 15 அங்கத்தவர்களைக் கொண்ட சட்டநிரூபன சபையில் உத்தியோகபற்றுள்ள 9 உறுப்பினர்களும், உத்தியோக பற்றற்ற உறுப்பினர்களாக 6 பேரையும் கொண்டதாக அது அமைக்கப்பட்டது. அதன்படி உத்தியோகபற்றற்ற அறுவரில் ஐரோப்பியர் மூவரும், சிங்களவர் -1, தமிழர் -1, பறங்கியர் – 1. என்கிற அடிப்படையில் அங்கத்துவம் வகித்தார்கள். அதன் அடிப்படையில் இலங்கையின் சட்டசபை மரபில் முதலாவது தமிழ் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும், முதலாவது சிங்கள அங்கத்தினராக ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்ன (J.G. Philipsz Panditharatne)  என்பவரும், ஜே.சீ.ஹீலபிரான்ட் (J.G.Hillebrand) முதலாவது பறங்கி இனத்து உறுப்பினராகவும் தெரிவானார்கள்.

இவர்களில் ஜே.ஜி.பிலிப்ஸ் பண்டிதரத்னவின் பரம்பரையில் வர்ந்தவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க என்பது இன்னொரு அரசியல் கிளைக்கதை.

தேர்தல் அறிமுகமில்லாத இந்தக் காலப்பகுதியில் ஆளுநர் தான் விரும்பிய ஒருவரை தன்னிச்சையாக தெரிவு செய்யும் வழக்கமே இருந்தது. ஆளுநர் சேர் ரொபர்ட் வில்மட் ஹோர்ட்டனுக்கு 9 உத்தியோகபற்றுள்ள உறுப்பினர்களை நியமிப்பது இலகுவாக இருந்தது. ஆனால் உத்தியோகபற்றற்ற 6 பேரைத் தேடிபிடிப்பதும் தெரிவு செய்வதும் சிரமமாக இருந்தது. ஐரோப்பியர் மூவரையும் பறங்கியர் ஒருவரையும் கண்டு இலகுவாக கண்டு பிடித்துவிட்டார். 

எஞ்சிய இரு பிரதிநிதிகள் இருவரையும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தான் முதலாவது கூட்டம் 01.10.1833 அன்று இலங்கை சுதேசிகள் எவரும் இல்லாமலே கூடியது. இதை அன்றைய குடியேற்றக் காரியதரிசி கண்டித்தார். அதனைத் தொடர்ந்து அவசர அவசரமாக தனது பிரதான மொழிபெயர்ப்பாளர்களாக இருந்த ஆறுமுகம்பிள்ளை, பிலிப்ஸ் பண்டிதரத்ன ஆகிய இருவரையும் முழுச் சம்பளத்தோடு இளைப்பாறச் செய்துவிட்டு 30.05.1835 இல் உத்தியோகபற்றற்றவர் வரிசையில் இருத்தினார் ஆளுநர். இவர்களில் ஆறுமுகம்பிள்ளை மகா முதலியாக இருந்தார். பிலிப்ஸ் பண்டிதரத்ன முதலியாராக இருந்தார். 

இதன்படி இலங்கைத் தமிழர்களின், முஸ்லிம்களின் முதலாவது பிரதிநிதியும் அவர் தான். இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் முதலாவது சுதேசிய அங்கத்தவரும் அவர் தான் எனலாம். 

அப்போதெல்லாம் தமிழ், முஸ்லிம் சமூகத்தை தமிழர் என்கிற அடையாளத்தின் கீழேயே பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதால் முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஆறுமுகம்பிள்ளை இருந்தார். பிற்காலத்தில் இதே வம்சாவளியில் வந்த சேர்.பொன்.இராமநாதன் முஸ்லிம்களின் தனிப் பிரதிநிதித்துவக் கோரிக்கையை எதிர்த்து வாதிட்டது இன்னொரு தனிக்கதை.

பெயர் குழப்பம்
அவரின் பெயரை பலரும் பல குழப்பகரமான பெயர்களைக் கொண்டு அழைப்பதை அவதானிக்க முடிகிறது. க.சி.குலரத்தினம் எழுதிய பிரபல நூலான “நோர்த் முதல் கோபல்லாவரை” (1966) என்கிற நூலில் ஆறுமுகத்தா பிள்ளை என்று அழைக்கிறார். சேர் பொன் இராமநாதனின் சரிதையை (The life of Sir Ponnambalam Ramanathan - 1971) எழுதிய எம்.வைத்திலிங்கம் “ஆறுமுகநாதப்பிள்ளை” என்று பல இடங்களில் குறிப்பிடுகிறார். ஏ.ஜே.வில்சனின் நூல்களிலும் “ஆறுமுகநாதப்பிள்ளை” என்றே அழைக்கப்படுகிறார்.  எஸ்.ஆறுமுகம் தொகுத்த இலங்கைத் தமிழர் சரிதை அகராதி (DICTIONARY OF BIOGRAPHY of the Tamils of Ceylon -1997) நூலில் ஆறுமுகம்பிள்ளை என்றே குறிப்பிடுகிறார். வி.முத்துக்குமாரசுவாமி எழுதிய “Founders of Modern Ceylon eminent Tamils” (1973) என்கிற நூலிலும் ஆறுமுகம்பிள்ளை என்றே ஒரு அத்தியாயத்தை எழுதியிருக்கிறார். நாமும் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி என்றே அழைப்போம்.

வாழ்க்கைக் குறிப்பு
கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி (Arumugampillai Coomaraswamy) 1783 இல் இலங்கையின் பருத்தித்துறையில் கெருடாவில் என்ற ஊரில் ஆறுமுகம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார். மூத்த சகோதரன் வாரித்தம்பி கொழும்பு செக்கட்டித் தெரு பகுதியில் வந்து குடியேறி வர்த்தகப் பிரமுகரானார். அங்கிருந்து முகத்துவாரத்தில் ஆமைத்தோட்டம் பிரதேசத்தில் வீடு வாங்கி வாழ்ந்தார்.  பொன்னம்பலம் குடும்பத்தினர் பிற்காலத்தில் கொழும்பை மையப்படுத்திய அரசியல் தலைவர்களானது இங்கிருந்து தான் ஆரம்பமானது. இலங்கையின் பெரிய மேட்டுக்குடி பிரமுகர்களும், வர்த்தகர்களும் குழுமியிருந்த மையமாக அப்போது கோட்டை, மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு போன்ற பிரதேசங்கள் இருந்தன. பிற காலத்தில் தான் கறுவாத் தோட்டப் பகுதியான இன்றைய கொழும்பு 7 பகுதி உயர் வர்க்க செல்வாக்குள்ள மேட்டுக்குடியினரின் மையமாக மாறியது. பொன்னம்பலம் குடும்பத்தினரும் கொழும்பு 7க்கு குடிபெயர்ந்தார்கள்.

1795 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் வசமிருந்து திருகோணமலைக் கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினார்கள். யாழ்ப்பாணம், கல்பிட்டி, நீர்கொழும்பு ஆகிய கோட்டைகளும் சரணடைந்தன. அதனைத் தொடர்ந்து அன்றைய டச்சு கவர்னர் களுத்துறை, காலி. மாத்தறை கோட்டைகளையும் பிரித்தானியரிடம் ஒப்படைக்க முன்வந்தார். 1796 இல் இறுதியில் கொழும்பும் இயல்பாகவே ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. இலங்கையில் பூரண ஆட்சியை நிலைநாட்டும் வரையான காலப்பகுதியில் மெட்ராசில் இருந்து கவர்னர் தான் இலங்கையின் நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டார்.

நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான கணிசமான பணியாளர்களை அடையாளம் கண்டு தென்னிந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் வாரித்தம்பி.13 வயதேயான குமாரசுவாமியையும் அவர் தான் கொழும்புக்கு அழைத்து கவனித்து வந்தார்.

இங்கிலாந்து அரசரின் ஆணைப்படி இலங்கையும் தனியான காலனி நாடாக நிர்வகிப்பதற்காக தனியான ஒரு ஆளுநரை நியமிக்க முடிவு செய்தது. அதன்படி முதலாவது ஆளுநராக பிரெடெரிக் நோர்த் 1798 ஒக்டோபரில் அரசரால் நியமிக்கப்பட்டார். ஆனாலும் 1802 ஆம் ஆண்டு உறுதியாக இலங்கை பிரித்தானிய முடியின் கீழ் உத்தியோகபூர்வமாக வந்துவிட்டதை உறுதிசெய்யும் வரை இலங்கை இந்தியாவில் இருந்த ஆளுநரின் பணிப்பின் கீழ் தான் இயங்கியது.

பிரெடெரிக் நோர்த் வந்த வேகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். பிரபுக்களினதும், ஆங்கிலேய நிர்வாகிகளதும் பிள்ளைகளின் கல்விக்காக பாடசாலையொன்றை உடனடியாக அமைக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. 28.10.1799 அன்று கொழும்பில் அப்பாடசாலை நிறுவப்பட்டது. அதே வேளை தமது நிர்வாகத் தேவைக்காக உள்ளூரிலிருந்தே பலரை உருவாக்கும் நீண்ட காலத் தேவையை ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள். கொழும்பு வுல்பெண்டால் தேவாலயத்தின் வடகிழக்கு மூலையில் 18 சிங்கள மாணவர்களைக் கொண்டு ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது. Schroter  பாதிரியாரால் தமிழ் பிரிவு உருவாக்கப்பட்ட போதும் சிலரே கற்றனர். அது தொடங்கப்பட்டு ஒரு வருடத்தில் தான் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியும் அப்பாடசாலையில் சேர்க்கப்பட்டார். குமாரசுவாமியின் அபாரமான ஆற்றல் அவரை வேகமாக அடுத்தடுத்த வளர்ச்சிக்கு கொண்டு சென்றது.

ஆற்றிய சேவை
1805 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். மூன்று வருடங்களின் பின்னர் அன்றைய அரசாங்கத்தின் பிரதிச் செயலாளராக இருந்த ரிச்சட் பிலாஸ்கட் (Richard Plasket) குமாரசுவாமி தேர்ந்த திறமையாளர் என்று சான்று பகர்ந்தார். 1808 ஆம் ஆண்டு குமாரசுவாமி ஆளுநர் தோமஸ் மெயிற்லான்ட் க்கு மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1810 மே மாதம் அவர் ஆளுநரின் தலைமை தமிழ் மொழிபெயர்ப்பாளராக ஆக்கப்பட்டு முதலியார் பட்டமும் வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு 26 வயது மட்டும் தான் ஆகியிருந்தது.

இந்தக் காலப்பகுதியில் தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய செட்டிமார் சமூகத்துக்கும், யாழ் சைவ வேளாள சமூகத்துக்கும் இடையில் ஒரு நிழல் யுத்தம் நடந்துகொண்டிருந்ததை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். சேர் பொன் இராமநாதனின் சரிதையை எழுதிய எம்.வைத்திலிங்கம் அந்நூலில் இந்த கெடுபிடியில் வெள்ளாளர் சமூகத்தின் ஆதரவுடன் குமாரசுவாமி எப்படி தனது இடத்தை தக்கவைத்துக்கொண்டார் என்கிற செய்திகளையும் பதிவு செய்கிறார். 

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் மேல் குமராசாமி பரம்பரையினர் கொழும்பில் இருந்தபடி தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்தியிருந்தனர். சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு மீண்டும் தமது மூத்த குடிகளின் மண்ணான யாழ்ப்பாணத்துக்கே போய் சேர்ந்தது ஒரு நூற்றாண்டின் பின்னர் தான். அது ஏறத்தாழ 1920களில் நிகழ்ந்த இன்னொரு கதை.

1800களின் ஆரம்பத்தில் கொழும்பில் வர்த்தகச் சமூகமாக இருந்த செட்டி சமூகத்தின் செல்வாக்கும் வளர்ந்திருந்தது. 1830 ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பில் :கிறிஸ்தவரல்லாத தமிழர்”களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் குமாரசுவாமி. மேல்மாகாண கச்சேரியில் இதற்கான தேர்தல் நடந்தது. சாராய உற்பத்தித் தொழிலில் புகழ்பெற்றவரான தியாகப்பா குமாரசுவாமியோடு போட்டியிட்டார். அவர் செட்டி சமூகத்தைச் சேர்ந்த பெரும்புள்ளி. அத்தேர்தல் ஒரு வகையில் சைவ வெள்ளாளருக்கும், சைவ செட்டிமாருக்கும் இடையில் நிகழ்ந்த ஒரு அமைதியான மோதல் என்று தான் கூறவேண்டும்.

1815 ஆம் ஆண்டில் கண்டி அரசன் விக்கிரம ராஜசிங்கன் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட நிகழ்வில் குமாரசுவாமி பிரித்தானியர்களுக்காக மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி முக்கிய பங்கு வகித்திருக்கிறார். ஆளுநரின் நேரடி உத்தியோகத்தரராக இருந்த இந்தக் காலப்பகுதியில் கண்டியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பப்பட்ட படையோடு ஆறுமுகம் பிள்ளையும் அனுப்பப்பட்டிருக்கிறார். 1815 பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து 14 நாட்களாக படையுடன் அவர் சென்றிருக்கிறார். கண்டி மன்னர் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் படிக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பட்ட வேளை அவரையும் அவரின் உறவினர்களையும் வேலூருக்கு நாடு கடத்தும் பணிகளில் அரசருக்கு உதவ பணிக்கப்பட்டிருந்தார்.

அடிமையொழிப்பு
ஏற்கெனவே போர்த்துகேய, ஒல்லாந்து காலத்தில் தொடரப்பட்ட அடிமைமுறை ஆங்கிலேயரின் ஆட்சியிலும் ஆரம்பப்பகுதியில் தொடர்ந்தது. அடிமைகளை உரிமையாகக் கொண்டிருந்தோர் கணிசமானோர் நாட்டில் இருக்கவே செய்தார்கள். அவர்கள் குடும்பம் குடும்பமாக விற்கப்பட்டார்கள். அல்லது தந்தையிடம் இருந்தி பிள்ளைகளைப் பிரித்து, தாயிடம் இருந்து பிள்ளைகளைப் பிரித்து, மனைவி, கணவனை தனியாக பிரித்தோ விற்ற கொடுமை தொடர்ந்தது. இந்த காலப்பகுதியில் இலங்கைத் தீவில் மாத்திரம் மொத்தம் 28,000 அடிமைகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் 22,000 அடிமைகள் யாழ்ப்பாணத்திலும், திருகோணமலையிலும் இருந்திருக்கிறார்கள். ஒரு ஆண் அடிமையின் விலை 17 ரூபாய், ஒரு பெண் அடிமையின் விலை 34 ரூபாய்கள். மொரிசியசிலும், மேற்கிந்தியாவிலும் அடிமை முறை 1833 இல் தான் இல்லாது செய்யப்பட்டது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

இங்கிலாந்தின் இளவரசர் ரெஜென்ட் (Regent) இன் பிறந்த நாளின் நினைவையொட்டி 12.08.1816 அன்று அடிமையொழிப்புக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அன்றைய இலங்கைப் பிரமுகர்களின் பெரும் பட்டியலொன்றை (Ceylon Ordinances - 1853) காண முடிகிறது.  இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் அவ்வாறு கையெழுத்திட்டவர்கள் அனைவரும் சாதி ரீதியாக பிரிந்து கையெழுத்திட்டிருப்பது தான். வெள்ளாளர், கரையார், வண்ணார், செட்டியார் என நீள்கின்றன அந்த குழுமங்கள். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் அளவில் கையெழுத்திட்டிருக்கும் இந்தப் பட்டியல் பிரதேசவாரியாகவும், சாதி மற்றும் இனவாரியாக பிரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  கையெழுத்திட்ட கொழும்பு மலபாரிகள் (கொழும்புத் தமிழர்கள்) பட்டியலில் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் பெயரும் அடங்கும்.

அடிமைமுறையிலிருந்து பகுதி பகுதியாக வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து மீட்கப்பட்ட விபரங்களையும் வெளியிட்டிருக்கிறது. யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதிகளில் இருந்து 1819 இன் இறுதிப் பகுதிகளில் பள்ளர், கோவியர், நளவர் சமூகங்களைச் சேர்ந்த அடிமைகளை அன்றைய நீதிமன்றம் தலையிட்டு மீட்ட விபரங்களை மேற்படி அறிக்கையில் பக்கங்களில் விளக்கப்பட்டிருக்கிறது.

ஆங்கிலேயரின் பாராட்டு
ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் சேவையைப் பாராட்டி 1819 ஆம் ஆண்டு ஆளுநர் ரொபர்ட் பிரவுன்றிக்  பதக்கமொன்றை தங்க மாலையுடன் சேர்த்து பரிசாக அளித்தார். அந்த பதக்கத்தில் இப்படி பொறிக்கப்பட்டிருந்தது.
“இந்தப் பதக்கம் கௌரவ சேர் ரொபர்ட் பிரவுன்றிக் அவர்களால் ஆளுநர் தனது பதவிக் காலத்தில் முதன்மைச் சேவையாளரும் அரசாங்கத்தின் தலைமை மொழிபெயர்ப்பாளராகவும் திருப்திகரமான சிறந்த பொதுச் சேவையாற்றியதைப் பாராட்டி ஆறுமுகநாதப்பிள்ளை குமாரசுவாமி முதலியார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.” 
குமாரசுவாமி விசாலாட்சி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு முத்து குமாரசுவாமி, செல்லாச்சி என இரண்டு பிள்ளைகள். முத்து குமாரசுவாமிக்குப் பிறந்தவர் சேர் ஆனந்த குமாரசுவாமி. செல்லாச்சிக்குப் பிறந்தவர்கள் பொன்னம்பலம் குமாரசுவாமி, சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோராவர்.

ஆறுமுகம்பிள்ளை  ஆளுநர் சேர் எட்வர்ட் பேகட் (Sir Edward Paget - 1822-1824), ஆளுநர்  சேர் எட்வர்ட் பார்ன்ஸ் (Sir Edward Barnes 1824- 1831) ஆகியோரிடமும்\ சேவையாற்றியிருக்கிறார்.
குமாரசுவாமி குடும்பத்திலிருந்து வந்தவர்கள்
காலம் ஆதல்
ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி 1835 ஆம் ஆண்டு சட்டநிரூபன சபைக்கு தெரிவானபோதும் அதற்குப் பின்னர் அடுத்த கூட்டத் தொடருக்கு கூட அவரால் செல்ல இயலவில்லை. அதற்குள் அவர் 07.11.1836 அன்று இறந்து போனார்.  அதாவது ஏறத்தாழ அவர் ஒன்றரை வருடத்துக்குட்பட்ட காலம் தான் அப்பதவியில் இருந்திருக்கிறார். ஒரு அரசியல் பிரதிநிதியாக அந்த முதல் சட்ட நிரூபன சபையில் குறிப்படத்தக்க வகிபாகத்தை எந்த அங்கத்தவரும் ஆற்றவுமில்லை ஆற்றியிருக்கவும் முடியாது என்பதையே அன்றைய அரசியல் அதிகார கட்டமைப்பின் வரலாறு மெய்ப்பிக்கிறது. ஆனால் முதலாவது சுதேசிய அங்கத்தவர் என்கிற பெருமையையும், பதிவையும் அவர் கொண்டிருக்கிறார். சிவில் சேவையில் அவரின் வகிபாகம் குறிப்பிடத்தக்கது. வரலாற்று முக்கியத்துவமும் பெற்றது. அதுபோல அவரின் அடுத்த சந்தியினர் அவரின் இடத்தை நிரப்பினார்கள்.

அவரின் இறப்பையடுத்து ஆளுநர் ரொபர்ட் ஹோர்ட்டன் அவருக்காக உணர்வுபூர்வமான அஞ்சலியுரையை 07.11.1836 அன்று ஆற்றினார்.  அவருடைய இடத்துக்கு இன்னொருவரை தெரிவு செய்வதில் ஆளுநருக்கு மீண்டும் சிரமமானது. ஒன்றரை வருடம் வரை குமாரசுவாமியின் இடத்தை ஆளுனரால் நிரப்ப முடியவில்லை. இறுதியில் கற்பிட்டியைச் சேர்ந்த சிறந்த சிவில் சேவை உத்தியோகத்தரும், கல்விமானாகிய சைமன் காசிச் செட்டியை உத்தியோகத்திலிருந்து இளைப்பாறச் செய்து உத்தியோகபற்றற்ற தமிழர் பிரதிநிதியாக நியமித்தார் ஆளுநர். 

குமாரசுவாமிக்குப் பின் சைமன் காசிச் செட்டியும் பின் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமியின் மருமகன் எதிர்மன்ன சிங்க முதலியாரும் அவருக்குப் பின் ஆறுமுகம்பிள்ளையின் மகன் முத்துகுமாரசுவாமியும் அவருக்குப் பின்னர் அவரின் மருமகன் இராமநாதனும், அவருக்குப் பின்னர் குமாரசுவாமியும் நியமிக்கபட்டார்கள். குமாரசுவாமி குடும்பத்தவர்கள் இலங்கையின் முதலாவது அரசியல் சீர்திருத்தமான கோல்புறுக் கமரூன் அரசியல் சீர்திருத்தக் காலத்தில் இருந்து டொனமூர் சீர்திருத்தக் காலம் வரை அரசியலில் பிரதிநிதித்துவம் வழங்கி வந்திருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழர் அரசியல் வரலாற்றில் குமாரசுவாமி போட்ட விதை என்பது எப்பேர்பட்டது என்பதை கடந்த ஒன்றரை நூற்றாண்டு அரசியல் நீரோட்டத்தில் அக்குடும்பத்தினரின் செல்வாக்கு ஏற்படுத்திய அரசியல் திருப்புமுனைகளை அவதானித்தால்  வியப்பாக இருக்கும். அவருக்கு பின் வந்தோரைப் பற்றி நாம் அறிந்த அளவுக்கு அவரை அறிந்ததில்லை.

உசாத்துணைக்குப் பயன்பட்டவை
  1. Lakshmi Kiran Daniel - PRIVILEGE AND POLICY: THE INDIGENOUS ELITE AND THE COLONIAL EDUCATION SYSTEM IN CEYLON, 1912-1948 - Faculty of Modern History, Michaelmas Term, 1992
  2. க.சி.குலரத்தினம் - “நோர்த் முதல் கொபல்லா வரை” ஆசீர்வாதம் அச்சகம் – புத்தகசாலை - யாழ்ப்பாணம் 1966
  3. T.Duraisingam - Politics and life in our times - Vol - II - Printed in the Democratic Socialist Republic of Sri Lanka at Unie Arts (Pvt) Limited – 2000
  4. JOHN H. MARTYN - NOTES ON JAFFNA- Chronological, Historical, Biographical - etc. - American Ceylon Mission Press Tellippalai Ceylon - 1923
  5. A. J. Wilson - Sri Lankan Tamil Nationalism: Its Origins and Development in the Nineteenth and Twentieth Centuries - 2000)
  6. V.Muttucumaraswamy - Founders of Modern Ceylon (Sri Lanka) EMINENT TAMILS - Vol I. Parts I & II THE PIONEERS - THE FOUNDERS
  7. M. VYTHILINGAM -THE LIFE OF SIR PONNAMBALAM RAMANATHAN Vol.I, RAMANATHAN COMMEMORATION SOCIETY - COLOMBO 1971
  8. A COLLECTION OF LEGISLATIVE ACTS OF THE CEYLON GOVERNMENT FROM 1796: Colombo - William Skeen, Goverment printer, Ceylon - 1853
  9. S.Arumugam - Dictionary of Biography of the tamils of Sri Lanka – London - 1996
நன்றி - தினக்குரல்


Share this post :

+ comments + 3 comments

மிக்க நன்றி சரவணன், என்னைபோல் இவ் விபரங்களில் ஆவலும் கரிசனையும் உள்ளவர்களுக்கு இவை சிறந்த உசாத்துணைகளாக உள்ளன, மற்றும் இத்தகவல்களின் பெறுமதியும் - இவற்றிற்கான அங்கீகரமும் விரைவில் தங்களுக்கு கிடைக்க வாழ்த்துகின்றேன்.

அற்புதமான தேடுதல்...... வாழ்த்துகள்

உங்கள் கட்டுரையை வாசித்தேன். மிக்க நன்றி. இப்படி ஒரு கட்டுரையை உருவாக்க எவ்வளவு உசாதுணை நூல்களை நாடவேண்டும் என்பதற்குரிய இன்ப வேதனையை அறிவேன். பல விடையங்கள் வெளிவந்துள்ளன. இந்தப் பரம்பரை வடமராட்சி, கெருடாவிலைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பதில் மகிழ்வடைகிறேன். சிறப்பான படங்கள் போடப்பட்டுள்ளன. பழைய கொழும்பைப் படம் பிடித்துக் காட்டுகின்றது. பொரும்பான்மையான தமிழர்கள் தமிழன் என்று கருதும். கண்ணுச்சாமி ஆகிய ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனும் இருக்கிறார். இவர் நாயக்கர் வம்சத்து தெலுங்கர். ஆனால் பலகாலம் தமிழ் நாட்டில் வாழ்ந்தபடியால் தமிழே பேசுவார்கள். இவரது பேச்சையும் கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசாமி அவர்கள் மொழிபெயர்த்தார் என்பதற்காக இவரது படத்iதையும் போட்டுள்ளீர்களா? இன்றும் அவர்களின் பரம்பரையினர் கண்டியில், இலங்கை அரசியலில் சிங்களவராக வாழுகிறார்கள். புல நாயக்க வம்ச எச்சங்கள் உண்டு. முன்பொரு காலம் கே.எம்.பி.இராசரத்தினா என்ற ஒரு அரசியல்வாதி 1958இல் தமிழனில் தோலில் செருப்புத்தைச்சுப் போட்டால்தான் தான் ஆறுதல் அடையவார் என்றார். அவரின் பெயரின் அடையாளமே கோனார் என்பதே அவரது கே என்ற முதலெழுத்தின் பெயராகும். இது ஒரு இந்தியச் சாதியின் பெயர். இலங்கையில் அந்த சாதியில்லை. இவர் இராசரத்தினம் தான் நாளடைவில் இராசரத்தினாவாக மாறினார்.
இந்தக் குடும்பப் பூர்வீகம் பற்றி பேராசிரியர் ராஜன் ஹ_ல் அவர்கள் எழுதிய கட்டுரையில் வேறுவிதமாக இருந்தது. அதனை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.
இவர்களின் சாம்ராஜ்ஜியம் இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கின்றது. அதில் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாருடைய பிளளை. உங்களது வாரிசு மரத்தில் அவர் சேர் என்.பரராஜசிங்கத்தின் மகன் என்று குறிபிட்டுள்ளீர்கள் ஆனால் சுவாமிநாதன் அவர்களின் இனிஷலுக்கும் பரராஜசிங்கத்திற்கும் பொருந்தவில்லையே. அடுத்து முன்னாள் முதலமைச்சர் சுp.வி.விக்னேஸ்வரன் யாருடைய வாரிசு அதனைத் தவறவிட்டுள்ளீர்கள். தற்போது வாழுபவர்களின் விபரங்கள் இருப்பின் நன்று.
அடுத்து அடிமை வியாபாரம் ஒழிக்பட்டுடமை பற்றி படித்துள்ளேன். இதில் சில விபரங்களை மேலும் அறிந்துள்ளேன். அடிமைகளின் பட்டியல் ஒன்று போட்டு உள்ளீர்கள். இது இன்னும் நீண்டு போக வேண்டும் குறைத்துவிட்டீர்கள். தேசவழமைச் சட்டத்திலும் தாழ்த்தப்பட்ட சாதியின் பட்டியல் ஒன்று உண்டு ஆனால் பலா சாதிகளில் இருந்து இன்று விடுபட்டு பெரிய சாதிப்பட்டியலுக்குள் சென்றுவிட்டார்கள். ஆனால் சில சாதிகள் இன்னும் அதிலிருந்து விடுபடவில்லை. அதே சாதியை நாடுகடந்து வந்தும் கொண்டு வந்து. அதனை இறுக்கமாகப் பாவிக்கின்றார்கள். திருமணத்தில் அதனை வெளிப்படையாகவே தெரிக்கின்றார்கள். ஊயளவந ழே டீயச என்று போடுகின்றார்கள். ஆனால் சாதியை அறிந்த பின்பு அதனை மறுக்கிறார்கள். வுயஅடை ர்நசவயைபந அழவொ என்று போடுகிறார்கள். இதில் அவர்கள் சாதியைக் கைவிடும்வரை ர்நசவையபந ஆழவொ என்பது முழு கருத்தைக் கொடுக்க மாட்டாது.

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates